55. A BRIEF HISTORY OF TIME

பதிவிடுகிறவர் தம்பி Bee’morgan . நன்றி!

“காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பாறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை”
பி.ஏ கிருஷ்ணனின் முன்னுரை – அரசூர் வம்சம்

———————————————————-
புத்தகம் : A brief history of Time
ஆசிரியர் : Stephen Hawking
பதிப்பகம் : Bantam Books
விலை : ரூ193
பக்கங்கள் : 224
முதற்பதிப்பு : 1988
கிடைத்த இடம் : LandmarkOntheNet
(http://www.landmarkonthenet.com/Books/A-Brief-History-of-Time-Stephen-Hawking/9780553176988)

———————————————————-

நம் அனைவருக்கும் பரிச்சயமான முகம் Stephen Hawking. கண்டிப்பாக ஏதாவதொரு செய்திக்குறிப்பில் இவரைக் கண்டுகொண்டிருப்போம். கார்பஸ் கடிகாரத்தை திறந்து வைத்ததோ, விண்வெளி பயணம் போனதோ இன்னும் ஏதாவதோ இவரை நம்மிடம் அழைத்து வந்திருக்கும். ஆனால், இவரது ஆய்வைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. இப்புத்தகம் அவரது முக்கியமான ஆய்வுப்பகுதியான கருந்துளைகள் மற்றும் காலத்தைப் பற்றிப் பேசுகிறது.

இப்புத்தகத்தின் அடிநாதமான கேள்வி, காலம் என்பது என்ன?

இந்தக்கேள்வி அங்கங்கே கிளைத்து இன்னும் ஆயிரம் கேள்விகளுக்கு வித்திடுகிறது.

காலத்திற்குத் தொடக்கமோ முடிவோ உண்டா? பிரபஞ்சம் எப்போது தோன்றியது? பெருவெடிப்பில் (பிக் பேங்) பிரபஞ்சம் தோன்றியிருந்தால் அதற்கு முன்பு காலம் என்ற ஒன்று இருந்ததா? பெருவெடிப்பில் கடவுளின் பங்கு என்ன? என்ற மற்றொரு விவாதத்திற்குரிய கேள்வியும் கொஞ்சம் போல் வந்து செல்கிறது.

இது அறிவியல் புத்தகம் என்பதற்காக, பூச்சி பூச்சியாக பயமுறுத்தும் சமன்பாடுகளெல்லாம் இல்லை. புத்தகம் முழுக்க தேடினாலும் தட்டுப்படும் ஒரே ஒரு சமன்பாடு E=mc2 மட்டும்தான். மற்றபடிக்கு சுவாரஸ்யங்கள் நிறைந்த வரலாறு இது.

உதாரணத்திற்கு, சில மட்டும் இங்கே.

அறிவியலை எப்படி வரையறுக்கிறார் என்று பாருங்கள்..
“The whole history of science has been the gradual realization that events do not happen in an arbitrary manner, but that they reflect a certain underlying order …”

அப்படியானால் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துமே ஏதோ விதி்க்குட்பட்டு நடக்கின்றன.
நாம் இது வரை கண்டறிந்திருக்கும் அறிவியல் விதிகள் எல்லாமுமே குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் வர்ணிக்கின்றன. இவை அனைத்துமே ஒரு பேரியக்கத்தின் பகுதிகள் எனில், அந்தப் பேரியக்கத்தை வர்ணிப்பதற்கும் ஒரு விதி இருக்கவேண்டும். அதுதான் யுனிஃபைட் தியரி. இது வரை நாம் அதை கண்டுபிடிக்கவில்லை. அந்த யுனிஃபைட் தியரிக்கான தேடல் பல பதிற்றாண்டுகளாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த யுனிஃபைட் தியரியை நாம் கண்டுபிடிப்பதோ கண்டுபிடிக்காமல் போவதோ கூட முன் நிர்ணயிக்கப்பட்டு விட்ட ஒன்றுதான்.

நம் வழக்கில் சொல்வதானால், அனைத்தும் விதிப்படிதான் நடக்கும். ஏனெனில் நாமும் இந்தப் பேரியக்கத்தின் ஓர் அங்கம். கொஞ்சம் நிதானமாக இந்த வரிகளை யோசித்துப் பாருங்கள். இதெல்லாம் முதல் அத்தியாயத்தில் வரும் செய்திகள். இதைப் படித்து விட்டு ரொம்ப நேரத்திற்கு இதைப்பற்றியே அசைபோட்டுக்கொண்டிருந்தேன். பல விசித்திரமான சாத்தியக்கூறுகளில் உங்களை இட்டுச்செல்லும் பாதைகள் இதில் ஒளிந்திருக்கின்றன. இணையத்தில் தேடிப்பாருங்கள்.

இன்னொரு கேள்வி.

இறந்தகாலம் நம் நினைவில் இருப்பது போல், ஏன் எதிர்காலம் நம் நினைவில் இருப்பதில்லை? இந்த கேள்வி ரொம்ப அபத்தமாகத் தெரிகிறதல்லவா? ஆனால் இதற்கும் தெர்மோடைனமிக்ஸின் இரண்டாம் விதிக்கும் தொடர்பு உண்டென்றால் நம்பித்தான் ஆகவேண்டும்.

காலம் அம்புதான். ஆனால் ஓர் அம்பு அல்ல. மொத்தம் மூன்று அம்புகள். பிரபஞ்சத்தின் அம்பு, தெர்மோடைனமிக்ஸ் அம்பு, சைக்கலாஜிக்கல் அம்பு. இந்த மூன்று அம்புகளும் ஒரே திக்கில் பயணிக்கும் போதுதான் இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றமுடியும் என்கிறார். தெர்மோடைனமிக்ஸ் அம்பு நேரெதிராக இருக்கும் ஒரு பிரபஞ்சத்தில் மனிதன் உயிர்வாழ நேர்ந்தால் அவனுக்கு எதிர்காலம் மட்டுமே நினைவிலிருக்கும். கடந்த காலமல்ல. சுவையான அறிவியல் புனைவு மாதிரி தோன்றுகிறதல்லவா?

நாலு அப்சர்வேஷன் எடுத்து அதுக்கு பொருந்தற மாதிரி லேப் ரெக்கார்ட்டில் கிராஃப் போட்ட அனுபவம் உண்டா? அப்படித்தான் astro physics ம்.. ஒரு கட்டத்துக்கு மேல் எதையும் தீர்மானமாகச் சொல்வது என்பது இயலாத காரியம்.. ஒரு தியரி யாராவது சொன்னால் கூட அது சரியா தவறா என்று யாராலும் உடனே சொல்லிவிட முடியாது.. நாலைந்து முறை அளவீடுகள் எடுத்து, கிட்டத்தட்டவாவது அது ஒத்துப்போகுதான்னு பாத்துதான் எதுவும் சொல்லமுடியும். இந்த ஒரு சுதந்திரத்தினாலேயே பல கட்டுப்பாடுகள் களைந்த கற்பனைகளுக்கு இடம் கொடுக்கிறது தத்துவ இயற்பியல்.

மெய் எண்கள், கற்பனை எண்கள் என்று பள்ளிக்காலத்தில் படித்திருப்போம். கணிதத்தில் ஒருசில குறிப்பிட்ட குழப்ப நிலைகளைக் கடப்பதற்கு மெய்எண்கள் மட்டும் போதாது. அதனால்தான் கற்பனை எண்கள் தோன்றின. அப்படித்தான் பிரபஞ்சத்தின் காலக்கணக்கின் குழப்பங்கங்களுக்காக கற்பனைக் காலம் ஒன்றை அறிமுகம் செய்கிறார். இந்தக் கற்பனைக் காலத்தின் மிகப்பெரிய சவுகரியம், இந்தக் காலத்தில் நாம் ஜாலியாக முன்பின்னாக ஊஞ்சலாட முடியும். முன்னாடி செல்வது மாதிரியே நாம் பின்னாடியும் செல்லும் சவுகரியம் இதிலுண்டு. இந்தக் கற்பனைக் காலத்தில் ஏறக்குறைய துல்லியமாக பிரபஞ்சத்தின் தோற்றத்தை வர்ணிக்க முடியும்.

