134. CHRONICLE OF A DEATH FORETOLD

காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் என்ற‌ ஓர் உன்னதமான கதைசொல்லியின் மறைவின் நினைவாக

Chronicle of a Death Foretold. ஒரு கொலை நடக்கிறது. அக்கொலை பற்றி அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு நபர், மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட சம்பவங்களின் தொகுப்பே இப்புதினம். மேலோட்டமாகப் பார்த்தால் மிக வழக்கமான கதைபோல் தெரியும் என்பதால், புத்தகத்தின் பின்னட்டை சொல்லும் கதைச்சுருக்கத்தைக் கொஞ்சம் நீட்டிச் சொல்ல முயல்கிறேன். ஆற்றங்கரை ஒட்டிய அவ்வூர் அப்படியொரு ஆடம்பரமான திருமணத்தைக் கண்டதில்லை. மணமகள் முதலிரவிற்குத் தயாராகிறாள். எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென தோழிகள் மன்ம‌தக்கலை சொல்லித் தருகிறார்கள். மாப்பிள்ளை அவராகவே விளக்கை அணைக்கும் வரைக்கும் நன்றாக மதுவருந்த விடடீ. இந்தா சத்து டானிக் (Mercurochrome), இதைப் படுக்கையில் கொட்டி கறையாக்கிவிட்டு காலையில் எல்லாருக்கும் தெரியும்படி காட்டடீ. இப்படியெல்லாம் தோழிகள் சொல்லித் தருகிறார்கள், அந்த மாப்பிள்ளை மதுவே அருந்த மாட்டார் என்ற உண்மை தெரியாமல். தன்னை மணந்ததைத் தவிர வேறெந்த தவறையும் செய்யாத ஓர் அப்பாவி கணவனுக்கு இவை எதையும் செய்யப் போவதில்லை என்ற முடிவுடன் பள்ளியறை புகுகிறாள்.

மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட சம்பவங்களே இப்புதினத்தில் அமைவதால், அப்பள்ளியறையில் என்ன நடந்தது என்று மற்றவர்களிடம் கேட்டறிய முடியாது என்பதால், அப்பகுதியைத் தணிக்கை செய்துவிட்டு தொடருவோம். அப்பள்ளியறையில் அவள் ஏற்கனவே கன்னி கழிந்தவள் என்று தெரியவர, அவளை இராவோடு இராவாக அடித்துத் துரத்துகிறான். திருமணமாகி ஐந்து மணிநேரத்திற்குள்ளேயே வாழாவெட்டியாக திரும்பி வந்தவளை அவளது தாயும் அடிக்கிறாள். இதற்கெல்லாம் காரணமானவன் யாரென அவளின் இரட்டைச் சகோதரர்கள் கேட்கிறார்கள். அதே ஊரிலுள்ள இன்னொருவனைச் சொல்கிறாள். அவ‌ன் அவ்விரட்டைச் சகோதரர்களால் கொல்லப்படுவதைச் சுற்றிய சம்பவங்களே இப்புதினம். தான் கொல்லப்படப் போகும் நாளில், அவ்வூருக்கு வருகை தரும் பிஷப்பைக் காண, காலையில் 05:30 மணிக்கு அவ‌ன் தூக்கம் கலைந்து எழுவதில் இருந்து ஆரம்பிக்கிறது புதினம். அதே ஊரைச் சேர்ந்த பெயர் சொல்லப்படாத ஒருவர் சொல்வது போல் அமைகிறது புதினம். (Bishop – பிஷப் என்பவர் கத்தோலிக்க கிறித்தவர்களின் மதகுருக்களில் கொஞ்சம் உயரதிகாரி. கிட்டத்தட்ட இரண்டு எம்.பி. தொகுதிகளுக்கு இணையான பகுதிகளுக்குத் தலைவர்)

புதினத்தின் பின்னட்டையில் இருக்கும் 3 பத்திகளைக் கொஞ்சம் நீட்டிச் சொன்னால், இதுவரை நான் சொன்ன கதை அடங்கும். அந்த இரட்டைச் சகோதரர்கள் கொலை செய்ய முடிவெடுத்தபின் நல்ல கூர்மையான கத்திகளை எடுத்துக் கொண்டு, தங்கள் மோட்டார் பைக் வேலை செய்யாத‌தால் பொடிநடையாகவே வந்து, எப்படியாவது பிஷப்பைப் பார்க்க கண்டிப்பாக வருவான் என காத்திருக்கிறார்கள். சும்மா இருக்காமல் பால் வாங்க வருவோர் போவோரிடம் எல்லாம் ‘நாங்க அவனைக் கொல்லப் போறோம், நாங்க அவனைக் கொல்லப் போறோம்’ என விடிவதற்குள் கிட்டத்தட்ட அரைடஜன் போரிடம் சொல்கிறார்கள். விளையாட்டுப் பிள்ளைகள் என்று யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், கொல்லப்படத் தகுதியான பல பணக்காரர்கள் இதே ஊரில் இருக்கையில் ஓர் அப்பாவியை ஏன் வீணாகக் கொல்கிறீர்கள் என சிலர் அறிவுரை சொல்கிறார்கள். இராணுவத்தில் இருந்த போது இறைச்சி வெட்டும் கத்தியால் சவரன் செய்தவன் நானென்று அச்சகோதரர்களில் ஒருவன் சொல்லியும் கூட யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஊரே பிஷப்பின் வருகைக்கு ஆவலுடன் தயாராகிக் கொண்டிருக்க, சும்மா விளையாடாதீர்கள் என்று ஒருவர் மட்டும் கத்திகளைப் பிடிங்கிக் கொள்கிறார். அவர்கள் திரும்பிப்போய் வேறு கத்திகளுடன் வந்து, ‘அவன் குரல்வளையைக் கடிக்காமல் விடமாட்டோம்’ என‌ காத்திருக்கிறார்கள்.

