135. அஜ்னபி

பறந்து வருவதற்குள்
பிடித்த சொந்தங்கள்
சாம்பலாகிப் போனாலும்

வேர்கள் ஊன்றிவிட்டு
விழுது பிடித்து திரும்புகையில்
சொல்லாத காதலி
தாயாகிப் போயிருந்தாலும்

இங்கு வந்து பார்

– ஞானசேகர் (வைரமுத்து பாணியில் ஒரு ‘தூரத்துத் தமிழன்’ கவிதையிலிருந்து)

‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ என்ற புதினம் மூலம் எனக்கு அறிமுகமானார் ஆசிரியர். மீரான் மைதீன். அப்புதினத்தின் கடைசியில் இருக்கும் அகர முதலி மூலம் தான், பெரும்பாலான இஸ்லாமிய சொற்களை அறிந்து கொண்டேன். ஒரே ஊரில் இருக்கும் இரண்டு குடும்பங்களின் கதையது. அரபு நாடுகளுக்குச் செல்லும் கனவுகளுடன் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் பற்றிய கதை. அதற்கு நேர் எதிரான கதைக்களத்துடன், இப்போது அவரின் இன்னொரு புதினத்துடன் வந்திருக்கிறேன். அஜ்னபி. செழியன் அவர்கள் இப்புதினம் பற்றி சொல்லி இருக்கும் சில வரிகள், புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கின்றன. அதுவே சிறப்பாக இருப்பதால், அவற்றை அப்படியே சொல்லித் தொடங்குகிறேன்.

மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவான என காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் உரிய வயதில் கல்வி கற்க முடியாமல் குடும்பத்தைப் பிரிகிறார்கள்.வீட்டில் நிகழ்கிற எந்த நிகழ்விலும் கல‌ந்து கொள்ள முடியாமல் இருந்தாலும் தனக்கென ஒரு சொந்த வீடு கட்ட அயல்தேசத்தில் உழைக்கிறார்கள். சகோதரியின் திருமணம் ஒளிநாடாவில் வரும். விரும்பும்போதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். நிச்சயித்த பெண்ணின் நிழற்படம் அஞ்சலில் வரும். தனிமையில் அதனுடன் பேசிக் கொள்ளலாம். மரணமும் செய்தியாக வரும். தனியறையில் அழுது கொள்ளலாம். அரபு நாடுகளில் பிழைக்கப் போகிற இஸ்லாமியச் சமூகம் சார்ந்த எளிய மனிதர்களின் உணர்வுபூர்வமான ஆவணம்.

பெரும்பாலான கதைமாந்தர்கள் தென் தமிழகத்துக்காரர்கள். மலையாளி. உத்திரபிரதேசக்காரன். பாகிஸ்தானி. ஆப்கானிஸ்தானி. இந்தோனேஷியாக்காரி. பிலிப்பைனி. இப்படி அரபு நாடுகளில் வேலை செய்யும் வெளி நாட்டவர்களின் கதையிது. மெக்காவிற்கு மேற்கே செங்கடலை ஒட்டி இருக்கும் ஜித்தா நகரத்தில் தான் பெரும்பாலும் புதினம் பயணிக்கிறது. பூஃபியா (டீக்கடை), ஏ.சி. கடை, காகித ரோல் கம்பெனி, டெய்லர் என பல வேலைகள் செய்யும் நண்பர்கள் வாரமொருமுறை சந்தித்து, தங்களுக்கான கடிதங்களிலிருந்து உண்டாகும் அழுகையோ சிரிப்போ எதுவானாலும் வசிப்பிடத்தின் இயல்பைத் தொலைத்து விடாமல் கடந்துபோகும் எளிய மனிதர்களின் கதை. அப்படி அரபு நாடுகளுக்குப் பிழைக்கப் போன, கிட்டத்தட்ட‌ 27 வயதுடைய ஃபைசலைக் கதையின் மையப்பாத்திரம் என்று சொல்லலாம். இஸ்லாமிய அடையாளத்துடன் பெரிய தாடியுடன் வலம்வரும் ஃபைசல், தனது அரபி முதலாளியின் கொடுமைகளிலிருந்து தப்பித்து ஓடி, பாஸ்போர்ட் இழந்து, தாடி இழந்து, இக்காமா (அடையாள அட்டை) இல்லாமல் மறைந்து திரிந்து, சவூதி போலீஸிடம் மாட்டி, திரும்பவும் தாய்நாடு போவானா என்பதே புதினத்தின் கதையோட்டம்.

