77. ஏழாம் உலகம்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

இம்மைக்குச் செய்வது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வாணிகன் ஆய் அல்லன்
– மோசிகீரனார்

No tips taken here; just because a man has to make his living waiting on table is no reason to insult him by offering him a tip.
– ஓர் உணவக வாயில் செய்திப்பலகை (Ten days that shook the world – John Reed)

————————————————————-
புத்தகம் : ஏழாம் உலகம் (புதினம்)
ஆசிரிய‌ர் : ஜெயமோகன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
முதற்பதிப்பு : ஏப்ரல் 2010
விலை : 150 ரூபாய்
பக்கங்கள் : 274 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

————————————————————-

‘இப்பத்தான் ஏழாம் உலகமே படிக்கிறியா?’ என்று உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. எங்கள் தலைமுறைக்கு இலக்கியம் என்று படிப்பிக்கப்படுபவை அப்படி. நான் கடவுள் என்று பாலா சார் படம் எடுத்திராவிட்டால் இப்படியொரு புதினம் எனக்கு அறிமுகமாகியிருக்குமா என்று தெரியவில்லை. ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் புதினத்தைத் தழுவித்தான் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது பலருக்குப் பரிச்சயம் என்றாலும் புத்தகத்தைப் பற்றி முதலில் பேசிவிட்டு பிறகு திரைப்படத்திற்கும் போவோம்.

பிச்சைக்காரர்களை வாங்கும் – விற்கும் – உற்பத்தியாக்கும் தொழில் நடத்தும் ஒருவனின் குடும்பத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் நடக்கும் சம்பவங்களே இப்புதினம். மலையாளம் கலந்த தமிழ்பேசும் கதைமாந்தர்கள். நமது கருணை – இரக்க குணங்களை நிரூபித்துக் கொள்வதற்காகவும், சுகமான மறுபிறப்பிற்குச் சேர்த்துவைக்கும் புண்ணியமாகவும், சபிக்கப்பட்ட பிறப்புகளாகவும் மட்டுமே நமக்குத் தெரியும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை மிக அருகில்போய் புதினப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். பிறவியிலேயே ஊனமாகவும் விகாரமாகவும் பிறந்தவர்கள் அல்லது அப்படி ஆக்கப்பட்டவர்கள்தான் கதையின் முக்கிய மாந்தர்கள். அவர்களை வைத்துக் காசுபண்ணும் முதலாளியைச் சுற்றித்தான் மொத்த புதினமும் பின்னப்பட்டிருக்கிறது. முதலாளியின் குடும்பமும் பிச்சைக்காரர்களை ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்யும் சிலரும்கூட கதைமாந்தர்கள்.

தொழிலாளி என்று நம்பவைத்து ஓர் அடிமையைக் கட்டுப்படுத்தலாம் என்றார் கார்ல் மார்க்ஸ். ஆனால் பிச்சைக்காரர்களுக்கு அவர்களின் முதலாளிகள் வைத்திருக்கும் பெயர்கூட‌ உருப்படி. உருப்படிகளைத் தன் விருப்பப்படி வாங்கி விற்று ஊனப்படுத்திக் கொண்டிருக்கும் முதலாளிகளையும் தரகர்களையும் அறிமுகப்படுத்தி மனத்தைக் கனப்படுத்துகிறது புத்தகம். திக்கற்ற உருப்படிகள் தங்கள் இயலாமையைத் தங்களுக்குள் நக்கலாகப் பேசிக்கொள்ளும் உரையாடல்களில் மறைத்துக் கொள்வதும், உருப்படிகள் தங்களுக்குள் ஒருகுடும்ப உறுப்பினர்கள் போல் வாழ்வதும், சிலர் விற்கப்படும்போது மற்றவர்கள் கலங்குவதும், இலைச்சோறு சாப்பிட முதலாளியின் வீட்டு விசேசத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் உருப்படிகளும், முதலாளி தன் தொழிலைக் கடவுளிடம் நியாயப்படுத்துவதும், தன் தொழில் மறைத்து வாழும் முதலாளியின் சொந்தக் குடும்ப வாழ்க்கையும் நாம் கற்பனையில்கூட நினைத்துப் பார்த்திராத எதார்த்தங்கள்.

ஆட்சியாளர்களை உருப்படிகள் நேரடியாகவே கெட்டவார்த்தைகளில் திட்டுவதும், ஹாலிவுட் அர்னால்ட் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல நல்ல உதாரணங்கள் உருப்படிகளின் உரையாடல்களில் இயல்பாக‌ வருவதும், கம்யூனிசம் முதல் சாதிச்சங்கங்கள்வரை உருப்படிகள் பேசும் அரசியலும், கருவறைக்குள்ளேயே மூத்திரம்போகும் பூசாரிகள் அதை நியாயப்படுத்துவதும் போன்று பல இடங்களில் தனது உரையாடல் நடையில் தனித்து நிற்கிறார் ஆசிரியர். அங்காடித் தெரு திரைப்படத்தில் அவரின் பெயர் போடப்படும்போது வரும் அதே நக்கல்.

