121. பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்

———————————————————————————————————————————-

புத்தகம்: பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்
ஆசிரியர்: பாரதியார்
வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ்,அம்பத்தூர், சென்னை
முதல் ஈடு: ஜூலை 2010
பக்கங்கள்: 173
விலை: பின்னட்டையில் 75 ரூபாய்; புத்தகத்தினுள் 115 ரூபாய்
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
———————————————————————————————————————————-
ஆடுகளம் திரைப்படத்தின் ஆரம்பத்தில் பெயர்கள் போடும் போது, உலக வரலாற்றில் சேவற்சண்டை பற்றிய குறிப்புகள் பின்னணியில் காட்டப்படும். பாரதியாரின் சின்ன சங்கரன் கதை என்றவொரு குறிப்பும் அவற்றினூடே சில நொடிகளில் வந்து போகும். கவனித்து இருக்கிறீர்களா? நான் முதன்முதலில் அதைப் பார்த்தபின், என்னிடம் இருக்கும் பாரதியாரின் ஒரே புத்தகமான கவிதைத்தொகுப்பின் பொருளடக்கத்தில் தேடிப் பார்த்தேன்; உள்ளேயும் சற்று புரட்டிப் பார்த்தேன். சின்ன சங்கரன் கதை என்று எதுவுமே இல்லை. அவரின் கவிதைகளை நான் கொஞ்சங் கொஞ்சமாக அப்போது படித்துக் கொண்டிருந்ததால், எப்போதுதாவது சின்ன சங்கரன் கதை வரும் என விட்டுவிட்டேன். இச்சித்திரையில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள், சின்ன சங்கரன் கதையை மேற்கோளிட்டுப் பேசினார்; தமிழில் தலைசிறந்த நகைச்சுவைக் கதைகளில் ஒன்றென்றார். அதாவது, சின்ன சங்கரன் கதை என்பது கவிதை அல்ல, கதை என்று ஞானசம்பந்தன் அவர்கள் சொல்லித் தான் இந்த ஞானசேகருக்கு அந்த ஞானபாநு கவிஞனின் பன்முகத் தன்மை தெரியும்.
 
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் 
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
என்று பாடிய மகாகவி, கவிதைகளில் வசனகவிதை போன்று பல பரிமாணங்களைக் கையாண்டிருப்பது பலருக்குத் தெரியும். கவிதை என்ற பேரொளிக்கு முன், அம்மகாகவியின் மற்ற படைப்புகள் ஒளிகுன்றிப் பலருக்குத் தெரியாமல் போனதே எதார்த்தம். குறள் என்ற பிரம்மாண்டத்தின் முன், வள்ளுவனின் மற்ற சிறந்த படைப்புகள் பிரபலமாகாமல் போனது போல. சின்ன சங்கரன் கதை என்பது கதை என்று தெரிய வந்தபின், மகாகவியின் எட்டையபுரம் வீட்டிற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். திருவல்லிக்கேணியில் அவர் நினைவு இல்லத்திற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். திருவல்லிக்கேணியில் பாரதி மெஸ்ஸில் சிலமுறைகள் சாப்பிட்டு இருக்கிறேன். இம்மூவிடங்களிலும் காட்சிக்கு வைத்திருக்கும் புத்தகங்களில் சின்ன சங்கரன் கதை தென்படவேயில்லை. இவ்வருட சென்னைப் புத்தகக் காட்சியில், இப்புத்தகத்தை எடுத்து பொருளட‌க்கம் மட்டும் தான் பார்த்தேன்;  சின்ன சங்கரன் கதை இருந்தது; வாங்கிவிட்டேன்.
 
