59. கோபல்ல கிராமம்

பதிவிடுகிறவர் நண்பர் Bee’morgan. நன்றி!

———————————————
புத்தகம் : கோபல்ல கிராமம்
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை : ரூ100
பக்கங்கள் : 200
முதற்பதிப்பு : 1976
கிடைத்த இடம் : பெங்களுரு புத்தகக்கண்காட்சி

———————————————

சிறு வயதில் ஆள் அரவமற்றுப் போன மதிய வேளைகளிலோ, விளக்கு வைத்த பின்பான இரவு வேளைகளிலோ திண்ணையில் அமர்ந்து கொண்டு தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்ட அனுபவம் இருப்பவர்கள் அந்த நினைவுகளை கொஞ்சம் மீட்டெடுத்துக்கொள்ளுங்கள்.

”ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்…”

எத்தனை முறை நாம் கேட்டுப் பழகிய முதல் வரி இது. எல்லாக் கதையுமே அந்த “ஒரு ஊரில்” தான் தொடங்குகிறது. எந்த ஊரின் கதை? அதுதான் கோபல்ல கிராமம். தான் வளர்ந்த கிராமத்தின் கதையை, தானே கதைசொல்லியாகவும், பாட்டியிடம் கதைகேட்கும் சிறுவனாகவும் இரு வேறு நிலைகளில் நம்மிடம் படைக்கிறார் கி.ரா.

காலம் பற்றிய வெளிப்டையான குறிப்புகள் இல்லையாதலால், ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் என்று கொள்ளவேண்டியிருக்கிறது. செழிப்புடன் வாழ்ந்த பல குடும்பங்கள் ஒரு துலுக்க ராஜாவுக்கு பயந்து தெலுங்குதேசத்திலிருந்து தப்பி தெற்கு நோக்கி வந்து கோபல்ல கிராமத்தை அமைக்கின்றனர். தற்போது கிராமத்தில் ஒரு கொலை நிகழ்கிறது. கொலையாளி பஞ்சாயத்துக்கு வந்து கழுவேற்றும்படி தீர்ப்பைப் பெறும் இடைப்பட்ட இடைவெளியில் பாட்டியிடம் கதைகேட்கும் சூட்சுமத்தில் கோபல்ல கிராமத்தின்
பூர்வீகத்தையும் வாசகனுக்குக் காட்டியபடி கும்பெனிக் காரர்களின் வரவோடு கதை முடிவடைகிறது.

ஒரு கிராமத்தின் கதை என்பது அங்கு வாழ்ந்த, வாழும் மனிதர்களின் கதையே. அந்த வகையில் புத்தகம் முழுக்க ஏராளமாய் மனிதர்கள். விதவிதமாய் மனிதர்கள். விசித்திரமான மனிதர்கள். அதிலும் குறிப்பாக, எனக்குப் பிடித்த, பஞ்சாயத்துக் காட்சியின் தொடக்கத்தில் பஞ்சாயத்தில் கூடியிருக்கும் ஒவ்வொரு நபரும் அவருக்குரிய அடைமொழியுடனும் அந்த அடைமொழிக்கான காரணக் கதையுடனும் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். இந்தக் காட்சி மட்டுமே ஐந்து அத்தியாயங்களுக்கு மேல் நீள்கிறது. கடைசியில பஞ்சாயத்து தொடங்கும் போது கூடியிருக்கும் அனைவருமே நம் பக்கத்து வீட்டுக்காரர்களாக உருக்கொள்கின்றனர். மண்ணுதிண்ணி ரெங்கநாயக்கர், நல்லமனசு திரவத்தி நாயக்கர், பெத்த கொந்து கோட்டையா, பொடிக்கார கெங்கா நாயக்கர், காரவீட்டு லெச்சுமண நாயக்கர், படுபாவி செங்கன்னா என்று அனைவருமே கடைசிப்பக்கத்துக்கு அப்பாலும் நம்மை தொடர்நது வருகின்றனர். இதுவே ஆசிரியரின் மிகப்பெரிய வெற்றி என்பேன்.

ஒரு பிடி மண்ணெடுத்து பக்கங்கள் தோறும் வாரியிறைத்த மாதிரி மண்மணம் கமழ்கிறது கோபல்ல கிராமத்தில். எழுத்துக்காக தனியொரு வழக்கெல்லாம் கொள்ளாமல், தோள்மேல் கை போட்டு நண்பனிடம் பேசும் தொனியிலேயே கதை அவிழ்கிறது. கதையின் போக்கோடேயே செல்லும் போது, சுவாரஸ்யமான வேறொரு கிளையைப் பற்றியபடி கதை அந்த கிளைக்கதைக்குள் நுழைந்து விடுகிறது. அதன் போக்கிலேயே கொஞ்சம் போனபின்தான் மீண்டு வந்து முதல்கதையைச் சேர்கிறது. இதனாலோ என்னவோ, பாட்டியிடம் கதைகேட்பது போன்ற உணர்வு அடிக்கடி எழுவதைத் தவிர்ககமுடியவில்லை.