செய்தி ஊர் முழுக்க பரவிவிட அவனை எச்சரிக்க தேடுகிறார்கள். பார்த்தவர்கள் எல்லாம் அவனுக்கும் தெரிந்திருக்கும் என சொல்லாமல் போகிறார்கள். ‘இன்னும் சாகவில்லையா? ஏற்கனவே கொன்றுவிட்டார்கள் என்றல்லவா நான் நினைத்தேன்’ என்று சிலர் சொல்லும் அளவிற்குச் செய்தி பரவுகிறது. உண்மையிலேயே கொலை நடக்கும் போது எழுந்த கூக்குரல்களை, பிஷப்பிற்கான ஆரவாரம் என ஊர் கண்டுகொள்ளாமல் போகிறது. ‘இப்படி செய்வார்கள் என எதிர்பார்க்கவே இல்லை’ என கடைசிப் பக்கத்தில் நடக்கப்போகும் அக்கொலை பற்றி தாங்கள் அறிந்தவற்றைப் பலர் மூலம் கேட்டறிகிறார், அந்தப் பெயர் தெரியாத கதைசொல்லி. அக்கொலைக்குப் பின் கொலையாளிகள், அவர் குடும்பம், கதாநாயகி, அவளை விரட்டிவிட்ட ஒருநாள் கணவன் – இவர்கள் எல்லாம் என்னவானார்கள் எனக் கேட்டறிகிறார் கதைசொல்லி. உண்மையிலேயே கொலை செய்யப்பட்டவன் தான் அவளின் கருவறைக் கதவை முதலில் திறந்து வைத்தவனா, என்ற உண்மையறிய முயல்கிறார். அப்படி இல்லை என்றால், கதாநாயகி ஏன் அவன் பெயரைச் சொன்னாள் எனவும் தேட முயல்கிறார்.

காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் அவர்களின் கதாப்பாத்திரங்கள் விசித்திரமானவர்கள். சிலர் மாய எதார்த்தவாதிகள். உண்பதற்குள் சொல்லிவிட்டால் கனவின் பலன் சொல்லும் ஒருத்தி. அரபியில் கேட்டுவிட்டு ஸ்பானிஷில் பதில் சொல்லும் சிலர். நம்மூரில் தொப்புள்கொடி கழுத்தோடு சுற்றிப் பிறந்தால் தாய்மாமன்களுக்கு ஏதாவது கெட்டது நேருமென்று நம்பிக்கை உண்டு. எனது கவிதை ஒன்றில் இப்படி எழுதினேன்:
அண்ணன் தம்பிக
இல்லாம பொறந்த நானு
கழுத்தச் சுத்தி இருந்த
தொப்புள் கொடி பத்திக்
கவலைப்பட என்ன இருக்கு?
இப்புதினம் சொல்லும் ஊரில் தொப்புள்கொடி கழுத்தோடு சுற்றிப் பிறந்தால், மகாராஜா/ணி போல் வாழ்க்கை அமையும் என நம்பிக்கை. நம்மூரில் இருட்டின பின் தலை சீவினால், சனியன் சம்மந்தப்பட்ட ஏதோவொரு கெட்ட நம்பிக்கை. இப்புதினம் சொல்லும் ஊரில் இருட்டின பின் தலை சீவினால், கடலில் போகும் கப்பல்களின் வேகம் குறைந்துவிடுமாம்!

கத்திக்குத்துப்பட்டு குடல் சரிந்து ஓடி வருகையில், ஒருவர் குடலை வயிற்றுக்குள் திணித்து தைக்க முயல்கிறார். வயிற்றுக்குள் இருக்கும் போது மிகமிகக் கெட்ட நாற்றம் மலம் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ஒருவர். கொலை நடந்த நாளில் அவ்வூர் மருத்துவர் விடுமுறையில் இருந்ததால், எப்போதோ மருத்துவம் படித்த ஒரு பாதிரியாரைப் பிரேதப் பரிசோதனை செய்யச் சொல்கிறார்கள். தூண்டில்காரன் கண் தெப்பத்திலேயே இருப்பது போல, கொலையுண்டவன் வயிற்றில் இருந்து அவன் 4 வயதில் விழுங்கிய மேரிமாதா டாலரை எடுத்ததாகவும், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைப் போல கொடுரமாகப் பிரேதம் இருந்ததாகவும் அப்பாதிரியார் அறிக்கை எழுதுகிறார்.

கிட்டத்தட்ட மொத்தக் கதையையும் சொல்லிவிட்டேன். காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் அவர்களின் கதைக்களங்களும் கதைமாந்தர்களும் ஏதோவொரு வசீகரம் கொண்டுள்ளன. அந்த அற்புதமான கதைசொல்லியின் இரசிகர்களின் நானும் ஒருவன் என்ற முறையில், சமீபத்தில் மரணமடைந்த அவருக்கு நான் செய்யும் மரியாதையாக இப்பதிவு அமையட்டும்!

—————————————————————————————————————————————————————-
புத்தகம்: Chronicle of a Death Foretold (புதினம்)
ஆசிரியர்: Gabriel Garcia Marquez
ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலப்படுத்தியவர்: Gregory Rabassa
வெளியீடு: Penguin Books
முதல் ஈடு: 1982
பக்கங்கள்: 122
விலை: 199 ரூபாய்
வாங்கிய இடம்: Higginbothams, அண்ணா சாலை, சென்னை
—————————————————————————————————————————————————————-

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements