132. AROUND INDIA IN 80 TRAINS

இந்திய இரயில்வேயின் இணையதளத்தில் விமானங்களின் விளம்பரங்கள் இடம்பெறும் வினோதத்தைக் கண்டிருப்பீர்கள். அப்படியொரு வினோதமாகத் தான், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் முதன்முதலில் இந்த இரயில் புத்தகத்தைக் கண்டேன். இந்த ஆறு மாதங்களாக தினமும் 100கிமீ இரயிலில் பயணிக்கும் நான், Waiting Listல் வைக்காமல் Confirm செய்துவிட்டேன். Around India in 80 Trains. எண்பது இரயில்களில் இந்தியாவைச் சுற்றல். முழுப் புத்தகத்தையும் சென்னை மின்சார இரயில்களில் படித்தேன். ஆசிரியர் மோனிஷா இராஜேஷ். இவரின் முதல் புத்தகம் இது. சென்னை பெசன்ட் நகரைப் பூர்வீகமாகக் கொண்டு இங்கிலாந்தில் குடியேறிவிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். தற்போது இலண்டனில் The Week பத்திரிக்கையில் பணிபுரிகிறார். Jules Verne எழுதிய 20000 Leagues Under the Sea என்ற புத்தகத்தைப் பற்றி இத்தளத்தில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அவரின் இன்னொரு புத்தகமான Around the World in 80 Daysல், ரோதல் – அல‌காபாத் இடையே புதிதாக இரயில்சேவை தொடங்கப்பட்டதால் உலகைச் சுற்றும் பயணம் மிக எளிதாகி விட்டதாக சில வரிகள் வருகின்றனவாம். அதைப் படித்தவுடன் ஆசிரியருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்தியாவை 80 இரயில்களில் சுற்ற வேண்டும் என்பதுதான் அது! பெண் என்றால் சிலையாகவே இருந்தாலும் இந்தியாவில் தனியாக இருக்க முடியாது என்பது வேற்றுக் கிரகத்தவர்களுக்குக் கூட தெரியும் என்பதால், புகைப்படக் கலையில் ஆர்வமுள்ள நார்வே நாட்டுக்கார ஆண் நண்பன் ஒருவரையும் சேர்த்துக் கொள்கிறார். சென்னை எழும்பூரில் ஆரம்பித்து சென்னை சென்ட்ரலில் முடிக்கிறார்கள். மொத்தம் 80 இரயில்கள். கிட்டத்தட்ட 40,000 கிமீ தூரம். தோராயமாக‌ பூமியை ஒருமுறை சுற்றிவரும் தூரம்.

கொஞ்சம் கால எடுத்துக்கங்கன்னு யாராவது கேட்டால், சரி பக்கத்துல ஒக்காற எடம் கேக்குறாரு போலன்னு, கொஞ்சம் கால்களை எடுத்தால், சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள் என்று ஓர் இரயில் நிலையம் பற்றி என் நண்பன் அமீர் சொல்வான். இரயில்வே நேரம் என்று ஒன்றுண்டு. ஆனால் எந்த இரயிலுக்கும் நேரத்தை அறுதியிட்டுக் கூறமுடியாது. சரி தற்கொலையாவது செய்யலாம் என்று தண்டவாளத்தில் போய் படுத்தால், அன்றைக்கு ஸ்ட்ரைக் / பந்த் நடக்கும் என்று முடியும் ஒரு பிரபலமான தமிழ்ச் சிறுகதையை நண்பர் சேரல் ஒருமுறை எனக்குச் சொன்னார் (ஆசிரியர் அசோகமித்ரன் என நினைக்கிறேன்). எத்தனை சிக்கல்கள் இந்த இரயில் பயணங்களில்! இவர்கள் எப்படி 80 இரயில்களைத் திட்டமிட்டு இருப்பார்கள்? அவர்களால் வெற்றிகரமாகச் செயலாக்க முடிந்ததா? என்னென்ன சிக்கல்களை எல்லாம் அவர்கள் எதிர்கொண்டார்கள்? புத்தகத்தை ஆரம்பிக்கும் போது எனக்குள் இருந்த கேள்விகள் இவை. பதில்கள் கிடைத்த நான், அக்கேள்விகளை உங்களுக்குக் கொடுத்து விட்டு இப்புதினத்தின் கருவைப் பாதிக்காத சில விடயங்கள் பகிர்கிறேன். தங்கள் பயணத்தைப் பற்றி தனியே ஒரு வலைத்தளத்திலும் (www.80trains.com) எழுதி இருக்கிறார் ஆசிரியர். இப்பதிவில் இனிவரும் புகைப்படங்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டவையே. மேலும் புகைப்படங்கள் பார்க்க விரும்பினால் அத்தளத்தில் காணலாம். புத்தகம் படிக்காமல் அத்தளத்தில் சொல்லப்படும் விடங்களைப் படித்தறிய நான் பரிந்துரைக்க மாட்டேன்.

