122. வெண்ணிற இரவுகள்

ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்

மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்
– மனுஷ்யபுத்திரன் (‘சிநேகிதிகளின் கணவர்கள்‘ கவிதையிலிருந்து)
 
முட்களின் நடுவில் லீலிமலர்ப் போலவே இளங்கன்னியர் நடுவில் விளங்குகிறாள் என் அன்புடையாள்.
– திருவிவிலியம் (சாலமோனின் உன்னத சங்கீதம் 2:2)
———————————————————————————————————————————-
புத்தகம்:  வெண்ணிற இரவுகள் (குறும்புதினம்)
ஆங்கிலத்தில்: White Nights
ஆசிரியர்: ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoyevsky)
தமிழில்: ரா.கிருஷ்ணையா
வெளியீடு: எதிர் வெளியீடு, பொள்ளாச்சி (www.ethirveliyedu.in)
முதல் ஈடு: சனவரி 2013
பக்கங்கள்: 100
விலை: ரூபாய் 70
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
———————————————————————————————————————————-
வெண்ணிற இரவுகள். உணர்ச்சிவயப்பட்ட காதற்கதை. ஒரு கனவுலகவாசியின் நினைவுகளிலிருந்து. புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்த இவ்வரிகள் கவனம் ஈர்த்தன. 10% புத்தகத்தில் இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரையில் சில வரிகள் படித்துப் பார்த்து, வாங்கிவிட்டேன். ‘குற்றமும் தண்டனையும்’ தான் நான் படித்த ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கியின் முதல் புத்தகம். அடுத்து ‘வெண்ணிற இரவுகள்’. தமிழில் இயற்கை, இந்தியில் Jab we met (மீண்டும் தமிழில் கண்டேன் காதலை) போன்ற திரைப்படங்கள் இப்புதினத்தின் கருவுடையவை. 
 
ஓர் இளைஞன். ஓர் இளைஞி. நான்கு இரவுகள். ஒரு பகல். ஒரே இடம். அவ்வளவுதான்  மொத்தக் கதையும். இவ்விரண்டு புத்தகங்களிலும் முக்கிய பாத்திரமாக சித்தரிக்கப்படும் இளைஞர்கள் சிக்கலான மனப்பிரச்சனைகள் கொண்டவர்கள்; தனக்குத் தானே பேசிக் கொள்பவர்கள்; தன்னை அங்கீகரிக்க மறுக்கும் இவ்வுலகிடம் இருந்து விலகியே இருந்து மவுனம் காப்பவர்கள்; ஆனால் உலகின் அழகியலை ரசிப்பவர்கள். அவர்கள் தான் வாழும் நகரின் வீதிகளை இரவின் துணையுடன் ரசிப்பவர்கள்.
(http://discoverybookpalace.com/)
முதல் புத்தகத்தின் இளைஞனைப் போலவே இவனும் இளைஞி ஒருத்தியை ஓர் இரவில் சந்திக்கிறான். அதுவரை எந்தப் பெண்ணிடமும் பேசியிராத அவனை அவளின் துயர நிலை பேசவைக்கிறது. எதையெதையோ பேசுகிறான். பெயர் சொல்லாமல் விடை பெறுகிறாள். அடுத்த மூன்று இரவுகளும் அவர்கள் அதே இடத்தில் சந்தித்துக் கொள்வதும், அவர்களுக்குள் நடக்கும் தத்தம் வாழ்க்கை பற்றிய உரையாடல்களுமே இப்புதினம். ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கியின் நாயகர்களின் மனநிலைகளினூடே புதினங்கள் பெரும்பாலும் பயணிப்பதால், அவர்களைப் படிக்கும்போதும் கிடைக்கும் அனுபவத்தை எழுத்தில் சொல்ல அந்நாயகர்களைப் போலவே நானும் தடுமாறுகிறேன்.  ஆதலால், எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரை இடம்பெற்றுள்ள இச்சுட்டியைத் தங்களின் வாசிப்பிற்குத் தந்துவிட்டு நான் விடைபெறுகிறேன். கூடிய விரையில் The Idiot  பற்றி விரிவாக எழுதுகிறேன்.
 
– ஞானசேகர்