127. சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்

இந்தக் கார்ப்பரேட் உலகில் வளர்ச்சி என்ற பெயரில், அடித்தட்டு மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு நிலப்பறிப்பு நடப்பதையும், சிலசமயம் விலையும் இல்லாமல் விரட்டப்படுவதையும் நாம் கண்டுகொண்டும், கண்டும் காணாதது போல் இருந்து கொண்டும் தான் இருக்கிறோம். ஷாப்பிங் மால்கள், மல்ட்டி ப்ளெக்ஸ்கள், உல்லாச மருத்துவமனைகள், அதிவேக சாலைகள், மெட்ரோ இரயில்கள் என நகரங்கள் வளர்ச்சி என்ற பெயரில் பளபளப்பு பெறுவது ஒருபுறம். அவற்றிற்கு இடையூறாகவும் களங்கமாகவும் இருப்பதாகவும், நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகவும், தொற்றுநோய் பரப்புபவர்களாகவும் குடிசைவாழ் மக்களும், வீடற்ற அனாதைகளும் விரட்டப்படுவது இன்னொருபுறம். காம‌ன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லியை இப்படி நவீனப்படுத்தப் போய், பாலம் நொறுங்கி விழும் அளவிற்கு நடந்த ஊழலில் சர்வதேச அளவில் நம்தேசத்துப் பெருமை பேசப்பட்டதையும் அறிவீர்.  ஊழலில் பிரபலமானபின் சென்னையில் ஆ.ராசா அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு போல, புனே நகரில் சுரேஷ் கல்மாடிக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பில் உண்டான போக்குவரத்து நெருக்கடியில் பிதுங்கிப் போன சாமானியர்களில் நானும் ஒருவன். சிங்கப்பூர், துபாய், ஒலிம்பிற்குப் பிந்தைய பீஜிங் போன்ற உலகத்தரமான நகரங்களாக உருவெடுக்க நவி மும்பை, டெல்லி என்ற இந்திய நகரங்களின் பட்டியலில் நமது சென்னையும் உண்டு. கருணாநிதி ஆட்சியில் சிங்காரச் சென்னை, ஜெயலலிதா ஆட்சியில் எழில்மிகு சென்னை.

சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும். சென்னையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள், குடிசைகள் ஒழிப்பு, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, இடப்பெயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்திய அரசின் நிலப்பறிப்பு, மறுவாழ்வு, மறுகுடியிருப்புச் சட்டங்கள் பற்றிய விமர்சனமாக மொத்த புத்தகமும் அமைகிறது. பக்கிங்ஹாம் கால்வாய், கூவம், அடையாறு என நீர்நிலைகளை ஒட்டியோ அல்லது அவற்றின் மீதோ பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் அமைவதால், வறுமையே ஒரு குற்றமாய் அக்கரைகளில் வாழ்ந்துவரும் மக்கள் வெளியேற்றப்படுவதைப் பேசுகிறது. புதிய குடியிருப்புப் பகுதிகளில் மனநோய், குற்றச் செயல்கள், தற்கொலைகள், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தல் போன்ற பிரச்சனைகளையும் பேசுகிறது. சென்னைக் குடியிருப்புப் பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப் பட்டவர்களின் வாழ்நிலை பற்றிய, ஆசிரியரும் பங்குபெற்ற உண்மையறியும் குழு ஒன்றின் அறிக்கைகளையும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளார். சென்னையைப் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்கும் முயற்சியின் உண்மையறியும் குழு அறிக்கை ஒன்றும் பின்னிணைப்பாக உள்ளது.

சென்னைத் துறைமுகம் அருகிலுள்ள‌ போர் நினைவுச் சின்னம் முதல் மதுரவாயல் வரை கூவம் நதி வழியே அதிவேகச் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு 1500 கோடி. (அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திமுகவால் வழக்குத் தொடரப்பட்டு…. தற்போதைய நிலவரம் தெரியவில்லை. கோயம்பேடு – பெருங்களத்தூர் புறவழிச்சாலையில் வரிசையாக நிற்கும் காங்கிரீட் தூண்களில் பல நாட்களாக எம்மாற்றமும் இல்லை) அதற்காக 30,000 குடும்பங்களை மறுகுடியமர்த்த 345 கோடி. இதற்காக 2009 நவம்பர் இறுதியில் சேத்துப்பட்டு, ஸ்பர்டாங் சாலை, அப்பாசாமி தெரு, இரட்டைமலை சீனிவாசன் நகர் போன்ற இடங்களில் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்ட குடிசைகள் 1144. இவ்வாறு இடம் பெயர்க்கப்பட்ட மக்கள் எல்லோரும் சுமார் 30கிமீ தொலைவிலுள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, ஒக்கியம் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். எந்த அடிப்படை வசதிகளும் போக்குவரத்தும் இல்லாத மழைநீர் தேங்கும் காட்டுப் பகுதிகள் இவை எனச் சுட்டிக் காட்டுகிறார். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நிலவங்கிகளை அரசே உருவாக்கி வருவதையும் சொல்கிறார். ‘நிலவங்கி’ என்ற வார்த்தை, பாலஸ்தீனர்களைக் கடனாளியாக்கி வங்கிகள் மூலம் இஸ்ரேல் என்ற நாடு மிக விரைவாக வடிவமைக்கப்பட்டதை எனக்கு ஞாபகப்படுத்தியது.

(http://muranpublication.blogspot.in/)

புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. 1947 – 2000 காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் நிலப்பறிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் 6 கோடி பேர். இவர்களில் 40% பழங்குடியினர், 20% தலித்கள், 20% பலமிழந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர். ஆக வளர்ச்சித் திட்டங்களாலும், நிலப்பறிப்பினாலும் பாதிக்கப்படுபவர்கள் பெரிய அளவில் அடித்தள மக்கள்தான்.
2. ‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்கிற முழக்கத்துடன் 1970 டிசம்பரில் நொச்சிக்குப்பத்தில் உருவாக்கப்பட்ட 1000 குடியிருப்புகளுடன் குடிசை மாற்று வாரியத்தைத் திமுக அரசு தொடங்கி வைத்தது. 7 ஆண்டுகளில் சென்னை நகரிலுள்ள குடிசைகளை எல்லாம் ஒழித்துக் கட்டப் போவதாகவும் அன்று கருணாநிதி முழங்கினார். 1971 மக்கள் தொகைக் கணக்குப்படி சென்னைக் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை 7.37 இலட்சம். 2001ல் 10.79 இலட்சம்!  சென்னை மக்கள் தொகையில் இவர்கள் 26%. இதுகூடச் சற்றுக் குறைவான கணக்குத்தான். நடைபாதைகளில் குடியிருக்கும் பலர் இதில் விடுபட்டிருக்கலாம். 2005ல் இருந்த குடிசைப் பகுதிகள் 1431.
3. 1980களின் பிற்பகுதியில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவமனை என்கிற காரணத்தைக் காட்டி நகர்ப்புற உச்சவரம்புச் சட்டத்தைத் தளர்த்தி இந்த அனுமதியை அப்போலோ ரெட்டிக்கு வழங்கினார் எம்ஜிஆர்.  கார் பார்க்கிங்கிற்காக கிரீம்ஸ் லேனில் இருந்த வாலஸ் கார்டன் குடிசைகள் அழிக்கப்பட்டன. அருகிலுள்ள வேறொரு இடத்தில் மருத்துவமனையைக் கட்டிய அப்போலோ நிறுவனம் மருத்துவமனைக்கென்று விதிமீறி அனுமதிக்கப்பட்ட இடத்தில் சிந்தூர் ஓட்டலைக் கட்டியது. ஓப்பந்தப்படி மருத்துவமனைப் படுக்கைகளில் மொத்த எண்ணிக்கையில் 15%க்கு இலவச மருத்துவம் அளிப்பது என்கிற ஒப்பந்தத்தையும் அது ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை.

பெரும் இயற்கைப் பேரழிவுகளோ போர்களோ இல்லாமல், மெசபடோமியா ரோமன் மாயன் என்ற உலகின் மிகப் பிரம்மாண்ட நாகரீகங்கள் எப்படி முற்றிலும் சிதைந்து போயின என்பதற்கான சாத்தியங்களை விவாதிக்கும் கட்டுரை ஒன்றைச் சமீபத்தில் படித்தேன். இருபெரும் காரணங்களை முன்வைத்தது:
1. இயற்கை வளங்கள் அனைத்தும் முற்றிலும் உபயோகிக்கப்பட்டு வாழத் தகுதியிழத்தல்
2. பொருளாதார ரீதியில் சமூகத்தில் மிகப்பெரிய இடைவெளிகளை உண்டாக்குதல்
இவை இரண்டையும் தானே ‘வளர்ச்சி’ செய்துகொண்டு இருக்கிறது!

———————————————————————————————————————————-
புத்தகம்: சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்
வெளியீடு: முரண் பதிப்பகம் (http://muranpublication.blogspot.in/)
முதல் ஈடு: செப்டம்பர் 2010
பக்கங்கள்: 71
விலை: ரூபாய் 45
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
———————————————————————————————————————————-

– ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)