பகலில் ஓய்வெடுத்து இரவில் மட்டுமே இயங்கும் இரயில்கள். ஜன்னல்களை மூட அனுமதிக்காத இரயில்கள். சில முன்னெச்சரிக்கைக்காரர்கள் தலைக்கவசத்துடன் (helmet) பயணிக்கும் இரயில்கள். பயணிகளால் வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடப்படும் இரயில்கள். நடமாடும் மருத்துவமனை இரயில். கூட்ஸ் பேஸன்ஜ‌‌‌ர் எக்ஸ்பிரஸ் என்பன தவிர இப்படி பலவிதமான இரயில்களை இப்புதினத்தில் தான் தெரிந்து கொண்டேன். சில இரயில்களில் பயணிப்பவர்கள் அவர்களுக்கான‌ நலச்சங்கம் வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இரயில்களுக்கான எண்கள் எப்படி இடப்படுகின்றன என்றும் இப்புதினத்தில் தான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு பெட்டிக்கும் ஓர் எண் உண்டு. ஐந்திலக்கத்தில் பெரிதாக எழுதி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதை வைத்து புதிய பெட்டியைக் கண்டுபிடித்து அதில் ஏறுபவர்களையும், இறங்க வேண்டிய இடத்தில் நிற்காத எக்ஸ்பிரஸ்களில் அபாய சங்கிலியை இழுத்துவிட்டு இறங்கி ஓடுபவர்களையும் இப்புதினத்தில் தான் பார்த்தேன்.

(உலகின் முதல் மருத்துவமனை இரயிலான லைஃப்லைன் எக்ஸ்பிரஸ், Lifeline Express)

இரவில் எல்லோரும் தூங்கையில், போர்வை விலக்கி காற்சட்டையினூடே கணுக்காலில் இருந்து முழங்கால் நோக்கி வருடிக் கொண்டே ஊர்ந்து வந்த கைகளை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்த ஓர் அனுபவத்தைச் சொல்கிறார். தார்ப் பாலைவனத்தில் இரவில் திறந்த வெளியில் துக்கியெழுந்த போது, கூடாரத்திற்கு அருகே பாம்பு ஊர்ந்து போன தடங்களைப் பார்த்ததைச் சொல்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பசுக்களை உண்டு வந்த இந்தியச் சமூகம், திடீரென பசுவைப் புனிதமாக்கி, தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெறும் அளவிற்குப் போய்விட்டதைச் சொல்கிறார். இம்மியளவு இடத்திலும் எவ்வளவும் திணிக்க முயல்வது, இப்படி முடியாவிட்டால் எப்படியாவது முடியும் என்று பணத்தின் மூலம் காரியம் சாதிப்பது. இப்படி பயணங்களில் தன‌க்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து இந்திய மனநிலையை அடிக்கடி விமர்சிக்கிறார் ஆசிரியர். நான் ரசித்தவை உங்களின் வாசிப்பிற்கு:
1. திருச்சி மலைக்கோட்டையில் இருக்கும் இரு அறிவிப்புச் செய்திகள் பற்றி ‘It is a proven fact that those who worship the God will be blessed with children and that pregnant ladies will have an easy delivery’, and ‘according to geological research this mountain is 3500 billion years old’. It was hard to determine which of the two was more impressive.
2. Like Brazilians to coffee and the Arabs to oil, Indians have an abundance of spirituality to sell to west.

(இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாஹா)

எனது பயணங்கள் சிலவற்றைப் புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க சில உள்ளன‌.
1. எனது இரயில் பயணங்களில் மறக்க முடியாத ஒன்று, கர்நாடகாவில் பட்டடக்கல் போக பதாமி நகருக்குத் தனியாகப் போனது. அதிகாலை 4 மணிக்குப் போய்ச் சேருவதால் தூங்காமலே பயணித்து, சேர்ந்த பின்னும் விடியும்வரை காரிருளில் பவுர்ணமி நிலவை மட்டுமே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தது. நிலவு பூமிக்கு மிக அருகில் வந்துபோன நாள்களில் அதுவும் ஒன்றென்பதால், நிலவை மிக நெருக்கமாக உணர்ந்த தருணம் அது. திரும்பிப் போகும் போது, அந்த‌ இரயில் பெட்டியில் நான் ஒருவன் மட்டும்தான்! நிலவை மட்டுமே முழுவதும் பார்த்துக் கொண்டே பயணித்தது. அற்றைத் திங்கள் அந்நிலவு எனக்காக தனியே தன்னந்தனியே காத்துக் காத்துக் கிடந்ததென‌ உணர வைத்த பயணம் அது! இவர்களின் முதல் பயணம், 2010 ஜனவரி 15 அன்று கன்னியாகுமரியில் சூரியக் கிரகணம் காணப்போனது!
2. எனது பயணங்களில் மறக்க முடியாத இன்னொன்று, 96 மணிநேரம் எங்கும் தங்காமல் 4 இரயில்களில் கோனார்க் – பூரி தனியாகப் போனது. தென்னமெரிக்காவை மோட்டார் சைக்கிளில் சுற்றப்போன‌ சேகுவேராவிற்கு ஆஸ்துமா போல, எனக்கு எப்போதாவது சின்னதாக வந்துபோகும் அந்த‌ ஆங்கிலப் பெயர் கொண்ட ஓர் ஒவ்வாமை வியாதி, புவனேஷ்வர் இரயில் நிலையத்தில் கொடூரமாகத் தலைகாட்டியது. கண்களைக் கூட அசைக்க முடியாமல், தூக்கம் வேண்டி இரயிலை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். அதே ஒவ்வாமை ஆசிரியருக்கும், மொத்த பயணத்தில் ஒரே ஒருமுறை, எனக்கு ஏற்பட்ட அதே ஊரில் ஏற்பட்டதைப் படித்து ஆச்சரியப்பட்டேன்! எனக்கு 3வது இரயிலில். ஆசிரியருக்கு 78வது இரயிலில்.
3. புனே நகருக்குப் பயணிக்க வேண்டிய நாளில் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்த செய்தி தெரிந்தவுடன் பயணத்தைத் தள்ளிப் போடுகிறார் ஆசிரியர். அதே நாளில் அச்செய்தி தெரியாமல் ஊர் சுற்றிக் கொண்டே ஜால்னாவில் (Jalna) இருந்து புனே நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன் நான்!

(15-01-2010 அன்று கன்னியாகுமரியில் சூரிய கிரகணம்)

அருகாமையில் எந்தத் தேர்தலும் இல்லாவிட்டால், இரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதென சட்டென ஏற்றிவிடுவார்கள். அந்த உபரித் தொகையைப் பேருந்தினுள் நடத்துநர் போல, பயணச்சீட்டு பரிசோதகர் இரயிலுக்குள்ளே வசூலிப்பது போன்ற வினோதங்கள் இந்தியாவில் ஏராளம். ஊத்துக்குளி அருகில் பயணிக்கும் போது, வெற்றுத் தண்ணீர் பாட்டில்களைக் கேட்டு வாங்கி சேகரிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். மும்பை செல்லும் இரயில்களில் சாப்பிட்ட உணவிற்குக் காசு தராமல், தாவுந்த் நிலையத்தில் குடும்பத்தோடு இறங்கிவிடும் சீரடி சாய்பாபா பக்தர்களை இன்றும் காணலாம். மஹாராஷ்ட்ராவில் சோலாப்பூர் வழியே இரவில் பயணித்தால், ஜன்னல்களை மூடச் சொல்லிவிட்டு, எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டுச் செல்லும் காவலர்களைக் காணலாம் (சிறிது நேரத்தில் டம்மு டும்மு என்று சத்தம் கேட்கும்). அஸ்ஸாமுக்கே போய் அஸ்ஸாம் டீ குடிக்க வேண்டும் என்று போன ஆசிரியர், அம்மக்கள் அங்கு அத்தேநீரைப் பரிந்துரைக்காத வினோதத்தைக் காண்கிறார். சத்யேந்திர துபே போன்றவர்கள் கொல்லப்படும் இதே தேசத்தில், ஒரு ரூபாய் அபராதத்திற்காக அவமானத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பொறியாளர்கள் ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்கள், என்பன போன்ற சில உள்ளூர்க் கதைகளும் புதினத்தில் வந்து போகின்றன. கஜிராஹோவும் அமிர்தசரசும் நீண்ட நாட்களாக என் பட்டியலில் இருப்பினும், இவர்களின் பயணத்தில் இருந்து சில புதிய‌ இடங்களை நானும் போக குறித்து வைத்து இருக்கிறேன்.
1. Panval Nadi viaduct
2. கார்னி மாதா என்ற எலிகளின் கோயில்

(துவாரகாவில் ஆசிரியர்)

இவர்களின் நீளமான பயணம். டெல்லி -> கோட்டயம். கேரளா எக்ஸ்பிரஸ். 48 மணிநேரம். பயணங்கள் முடித்தபின் இவர்கள் தேர்ந்தெடுத்த மிகச்சிறந்த மூன்று இரயில்பயணங்கள்.
1. மட்காவ் (Madgaon) -> மும்பை. மன்டோவி எக்ஸ்பிரஸ். கடலும் மலையும் தாலாட்டும் கொங்கன் ரெயில்வே.
2. ஜம்மு -> உதாம்பூர் (இந்திய இரயில்வேயின் வடமுனை). உள்மாநில கைப்பேசிகள் மட்டுமே செயல்படும்.
3. ஆசியாவிலேயே ஆடம்பரமான இரயிலான‌ இந்தியன் மகாராஜா இரயில் (Indian Maharaja).