கதை நடக்கும் காலம் எங்குமே வெளிப்படையாகச் சொல்லப்படாமல், மறைமுகமாகச் சொல்லப்பட்டிருப்பது அருமை. பாதிப்புத்தகம் தாண்டிய பிறகுதான் என்னால் காலம் கண்டுபிடிக்க முடிந்தது. ஒன்பது வருடங்களாக கோயில் வாசலில் பிச்சையெடுத்துவரும் ஒருத்தியை, அக்கோயில் பூசாரி வெற்றுடம்பாக பார்க்க கோரிக்கை விடுப்பதற்குச் சற்றுமுன் தனது புத்தகத்தின் பெயர்க்காரணத்தைப் பூசாரி மூலமே சொல்லியிருப்பது ஜெயமோகன் அவர்களுக்கு நானே சொல்லிக்கொண்ட பல ‘சூப்பர்’களில் ஒன்று. போத்திவேலுப் பண்டாரமும், பெற்ற பிள்ளைகளின் கணக்கு தெரியாத முத்தம்மையும், கைகால்கள் இல்லாத மாங்காண்டி சாமியும், அகமதுகுட்டியும் மறக்கமுடியாத கதாப்பாத்திரங்கள்.

சில நச் வசனங்கள் உங்களின் ரசிப்பிற்கும்:

“அவனுக்கு அண்ணன், பெண்ணு கெட்டல்ல இல்லியா? ஒரு ஆறுமாசம் அவன் சோலி பாக்கட்டுன்னு இங்க வந்திருப்பான். இங்க பிடிச்சு சாமியாக்கிபிட்டானுக…”

“ஓட்டு உள்ளவன் செத்தாத்தான் அது கொலக் கேசு. மத்ததெல்லாம் முனிசிப்பாலிட்டி கேசு. அதுதான் இந்தியன் பீனல்கோடு சட்டம்”

“மனுசனை மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?”

புத்தகத்தின் கடைசி மூன்று பக்கங்களுக்கு இருக்கும் வட்டார வழக்கு அகரமுதலி இல்லாவிட்டால், எனக்கெல்லாம் ஒன்றுமே புரிந்திருக்காது. வெப்ராளம் எரப்பாளி கச்சவடம் என்று பல வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படித்து புத்தியில் ஏறிவிட்டன. தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் நாஞ்சில்நாடன் அவர்களின் ஒருபுதினம் உட்பட பல புத்தகங்களுக்கு இந்த அகரமுதலி பயனுள்ளதாக உள்ளது.

பாலாவின் திரைப்படம் புதினத்தைவிட வீரியம் குறைவென்று பெரும்பாலான இணையப்பதிவுகள் சொல்வதால் அதை நான் மறுப்பதற்கான காரணங்கள்:
1. பாலாவின் படத்தின் பெயர் ‘நான் கடவுள்’. ஓர் அகோரிதான் கதைநாயகன். ஏழாம் உலகப் பாத்திரங்கள் பாலாவின் க‌தைக்க‌ள‌ம் ம‌ட்டுமே.
2. இந்த வீரியத்திற்கே பலபேர் இப்படத்தைப் புறக்கணிக்கிறார்கள்.
3. காகிதமும் திரையும் வெவ்வேறு தளங்கள். அகமதுகுட்டி மீனாட்சியம்மை போன்ற பாத்திரங்கள் திரையில் காட்ட அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே!
4. முத்தம்மை முடிவில்லாமல் ஏழாம் உலகம் முழுமையடைவதில்லை என்பது படித்தவர்களுக்குத் தெரியும். அக்காட்சியை நம்மூர் திரையில் வைக்கமுடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியும்.

சமகாலத்தையும் ஒதுக்கப்படும் சக மனிதனையும் ஆவணப்படுத்துவதுதான் புதினங்களின் மிகப்பெரிய பணி என்று நம்புபவன் நான். ‘நுனியளவு செல்’ என்ற மகாகவியின் வார்த்தைகளை இப்புத்தகத்தில் செயலாகப் பார்த்தேன். அரசியல் ஆன்மீகம் கருணை இரக்கம் என்ற நமது சித்தாந்தங்களுக்குள் அடைபடாம‌ல் ஆசிரியர் சொல்வதுபோல் Being and nothingness என்றொரு சமூகம் நம்முடனேயே இருந்து பாதாளலோக‌க் கொடுமைகளில் அமுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களையும் கவனிப்போம்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)