20. நிழல் வெளிக் கதைகள்

பேய்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நம் இலக்கியங்களின் சில ஆயிரம் பக்கங்கள் காலியாகவே இருந்திருக்கும்
– யாரோ
—————————————-
புத்தகம் : நிழல் வெளிக் கதைகள்
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2005
விலை : பின் அட்டையில் ரூ 60 என்றும், உள்ளே ரூ70 என்றும் அச்சிடப்பட்டிருந்த இப்புத்தகத்தை ரூ70க்கு வாங்கினேன்.
—————————————-

கடவுள், காதலைப் போலவே அதிக சர்ச்சைகளுக்குள்ளாகிற ஒரு விஷயம் பேய். இருக்கிறதா? இல்லையா? கொடூரமானதா? சாந்தமானதா? மனிதனுக்கு உதவி செய்கிற பேய்கள் கூட உண்டாமே? என்று எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டு இன்றும் நம்மிடையே உலாவி வருகின்றன பேய் பற்றிய பயங்களும், அவை குறித்தான கதைகளும்.

மன அழுத்தத்திற்கு ஆட்படுகிற மனிதர்களின் மனத்தில் உருவாகும் கற்பனைக் கதாப்பத்திரங்களே பேய்கள் என்கிறது அறிவியல். பேயைப் புகைப்படத்தில் பதித்து வருபவர்களுக்கு, அவை மனிதனின் உடலிலிருந்து வெளியேறும் கதிர்களால் உருவாகும் பிம்பங்கள் என்று மறுப்பு சொல்கிறது அறிவியல்.

பேய்கள் என்பன மனிதனின் வக்கிர எண்ணங்களும், மாசு படிந்த மனமும்தான் என்பதாக நீதி சொல்கின்றன சில பழந்தமிழ் இலக்கியங்கள். மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக, கடவுளைப் போன்றே படைக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம்தான் பேய் என்கின்றனர் நாத்திகவாதிகள்.

எது எப்படியோ! மனிதனின் அதீதக் கற்பனைக்கு ஒரு வடிகாலாக பேய்க் கதைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. சிறுவயதில் நான் கேட்டு வளர்ந்த கதைகளில் பெரும்பாலும் ஒரு பேயாவது வந்துவிடும். மனம் முழுக்க ஆக்கிரமித்து பயமுறுத்திக் கொண்டிருந்த பேய்கள் பற்றிய நினைவு இன்று வரை அகலவிலை. எல்லோருக்கும் பொதுவான அனுபவங்களைப் பட்டியலிட்டால் அதில் பேய்களோடான அனுபவம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

நம்மைப் போலவே பல பேய்க்கதைகளை மனதில் உள்வாங்கிக்கொண்டிருக்கிற ஜெயமோகன், தன் கற்பனையில் தோன்றிய சில பேய்க்கதைகளை வழங்கியிருக்கிறார். ஜெயமோகன், தமிழ் எழுத்துலகில் பரவலாகப் பேசப்படுகிற ஓர் எழுத்தாளர். நாஞ்சில் மண்ணில் பிறந்த இவரது எழுத்தில் மண்ணின் மணம் வீசுவது உண்மை. ‘கஸ்தூரி மான்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார் இவர்.

பத்து பேய்க்கதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத்தொகுப்பு, இந்நூல். இக்கதைகளைப் படிக்கும்போது ஜெயமோகன் ஆழ்ந்த விஷய ஞானமும், லாவகமான வார்த்தைப் பிரயோகமும் கைவரப்பெற்றவர் என்பது தெரிகிறது. கொஞ்சம் அறிவியல் உண்மைகளையும் கையாண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு கதையும் பேய் இருப்பதை உறுதி செய்வதாகவே முடிகிறது.