தெருக்களில் சாதாரணமாக நடக்கும் கற்சண்டை. மூடியிருக்கும் சன்னல் கதவுகளையும் மீறி குளிர்சாதன இயந்திரத்தின் இடைவெளிகளில் புகுந்து கொள்ளும் மணற்துகள்கள். அரபிகளின் குளிர்காலக் கூடாரங்கள். அவர்களின் லிமோசின் வாகனம். ஊர்ந்து செல்லும் சிறை போன்ற போலீஸ் வாகனங்கள். இப்படி பிரம்மாண்ட பாலங்கள், அவற்றில் திரண்டோடும் கானல்நீர், செங்கடல், பாலைவன மணல் என சவூதியின் ஜித்தா நகரைக் கண்முன் கொண்டுவருகிறார் ஆசிரியர். புதினத்தின் சில இடங்களில் சாலையை வெறுமனே கானல்நீர் என்று குறிப்பதும் அழகு. தெஹ்ரானுக்கும் பஹ்ரைனுக்கும் இடையே இரண்டு நாடுகளையும் இணைத்து கடலில் 50 மைல்கள் தொலைவுக்குக் கட்டப்பட்டிருக்கும் உலகின் பிரம்மாண்டமான பாலத்தில் வியாழன் இரவு, மது குடிப்பதற்காகவே பெரும்பாலோனோர் பஹ்ரைன் போவது. தாய்லாந்து லாட்டரி. இப்படி மது சூது மூலம் இஸ்லாம் மார்க்கத்திற்குப் புறம்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது சவூதியின் இன்னொரு முகம்.

அமெரிக்காவால் அட்டையாக உறிஞ்சப்படும் அரபு நாடுகளின் பரிதாப நிலையை ஆங்காங்கே இப்புதினம் சொல்கிறது. மது குப்பிகள், நீலப்படம், பன்றி இறைச்சி போன்றவற்றை அமெரிக்க இராணுவ முகாம்கள் மூலம் மிக எளிதாக நாட்டிற்குள் நுழைய விட்டுவிட்டு, இந்தியாவில் இருந்து வருகிற தமிழ்ப் பத்திரிக்கைகளில் நடிகைகளின் ஆபாசப் பகுதிகளைக் கருப்பு மையிட்டு விமான நிலையத்தில் அழிப்பதைக் கேலி செய்கிறது. உருவ வழிபாட்டை எதிர்ப்பதால், ஜவுளிக்கடை பொம்மைகளுக்குத் தலை வைக்காமல், அரசு அலுவலகங்களிலும் கரன்ஸி நோட்டுகளிலும் மன்னர் படம் இட்டிருப்பதைக் கிண்டல் செய்கிறது. அரபு நாடுகள் பற்றி சொல்லப்படும் சில நல்ல விடயங்களில் ஒன்ரு, மகர் பணம். திருமணத்தின் போது பெண்ணுக்கு ஆண் தருவது. நம்மூர் வரதட்சணை பற்றிக் கேள்விப்படும் ஓர் அரபி, பெண்ணிடம் பணம் பெற்றுக் கொண்டு திருமணம் செய்யும் நாசக்கார மனிதர்கள் நரகம் புக அக்காரணம் மட்டும் போதும் என்கிறார்.

நம்மூரில் இஸ்லாமிய இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டுவது மிக மிக அபூர்வம். இப்போதைக்கு எனக்கு ‘பருத்தி வீரன்’ திரைப்படம் தவிர வேறேதும் ஞாபகமில்லை. ‘முகத்தில் அடிக்காதீர்கள்’, ‘கோள் மூட்டுபவன் சொர்க்கம் போக முடியாது’, ‘ஒட்டகத்தைக் கட்டிப் போடு; இறைவன் மீது நம்பிக்கை வை. ஒட்டகத்தை அவிழ்த்து விட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்காதே’ என்ற நபிகளின் வாக்குகள் புதினத்தின் உரையாடல்களுக்கு இடையே மேற்கோளாக சொல்லி இருப்பது அருமை. ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ புதினத்தில் அம்பிகா – ராதா போல, அஜ்னபியில் ரஜினிகாந்தைச் சுற்றி கொஞ்சம் கதை. துவைஜியிடம் வேலைக்குச் சேர்ந்தது முதல் மம்மனிபா அறைக்கு வந்து சேர்வது வரையான ஃபைசலின் கதையும், எமர்ஜென்ஸி பாஸ்போர்ட் எடுக்க நடக்கும் முயற்சிகளும், நாசரின் வாப்பா மௌத்(மரணம்)தானபின் நடக்கும் சம்பவங்களும் அருமை.