அங்கங்கே பல சுவாரஸ்யமான விவரணைகள் படிக்கப் படிக்க ஆச்சரியமூட்டுகின்றன. இடையில் தீவட்டிக்கொள்ளைக்காரர்கள் வருகிறார்கள். அக்கையாவின் போர்த்தந்திரத்தில் அகப்பட்டுத் தப்பியோடுகிறார்கள். ஆங்.. அக்கையா.. கிராமத்தின் விகடகவி கதாபாத்திரம். குறும்பு மிளிரும் கண்களுடன், அனைவரையும் சிரிக்கவும் வைக்கிறார், கொள்ளைக்காரர்களின் தாக்குதலின் போது சாமர்த்தியமாக பதிலடியும் கொடுக்கிறார். கிட்டத்தட்ட பீர்பாலை நினைவு படுத்தும் கதாபாத்திரம். நிச்சயம் அனைவரையும் கவர்பவர் இவர். அப்புறம், கன்றை இழந்த பசுவையும், தாய்ப்பசுவை இழந்த கன்றையும் இணைத்து வைக்கிறார் வாகடம் புல்லையா. இதன் பெயர் “தழையிறது“ என்கிறார். ஆச்சரியப்பட வைக்கும் சுவாரஸ்யாமான வர்ணனை இது.

தெற்கு நோக்கிப் பயணப்படும் அந்த மக்கள் கூட்டம், ஓரிடத்தில் காட்டைத் திருத்தி கிராமம் அமைத்துக் கொள்ள முடிவெடுக்கிறது. சரி செய்ய கடினமான காடு என்பதான அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பெரிய காட்டிலிருந்து பிரித்து, தீவுக் காட்டை அமைத்து அதனை தீயிட்டு எரிக்கின்றனர். இதே போன்றதொரு வன எரிப்பு நிகழ்வு “உப பாண்டவத்“திலும் இடம் பெறும். ஆனால் உபபாண்டவத்தின் வீரியமும் வீச்சும் வேறொரு தளத்தில் நம்மை திகைக்கச் செய்தால், கோபல்ல கிராமத்தின் வன எரிப்பு, கிராம மக்களின் பார்வையில், அதன் தேவையின் முக்கியத்தோடு நம் முன் புகைகிறது. இடையிடையே தேவதைக்கதைக்கான கூறுகளும் கடந்து செல்கின்றன.

ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வருணனை, புறத்தோற்றங்களின் வழி தொடங்காமல், அவர்களின் குணநலன்களோடேயே தொடங்குகிறது. அந்த வருணனை முடிவதற்குள்ளாகவே, ஒவ்வொருவரும் அவர்களின் குணநலன்களுக்கேற்ப நம் மனக்கண்ணில் உருக்கொண்டுவிடுகின்றனர். அதைவிட முக்கியமாக, தொடர்ந்து வரும் கதைச்சரடும் நம் மனக்கண்ணில் கொண்ட உருவிற்கு வலுசேர்த்தவாறே செல்கிறது. அந்த வகையில் வாசகனை ஒவ்வொரு நிலையிலும், அவரவர்க்கேற்ற கற்பனை கிராமத்தை உருவாக்கிக்கொள்ள உற்சாகமளித்தவாறே பயணப்படுகிறது கதை. ஒரு சில இடங்களில், பயன்படுத்தப்பட்டிருக்கும் சில வழக்குச்சொற்களுக்கும், வழக்கொழிந்த சொற்களுக்கும் அவற்றின் சரியான பொருள் தெரியாவிட்டாலும் கூட நம் மனதுக்கு பொருத்தமான ஒரு பொருளை வரித்துக்கொள்வதில் கஷ்டமிருக்கவில்லை.

உண்மையில், அந்தச் சொற்களுக்கெல்லாம் பொருள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியிருக்கிறது இந்நூல். உதாரணத்துக்கு குறிப்புகள் கொடுக்கப்பட்ட சில சொற்கள் உங்களின் பார்வைக்கு

ருசிக்கல்
குத்துத்தரம்
தைப்பாறுதல்
செல்லீ
ஏணி நாற்காலி
அகப்பத்தியம்

ஒரு கதைசொல்லியின் நெருக்கத்துடன் கதை கேட்க விரும்புபவர்கள் கண்டிப்பாய் கோபல்ல கிராமத்திற்கு வரலாம்.

கிராமத்தின் முகவரி, இணையத்தில்:

-Bee’morgan
http://beemorgan.blogspot.com/