பாரதியாரின் வேடிக்கைக் கதைகள். புத்தகத்தின் பெயரே எல்லாவற்றையும் சொல்லி விடுவதால், எனது வேலை எளிது. அந்தரடிச்சான் சாஹிப், செத்தான் சாஹிப், மிளகாய்ப்பழ சாமியார், வாழைப்பழச் சாமியார், திடசித்தன், நெட்டைமாடன் என்பன‌ பாரதியின் கதைமாந்தர்களில் சில பெயர்கள். காக்காய்ப் பார்லிமென்ட், கடற்கரையாண்டி, சும்மா என்பன சில கதைகளின் பெயர்கள். ஒரு பெண்ணை வர்ணிக்கும் போது ‘ஷோக்கான குட்டி’ என்று படித்தவுடன், என்னை அறியாமல் சிரித்து விட்டேன். மொத்த புத்தகத்தையும் சென்னை மின்சார இரயில்களில் தான் படித்து முடித்தேன். நான் நினைத்து நினைத்து நீண்ட நேரம் சிரித்துக் கொண்டு இருந்த ஒரு பகுதியை உங்கள் வாசிப்பிற்கும் தருகிறேன். பேய்கள் கடத்திக் கொண்டு வந்த பாரதியாரைப் பார்த்து, பேய்களின் தலைவன் இப்படி சொல்கிறது:
வாப்பா, காளிதாஸா, பயப்படாதே, தரையின் மேல் உட்கார்ந்து கொள். மனதைக் கட்டு. மூச்சை நேராக்கு. ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. நீ செய்த நூல்கள் சில நாம் பார்த்திருக்கிறோம்.’கடலெதிர்த்து வந்தால் கலங்க மாட்டோம். தலைமேல் இடி விழுந்தால் தளர மாட்டோம்; எங்கும் அஞ்சோம்; யார்க்குமஞ்சோம்; எதற்குமஞ்சோம்; எப்போதும் அஞ்சோம்’ என்று நீ பாடினதை நான் நேற்று ஒரு புஸ்தகத்தில் படித்தேன். நீ உண்மையான அனுபவத்தைச் சொன்னாயா, அல்லது வெறுங் கற்பனைதானா என்பதை அறியும் பொருட்டாக நான் உன்னை இங்கே கொண‌ர்வித்தேன். நீ பயப்படுகிற அளவு ஆற்காட் நவாப் கூட பயந்தது கிடையாது. ஆற்காட் நவாப் சங்கதி தெரியுமா? கிளைவ் ஒரு வாயில் வழியே கோட்டைக்குள் புகுந்து பார்த்தபோது நவாப் மற்றொரு வாயில் வழியே வெளியேறிவிட்டாராம். உள்ளே போனால் கிளைவ் யாருடன் சண்டை போடுவார்? அவர் பாட்டிலே போய் ஷோக்காகக் கோட்டைக்குள் பீரங்கி சகிதமாக இருந்துகொண்டு கோட்டை கொத்தளங்களைச் சீராக்கித் தான் அதை வைத்துக் கொண்டாரென்று கேள்வியுற்றதுண்டு. நீ அந்த ஆற்காடு நவாபிடனமிருந்த பிராமணச் சோதிடரின் வம்சத்தில் பிறந்தாயோ? ஆற்காட்டு பயம் பயப்படுகிறாயே? மூடா, ஆறுதலடை.
 
33 பக்கங்களுக்கு நீளும் ‘சின்ன சங்கரன் கதை’. உண்மையான இராமயணக் கதையென இராவனணின் வாரிசு ஒருவன் சொல்லும் ‘குதிரைக்கொம்பு’ . சுடுகாட்டுப் பேய்களின் ‘பேய்க் கூட்டம்’. மொத்தமுள்ள 33ல் இம்மூன்றும் என் விருப்பக் கதைகள். குணா திரைப்படத்தின் பாதிப்பில், அபிராமி அந்தாதியைச் சில மாதங்கள் திருச்சி முழுவதும் தேடி அலைந்திருக்கிறேன். அதன்பிறகு சின்ன சங்கரன் கதைதான். ஒரேயொரு பக்கம் வந்துபோகும் சேவற்சண்டைக் குறிப்புகளைச் சில நொடிகள் திரையில் காட்டி பலருக்கும் கொண்டு சேர்த்தமை பாராட்டுக்குரியது. 
 
பாரதியார் தன் சொந்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுத ஆரம்பித்த புனிதம் தான், சின்ன சங்கரன் கதையாம். 33 பக்கங்களில் அடங்கிப் போன சில பகுதிகள் மட்டும்தான் இதுவரை கிடைத்தனவாம். சின்ன சங்கரன் கதை படித்துப் பாருங்கள். ஒரு நகைச்சுவை படைப்பு, அதன் முடிவின்மை நிலையில் ஒரு வாசகனைச் சோகப்படுத்தும் என்றால், அதைப் படைத்தவனின் தாக்கம் இச்சமூகத்தின் மேல் எவ்வளவு மேன்மையானதாக இருக்கக் கூடும்!
 
– ஞானசேகர்