46. பெய்தலும் ஓய்தலும்

எனக்கு வண்ணதாசன் கதைகளில் அவர் கதாபாத்திரங்களுக்கு இடும் பெயர்களை ரொம்பவும் பிடிக்கும். அந்தப் பெயர்கள் முன் கேட்டு அறியாதவை, அல்லது அந்தப் பெயர்களைக் கேட்டமாத்திரத்தில் மனதில் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் உருவாகிவிடுகின்றது. இந்தப் பெயர்கள் உருவாக்கும் கிளர்ச்சிகளே கதையின் வாசிப்பை நெருக்கமாக்கி விடுகின்றன

-எஸ்.ராமகிருஷ்ணன்

——————————————
புத்தகம்:பெய்தலும் ஓய்தலும்
ஆசிரியர்:வண்ணதாசன்
வெளியீடு:சந்தியா பதிப்பகம்
வெளியான ஆண்டு:2007
விலை:ரூ 60
பக்கங்கள்:136

——————————————

தமிழ்ச்சிறுகதை வட்டத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒரு புள்ளி வண்ணதாசன். வண்ணதாசன் எனும் பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி எனும் பெயரில் கவிதைகளும் எழுதி வரும் திரு.கல்யாணசுந்தரம் திருநெல்வேலியில் வாழ்கிறார். இலக்கிய விமர்சகரும், எழுத்தாளருமான திரு.தி.க.சி இவரது தந்தை என்பது குறிக்கத்தகுந்தது.

சுமார் 40 ஆண்டுகாலமாக தமிழ் எழுத்துலகில் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக இருந்து வரும் வண்ணதாசன் சமீபத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் பெய்தலும் ஓய்தலும். வெகு நாட்களாக நான் தேடியலைந்த வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்பு நண்பர் பிரவின்ஸ்காவிடமிருந்து கிடைத்தது. அது வேறு புத்தகம். அதைப் படித்து முடிக்குமுன்னர் சென்ற வாரம் லேண்ட் மார்க்கில் நண்பர்களுக்குக் கொடுப்பதற்காகப் புத்தகங்கள் தேடிக்கொண்டிருந்தபோது இத்தொகுப்பு கிடைத்தது.

‘எழுதிக்கொண்டே வருவார்; கை வலித்தால் கதையை முடித்துவிடுவார்’ என்று வண்ணதாசனின் எழுத்தைப் பற்றி ஒரு விமர்சனம் இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மையோ என்று கூடத்தோன்றுகிறது. ஆனால், ஆழ்ந்துபடிக்கையில் சிறுகதையின் இன்னொரு பரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. உச்சகட்டத்தில் மட்டும் செய்தியை வைத்துவிட்டு, முந்தைய பக்கங்களை வெறும் வார்த்தைகளை இட்டு நிரப்பும் வேலை இவர் கதைகளில் இல்லை. ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு விவரணையிலும் அழகும், யதார்த்தமும் பெருகிக் கிடக்கின்றன.

வண்ணதாசன் எழுத்தில் ஓடும் ஆறு‘ என்று எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இத்தொகுப்பைப் படிக்கையில் எனக்கு இந்த நான்கு வார்த்தைகளின் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபடத்தொடங்கியது. அப்படி ஓர் அசாத்திய ஓட்டம். எங்கும் தேங்காமல், எப்போதும் இப்போது பிறந்ததுபோன்ற புத்துணர்வோடு ஓடுகின்றன எழுத்துகள். ஆற்றின் பிரவாகம் கதைகளெங்கும் காணக்கிடைக்கிறது. ஆற்றுக்குத் தொடக்கம் ஏது? முடிவு ஏது? ஆறு என்றதும் கரையும், காற்றும், கரையோர மரமும், பாலமும், நீர்ச்சுழியும் மனதில் வந்து போகின்றன. ஆறு என்பது ஆறற்றதும் சேர்ந்ததுதானே!

இத்தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கதைகள் மனிதர்களின் பழைய நினைவுகளைக் கிளறுபவையாக இருக்கின்றன. பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்த்து சந்தோஷிக்கும், அல்லது துக்கப்படும் இயல்பு நம் எல்லோரிடமும் தானாகவே வந்தமைந்து விடுகிறது. மீண்டும் நினைத்துப் பார்த்துச் சிரிக்க அல்லது அழுவதற்கான நிகழ்வுகள் என்று எல்லோரிடமும் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன.

இந்தக் கதைகளின் அமைப்பு நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்வோடு தொடங்குகிறது; நினைவுகளினூடே பயணித்து கொஞ்சம் பழைய நாட்களைத் தேடிப் பார்த்து விட்டு மீண்டும் இன்றைய நாளில் வந்து உச்சமடைகிறது. இந்தப்பாணியை பல கதைகளில் என்னால் பார்க்க முடிந்தது. சிறுகதைக்கான உத்தியில் இது ஒரு நல்ல முறை.