உதாரணத்திற்கு, இப்புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதை ‘தம்பி’. சிறு வயதில் மங்கலாய்டு(மூளை வளர்ச்சி குறைந்த) நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன தன் அண்ணனின் ஆவி தன்னைப் பின் தொடர்வதாக மனவியல் மருத்துவரைக் காண வருகிறான் ஓர் இளைஞன். அவனுக்கு வந்திருப்பது SCHIZOPHRENIA என்னும் மனப்பிளவு நோய் என்று முடிவுசெய்கிறார் மருத்துவர். தன் அண்ணன் தன் மீது பிரியமாக இருந்தானென்றும், ஆனால் அவனைத் தனக்குப் பிடிக்காது எனவும், சிறுவயதில் தன்னைப்போலவே இருந்த அவன் மீது வீட்டில் இருப்பவர்கள் அதிக அக்கறையோடு நடந்து கொள்வது இவனுக்குப் பிடிக்கவில்லை என்றும், ஒருநாள் அவன் கிணற்றில் விழுந்து இறந்து போனதாகவும் தெரிவிக்கிறான்.

அண்ணனின் ஆவி இவனைத்தொடரும்போது ஒரு குரலும் கேட்கிறது, இவன் அண்ணன் பேசியது போலவே. அது இவன் உள்மனத்தில் பதிந்த இவன் அண்ணனது குரல் இவனை அறியாமல், இவன் குரல் நாணிலிருந்து வெளிப்படுவதாக(VENTRILOQUISM) விளக்குகிறார் மருத்துவர்.

இனி, அவன் அண்ணனின் ஆவி அவனைத் தொடரும்போது அதன் மீது பாசத்துடன் நடந்து கொள்ளும்படியும், அன்பாகப் பேசும்படியும் சொல்கிறார் மருத்துவர். முதலில் மறுக்கும் இளைஞன் கடைசியாக ஒத்துக் கொள்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக மனநிலையில் முன்னேற்றம் காணும் இவன் ஒருநாள் மருத்துவரிடம் தன் அண்ணன் தானாக சாகவில்லை, தானே அவனைக் கிணற்றில் தள்ளிக் கொன்றதாகச் சொல்கிறான். மேலும் இனிமேல் தன்னால் அவன் மீது பாசம் உள்ளவனாக நடிக்க முடியாது என்று கத்துகிறான்.

அன்று இரவு, உயிருக்குப் போராடுகிறான் இவன். யாரோ அவன் கழுத்தை நெரிப்பதாக உணர்கிறான். யாராலும் காப்பாற்ற முடியாமல் இறந்து போகிறான். அவன் இறந்த பிறகு மருத்துவரின் காதில் விழுகிறது ‘ கெட்ட ம்பீ…நீ கெட்ட ம்பீ’ என்ற அவன் அண்ணனின் குரல். என்பதாக முடிகிறது இந்தக் கதை. இங்கே இவனைக் கொன்றது குற்ற உணர்ச்சியா? இல்லை அண்ணனின் ஆவியா?

குதிரைப் பந்தயத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதையில், குதிரைகள் சம்மந்தப்பட்ட எத்தனையோ விஷயங்களை விளக்குகிறார். மேன்ஷன்களில் வாழும் வயதான பிரம்மச்சாரிகளின் அந்தரங்கத்தை அலசி ஆராய்கிறது ஒரு கதை; ஒவ்வொரு ஊரிலும் நடமாடக்கூடாத இடமாக அறிவிக்கப்பட்ட ஓரிடம் இருக்கும். அங்கே போனவர்கள் உயிருடன் திரும்பியதில்லை என்று பல கதைகளும் பழக்கத்திலிருக்கும். அப்படிப்பட்ட இடத்திற்குப் போய் வந்தவனின் அனுபவத்தை விளக்குகிறது ஒரு கதை; இப்படி ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு இயங்குகிறது.

இப்புத்தகத்தைப் படிக்கும்போது கொஞ்சம் பயம் உள்ளே இருந்தாலும், பேய்கள் நியாயமாகவே நடந்து கொள்வதாகத் தோன்றுகிறது. ஜெயமோகன் எழுத்தின் மீது ஒரு தனிப்பட்ட ஆர்வத்தைத் தோற்றுவிக்கக்கூடிய தன்மை வாய்ந்ததாக இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பல களங்களையும் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்கலாம்.

– சேரல்

Advertisements