50. EVERYBODY LOVES A GOOD DROUGHT

இந்த ஐம்பதாவது புத்தகத்தைப் பற்றிய பதிவை இடுகிறவர் நண்பர் ஞானசேகர். அவருக்கும், தம்பிகள் Beemorgan மற்றும் ரேஜோவாசன் இவர்களுக்கும் என் நன்றிகள் சேரட்டும். நேற்று தான் நண்பர் கிருஷ்ணபிரபு புத்தகம் வலைப்பூவுக்கு Scrumptious blog award என்ற விருதை வழங்கினார். அவருக்கும் நன்றிகள் பல.

-சேரல்

இருட்டிலே வாங்கினோம்
இன்னும்
விடியவேயில்லை

————————————————
புத்தகம் : Everybody loves a good drought – stories from India’s poorest districts
ஆசிரியர் : P. Sainath
வெளியீடு : Penguin books
முதற்பதிப்பு : 1996ம் ஆண்டு
விலை : 399 ரூபாய்
பக்கங்கள் : 470

————————————————

Globalizing Inequality என்ற தலைப்பில் பேசப்பட்ட மிகச்சிறந்த உரையை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் கல்வெட்டு பிரேம்குமார். பாலகும்மி சாய்நாத். முன்னாள் குடியரசு தலைவர் வி.வி. கிரியின் பேரன். India Together என்ற சமூக நோக்குள்ள இணையப் பத்திரிக்கை நடத்தி வருபவர். இவர் எத்தனை சர்வதேச விருதுகள் வாங்கியிருக்கிறார், கிராமங்களில் வாழும் நாட்களைப் பற்றி நீங்கள் இணையத்தில் படித்துக் கொள்ளலாம்.

ஆட்சி பிடிக்க பீடி தேவையா? மாணவர்களைவிட வகுப்பறைகளும் ஆசிரியர்களும் இரண்டுமடங்கு அதிகமிருக்கும் பாடம் எங்காவது கேட்டிருக்கிறீர்களா? ஒரே தாய்-தகப்பனுக்குப் பிறந்த அண்ணன் தம்பி இருவர் வெவ்வேறு சாதிகளின் கீழ் பிரித்துப்போடும் அரசியல் சாசனம், சாத்தியம் என எப்போதாவது குறைந்தபட்சம் சந்தேகித்து இருக்கிறீர்களா? செவிலியர்களைவிட மருத்துவர்கள் அதிகமிருந்த இந்தியாவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? 23000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் மாட்டுவண்டி உபயோகம் இல்லாத கிராமப் புறங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்தக் கேள்விகள் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். மூன்றே வருடங்களில் புதுக்கோட்டை மாவட்டம் 71.78 சதவீதத்தில் இருந்து 100% கல்வியறிவு அடைந்ததா? எல்லாக் கேள்விகளுக்கும் போனமாதம் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இன்றைக்கு ‘ஆம்’.

சுதந்திர இந்தியாவில் ஏழைக்குடிமகன்களின் வாழ்வுதரம் எந்த அளவுக்கு உயராமல் இருக்கிறதெனவும், தங்களின் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அளவுக்குத் திணறுகிறார்கள் எனவும் இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து Times of India இதழுக்கு பி.சாய்நாத் அவர்கள் எழுதிய கிட்டத்தட்ட 70 பத்திகளை 10 அதிகாரங்களின் கீழ் தொகுத்திருப்பதே இப்புத்தகம்.’கிராமப்புற இந்தியாதான் ஒரு பத்திரிக்கையாளனின் சொர்க்கம்’ என சொல்லும் ஆசிரியர் எதை எழுத வேண்டும், எதைக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்திருக்கிறார். எந்த அரசியல் கட்சியையோ ஆட்சியையோ தாக்கவில்லை. ‘இயற்கைப் பேரழிவுகளையும் கொள்ளை நோய்களையும் தவிர்த்து தினவாழ்க்கையை அணுவணுவாக அளந்திருக்கும் புத்தகம்’ என்று பாட்ரிக் பிரன்ச் (Patrick French) அவர்கள் புகழ்ந்திருப்பது மிகையில்லைதான்.

சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் கழித்தும் அரசு இயந்திரம் செய்யும் காமெடிகள் வறியவனை எப்படிப் பாதிக்கிறது எனப் பேசுகிறது முதல் அத்தியாயம். ஒரிசாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் ஹாரியார் (Khariar) என்ற உயர்ரக பசுக்களைக் கலப்பினம் செய்து பால் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் சமன்விட்டா (Samanwita) என்றொரு திட்டம். இரண்டு ஆண்டுகள், இரண்டு கோடி ரூபாய்களுக்குப் பிறகு ஹாரியார் என்ற ஓர் இனமே சுவடில்லாமல் அழிந்துபோக, தீவனத்துக்காக பயிரிடப்பட்ட சுபாபுல் (Subabul) மரங்கள் தோப்புத்தோப்பாக வெட்டித்தள்ளப்பட்டன. இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்ட பகுதிகள் எல்லாம் ஏற்கனெவே உபரியாகப் பால் உற்பத்தி செய்து கொண்டிருந்த பகுதிகள்!

மலைவாசி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ஏதாவது திட்டங்கள் செய்யப்பட வேண்டும் என்பதற்காக சாலையே தேவைப்படாத ஒரு சமூகத்திற்கு 17.44 லட்ச ரூபாயில் சாலை போட்ட கதையும், அண்ணன் – தம்பிகளை வெவ்வேறு சாதிகளின் கீழ் கொண்டுவரும் அரசு கோப்புகளின் எழுத்துப்பிழைக் கதையும் முதல் அத்தியாயத்தில் இடம்பெறுகின்றன. சுகாதார மற்றும் கல்வித் தரங்களைப் பேசுகின்றன அடுத்த இரண்டு அத்தியாயங்கள்.

நிலக்கரிச் சுரங்கம், துப்பாக்கிப் பயிற்சி, அணை, சரணாலயம், ஏதோ பண்ணை, சாலை என்று ஏதோவொரு காரணத்தால் வாழ்விடத்திலிருந்து அகற்றப்பட்டு அந்நியனாக்கப்படும் அகதிகளைப் பற்றியது ஓர் அதிகாரம். புதிய இடத்தில் சாதிச்சான்றிதழ்கூட இல்லாமல் தவிக்கும் அவலம். தீடீரென கடற்படையின் துப்பாக்கிப் பயிற்சி நடைபெறுவதற்காக, ஒரு மலைகிராமம் தலைக்கு ரூபாய் 1.50 வாங்கிகொண்டு தற்காலிகமாக வெளியேற வேண்டும். இதேநிலை ஒரு கடலோர மாநகரில் சாத்தியமில்லை என நினைக்கும்போது, ஓர் ஏழை எப்படி நசுக்கப்படுகிறான் என்பது தெரிகிறது. பீகாரின் மொத்த நீர்ப்பாசன பட்ஜெட்டைவிட 3 மடங்கு அதிகமான செலவில் ஓர் அணை. தண்ணீரே இல்லாத அதன்மூலம் பலனடைவது ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே!

நம்ம ஊர் பனையேறிகள், கள்ளச்சாராயம், ஊர் விட்டு ஊர் போய் ஏதோவொரு கான்ட்ராக்டரின் கீழ் வேலைபார்க்கும் மக்கள், துண்டால் மூடி விரல்களால் விலை பேசும் தரகர்கள், வட்டிக்குப் பணம் தருபவர்கள், விவசாய நிலங்களைப் பிடுங்கி அதிகவிலை பேசும் வியாபாரிகள், சண்டைக்கோழி தந்திரங்கள் என்று பல பத்திகள். புத்தகத்தின் பெயரில் கூட ஓர் அத்தியாயம். வறுமைக்கோடு திர்மானிக்கப்படும் முறையிலுள்ள குளறுபடிகள் பற்றி தனியாக ஒரு பத்தியுண்டு.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் வரும் சாயல்குடி, அன்னவாசல், திருக்காட்டுப்பள்ளி, கந்தர்வக்கோட்டை, தச்சன்குறிச்சி, திருவாடானை, குடுமியான்மலை போன்ற இடங்களும் இப்புத்தகத்தில் அலசப்பட்டுள்ளன. இராமநாதபுரம் தண்ணீர்ப் பஞ்சத்தைப் பற்றி ஆசிரியர் சொல்லியிருப்பவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். வைகையணை எப்படி இம்மாவட்டத்தைப் பாதித்ததெனவும், தண்ணீர் வியாபாரம் எப்படி சூடு பிடித்ததெனவும் நன்றாக எழுதியிருக்கிறார்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மக்கள் ரயிலுக்குள் புகுந்து கழிவறையில் தண்ணீர் திருடிய சம்பவம் உங்களுக்கெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. ஆசிரியர் ஒரு பத்தியே ஒதுக்கியிருக்கிறார். அச்சம்பவம் பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தின் பாதிப்பில் நிகழ்ந்ததெனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். காவிரித் தண்ணீரைக் குழாய்கள் மூலம் புதுக்கோட்டை நகருக்குக் கொண்டுவந்த காலக்கட்டங்களில் நான் அங்கு வாழ்ந்ததனால் எனக்கு நெருக்கமான பத்தியிது. திண்டுக்கலில் குடத்தை வைத்து பஸ் மறியல் செய்தது கூட இப்படத்தின் பாதிப்பெனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை வறட்சிப் பகுதிகளாக மாநில அரசு அறிவித்தால் அவை மத்திய அரசின் மேற்பார்வையில் வரும்; அப்பகுதி வருமானம் கைக்குவராது என்ற காரணத்திற்காக பெரும்பாலான வறட்சிப் பகுதிகள் மாநில அரசுகளால் விட்டுக்கொடுக்கப் படுவதில்லை. இப்புதிய செய்தியில் நான் மிரண்டு போனேன்.

லியோனி ஒரு பட்டிமன்றத்தில் சொன்னார்: ‘ஒரு நல்ல சமூகப் படைப்பு என்பது, பிரச்சனையையும் அதற்கான தீர்வையும் அழகியலுடன் சொல்வது’. புத்தகத்தின் ஒன்பது அத்தியாயங்கள் பிரச்சனைகளுடன், கடைசி அத்தியாயம் அதற்கான தீர்வுகளுடன். வறியவனை வலியவன் அடித்தால் வலியவனை வல்லூறு அடிக்கும். ஆசிரியர் சொல்லும் வல்லூறும் வறியவனே!

உழைப்பாளிகள் நடத்தும் கல்குவாரி சுற்றுச்சூழலைப் பாதிக்கிறதெனப் பொய் வழக்கு தொடர்ந்த கான்ட்ராக்டர்கள்; நீதிமன்றம் வரை சென்று வென்றுவந்த குடிமியான்மலைக்காரர்கள்! அறிவொளி இயக்கம் மூலம் பெண்களின் கல்வியறிவை வளர்த்து கள்ளச் சாராயம் தடுத்த புதுக்கோட்டை மாவட்டப் பெண்கள்! காடுவெட்டிகளைப் பொறிவைத்து பிடிக்கும் பீகார், ஒரிசா மற்றும் மத்திய பிரதேச மக்கள்! ஆணுக்கிணையாக சைக்கிள் புரட்சி செய்த எங்களூர் புதுக்கோட்டைப் பெண்கள்! இன்னும் பல. புதுக்கோட்டை கலெக்டர் ஷிலா ராணி சுங்கத், ராம்நாடு மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் பற்றியும், வெற்றிநிலவன் எனப்படும் ஜெயசந்தர் மற்றும் முத்து பாஸ்கரன் கவிஞர்கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். புத்தகத்தின் கடைசியில் 5 பக்கங்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் நன்றிக்கான பெயர்களைப் பார்க்கும்போது, இத்தனைபேர் சம்மந்த்தப்பட்ட ஒரு புத்தகம் படித்த திருப்தி!

புத்தகம் முழுவதும் பல நல்ல தகவல்கள் உண்டு. ஒரு பதமாக ஒரு லண்டன் இதழில் வெளியான செய்தி: The plague was marching ahead as it was occurring in a region where millions worship an elephant-headed god who rides a rat.

பீடி என்ற வார்த்தைக்கு ஆசிரியரின் அழகியல்: Botanists call it Dyospyros Melanoxylon. Manufactures call it beedi. Traders call it profits; politicians call it power and the poor call it survival.

வீழ்ந்தே கொண்டிருக்கும் சகமனிதனின் வாழ்க்கை வரலாறு!

ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Advertisements