131. The Trial

The Trial

The Trial

Franz Kafka

இன்று காஃப்காவின் 90வது நினைவு தினம்

franz-kafka

ஆசிரியர் அறிமுகம்

பிராங்க் காஃப்கா(3 July 1883 – 3 June 1924) மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுபவர். இவருடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் நிலையை அடிப்படையாக கொண்டு Kafkaesque என்ற வார்த்தை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Kafkaesque – வாழ்க்கையைப் புரட்டிப்போடும் ஒரு கெட்ட கனவு போன்ற நிகழ்வினால் ஏற்படும் கையறு நிலையைக் குறிக்கப் பயன்படுகிறது. இவருடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் இத்தகைய நிலையை எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

1883 ஆம் ஆண்டு செக் குடியரசின் தலைநகரான பிராக்கில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்த காஃப்கா காசநோயினால் 1924 ஜூலை 3 ஆம் தேதி உயிர் நீத்தார். இவருடைய குடும்பத்தினர் அனைவரும் நாசி வதைமுகாம்களில் பின்னர் கொல்லப்பட்டனர். காஃப்கா தன்னுடைய வாழ்நாளில் பெரும்பாலும் சிறுகதைகளை மட்டுமே வெளியிட்டிருந்தார். இவருடைய புதினங்கள் அனைத்தும் இவரின் மரணத்திற்குப் பிறகு வெளிவந்தவையே தன் மரணத்திற்குப் பிறகு தன் கையெழுத்து பிரதிகள் அனைத்தையும் எரித்துவிடுமாறு தன் நண்பரிடம்(Max Brod) கோரிக்கை விடுத்திருந்தார். Max Brod தன் நண்பரின் கோரிக்கையை மீறி அவர் மரணத்திற்குப் பிறகு அப்புத்தகங்கள் அனைத்தையும் வெளியிட்டார்.

Max Brod 1939 ஆம் ஆண்டு பிராக்கில் இருந்து வெளியேறி பாலஸ்தீனம் வந்தடைந்தார். அவர் தன்னுடைய இறக்கும் தருவாயில் காஃப்காவின் வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளை தன் உதவியாளரும் துணையுமான எஸ்தரிடம் விட்டுச்சென்றார். 1988 ஆம் ஆண்டு காஃப்காவின் “The Trial” கையெழுத்துப்பிரதி இரண்டு மில்லியன் டாலருக்கு விலை போனது. காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகளை எஸ்தர் விற்க முனைவதை அறிந்து இஸ்ரேலின் தேசிய நூலகம் எஸ்தர் மீது வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கில் அக்டோபர் 2012ல் அவை தேசிய நூலகத்தின் உடைமைகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது இருந்தும் எஸ்தரிடமிருந்து கைப்பற்றப்பட்டவை சிறுபகுதியே. மீதம் சுவிஸ் வங்கியொன்றில் வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

புத்தக அறிமுகம்

வங்கியில் தலைமை எழுத்தராகப் பணிபுரியும் ஜோசப் கே திடீரென்று ஒரு நாள் அதிகாலையில் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்படுவதற்கான காரணம் எதுவும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை இன்னும் சொல்லப்போனால் அவரைக் கைது செய்து காவலில் வைத்திருப்பவர்களுக்குக் கூட எதற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை. காரணமின்றி கைது செய்யப்படுவது குறித்து கோபம்கொள்ளும் ஜோசப் கேவிடம் தம் உயர் அதிகாரிகள் யாரை எதற்காக கைதுசெய்ய வேண்டுமென்று நன்கறிந்தே உத்தரவிடுவார்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஓரு சிறு விசாரணைக்குப் பிறகு அவர் மீது வழக்கொன்று தொடுக்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் வந்து ஆஜராகும் படியும், பேசாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டால் எல்லாம் எளிதாக முடிந்துவிடுமென்றும் அறிவுறுத்தப்படுகிறார்.

வார இறுதியில் நீதிமன்றம் செல்லும் ஜோசப் கே தான் காரணமின்றி கைது செய்யப்பட்டது குறித்தும், தான் நடத்தப்பட்ட விதம் குறித்தும் தன் வாதங்களை முன்வைக்கிறார். இருந்தும் அவருக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இப்படி என்ன குற்றம் புரிந்தோமென்று தெரியாமலே வழக்கை எதிர்கொள்கிறார் ஜோசெப் கே. இந்த வழக்கு ஜோசப் கேவின் தினசரி வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள், உளவியல் சிக்கல்கள், அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள், அந்த முயற்சிகளின் போது அவருடைய பலவீனங்கள் எற்படுத்தும் சிக்கல்கள் குறித்து பேசுகிறது இப்புதினம்.