எல்லாக்கதைகளிலும் ‘நான்’ தான் பிரதானப் பாத்திரமாக இருந்து கதையை வழிநடத்துகிறது. இந்த ‘நான்’ ஒருவேளை வண்ணதாசனே தானோ என்ற சந்தேகம் பல இடங்களில் கிளர்ந்தெழுகிறது. பாத்திரத்தின் வயது, சூழ்நிலை இவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது இந்த உணர்வு மேலிடுகிறது. ஆசிரியரும் நான் என்ற பாத்திரத்தின் மீது தன் எண்ணங்களைத் திணிக்கும் வாய்ப்பிருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். எல்லாப்பாத்திரங்களின் மீதும் கூட ஆசிரியரின் ஆதிக்கம் இருக்கும் அல்லவா?

இந்தக் கதைகளின் பொதுவான இன்னொரு அம்சம், மிகச்சாதாரணமாக நாம் தினசரி பார்க்கக்கூடிய மனிதர்களின் கதைகள் இவை. எப்படி எல்லோருக்கும் புரட்டிப் பார்க்க சில நினைவுகள் உண்டோ, அதே போல எல்லோருக்கும் சொல்லிக்கொள்ளவென்று சில கதைகளும் இருக்கும். உணர்ச்சிகள் கொட்டிக்கிடக்கும் கதைகள். அந்தக் கதைகளைத்தான் தான் அறிந்து கொண்ட, தான் உணர்ந்துகொண்ட வழியில் எழுதியிருக்கிறார் வண்ணதாசன்.

கதையின் முதல் வரியே கதைக்குள் நம்மை இட்டுச்சென்றுவிடும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

‘சுந்தரம் எப்போதும் இப்படித்தான். எப்போது அழுவான் என்று சொல்ல முடியாது….’

‘இப்போது பெய்து கொண்டிருக்கும் மழை ஊரிலும் இருக்குமா என்று தெரியவில்லை….’

‘இந்தத் தடவையும் மாரிச்சாமியைப் பார்க்க முடியவில்லை…’

‘என்ன பேசப்போகிறேன் என்பதை இன்னும் தீர்மானிக்கமுடியவில்லை. அதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது…’

‘இப்போதெல்லாம் ஒருத்தரைப் பார்த்தால் இன்ன்னொருத்தர் ஞாபகம் வந்து விடுகிறது…’

‘அழைப்பு மணியை அழுத்தியாகி விட்டது. யார் திறப்பார்கள் என்று தெரியவில்லை…’

‘உங்களை யாரோ கூப்பிடுகிறார்கள் – அனுஷா என்னிடம் சொல்லும்போது நான் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தேன்…’

இந்த வரிகளைக் கொஞ்சம் ஆழ்ந்து படித்துப் பாருங்கள். இவற்றுக்குள்ளேயே எத்தனையோ கதைகள் இருப்பதாகத் தோன்றவில்லை? இப்படித்தான் வரிக்கு வரி கதைகளை வைத்து ஆச்சரியப்படுத்துகிறார் ஆசிரியர்.

பதிவின் ஆரம்பத்தில் இருக்கும் எஸ்ராவின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே அல்லவே! பெயர் ஒரு குறியீடு; ஒரு நினைவு; ஒரு நிஜத்தின் படி; இந்தக் கதைகளில் வரும் பெயர்களும் என்னோடு தொற்றிக்கொண்டுவிட்டன. சிவஞானம், பி.ஷரோன் சிறுமலர், மீரா, லீலாக்கா, குணசீலன் சார், இசக்கி, நாச்சியார், கிருஷ்ணம்மா இந்தப் பெயர்களையும் மனிதர்களையும் பிட்டத்தில் ஒட்டிக்கொள்ளும் ஆற்றுமணல் போல தட்டி உதிர்த்துவிட முடியுமா என்ன?

நான் மேற்சொன்ன விஷயங்கள் வண்ணதாசனின் ஒட்டுமொத்தக் கதைகளுக்கும் கூடப் பொருந்தலாம். அந்தத் தெளிவு இன்னும் எனக்கு வரவில்லை. இன்னும் இவர் எழுத்தை நிறைய படிக்க வேண்டி இருக்கிறது.

தொகுப்பின் முன்னுரையை மட்டும் பத்து முறைகளுக்கு மேல் படித்திருப்பேன். அத்தனை ஆழமான வரிகள். ஒரே ஒரு உதாரணம், இன்றைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் போக்கில் வருகிறது இந்த வரி “நசுங்கிய காலியாக்கப்பட்ட பற்பசைக் குழாய்களைப் போலாகிவிட்டன வயதானவர்களின் முகங்கள்”

இந்தப் பதிவினை முடிக்க, எஸ்ராவின் விரல்களைக் கொஞ்சம் கடன் வாங்கிக்கொள்கிறேன்…


‘யானையைக்கூட
அடிக்கடி பார்க்க முடிகிறது
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து’

என்று வண்ணதாசன் எழுதியிருக்கிறார். இதுதான் அவர் படைப்புகளை ஏன் ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்று கேட்கும் வாசகனுக்கான நிரந்தர பதில். கண்ணில் படும் பருண்மைகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். மண்புழுக்களைப் பற்றி அக்கறை கொள்ள ஈரமான மனதும், ஆழ்ந்த கவனமும், சக உயிர்களின் மீதான அன்பும் வேண்டும். அது வண்ணதாசனிடம் நிறையவே இருக்கிறது”

-சேரல்
(http://seralathan.blogspot.com/)