87. LOVE IN THE TIME OF CHOLERA

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!  

வயது ஏற ஏற காதலும் உட‌லின் மையத்தில் இருந்து தலைக்கு ஏறுகிறது.

———————————————————————–

புத்தகம் : LOVE IN THE TIME OF CHOLERA (புதினம்)
ஆசிரியர் : Gabriel Garcia Marquez
மொழி : ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலம்
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு : 1985
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 348 (தோராயமாக 37 வரிகள் / பக்கம்)

———————————————————————–

அழகி. சினிமாவை உள்ளது உள்ளபடியே உள்வாங்கும் பக்குவமும் வயதும் நேரமும் கிடைத்தபோது என்னை முதன்முதலில் பாதித்த படம், தங்கர் பச்சானின் அழகி. திரையரங்குகளில் மட்டும் நான்கு முறை பார்த்திருக்கிறேன். பிற்காலத்தில் அதன் மூலமான கல்வெட்டு சிறுகதையையும் படித்தேன். காதல் என்பது காமத்தின் இரட்டையாகக் கட்டாயம் இருக்க வேண்டியதில்லை என, இன்னும்கூட தனலெட்சுமி கண்டிப்பாகத் திரும்பி வருவாள் என சண்முகத்தைப் போல என் போன்றவர்களையும் நம்ப வைத்திருப்பது தங்கரின் வெற்றி.

மோகமுள். ஜானகிராமனின் மோகமுள் புத்தகத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் நான் படிக்க ஆரம்பித்தபோது, புத்தகத்தின் பெயரில் முன்பாதி மோகத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். யமுனா கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் பதிய ஆரம்பித்தாள். பாபுவைத் தவிர வேறு யாருடனாவது யமுனாவிற்குத் திருமணம் ஆக வேண்டுமென மனம் எதிர்பார்க்கவும் செய்தது. மோகம் என்ற வார்த்தைக்கு நம்மூரில் காதல் என்ற அர்த்தமும் உண்டு என உணர வைத்தது ஜானகிராமனின் வெற்றியும் கூட.

Midnight’s Childrenக்குப் பிறகு என்னைப் பிரமிக்க வைத்த ஆங்கிலப் புதினம் One Hundred Years of Solitude. சூட்டோடு சூடாக கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் அவர்களை மீண்டும் படிக்க நான் தேர்ந்தெடுத்த புத்தகம், Love in the Time of Cholera. கொஞ்சம் அழகியும் கொஞ்சம் மோகமுள்ளும் சேர்ந்த தென்னமெரிக்கக் கதைதான், காலரா காலத்தில் காதல். Love என்றால் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொண்டு, மனிதர் பேசும் மொழி மறந்து பறவைகளோடு பேசத் தோன்றும் மாய அனுபவம் கிடைக்குமென்று எதிர்பார்த்தேன். காதல் என்ற வார்த்தையில் காமமும் ஒளிந்திருக்கிறது என கால்புத்தகம் வரை நான் சந்தேகிக்கவில்லை. ஒரு பெண்ணை இரண்டு பேர் காதலிக்கிறார்கள். ஒருவன் வென்று மண‌முடிக்கிறான். அவன் சாகும்வரை காத்திருந்து 51 ஆண்டுகள் 9 மாதங்கள் 4 நாட்கள் கழித்து இன்னொருவன் 70+ வயதில் தன் காதலைப் புதுப்பிக்க முயல்வதே கதைச்சுருக்கம்.

படகுத் துடுப்பால் அடித்துக் கொலை செய்யப்பட்ட 80 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண்-பெண் சோடியைப் பற்றி, நீண்ட காலத்திற்கு முன் மெக்சிகோ பத்திரிக்கை ஒன்றில் வந்த செய்தியொன்றை ஆசிரியர் படித்திருக்கிறார். அந்த இருவரும் 40 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஒரே தேதியில் ஒரே இடத்தில் சந்தித்து, ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்கி, ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சுற்றித் திரிந்து, தேனிலவை வருடா வருடம் ஞாபகப்படுத்திக் கொண்டாடுவது போல் சந்தோசமாகச் சுற்றித் திரிந்திருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் உல்லாசப் படகில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க, படகோட்டி துடுப்பால் அடித்து அவர்களைக் கொன்றிருக்கிறான். அவர்கள் இறந்தபிறகு விசாரணையில் தான் தெரிகிறது, அவர்கள் இருவரும் தனித்தனியே திருமணமாகி, சந்தோசமான மிகப்பெரிய குடும்பங்கள் தனித்தனியே இருக்கின்றன என்பது. இச்சம்பவத்தைத் தனது பெற்றோரின் காதல் கதையுடன் இணைத்து, கொஞ்சம் மசாலாவும் காலராவும் சேர்த்து ஆசிரியர் எழுதிய புதினம்தான் இது.

பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் கதாநாயகிக்குக் கடிதங்கள் மூலமும் கவிதைகள் மூலமும் காதல் என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகிறான் ஒருவன். நம்மூர் அக இலக்கியங்களில் தோழி மற்றும் செவிலித்தாயின் பங்கு எப்படி இன்றியமையாததோ அதேபோல, அவளின் அத்தைமகளும் அத்தையும் காதலுக்கு உதவுகின்றனர். பள்ளிக்கூட கன்னியாஸ்திரிகளுக்கு விசயம் தெரியவர, தாயில்லாப் பிள்ளையென ரொம்ப செல்லமாக வளர்த்த தகப்பனுக்கும் தகவல் போகிறது. திருத்தவே முடியாதென உணர்ந்த பிறகு, மகளைக் கூட்டிக் கொண்டு ஆற்றில் மாதக்கணக்கில் படகுப்பயணம் போகிறார். திரும்பி வந்த நாயகி, காத்துக் கொண்டிருந்த காதல் கவிஞனுக்கு, இத்தனை நாள் அவர்கள் செய்தது கவர்ச்சியே தவிர காதலில்லை என அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கிறாள்; ஒரு டாக்டர் மேல் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கிறாள்.

டாக்டருக்குத் தொழில் பக்தி அதிகம். தான் பார்த்த ஐரோப்பிய நாடுகள் போல் தன் ஊரையும் மாற்றிவிட வேண்டும் என சின்ன வயதிலேயே அவர் எடுத்த சுகாதார நடவடிக்கைகள் மூலம் அவருக்கு ஊரில் நல்லபெயர். அறுவைச் சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்ட கத்தி, மருத்துவத்தின் தோல்விக்கான அடையாளமென கருதும் டாக்டர், காலரா பரிசோதனை செய்யப்போன இடத்தில் நாயகியின் மேல் காதல் வருகிறது. திருமணத்தில் ஏதேதோ எதிர்பார்த்து ஒன்றுசேர்ந்த அவர்களுக்கு, சில நாட்களிலே ஏமாற்றமே கிடைக்க, இரு பிள்ளைகளும் பெற்று, தாம்பத்திய வாழ்வின் வெற்றி சந்தோசத்தில் இல்லை ஒன்றாகவே இருப்பதில் இருக்கிறதென உணர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

காதலிக்கும் போது தந்தி அலுவலகத்தில் வேலை செய்துவந்த கவிஞன், தோற்றபிறகு காலப்போக்கில் குடும்பத் தொழிலான படகுப் போக்குவரத்தைக் கவனிக்கிறான். விபச்சார விடுதிக்கு நடுவே தனது அலுவலகத்தை வைத்திருந்த அவன், காதல் தோற்கும் வரை கட்டுப்பாட்டுடன் தான் இருக்கிறான். அதன்பின் பல பெண்களுடன் உறவுகொள்ள ஆரம்பிக்கிறான். அரை நூற்றாண்டு கால‌த்தில் 622 பேர்! ஆனால் மற்ற காதல‌ர்களுக்காக‌ கவிதைகளும் தொடர்ந்து எழுதுகிறான். என்றாவது ஒருநாள் தன் காதல் வெல்லும் எனக் காத்திருக்கிறான்.

இந்த மூன்று பேரைத் தவிர மற்ற யாரையும் அளவுக்கு அதிகமாக‌ கதைக்குள் ஆசிரியர் அனுமதிக்கவில்லை. காதலும் முதுமையும் புதினம் முழுக்க வெவ்வேறு அர்த்தங்களில் வருகின்றன. உதாரணமாக, ஒருத்தியுடன் படுக்கையில் இருக்கும்போது கவிஞ‌னுக்குக் காதல் என்றால் என்ன என்று சந்தேகம் வருகிறது. இரவுப் படுக்கையின் களியாட்டமா அல்லது ஞாயிறு மதியப் பேரமைதியா, எது காதல் எனக் கேட்கிறான். ஆடையில்லாமல் அவர்கள் செய்யும் அத்தனையும் காதல் என்கிறாள் அவள். அகநிலை (spiritual) புறநிலை (physical) எனக் காதலில் இருவகைகளையும் விளக்குகிறாள். இடுப்புக்கு மேலே அகநிலை; கீழே புறநிலை. ஒருத்திக்காக எவளையுமே தொடாமல் இருந்து, அவள் இல்லை என்றானபின் 622 பேருடன் தொடர்பு வைத்து, மீண்டும் அவளைத் தேடிப் போகும் இக்கவிஞன் மூலம் கற்பு என்ற சித்தாந்தம் பல அர்த்தம் கொடுக்கிறது. ஒரு படகிற்கு New Fidelity என்று பெயரிட்டு அவர்கள் உறவைக் குறிப்பாலும் உணர்த்துகிறார்.

யாருடனும் இலவசமாக படுக்கை பகிராத கவிஞன், ஒருத்திக்கு மட்டும் காசு கொடுக்க விரும்புகிறான். கணவனிடம் கூட காசு வாங்கியே படுக்கை பகிரும் அவள், கவிஞனிடம் மட்டும் காசு வாங்க மறுக்கிறாள். இதுபோன்ற சின்னச்சின்ன நக்கல்கள் கதையில் அதிகம். அப்போது பதவியில் இருக்கும் போப்பின் பெயரை எண்களுடனேயே (பன்னிரெண்டாம் லியோ) பிள்ளைகளுக்கு வைக்கும் ஒரு குடும்பம் என இப்புத்தகத்திலும் வித்தியாசமாகத் தான் பெயர் சூட்டி இருக்கிறார்.

நூறாண்டுகளின் தனிமை புத்தகம் வரிக்கு வரி கதையுடன் இருந்ததால், அப்போது நல்ல வரிகள் எதையும் பதிவில் நான் சொல்லவில்லை. இப்புத்தகத்தில் இருந்து சில:

டாக்டர் அகாலமடைந்தபின் கவிஞன் சொல்கிறான்: Nothing resembles a person as much as the way he dies, and no death could resemble the man he was thinking about less than this one.

The problem with marriage is that it ends every night after making love, and it must be rebuilt every morning before breakfast.

The problem in public life is learning to overcome terror; the problem in married life is learning to overcome boredom.

Old age began with one’s first minor fall and that death came with the second.

He was like those Swedish matches that light only with their own box.

நான் ரசித்தவை:

பாத்திரம் -> கவிஞனின் 622வது உறவுக்காரி America Vicuna.
வரி -> மோகமுள்ளிற்கு “எல்லாம் இதற்குத்தானா?” என்பது போல், இப்புதினத்திற்கு “I’ve remained a virgin for you”
ப‌குதிக‌ள் -> 1) கதாநாய‌கிக்கு இரண்டாவதாகவும், டாக்டருக்கு முதலாவதாகவும் காதல் தோன்றும் நிகழ்ச்சி 2) அவர்களின் முதலிரவு (இரண்டு முறை படித்தேன்) 3) கதையில் எப்போதாவது தலைகாட்டும் காலரா, புத்தகத்தின் பெயரானதற்கான சம்பவம்
குறியீடு -> நான் அரைகுறையாகப் புரிந்து கொண்ட காதலுக்கும் காலராவுக்குமான அறிகுறிகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுக்காதல் புத்தகம் ஒன்றைப் படித்துவிட்டேன். அடுத்து படிக்கப் போவதும் இவருடையதே. ஆசிரியரின் பெரும்பாலான புத்தகங்கள், நூறாண்டுகளின் தனிமை புத்தகம் தவிர‌, முரண்பட்ட காதல்களை கருவாகக் கொண்ட‌வை என சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். நமது சமூகமும் அப்படியே. ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் வலை விரித்துக் கொண்டும், வலையில் சிக்கிக் கொண்டும் வயது வித்தியாசம் இல்லாமல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தவறு எதுவென்று தெரியாமல் எதையும் செய்யும் இளமைப் பருவம் ஒருவகை. தவறுகள் எல்லாம் மரணத்தில் மறைத்துக் கொள்ளலாம் என்று தெரிந்தே செய்யும் முதுமைப் பருவம் இன்னொரு வகை. முதுமைக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்ளும் ஒருவருடன் புதினம் ஆரம்பமாகிறது. முதுமை ஒன்று தன்னை வைத்து தவறுகள் செய்து கொண்டிருக்கும் உண்மை தெரிந்தவுடன் தற்கொலை செய்து கொள்ளும் இளமையுடன் புதினம் முடிகிறது.

காதல் முகப்பரு போல; இளமையில் வந்தால் அழகு; முதுமையில் அசிங்கம். இளமையில் வயது போதாதென்றும், முதுமை வயதில் கூடாதென்றும் சமூகம் மறுக்கும் காதலைக் காலராவின் உதவியுடன் நீட்டித்துக் கொள்ளும் முதுமைக் காதலை அசிங்கப்படுத்தாமல் சொல்லியிருக்கும் ஒரு நல்ல புத்தகம் இது.

– ஞானசேகர்

(http://jssekar.blogspot.in/)