3. LAJJA (SHAME)

இந்த முறை, நண்பர் ஞானசேகர் விமர்சனம் செய்கிறார். நன்றி!
————————————————————
புத்தகம் : Lajja (Shame)
ஆசிரியர் : Taslima Nasrin
மொழி : பெங்காலியில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு
விலை : 200 ரூபாய்
————————————————————
ஆசிரியர் குறிப்பு:
———————-
Taslima Nasrin

இவரைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நானே அறிமுகப்படுத்துவதைவிட, நீங்களே அவரைப் பற்றி தேடித் தெரிந்து கொள்வதே அறிவுப்பூர்வமான செயல்.

புத்தகம் பற்றி:
————————-
யாரும் எனக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்யவில்லை. ஒரு புத்தகக் கடையில் இதைப் பார்த்தேன். முதல் பக்கத்தில்,
Let another name for religion be humanism
என்று இருந்தது. வாங்கிவந்து விட்டேன்.

இந்தியா என்ற இந்துமக்கள் பெரும்பான்மை நாட்டில், பாபர் மசூதி என்ற ஒரு முஸ்லீம்களின் புனித இடம், இந்துக்களால் இடிக்கப்பட்டதால், இந்தியாவிற்கு அண்டை நாடான பங்களாதேஷ் என்ற இந்துமக்கள் சிறுபான்மை நாடு எப்படி பாதிக்கப்பட்டது என்பதுதான் கதை.

6.12.1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், பங்களாதேஷில் எற்பட்ட மதக்கலவரங்களும், பொருளாதாரச் சீரழிவுகளும், சேதங்களும் அற்புதமாக விவரிக்கப்பட்டு இருக்கும். டாக்கா நகரின் ஒவ்வொரு தெருவழியாகவும் நாம் சென்று சேதங்களைப் பார்வையிடுவதுபோல், ஒரு பிரமை உணரமுடியும்.

பங்களாதேஷில் சுதர்ஸன், அவனின் தங்கை மாயா, தாய் கிரன்மாய், தந்தை சுதாமாய் ஆகியார் கொண்ட ஒரு இந்து குடும்பம் வாழ்ந்து வருகிறது. ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பம் – தேசப்பற்றுள்ள ஒரு குடுமபம் 6.12.1992 முதல் 18.12.1992 வரை கொண்ட பதின்மூன்று நாட்களில் எப்படி எல்லாம் சின்னாபின்னமாகிறது எனவும், ஒவ்வொருவரின் மனநிலையும் கொள்கைகளும் படிப்படியாகத் தலைகீழாக மாறுவதையும் படிக்கும்போது நம்மாலும் உணரமுடியும்.

டிசம்பர் 16ம் தேதி, பாங்களாதேஷில் ‘வெற்றி நாள்’ என்று கொண்டாடுவார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, 12 நாட்கள் கழித்து வரும் அந்நாளின் நிலைமை அற்புதமாக விவரிக்கப்பட்டு இருக்கும்.

புத்தகத்தில் இடம்பெற்ற சில வரிகள் இதோ:

“Those who kill by the night are the very same people who come in the evening to sympathize effusively with the disaster that have taken place”

“Religion is the sigh of the tortured and the persucuted, the heart of the heartless world, just as it is the soul of a soulless society. Religion is the opium of the masses.”

சீரழிவுகளைச் சொல்லும் புத்தகத்தில், கொஞ்சம் வார்த்தைகள் தூக்கலாக இருக்கும் என்பது விதி. ஆனால் இப்புத்தகம் அதற்கு விதிவிலக்கு. கற்பழிப்பு காட்சிகள் கூட, சிறுகுழந்தைகளுக்குக் கதை சொல்வது போல் சொல்லப்பட்டிருக்கும். எனவே எல்லோரும் படிக்க ஏற்ற புத்தகம்.

புத்தகத்தைப் படித்துவிட்டு மூடி வைத்து விட்டாலும், மாயா என்ற கதாபத்திரம் சில கணங்கள் நம் சிந்தனையைவிட்டு அகலாமல் இருப்பதும் தவிர்க்க முடியாத உண்மை. அதில்தான் ஒரு படைப்பாளி ஜெயிக்கிறார்.
ஞானசேகர்