காஃப்கா மிகப்பெரிய எழுத்தாளர்கள் வரிசையில் வைத்து கொண்டாடப்படுபவர் இவர் எழுதிய புத்தகங்களை விட இவரைப் பற்றியும் இவரின் எழுத்தைப் பற்றியும் வெளிவந்த ஆய்வுப் புத்தகங்களும் எண்ணிலடங்காதவை. காஃப்கா வாழ்ந்த காலம் ஒரு முக்கியமான காலகட்டம். முதலாம் உலகப்போர் இவர் காலத்தில் தான் நிகழ்ந்தது. அது போல யூதர்கள் மீதான சமூகவெறுப்புகளையும் இவர் உணர்ந்திருக்கக்கூடும். இந்தப் பதற்றமான சூழ்நிலைகளில் உருவாகும் கையறுநிலை அவருடைய எழுத்தில் பிரதிபலிப்பதாக அறியப்படுகிறது.

காஃப்காவின் இப்புத்தகத்தின் முதல் பகுதி நமக்கு தாஸ்தோவ்ஸ்கியின் ரஸ்கோல்னிக்கோவை நினைவுபடுத்துகிறது ரஸ்கோல்னிக்கோவின் எண்ண ஓட்டங்களை தாஸ்தோவ்ஸ்கி பதிவு செய்ததுபோல, குழப்பமான மனநிலையில் ஜோசப் கே செய்யும் செயல்களை காப்காவும் பதிவுசெய்திருப்பார். இது இயல்பாக இப்புத்தகத்தின் மீதொரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் புத்தகத்தை வாசிக்குபோது என்னடா ஜோசப் கேவிற்குப், பெண்கள் உடனடியாக உதவுகிறார்கள் என்று நாம் நினைக்குப்போது ஜோசப் கேவும் அதே கேள்வியைத் தனக்குள் கேட்டுக்கொள்வது நம்மைத் திகைப்புக்குள்ளாக்குகிறது.

காஃப்காவின் எழுத்துக்கள் ஒரு நாடகத்தை இயற்றுவதற்கான காட்சியமைப்புகளை உடையதாகவும் பல

பரிமாணங்களை உடையதாகவும் அறியப்படுகிறது, உதாரணமாக இந்த வழக்கின் நாயகனே இந்த புத்தகம் தான் என்று கூறப்படுகிறது. இத்தகைய சிந்தனையின் மையப்பகுதி, நீதிமன்றம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் காட்சியமைப்பில் இருந்து பெறப்படுவதாகவும், இன்னொருபுறம் இது மதத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக நீதிபதிகளை விவரிக்கும் போது அவர்களின் மேசையின்மீதுள்ள புத்தகங்கள், நீண்ட தாடி, அறிவற்ற சர்ச்சைகள், அணிந்திருக்கும் அடையாளம் தெரியாத சின்னம் என்பவை யூத சட்டப்பயிற்சி நிலையங்களைக் காட்சிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இக்கதையின் இடைப்பகுதியில் ஜோசப் கேவின் வழக்கைக் கேள்விப்பட்டு அவருடைய மாமா ஊரிலிருந்து வந்து தன்
நண்பராகிய வழக்கறிஞரிடம் கூட்டிச்செல்வார். அதேபோல் காஃப்கா தன் நிஜவாழ்க்கையில் தன் மாமாவுடன் நெருக்கமாக இருந்ததாகவும் காஃப்காவுக்கும் அவருடைய தந்தைக்குமான உறவு சுமூகமான இருக்கவில்லை என்றும் அறியப்படுகிறது. அதனால்தான் ஒரு தந்தைக்கான கதாபாத்திரத்தை மாமா ஏற்றுக்கொண்டதாகவும், இக்கதையில் ஜோசப் கே விலைமாதர்களுடன் நெருக்கமாக இருப்பது போலத்தான் காஃப்கா நிஜவாழ்க்கையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆசிரியரின் முடிக்கப்படாத புத்தகங்களில் இதுவும் ஒன்று, அதன் தாக்கத்தை வாசிக்கும் போது உணரமுடியும். அதுவும் கதையின் முடிவு வெகு சீக்கிரம் வந்துவிட்டது போல் உணர்வது தவிர்க்க இயலாதது. காப்கா எழுதியதும் வாழ்ந்ததும் குறைவுதான் என்றாலும் இன்றைக்கும் காப்காவைப் பற்றியும் அவருடைய எழுத்தைப் பற்றியும் தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்புத்தகத்தை வாசிக்கும் போதுதான் ஒர் எழுத்தாளனையும் அவரின் எழுத்துக்களையும் புரிந்துகொள்வதென்பது எத்தகைய கடினமானது என்பதை உணர முடிந்தது. இன்னும் சொல்லப்போனால் அதைப் புரிந்துகொள்வதற்கு ஆய்வாளர்கள் எடுக்கும் முயற்சிகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.

———————————————————————————————————————————-
புத்தகம்: The Trial
ஆசிரியர்: Franz Kafka
வெளியீடு: Schocken Books Inc.
பக்கங்கள்: 275
விலை: ரூபாய் 200
———————————————————————————————————————————-

– பிரேம்குமார்
http://premkumarkrishnakumar.wordpress.com