என்ன, ஃபைசலைப் பற்றியும், கதையின் மற்ற பகுதிகள் பற்றியும் வேறுதும் சொல்லவில்லை என்கிறீர்களா? ஜட்டிக்குள் பணத்தை வைத்துக் கொண்டு அலைந்து திரியும் ஃபைசல் பற்றியும், ஊரின் ஞாபகமாக முருங்கை போத்து கொண்டு போய் நட்டு மரமாக வளர்ப்பவர்கள் பற்றியும், தனது சோகங்களை நாடகமாகவும் ஜோக்குகளாகவும் பேசித் தீர்ப்பவர்கள் பற்றியும், மற்றவர்களின் அந்தரங்க கடிதங்களை மறைமுகமாக படிப்பபவர்கள் பற்றியும், தனிமையில் உழல்வதால் மனநிலை பாதிக்கப்பட்டு, ‘தனியாத்தானே இருக்கேன்; சும்மாத் தூக்குப் போட்டுப் பாக்கலாமேன்னு’ சொல்பவர்கள் பற்றியும் நீங்களே புதினத்தில் படிப்பதே நல்லது. அட, அஜ்னபி என்றால் என்ன அர்த்தம் என்றாவது சொல்லிவிட்டுப் போ என்கிறீர்களா? தமிழ் தவிர மலையாளம் போன்ற இன்னபிற மொழிகளும் உரையாடல்களில் இடம்பெறும் இப்புதினத்தைச் சில‌ பக்கங்கள் படித்த பிறகும், அஜ்னபியின் அர்த்தம் புரியாததால் இணையத்தில் தேடினேன். அந்த அருஞ்சொற்பொருளுக்குப் பல பொருள்கள் இருப்பதால், ஒரு திரைப்படத்தில் அதைக் குறிப்பாக உணர்த்த பெரிய வசனமே சுஜாதா எழுதி இருக்கிறார். எனவே, புதினத்தைப் படித்துப் பொருள் உணர்வதே உத்தமம்.

அரபு நாடுகள் மூலம் நம்மூரில் வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் பலர் என்றாலும், ஹஜ் பயணத்தின் போது மெக்காவிற்கு வருவதைத் தவிர இனிமேல் அங்கே திரும்பிப் போவதில்லை என்று ஏமாற்றப்பட்டவர்களும் உண்டு. ‘நான் வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்’ என்று சூட்கேஸில் தடியாக எழுதிக் கொண்டு கடலூர் வீதிகளில் வலம்வரும் ஒருவரை இந்த ஞாயிறன்று ‘புதிய தலைமுறை’ தொலைகாட்சியில் காண்பித்தார்கள். இருவகையினரையும் அஜ்னபி பதிவு செய்கிறது. படித்துப் பாருங்கள்.

—————————————————————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம் : அஜ்னபி (புதினம்)
ஆசிரிய‌ர் : மீரான் மைதீன்
வெளியீடு : கால‌ச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : திசம்பர் 2013
விலை : 275 ரூபாய்
பக்கங்கள் : 335
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
—————————————————————————————————————————————————————————————————————————————————————————————

அனுபந்தம்:
—————
1. ஈராக்கில் நடக்கும் உள்நாட்டுப் போரினால் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பற்றிய செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியா வந்து சேர்பவர்களை மாநில – மத்திய அரசு அதிகாரிகள் போட்டி போட்டுக் கொண்டு விமான நிலையம் வரை போய் வரவேற்று, தங்களைக் காரணகர்த்தாக்களாக நிரூபித்துக் கொள்ள முயல்கிறார்கள். சோமாலியா முதல் ஈராக் வரை அங்கு பிரச்சனை செய்பவர்களை, ஊடகங்கள் முந்திக்கொண்டு தீவிரவாதிகள் என்று எழுதுகின்றன‌. அவர்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லும் சில உண்மை ஊடங்களும் இருக்கின்றன. தேடிப் படியுங்கள்.
2. கிட்டத்தட்ட அஜ்னபியின் கருவைக் கொண்ட இப் புத்தகத்தையும் படித்துப் பாருங்கள்.
புத்தகம் : கன்யாவனங்கள்
ஆசிரிய‌ர் : புனத்தில் குஞ்ஞப்துல்லா
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
3. நேற்று வெளியான இராமானுஜன் திரைப்படத்தை இன்று திரையரங்கில் பார்த்தேன். அருமை. நமது கணிதமேதையை நம் முன்னோர்கள் தான் புரிந்து கொள்ளவில்லை. நாமாவது அம்மேதையைக் கொண்டாடுவோம். நான் திரையரங்கை விட்டு கனத்த மனத்துடன் வெளியே வரும்போது, வாசலில் நின்றிருந்த இயக்குனர் ஞான ராஜசேகரன் அவர்களுக்குக் கும்பலோடு கும்பலாக கைகுலுக்கி வாழ்த்து சொல்லி வந்தேன். திரையரங்குகளில் சென்று பார்த்து இதுபோன்ற நல்ல திரைப்படங்களை ஊக்குவிப்போம்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements