133. ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை

மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.
– கவிஞர் அறிவுமதி

குளக்கரையில்
தவமிருக்கிறது கொக்கு
கலைத்துவிடாதீர்கள் மீன்களே
என்ற பிரபலமான ஹைக்கூவை நீங்களும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதை எழுதியவரே இப்புத்தகத்தை எழுதியவர். மு.முருகேஷ்.

‘ஜப்பானியக் கவிதை’ எனும் தலைப்பிட்டு, 16.10.1916 அன்று சுதேசமித்திரன் இதழில் மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரைதான் தமிழுக்கு ஹைக்கூ கவிதைகள் பற்றிய அறிமுகத்தைத் தந்தது. அதன் பிறகு 50 ஆண்டுகளுக்குப் பின் 1966 சனவரியில் கணையாழி இதழில் சுஜாதா, சில ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்துத் தந்தார். ‘தமிழில் ஹைக்கூ எழுதுவது, அடுத்தவன் மனைவிக்கு ஆடை கட்டிப் பார்ப்பதைப் போன்றது’ என்றும், ‘இப்படி துளியா எழுதுகிறதை விட்டுவிட்டு பெரிய்ய கவிதையா எழுதுங்க தோழ‌ர்’ என்றும், தமிழில் ஹைக்கூவே எழுத முடியாது என்றும், பல‌ மூத்தப் படைப்பாளர்கள் ஆரம்ப கால‌த்தில் ஒதுக்கி இருக்கின்றனர். ஹைக்கூவை வெறும் பக்க நிரப்பிகள் போலத்தான் வெகுஜன பத்திரிக்கைகள் பயன்படுத்தி வந்திருக்கின்றன‌. இப்படிப்பட்ட சூழலில் தமிழில் முதல் ஹைக்கூ நூல் வெளியான 1984 முதல் 2009 வரையிலான 25 ஆண்டு காலத்தில் தமிழில் ஹைக்கூ வழி நிகழ்ந்த இலக்கியப் பதிவுகளை ஒரு வரலாற்று ஆவணமாக பதிவு செய்திருப்பதே இப்புத்தகம். அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஹைக்கூ படைப்பாளிகள் வழியே ஆவணப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். நானும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், என் ஆரம்ப ஐந்து வகுப்புகளை அங்குதான் படித்தேன் என்பதாலும், புத்தகத்தின் பெயரிலேயே ஈர்க்கப்பட்டு வாங்கிவிட்டேன்.

சுஜாதா அவர்கள் சொன்னபடி ஹைக்கூவின் முக்கிய குணங்கள்:
1. நேரடி அனுபவம்.
2. உவமை உருவகம் கூடாது.
3. மூன்றாவது வரியில் ஒரு திருப்பம்.

ஓரெழுத்தொருமொழியில் கவிதை எழுதி இருக்கிறேன். ஒற்றை வரியில் கவிதை எழுதி இருக்கிறேன். ஆனால் ஹைக்கூ எழுத வேண்டும் என்று நான் முயற்சித்தது இல்லை. நான் எழுதிய ஏதாவது ஹைக்கூ மாதிரி வந்திருக்கிறதா என யோசித்துப் பார்த்தேன். மூன்று கவிதைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

பிரசாதவரிசை நிழலில்
சமைத்துக் கொண்டிருக்கிறான்
பிளாட்பாரவாசி

பற்றவைத்தேன்
பார்த்துவிட்டாள்
அணைத்துவிட்டேன்

அச்சம் தவிர்த்தான்
ஆண்மை தவறினான்
இளைத்து இகழப்பட்டான்

ஹைக்கூ கவிதைகளை ஊக்கப்படுத்திய சிற்றிதழ்கள், படைப்பாளிகள், ஹைக்கூக்களுடன் வெளியான நூல்கள் என வருடம் உட்பட பல விடயங்களை ஒரே கட்டுரை போல தொகுத்திருக்கிறார். புத்தகத்தில் ஆங்காங்கே எடுத்துக் காட்டப்படும் ஹைக்கூ கவிதைகள் சில உங்கள் வாசிப்பிற்கும்:

நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள்.

எனக்கும் பசிக்கிறது
அடிக்கடி எச்சரிக்கும்
சுவற்றில் பல்லி.

காசு போட்டால்
பாதியில் நின்றுவிடுமோ
தெருப்பாடகன் பாட்டு?

சாத்தான் வேதம் ஓதுகிறது
சிகரெட் பெட்டியில்
எச்சரிக்கை வாசகம்.

வெட்டியான் தொட்டும்
மௌனமாய்
உயர்சாதிப் பிணம்.

சமத்துவபுரம்
கழிவுநீர் சுத்தம் செய்ய‌
அதே கருப்பன்.

பட்டாம்பூச்சி பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது
மகளுக்கு.

யாருக்கோ விழியில்லை
குருடர் தட்டில்
செல்லாக்காசு.

ஆக்ராவில் இராமர் பிறக்கவில்லை
தலை தப்பியது
தாஜ்மஹால்.

உயர்ந்த சுவர்
தாழ்ந்த எண்ணம்
உத்தபுரம்.

பெண்கள் விளையாட்டுத்திடல்
ஆண்களின் மனம்
பந்துகளாக பந்துகளாக‌.

ஹைக்கூ அந்தாதி, ஹைக்கூவைப் போலவே வெளிப்ப‌டையான‌ நகைச்சுவையோடு எழுத‌ப்ப‌டும் சென்ரியு வ‌கைக் க‌விதைகள் என ஹைக்கூவின் பல வகைகளையும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். சென்ரியு வகைக் கவிதையொன்று:

முதல்நாளிலேயே
ஆசிரியரின் பிரம்பைக் கேட்டு
அடம்பிடித்தது குழந்தை.

ஹைக்கூ இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், தமிழில் அதன் பாதை அறிய இப்புத்தகம் கண்டிப்பாக உதவும்.

—————————————————————————————————————————————————————————————
புத்தகம் : ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை
ஆசிரிய‌ர் : மு.முருகேஷ்
வெளியீடு : அகநி வெளியீடு, வ‌ந்த‌வாசி (akaniveliyeedu@gmail.com)
முதற்பதிப்பு : திசம்பர் 2012
விலை : 60 ரூபாய்
பக்கங்கள் : 96
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
—————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)