(சண்டிகரில் பாறைத் தோட்டம், Rock Garden)

இவ்வளவு அருகாமையில் போய் இங்கு போகாமல் வந்து விட்டார்களே, என்று எனக்குத் தோன்றிய சில இடங்கள்:
1. பூரி நகருக்கு இருமுறை சென்றிருக்கிறேன். ஒருமுறை கூட ஜெகந்நாதர் கோவிலுக்குள் சென்றதில்லை. நான் எதற்காகத் தவிர்த்தேனோ, அதற்காக அக்கோவில் பூசாரிகளிடம் சண்டை போட்டு ஆசிரியர் வெளியேற்றப்படும் ஒரு சம்பவம் உண்டு. பூரியில் ஏற்பட்ட கெட்ட அனுபவத்தால் கோனார்க் சூரியக் கோவிலைத் தவிர்க்காமல் இருந்திருக்கலாம். கலிங்கத்துப் போர் நடந்த இடமும் போனவழியில் தான் இருக்கிறது; அங்கும் போயிருக்கலாம். இன்னும் மனிதமாசு அதிகம்படாமல், வெள்ளித் துறுவல் போல் வெள்ளை மணல் பளபளக்கும் மகாநதியின் டெல்டா பிரதேசங்களை அங்கிருந்து கண்டிருக்கலாம். இங்கெல்லாம் நானும் சேரலாதனும் போய் இருக்கிறோம்.
2. அஜந்தா எல்லோரா போனவர்கள் அவுரங்கசீப் கல்லறைக்கும் போய் இருக்கலாம். மிகப்பெரிய இந்தியாவை மிக நீண்டகாலம் ஆண்ட அப்பேரரசனின் மிக எளிமையான கல்லறையை நானும் நண்பன் சதீசும் தெருத்தெருவாக நடந்து போய் கண்டோம்!
3. Following Fish புத்தகம் படித்ததில் இருந்து சோம்நாத் கோவில் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு. இந்திய இரயில்வேயின் மேற்குமுனைக்கு முந்தைய நிலையம் வரை சென்றவர்கள், அங்கும் போயிருக்கலாம்.

தமக்கு மருத்துவர் தாம் என்றொரு பழமொழியுண்டு. நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன் நீர்இலதாய் நோய்க் களமாகி அழிந்துவிடுமோ மனது, எனப் பயம் தோன்றும் சமயங்களில் மனதைச் சலவை செய்து உடுத்த நான் செய்யும் சில மருத்துவங்களில் ஒன்று – போகாத இடந்தனியே போய்வரும் பயணம். இந்திய உடலின் நரம்புகள் தண்டவாளங்களும் சாலைகளும். இரத்தங்கள் இரயில்களும் பேருந்துகளும். பயணங்கள் உயிர்ச்சாட்சிகள்.

அனுபந்தம்:
—————–
இந்திய இரயில்வே பற்றி சில தகவல்கள் இணையத்தில் படித்தறிந்தேன். உங்களுக்குச் சில:
1. வியாசர்பாடி ஜீவா -> ஆற்காடு வாலாஜா சாலை. இதுதான் தென்னிந்தியாவின் முதல் இரயில் பாதை.
2. மொத்தம் 7500 இரயில் நிலையங்கள்.
3. இரயில் பாதைகளின் மொத்த நீளம் 65,000 கிமீ.
4. மொத்தம் 11,000 இரயில்கள்.
5. தினமும் 13 மில்லியன் பேர் பயணிக்கிறார்கள். அதில் 12 மில்லியன் பேர் முன்பதிவு செய்யாதவர்கள்.
6. ஆசிரியரின் 8வது இரயிலான ஃபெய்ரி க்வின் (Fairy Queen) தான் மிகப்பழமையான இன்னும் இயங்கும் நீராவி இயந்திர இரயில்.
7. நீண்ட தூரம் பயணிக்கும் இரயில் விவேக் எக்ஸ்பிரஸ் (Vivek Express). அடுத்து ஆசிரியரின் 3வது இரயிலான ஹிம்சாஹர் எக்ஸ்பிரஸ். Himsagar = Him + Sagar= மலை + கடல். இமயமலையையும் குமரிக்கடலையும் இணைப்பதால்.

—————————————————————————————————
புத்தகம்: Around India in 80 trains
ஆசிரியர்: Monisha Rajesh
மொழி: ஆங்கிலம்
வெளியீடு: Roli Books
பக்கங்கள்: 244
விலை: ரூபாய் 295
வாங்கிய இடம்: Landmark
—————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)