23. ANANDAMATH

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
—————————————————–
புத்தகம் : Anandamath (ஆனந்தமடம்)
ஆசிரியர் : பங்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterji)
மொழி : பெங்காலியில் இருந்து ஆங்கிலம்
விலை : 140 INR
பக்கங்கள் : 135
சிறப்பு : தேசிய பாடலான “வந்தே மாதரம்”, இப்புத்தகத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது. அப்பாடல் பி.பி.சி.யின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக ஆனதும், ‘ராக்கம்மா கையத்தட்டு’ முதலாவதாக வந்ததும் எல்லோருக்கும் பரிட்சயம்.
—————————————————–

126 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகம். சென்ற வருடம், “வந்தே மாதரம்” பாடலின் 125வது ஆண்டை முன்னிட்டு, அப்பாடலைப் பள்ளிகளில் கட்டாயமாகப் பாடுவது பற்றிப் பிரச்சினைகள் எழுந்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம். முடிவில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல், விருப்பப்பட்ட பள்ளிகள் மட்டும் பாடி, மரியாதை செய்தன. “ஜன கன மண” கீதத்தில் சிந்து என்ற வார்த்தை இருக்க வேண்டுமா என்ற பிரச்சனை எழுந்தபோது, பராசக்தியின் காக்கா பாடலுக்கு இன்றைய முதலமைச்சர் கருணாநிதி சொன்னதுபோல், ‘எழுதியது எழுதியதுதான்; மாற்றமுடியாது’ என்றது உச்சநீதிமன்றம். ஆனால், ‘வந்தே மாதரம்’ பிரச்சினையில் நீதியும், நிர்வாகமும் அமைதி காத்ததன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. அதனால், புத்தகத்தைப் பார்த்தவுடனேயே வாங்கிவிட்டேன்.

இரவீந்திரநாத் தாகூர், எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவருடன் இப்புத்தகத்தைப் பற்றி பேசுவதே முன்னுரை. இது ஒரு புதினம்(நாவல்).

கதை நடந்த காலம் – இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹாஸ்டிங்ஸ் (Warren Hastings) இருந்த காலம் – வங்காளப் பஞ்சத்தின் (Great Bengal Femine) காலம். இந்தியாவைத் துர்கா அன்னையாக (Mother) உருவகித்து, அவளை ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பாற்ற, ஒரு பகுதியினர் எல்லா சுகங்களையும் துறந்து சந்நியாசிகளாகக் காட்டுக்குள் வாழ்கின்றனர். அவர்கள் தங்களை இந்திய அன்னையின் குழந்தைகளாக (Children) நினைத்துக் கொள்கின்றனர். இவர்களின் தலைவருக்கு மகாத்மா என்று பெயர். இவர்கள் ஆங்கிலேயர்களை விரட்டியடித்து, வட வங்காளத்தில் காலூன்றுவதே கதைச்சுருக்கம்.

பஞ்சத்தில் தவிக்கும் வங்காளத்து மக்களுக்கு, ஆங்கிலேய அரசின் கருவூலத்தில் இருந்து கொள்ளையடித்து வழங்குவதும், பார்க்கும் ஆங்கிலேயர்களை எல்லாம் கொன்று தள்ளுவதும்தான் இவர்களின் பணி. ‘ஆங்கிலேயர்கள் நல்லவர்கள், இந்தியாவில் இருப்பவர்களைத் தவிர‘ என்பதுதான் இவர்களின் கருத்து.

வங்கத்தின் பஞ்சத்தின் கொடுமை விளக்கி இருக்கும் புத்தகம், ஆங்காங்கே Children களின் குடும்ப உறவுகளைப் பற்றியும் தொட்டுச் செல்கிறது. தன் சொந்த ஊரை Children களின் கோட்டையாக மாற்றும் ஒருவர்; கல்யாணம் செய்து இளமையை அனுபவிக்காத ஒருவர்; ஆண்வேடமிட்டு Children களுக்கு உதவிசெய்யும் ஒருத்தி என பலவிதங்களில் Children உணர்த்தப்படுகிறார்கள்.

ஆசிரியர் சில இடங்களில் மெல்லிய நகைச்சுவையையும் கையாண்டிருக்கிறார். உதாரணமாக, ஆண்வேடமிட்டு தன் அண்ணியைக் கிண்டல் செய்யும் ஒருத்தி, திடீரென கட்டிப்பிடித்தவுடன் அண்ணி கேட்கிறாள்: “நீங்க பெண் என்று ஏன் முதலிலேயே சொல்லவில்லை?”. அதே பெண் இன்னொரு ஆணிடம் சிக்கிகொள்ளும்போது, மார்பில் இருக்கும் புலித்தோலை உருவிவிட்டு, “நீ பெண்ணா?” என்கிறான்; அவள் “இக்கேள்விக்கு இனிமேல் நான் இல்லை என்று பதில்சொல்ல முடியாது” என்கிறாள்.

சரி ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு வருவோம். இப்பாடல்தான் Children களின் தாரக மந்திரம். சந்தோஷம் – துக்கம் – மரணத்தை நெருங்கும் நேரம் இப்படி எல்லா தருணங்களிலும் அவர்கள் பாடும் பாடல் இது. இது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் என்பதால், பாடலின் வரிகள் ஆங்கிலத்தில் இருந்தன – “வந்தே மாதரம் என்று சொல்வது தடைவிதிக்கபட்டிருந்த காலத்தில் பெயர் தெரியாத ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டது” என்ற குறிப்புடன்.

சரி ‘வந்தே மாதரம்’ பாடலில் என்னதான் பிரச்சினை? அப்பாடல் இப்புத்தகம் மூலமே பிரபலமானது. ஆனால், புத்தகத்தை விட, பாடல் பழையது. அப்பாடல் விடுதலைப் போராட்டக் காலத்தில் மிகப்பெரிய தூண்டுதலாக இருந்து இருந்தாலும், அது சித்தரிக்கப்பட்டவிதம் ஒரு மதத்தைச் சார்ந்தாகவே இருக்கிறது. கதாபாத்திரங்கள் எல்லாரும் நாட்டிற்குப் பணிசெய்வதை மதக்கடமையாகவே செய்கின்றனர். புத்தகத்தின் முடிவுகூட அப்படியே! திருமணச் சட்டங்களைக்கூட மதங்களுக்காகத் தனித்தனியாக வைத்திருக்கும் இந்தியா என்ற மதச்சார்பற்ற நாட்டில், இன்னொரு மதத்தின் பெண்தெய்வத்தை அன்னையாகப் பாடுவது சர்ச்சைக்குரிய விசயம். அதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் வகுத்தவர்கள், மூன்று ஆண்டுகள் நிதானமாக யோசித்து தலைமுறைகள் காக்கும் நல்வழிகளைத் தந்துள்ளார்கள்.

தலைமுறைகளுக்காக அரசியல் மேதைகள் மூன்றாண்டுகளில் வகுத்தவைகளைச் சிலமணித்துளிகள் படித்துவிட்டுக் குறைசொல்லுவதே தலைமுறைகள். அதுதான் காலம். எனது இப்புத்தக விமர்சனம்கூட அப்படி இருக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க ‘Mr.காலம்’?

-ஞானசேகர்