56. THE ENCHANTRESS OF FLORENCE

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

பெண்மீது காதலும் வெற்றிமீது
வெறியும் இல்லையென்றால்
இன்னும் இந்தபூமி பிறந்த
மேனியாகவே
இருந்திருக்கும்.
– வைரமுத்து (தண்ணீர் தேசம்)

தங்கமே என்னைத் தாய்மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்.
– வைரமுத்து (ஆயிரத்தில் ஒருவன் திரைப்படப் பாடல்)

————————————————–
புத்தகம் : The Enchantress of Florence (புதினம்)
ஆசிரியர் : சல்மான் ருஷ்டி
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Vintage
முதற்பதிப்பு : 2008
விலை : 280 ரூபாய்
பக்கங்கள் : 443 (தோராயமாக 29 வரிகள் / பக்கம்)

————————————————–

Midnight’s Children புத்தகம் கொடுத்த பிரமிப்பில் இருந்து உடனே விடுபட விரும்பாமல், சல்மான் ருஷ்டியின் புத்தகங்களில் நான் தேர்ந்தெடுத்தது இப்புத்தகம். வழக்கம்போல் புத்தகத்தின் கருவைவிட்டுவிட்டு நான் ரசித்த விசயங்களைப் பகிர்கிறேன். சல்மான் ருஷ்டியின் சமீபத்திய புத்தகம் இது. அவரின் படைப்புகளிலேயே அதிக ஆராய்ச்சிகளுக்குப் பின் எழுதப்பட்ட புத்தகம் என்று ஆசிரியரே சொல்கிறார். உண்மைதான். Bibliographyயில் மட்டும் 85 புத்தகங்களின், 8 இணையதளங்களின் பட்டியல் இருக்கிறது.

மொகலாயப் பேரரசர் அக்பரின் அரசவைக்கு வருகைதரும் ஓர் ஐரோப்பிய இளைஞன், தன்னை மொகலாய அரசப் பரம்பரையின் ஒரு வாரிசென அறிமுகப்படுத்துகிறான். இதுதான் புத்தகத்தின் பின்னட்டை சொல்லும் ஒரே வரி கதை. ஐரோப்பிய நாடுகளில் பிளேக் கொள்ளை நோய் (Black Death – 1348) நுழைந்ததில் இருந்து, தனது தலைநகரான பதேபூர் சிக்ரியைவிட்டு அக்பர் வெளியேறுவது (1585) வரையிலான காலக்கட்டத்தில் புத்தகத்தின் மையக்கதை பயணிக்கிறது. சல்மான் ருஷ்டியின் இதுவரை நான் படித்த புத்தகங்களில் கற்பனை கதைமாந்தர்களுடன் சில வரலாற்று மாந்தர்கள் வந்து போவார்கள். இப்புதினம் தலைகீழ். வரலாற்று மாந்தர்களுக்கிடையே ஐந்தாறு கற்பனை கதைமாந்தர்கள் புகுந்து, வரலாற்றில் பதியப்படாமல் போன சில முடிச்சுகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.

அரசர் என்றாலே வாரிசுகளால் கொலை அல்லது சிறை செய்யப்படும் கதைகளையே கேள்விப்பட்டிருந்த எனக்கு, இந்தத் தாத்தாவும் பேரனும் ஆச்சரியமாகத் தெரிகிறார்கள். தனது மகன் ஹிமாயுன் (படிக்கட்டில் தவறிவிழுந்து இறந்துபோன அதே பேரரசர்தான்) நோய்ப்பட்டு இறக்கும் தருவாயில் தனதுயிரை அவனுடலில் செலுத்தி தன்னை மாய்த்துக் கொண்டு மகனுக்குப் பாபர் உயிரளித்ததாக ஒரு தகவல். அவதார் திரைப்படத்தில் வருவதுபோன்ற இந்த சம்பவத்தை, பாபர் இறந்த காலத்தை முன்னிறுத்தி வரலாற்றாசிரியர்கள் மறுக்கின்றனர். தனது அரசவையில் இருக்கும் நம்பிக்கைக்குரியவர்களைக் கொலைசெய்துகொண்டு, தன்னையும் கொல்லவரும் தனது மகன் சலீமை மன்னித்து மனமாற்றும் அக்பர் உண்மையிலேயே கிரேட்! சலீம் என்ற சராசரி அரசகுடும்ப வாரிசு, ஜஹாங்கீர் என்ற நேர்த்தியான பேரரசராவது அழகு. இதுவரை நான் படித்த சல்மான் ருஷ்டியின் எல்லாப் புதினங்களிலும் ஜஹாங்கீர் உண்டு.

இப்புதினத்தின் காலகட்டத்தில் உலகில் நடந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று, மார்டின் லூதர் ஆரம்பித்துவைத்த கிறிஸ்தவ மதத்தில் பிளவு. பாப்பரசர் (போப்) பதின்மூன்றாம் கிரிகோரியின் தூதுகளை நம்பி ஏமாற வேண்டாமென இங்கிலாந்து மாகாராணி எலிசபெத் டூடர் அக்பருக்குத் தூதனுப்புவதும், அவளின் எழுத்துத் திறமையில் மயங்கி அவளைத் தனக்குச் சொந்தமாக்க அக்பர் நினைப்பதும் அருமையான காட்சிகள். என்னைத் தொடர்ந்து படிப்பவராக இருந்தால் பாப்பரசர் பதின்மூன்றாம் கிரிகோரி என்று படித்த உடனேயே உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வந்திருக்க வேண்டும். நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இன்றைய காலண்டரை உருவாக்கி வரலாற்றைக் கிமு-கிபி என பிரித்துப் போட்டவர் இவர்தான். இறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன், 1582ல் அக்டோபர் மாதத்தில் பத்து நாட்களை நீக்கியவரும் இவரேதான். அதே சமயத்தில் இந்துஸ்தானில் சூரியக் காலண்டர் ஒன்றை அக்பர் அறிமுகப்படுத்தியதாகவும் ஒரு தகவல் உண்டு. எந்தக் குழப்பமும் வேண்டாம் என்றுதானோ என்னவோ, இப்புத்தகத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான் வருடம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்புதினத்தின் காலகட்டத்தில் உலகில் நடந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் இன்னொன்று, புதிய வழிகளைத் தேடி மனிதன் கடலோடியது. கடலில் இருக்கும் அரக்கன் படகைக் கடித்துவிடுவான் எனவும், பூமத்திய ரேகையில் கடலில் நெருப்பெரியும் எனவும், மேற்குக் கடைசியில் கடலில் சகதி இருக்கும் எனவும், தட்டையான பூமியின் விளிம்புகளில் கப்பல் கவிழ்ந்துவிடும் எனவும் இருந்த மனிதகுல நம்பிக்கைகளை மெகல்லனும், கொலம்பசும், வெஸ்புகியும், இன்னும் பலரும் பொய்யாக்கியது இதே காலத்தில்தான். அதே கடலோடிகள் சிபிலிஸ், ஸ்கர்வி, பிளேக் போன்ற கொள்ளை நோய்களை ஐரோப்பாவுக்குக் கொண்டுவந்ததை நமது வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

கடவுளின் சாபத்தால் பிளேக் வர, கடவுளால் மதப்போர்கள் வர, பொருளாதாரம் சீரழிந்து, குடும்ப வங்கிகளும், பரவலாகத் தோன்றிய விபச்சார விடுதிகளும், மதமும், மதத்தின் மதமும் – ஐரோப்பா பாவம்தான். நான்கு போப்களைத் தனது குடும்பத்தில் இருந்து உண்டாக்கும் அளவிற்கு, ஃப்ளோரன்ஸ் குடியரசில் மெடிசி (Medici) குடும்பத்தினரின் பணபலம். சிபிலிஸ் நோய் பரவ ஆரம்பித்ததும் ஐரோப்பா முழுவதும் விபச்சார விடுதிகள் மூடப்படுவதும், மெடிசி ராச்சியம் அழிந்து போவதும் (Pazzi conspiracy) காலம் போட்ட கோலங்கள்! பிளேக் ஆரம்பித்ததைச் சிபிலிஸ் முடித்து வைத்தது! இடையில் நடந்ததெல்லாம் ஐரோப்பாவின் இருண்ட நாட்கள்.

23ம் புலிகேசி ரேஞ்சுக்கு அரசர்கள் செய்த இம்சைகள் சிலவும் இப்புத்தகத்தில் உண்டு. மூன்று வித்தியாசமான ஆட்கள் படித்து விமர்சனம் செய்தபிறகுதான் அக்பர் எந்தவொரு புத்தகத்தையும் படிப்பாராம். நீங்கள் படித்துக் கொண்டிருப்பது முன்றாம் பார்வை; அக்பர் செய்தது நான்காம் பார்வை! தன்னை ஒருபோதும் தன்மை ஒருமையில் (நான்) அக்பர் விளிப்பதில்லை என்பதும் எனக்குப் புதிய தகவல்தான். தன்னை எப்போதும் ‘நாம்’ என்றே விளிப்பதும், தனது குடிமக்களின் அவதாரமாக அக்பர் வாழ்ந்ததும் ஆச்சரியமே! அப்படிப்பட்ட அரசன், தன் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை மட்டும் ‘நான்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார். இப்புத்தகம் படித்தால், அதற்கான நிகழ்ச்சியை மறக்க சிலகாலம் பிடிக்கும்.

தனக்குத் தெரிந்த ஏழு மொழிகளிலும் கனவுகாணத் தெரிந்த ஒருவன்; இன்னொருவரின் கனவுகளை வாசிக்கும் ஒருவன்; ஒரு இஸ்லாமிய மன்னனின் கீழ் பணிபுரிவதை அவமானமென உயிர்துறந்த பிராமணர்கள் சிலர்; நபீஸ், அகதோகிளஸ், அலெக்சாண்டர், டேரியஸ் என்று இறந்த மாவீரர்களிடம் அறிவுரை கேட்கும் ஒருவன்; மண்ணெல்லாம் வென்றுவிட்டு திருக்குரானை எரித்துப் போட்டு மண்ணாய்ப்போன ஓர் அரசன்; மனித மாமிசம் தின்னும் மனிதர்கள்; பலபதிமுறை; கன்னிப் பெண்களை மணந்து கொள்ள ஆண்களுக்கு அனுமதி மறுத்த பெண்ணாதிக்கச் சமுகம்; ஒற்றை மார்பகம் வளராத ஒருத்தி; ஏவாளைப் போல மனுஷியாகவே பிறந்த ஒருத்தி. இன்னும் பல சுவாரசியங்கள்.

பீர் பால் எப்படி இறந்தார் என்று தெரியுமா? மதன் அவர்கள் எழுதிய “மனிதனுக்குள்ளே மிருகம்” புத்தகத்தில் வரும் கொடூர மன்னன் டிராகுலா எப்படி இறந்தான் தெரியுமா? அக்பர் வடிவமைத்த பதேபூர் சிக்ரி நகரம் என்னவாயிற்று தெரியுமா? ஜோதா அக்பர் என்று ஓர் இந்தி திரைப்படம் சமீபத்தில் வந்தது. ஜோதா (Jodha) என்பது யார் தெரியுமா? 14,15,16 ம் நுற்றாண்டுகளில் கிழக்கு மேற்குகளைத் தன் எழுத்தால் கட்டிப்போடும் சல்மான் ருஷ்டியின் படைப்பு. படித்துப் பாருங்கள்!

கொசுறு:


புத்தகத்திற்கு அப்பால்,

1) டூடர் பரம்பரையின் கடைசி வாரிசான எலிசபெத் டூடரின் (Elizabeth Tudor) தாயாரைப் பற்றி எனது கதையிலேயோ கவிதையிலேயோ படிப்பதற்கு முன், நீங்களே ஒருமுறை படித்துப் பாருங்கள்.

2) செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்துடன் இப்புத்தகத்தைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். பின்புலத்தில் இருக்கும் கடின உழைப்பைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இவ்விரு படைப்புகளுக்கும் கிடையாது.

3) எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘கோடுகள் இல்லாத வரைபடம்’ படித்துப் பாருங்கள். வரலாற்றில் ஊர் சுற்றியவர்கள் பற்றிய புத்தகம்.

4) Schizophrenia (குடைக்குள் மழை, ஆளவந்தான் திரைப்படங்கள்), Pictorial memory (தையல் ஊசி காது கண்டுபிடித்தவரும், டா வின்சியும், மொசார்டும், குழந்தைகளும் சொல்லியும்கூட பெரும்பாலானவர்களின் மூளையின் மூலையில் சும்மாவே கிடக்கும் ஒரு பொக்கிஷம்) போன்ற நிலைகளைக் கொண்ட பாத்திரங்களும் இப்புத்தகத்தில் உண்டு.

5) இயற்கையின் டிசைன் இருக்கே! சிபிலிஸ் நோயைக் குணமளிக்க நோயாளிக்கு மலேரியா நோயும் ஒருவகை மருந்து. Survival of the sickest!

The curse of the human race is not that we are so different from one another, but that we are so alike.

– ஞானசேகர்
http://jssekar.blogspot.com/