இதுபோல் இன்னும் ஏராளமான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன காலத்தின் வரலாற்றில்.

ஆசிரியரைப்பற்றி:

தத்துவ இயற்பியலின் ஆதார ஸ்ருதி, Suppose என்ற பதம் தான். Suppose இது இப்படி இல்லாமல் இருந்திருந்தால் அது எப்படி இருக்கும் என்பது மாதிரியான தர்க்கங்கள்தான் அடுத்தடுத்த புரிதல் நிலைகளுக்கு நம்மை அழைத்துச்செல்கின்றன. நியுட்டனுக்கும் ஐன்ஸ்டீனுக்கும் பிறகு மாபெரும் தத்துவ அறிவியல் மேதையாக கொண்டாடப்படுபவர் Stephen Hawking. கலீலியோ பிறந்து சரியாக 300 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் Lucasian Professor of Mathematics பதவியை வகித்தபின் சமீபத்தில் ஓய்வு பெற்றார். தன்னுடைய இருபதாவது வயதில் Motor Neuron Disease க்கு தன் உடல் இயக்கங்கள் அனைத்தையும் பறிகொடுத்தாலும் அறிவியலை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில் தொடர்ந்து, விடாமல் இயங்கி வருகிறார்.

கொசுறு:

கார்பஸ் கடிகாரம் (http://en.wikipedia.org/wiki/Corpus_Clock) மற்றொரு சுவாரஸ்யம். சமீபத்தில் வெளியாகியிருக்கும் Paa திரைப்படத்தில், flashback காட்சிகளில் இந்தக் கடிகாரம் ரொம்ப அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும்

Auro விற்கு கிச்சடி மேல் இருக்கும் அளவுக்காவது உங்களுக்கு அஸ்ட்ரோ பிசிக்ஸில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் படித்துப் பாருங்கள். ஒரு குழந்தைக்கு கதை சொல்லும் லாவகத்தில் நம் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பிரபஞ்ச வலம் வரக் காத்திருக்கிறார் Stephen Hawking.

இரண்டு நினைவுகள்:

* கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்சத்தின் பிரமாண்டம் தெரியவரும் போது நாமெல்லாம் எவ்வளவு தக்குணுன்டு என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் வந்துசெல்கிறது. “என் ஊர், என் மாநிலம், என் நாடு என்று அடித்துக்கொண்டிருக்கிறீர்களே. இதெல்லாம் ஒரு தூசு கூட கிடையாதுடா மடையா” என்று பொட்டில் அறைகிறது உண்மை.

* நான் பள்ளியில் படித்த வரை, எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது அணுவைப் பிளந்தால் கிடைப்பது எலக்ட்ரான் மற்றும் புரோட்டான். இவைதான் primitive particles of matter. அதாவது இதற்கு மேல் எதையும் பிளக்கமுடியாது என்பது அதன் அர்த்தம். நானும் அதையேதான் நம்பிக்கொண்டிருந்தேன் இப்புத்தகத்தைப் படிக்கும் வரை. ஆனால், மனிதகுலம் எப்பவோ இவற்றையும் பிளந்து குவார்க்ஸ் (quarks-http://en.wikipedia.org/wiki/Quark) வரை சென்று விட்டது.

நான் பள்ளிக்காலம் முடித்தது ஏறக்குறைய இப்புத்தகத்தின் முதற்பதிப்பு வெளிவந்து கால் நூற்றாண்டுக்குப் பின். நம் பள்ளிப் பாடத்திட்டங்கள் காலத்தால் ஏன் இவ்வளவு பின்தங்கியிருக்கின்றன?

– Bee’morgan
(http://beemorgan.blogspot.com/)