2. களவு போகும் புரவிகள்

தாமதத்திற்கு வருந்துகிறேன்.

புத்தகத்தை வெளியிட்டோர் – “தமிழினி பதிப்பகம்”, சென்னை
புத்தகத்தின் விலை – 60 ரூபாய்
வெளியான ஆண்டு – 2001

———————————————–
புத்தகத்தை எழுதிய சு.வேணுகோபாலைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
———————————————–
தற்போது இவர் போடி நாயக்கனூரில் ஒரு விவசாயியாக இருக்கிறார். சில பள்ளிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமுள்ளவர். குமுதம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று, இலக்கிய உலகத்தில் நுழைந்திருக்கிறார். இவர் எழுதிய வேறு சில புத்தகங்கள்…நுண்வெளி கிரகங்கள்(நாவல்),பூமிக்குள் ஓடுகிறது நதி(சிறுகதைகள்), கூந்தப்பனை(குறு நாவல்).
(புத்தகத்தோட பின் அட்டைல இருந்ததை அப்படியே காப்பி அடிச்சிட்டேன்…!!??)

இனி, புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்.
——————————————————–
சமுதாயம், மனித மனம், அன்றாட வாழ்க்கை இவற்றிலிருக்கும் இருண்ட பக்கங்களையும், வக்கிரங்களையும் தேடி இழுத்து வந்து நம்மிடம் அடையாளம் காட்டுகிறது வேணுகோபாலின் எழுத்து. எந்த இடத்திலும் எதையும் மூடி மறைக்காமல் எழுதுகிறார்.

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகள் “தாமரை” உள்ளிட்ட பல சிற்றிதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இவற்றுள் சில கதைகளை நான் என் சிறு பிராயத்திலேயே தாமரை இதழில் படித்திருக்கிறேன். இப்போது மீண்டும் படிக்கும்போது பால்ய நண்பனைப் பார்த்தாற்போன்ற ஒரு மகிழ்ச்சி.
(பரிசளித்த நண்பன் சுரேஷுக்கு நன்றி!)

ஒவ்வொரு சிறுகதையும் மனதில் ஒருவித அழுத்தத்தை உருவாக்கி, நம்மை உருக்குலைத்துப் போட்டுவிடுகிறது. சுஜாதாவிடம் நான் கண்ட அதே Climax Punch, இவரிடமும் இருக்கிறது. ஆனால் இருவரின் நடை மற்றும் கதைக்கரு ஆகியவை முற்றிலுமாக வேறுபட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு, “மீதமிருக்கும் கோதும் காற்று” எனும் ஒரு சிறுகதை. 6 பக்கங்களுக்கே நீளும் இந்தக் கதை, “சுகிர்தா” எனும் “சுப்பம்மாள்” என்ற ஒரு விலைமாதுவின் ஓர் இரவை விளக்கி நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இது போன்ற கருக்களை சுஜாதாவிடம் படித்ததாக ஞாபகம் இல்லை.

“சப்பைக்கட்டு” என்றொரு சிறுகதை. ஒவ்வொரு ஆண் மிருகத்தின் முகத்திரையையும் கிழித்துப்போட்டுவிடுகிறது. ஆணாதிக்கத்தை எதிர்க்கும் விவாகரத்தான ஒரு பேரிளம்பெண் காந்தாலட்சுமி அம்மாள். இவளுடன் வங்கியில் பணி புரியும் Narrator .( Narratorகு தமிழ்ல என்னப்பா?). இவரும் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாகவே பேசி வருகிறார்.

ஆணாதிக்கத்தைப் பற்றிய பல பேரின் கருத்துக்களோடு சரளமாக ஒடிச்செல்லும் கதை இப்படியாக முடிகிறது. Narratorகு தெரிந்த ஓர் இளைஞன் காந்தாலட்சுமி அம்மாளின் மகளை திருமணம் செய்து கொள்ள இவரின் உதவியை நாடும்போது இவரது பதில்,

“கிருஷ்ணா! பொம்பளை ராஜ்யம் பிடிச்ச குடும்பம்டா அது…! ஆணாதிக்கம் அது இதும்பாளுக..! வேற நல்ல இடமா பாக்கலாம்”

என்பதாக வருகிறது. கதையைப் படிக்கும்போது கண்டிப்பாக ஒரு குற்ற உணர்ச்சி தலை தூக்கும்.

“மண்ணைத் தின்றவன்” என்ற கதையின் நாயகன், பட்டப்படிப்பு படித்து, மற்றவரின் கீழ் வேலை செய்ய விரும்பாமல், தன் கிராமத்திலேயே விவசாயம் பார்க்கிறான். ஒரு நேரத்தில் விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டு, ஏதாவது பணியில் சேரலாம் என்று நகரத்தில் இருக்கும் நண்பன் ஒருவனின் உதவியை நாடி வருகிறான். இப்படியே போய்க் கொண்டிருக்கும் கதை எப்படி முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழும் நேரத்தில் இப்படி முடிக்கிறார் ஆசிரியர்.

நண்பன் வீட்டில் இல்லாததால், இவனை அழைத்து உட்காரவைத்து பேசிக்கொண்டிருக்கும் நண்பனின் தாயார், இவனின் பின்புலங்களை விசாரிக்கிறாள். இவனது தந்தயின் பெயரைக் கேட்டுவிட்டு,

“ஐயோ! உன்னைப் போய் நீங்கன்னு சொல்லிட்டேனே” என்றாள். அசிங்கத்தை மிதித்தது போல் இருந்தது.

“சரிம்மா! நான் லைப்ரரியிலேயே பாத்துக்கிடுறேன்” என்றபடி வெளியேறினேன்.

இதுதான் கதையின் முடிவு.
இப்படிப்பட்ட முடிவை உண்மையாகவே நான் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று மனதைப் பிசைந்து விடுகிறது. எல்லோருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

மனைவியின் பிரசவத்தின் பொழுதில் ஒரு கணவனின் மனதில் தோன்றும் எண்ணங்கள், 35 வயதிலும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு ஆண்மகனின் உணர்ச்சிகள், கணவனின் வற்புறுத்தலால் கருக்கலைப்பு செய்து கொண்ட ஒரு பெண்ணின் எண்ணங்கள் என்று யாரும் புரட்டாத பக்கங்களில் தன் பேனாவை ஓட விட்டிருக்கிறார் வேணுகோபால்.

வக்கிரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் இவர், வார்த்தைப் பிரயோகங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் காட்டியிருக்கலாம். ஒருவேளை, இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த இந்த வார்த்தைகளே தகுதியானவை என்று நினைத்திருக்கலாம்.

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் எனக்குத் தெரியாத பல பேரோடு இவரை ஒப்பிட்டிருந்தார்கள்.(நிறைய படிக்க வேண்டியிருக்கு…!!!!).

இவருடைய மற்ற படைப்புகளையும் படிக்க ஆர்வத்தோடு தேடிக் கொண்டிருக்கிறேன்.

-சேரல்