136. THE MISSING INK

J S Gnanasekar
The moving finger writes, and having writ, moves on.

– Omar Khayyam

புத்தகம்: The Missing Ink – How handwriting made us who we are
ஆசிரியர்: Philip Hensher
மொழி: ஆங்கிலம்
வெளியீடு: Pan books
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 274
விலை: 399 ரூபாய்
வாங்கிய இடம்: Landmark

என் நண்பர்களுக்குக் கூட தெரியாத ஒரு இரகசியத்தை இப்பதிவிற்காக சொல்கிறேன். வரலாறு எழுதுபவர்கள் குறித்துக் கொள்ளவும். முதலாம் வகுப்பை இரண்டு ஆண்டுகள் படித்தவன் நான்!! நான் முதலாம் முறை முதலாம் வகுப்பு படித்தபோது எனக்குச் சவாலாய் இருந்த இரண்டு எழுத்துக்கள், னகரமும் ணகரமும். இரண்டு சுழி, மூன்று சுழி என இரண்டு தனித்தனி எழுத்துக்கள் என புரிந்தது. ஆனால் முதலாம் சுழியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாதென எப்படியோ என் மூளையில் பதிந்து போயிற்று. வாத்தியார் இரண்டு சுழி என்றால் நான் ணகரம் எழுதுவேன். மூன்று சுழி என்றால், எப்படி எழுதி இருப்பேன் என எழுதி காட்ட வேண்டுமா என்ன! மற்றவர்கள் னகரம் எழுதும் போது எனக்கு விநோதமாக இருக்கும். இப்படியேதான் முதலாம் முறை முதலாம் வகுப்பை முடித்தேன். பிறகு ஆங்கிலத்தில் சிறிய (lower case), பெரிய (upper case) எழுத்துக்களில் நேர்த்த குளறுபடிகள் ஏராளம். எங்கள் ஊரிலேயே முதன்முதலில் எல்.கே.ஜி. படித்த என் தம்பி சற்று விநோதமாய், எழுத்தில் சரியாக எழுதிவிட்டு, சொல்லும் போது மட்டும் Mக்கு அடுத்து Nஐ விட்டுவிட்டு O என்று தாவி விடுவான். அதைச் சரிசெய்ய நான்பட்ட பாட்டைக் கேட்டு, மூன்றாம் வகுப்போடு நின்றுவிட்ட என் அம்மாவும் A B C D கற்றுக் கொண்டாள் என்பது கிளைக்கதை!

எப்படியோ தட்டுத்தடுமாறி பத்தாம் வகுப்பு வந்தபிறகு தான், பொதுத் தேர்வுக்காக‌ கையெழுத்தைப் பற்றி பலரும் பலவாறு குழப்பினர். ஆங்கிலத்தைக் கோர்த்துச் சேர்த்து எழுதச் சொல்லி ஒருபுறம்; நன்கு இடைவெளிவிட்டு பிரித்து வைக்கச் சொல்லி மறுபுறம். தமிழுக்குக் கொம்பு போடச் சொல்லி ஒருபுறம்; இலட்டு மாதிரி குண்டு குண்டாகவென்று இன்னொரு புறம். பேனா பட்டையாக எழுத வேண்டும் என்று ஒரு சாரார்; மறுத்து மறுசாரார். இப்படி பலவாறு குழப்பிப்போய், முதலாம் இடைத்தேர்வில் அழுத்தி எழுதியதில் ஜமீன்தாரின் செருப்பு போல கம்பீரமாக, என் பேனாமுள் பின்னோக்கி வளைந்து போனது. ப்ரெய்லி (Braille) தாள்கள் போல என் விடைத்தாள்கள் எல்லாம் பின்புறமும் படிக்கும் அளவிற்குப் பதிந்து போயின. பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்று வெளியேறிய போது, எனது கையெழுத்து என்பது எனது அடையாளம் என்பதும் அதுவொரு கலை என்ற தெளிவும் இருந்தது. நமது கையெழுத்தில் நாமும் கொஞ்சம் இருந்ததை நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு தருணத்தில் இப்படி உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

அதாவது ஒவ்வொருவருக்கும் எழுதும் முறையில் ஒரு ஸ்டைல் இருக்கும். ஒவ்வொரு வார்த்தையில் உள்ள எல்லா எழுத்துக்களையும் கோர்த்துச் சேர்த்து, கொம்பே இல்லாமல் பழைய‌ தமிழில் எழுதும் என் தந்தையின் கையெழுத்துத் தான் என்னைச் சிறுவயதில் முதன்முதலில் கவர்ந்தது. ஒவ்வொரு தமிழ் எழுத்தின் மூடப்படாத விளிம்புகளைக் கூரிய கத்திபோல் எழுதும் கருணாநிதி மாமா. தமிழில் முதல் எழுத்திற்கு மட்டும் நிறுத்தி நிதானமாக கொம்பு வைத்துவிட்டு, மற்ற எழுத்துகளில் கொம்பிடாம‌ல் எழுதும் நண்பன் சேரலாதன். அவ்வளவு பெரிய கணக்கைக் கரும்ப‌லகை முழுவதும் எழுதிவிட்டு சம்மந்தமே இல்லாமல் கடைசியில் ஒரு புள்ளி வைத்துவிட்டு, நாங்கள் எழுதி முடிக்கும் வரை அப்புள்ளியைப் போட்டுக் குத்திக் கொண்டே இருக்கும் மணிவண்ணன் சார். த‌ ந ற போன்ற எழுத்துக்களை எகிப்திய பிரமிடுகளுக்குள் பிரம்மாண்டமாக விறைந்துக் கொண்டு அமர்ந்திருக்கும் சிலைகள் போல செங்குத்தான கோடுகளால் எழுதுபவர்கள். மெய் எழுத்துக்களின் புள்ளிகளில் வட்டமிடுபவர்க‌ள். பூ யூ வூ g j y போன்ற கீழ் நோக்கிய வளைவு கொண்ட எழுத்துக்களில் ஒரு சுழி இடுபவர்க‌ள். y f போன்ற எழுத்துக்களை வாக்கியத்தின் ஆரம்பத்திலும் இடையிலும் இறுதியிலும் வெவ்வேறு மாதிரி எழுதுபவர்கள்.

(http://theonlinephotographer.typepad.com) முதலாம் எலிசபெத்தின் கையொப்பம்

(http://theonlinephotographer.typepad.com) முதலாம் எலிசபெத்தின் கையொப்பம்

இ-ஐக் கடிகார முள்ளின் எதிர்த்திசையில் எழுதுபவர்கள். 8-ஐக் கடிகார முள்ளின் திசையில் எழுதுபவர்கள். 3 எழுதி அதைத் திருப்பி திரும்பவும் எழுதி 8 எழுதுபவர்கள். இரண்டு 0 போட்டு 8 எழுதுபவரக்ள். 7ன் குறுக்கே ஒரு கோடு போடுபவர்கள். 9ஐ வளைப்பவர்கள். Tன் இருபுறமும் குடை மாதிரி நீட்டிவிடுபவர்கள். xஐ வெட்டிவிடுபவர்கள் அல்லது முதுகோடு முதுகாகத் தொட்டுவிடுபவர்கள். a மாதிரி எழுதாதவர்கள். அப்படிச் சுற்றி இப்படி வளைத்து மற்றவர்கள் தலைசுற்ற f g எழுதுபவர்கள். மகாராஜாக்கள் ஓவியத்தில் இருப்பது போல் ஒருபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுதுபவர்கள். ஆங்கிலத்தில் சம்மந்தமே இல்லாமல் திடீரென பெரிய எழுத்துக்களை இடையிடையே எழுதுபவர்கள். ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகளில் சிலவற்றை மேலே அம்பு போல நீட்டுபவர்கள்; சிலவற்றைக் கீழே மின்னல் போல குத்துபவர்கள். கையொப்பத்தின் அடியில் கோடிடுபவர்கள். கையொப்பத்தின் தொடர்ச்சியாக கோடிடுபவர்கள். ஏதோவொரு எழுத்தை இரசித்து எழுதியிருக்கலாம். ஏதோவொரு எழுத்தை நிறுத்தி நிதானமாக எழுதியிருக்கலாம். இப்படி ஏதோவொரு வகையில் உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ, நம் கையெழுத்தின் மூலம் நம்மை மற்றவர்கள் நினைவு வைத்திருக்கும் அனுபவம் எல்லாருக்கும் இருக்கும்.

இப்பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் உங்களில் எத்தனை பேரின் கைக்கெட்டும் தூரத்தில் ஒரு பேனா வைத்து இருக்கிறீர்கள்? குறைந்தபட்சம் ஒரு பேனாவாவது வைத்திருக்கிறீர்களா? என்னைப் போன்றவர்களிடம் பொது இடங்களில் பேனா இரவல் கேட்பவர்களில் நீங்களும் ஒருவரா? சமீபத்தில் ஏதாவது பேனா பிடித்து எழுதி இருக்கிறீர்களா, கையொப்பம் தவிர‌? உங்கள் அன்புக்குரிய எத்தனை பேர்களின் கையெழுத்தின் மூலம் அவர்களை உங்களால் அடையாளம் காண முடியும்? இன்றும் நடைமுறையில் சட்டச்சாட்சியாக கையொப்பமே இருப்பதால்,  மற்ற நேரங்களில் பேனா பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. ஒரு மொபைல் போதும்; ஒற்றைக் கட்டைவிரல் போதும்; பேனாவைவிட படுவேகமாக டைப் செய்து முடிக்கலாம். கடிதம் வரக் காத்திருக்கத் தேவையில்லை; இ-மெய்லைச் சில முறைகள் refresh செய்தாலே போதும். அமெரிக்க ஜனாதிபதி அருகில் இல்லாத சில அவசர சமயங்களில் அவர் கையொப்பமிட, அந்த அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கருவியே உண்டு. அதாவது, பேனாவே இல்லாமல், ஆளே இல்லாமல் கையொப்பம்! பேனா பிடித்து எழுதுவதில் இருந்த ஏதோவொரு ஈர்ப்பு, கீபோர்டுகளில் இல்லாத‌து போல் நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா? பக்கம் பக்கமாக நாம் அடைகாத்து வைத்திருந்த பெரிய கடிதங்களில் கண்ட ஏதோவொரு நெருக்கம், இ-மெயிலின் துண்டு வரிகளில் இல்லாத‌து போல் நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா? புத்தகத்திற்குள் போகலாம்.

The missing ink. How hand-writting made us who we are! இன்று நாம் அடைந்திருக்கும் நிலையை அடைய கடந்து வந்த பாதையைக் கையெழுத்தோடு சொல்லும் 29 கட்டுரைகளே இப்புத்தகம். ஆங்கிலம் என்ற மொழியின் வரிவடிவம் எப்படி எப்படியெல்லாம் மாறி மாறி இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது என்று பேசுகின்றன சில கட்டுரைகள். ஆரம்ப காலத்தில் செப்புத்தகடுகளில் பொறிக்கப்பட்டு அச்சுக்காக பயன்படுத்தப்பட்ட‌ வரிவடிவம் (Copperplate), மற்றவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதற்காகவே அதிக வளைவு சுழிவுகளைக் கொண்டு உண்டாக்கப் பட்டிருக்கிறது. 55 டிகிரி சாய்வாக, கூரிய முனையுடைய பேனாக்களால் மட்டுமே எழுதப்பட்ட முடிந்த அவ்வடிவம் இன்று Coca-Cola என்ற பெயரில் மட்டுமே காண முடிகிறதாம். Old Monkல் இருக்கும் Gothic என்ற எழுத்துரு (font) பற்றியும் பேசுகின்றது ஒரு கட்டுரை. வரிவடிவத்தில் பெரும்பாலும் மாற்றங்களையே கண்டிராத தமிழ் போன்ற செம்மொழிகளுடன் இக்கட்டுரைகளை அப்படியே ஒப்பிட முடியாது என்றாலும், அவை சொல்லும் கருத்துகள் நமக்கும் பொருந்தும். வெவ்வேறு விதமான துறையாளர்கள் சிலரின் கையெழுத்தைப் பேட்டி காண்கின்றன, 8 கட்டுரைகள்.

சில பிரபலங்களின் கையெழுத்துக்களைப் பற்றி பேசுகின்றன சில கட்டுரைகள். ‘பின்புறமாகச் சாய்ந்திருக்கிறது. சம்மந்தமில்லால் கோர்த்து எழுதி இருக்கிறது. சம்மந்தமில்லால் பிரித்து எழுதி இருக்கிறது. எல்லா எழுத்துக்களும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்கின்றன. மேலேயோ கீழேயோ நீட்டப்பட வேண்டிய கோடுகள் நீட்டப்படவில்லை. கண்டிப்பாக அதிகப் படிப்பறிவில்லாத ஒரு மனிதனின் கையெழுத்துத் தான்’ – இதில் சொல்லப்படுபவர் வேறு யாருமில்லை, பிரிட்டன் பிரதமர் கார்டன் ப்ரௌன்.

(http://www.dw.de/) அடால்ப் ஹிட்லரின் கையெழுத்து

(http://www.dw.de/) அடால்ப் ஹிட்லரின் கையெழுத்து

பொருட்களை ஞாபகப்படுத்த ஆதிமனிதன் நார்களில் முடிச்சிட்டு வைத்தான். பிறகு எலும்புகளிலும், கூழாங்கற்களிலும், களிமண்ணிலும் குறித்து வைத்தான். 1970களில் தட்டச்சு தெரிந்திருந்தால் படுகிராக்கி. கீபோர்டுகளின் மேல் வரிசையின் முதல் ஆறெழுத்துகளால் உண்டாக்கப்பட்ட‌ QWERTY என்ற வார்த்தை, கீபோர்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு முறை என்ற அர்த்தத்துடன் ஆங்கில அகராதியிலேயே இடம்பெற்றுவிட்டது. ஆரம்ப காலத்தில் தட்டச்சுச் கருவியில் (type-writer) வேகமாக டைப் செய்ய வசதியாகத் தான் கீபோர்டுகளில், எழுத்துக்கள் வரிசையாக அமைக்கப்படவில்லை என எனக்கு தட்டச்சு சொல்லித் தந்தவர்கள் சொன்னார்கள். அதே முறை கணினிக்கும் வந்ததாகச் சொன்னார்கள். ஆனால் கீபோர்டுகளில் எழுத்துக்கள் அவ்வாறு சிதறிக்கிடக்கக் காரணம், வேகமாக டைப் செய்ய அல்ல. தட்டச்சுக் கருவியில் வேகமாக டைப் செய்தால் கம்பிகள் சிக்கிக் கொள்ளும் என்பதால், டைப் செய்யும் வேகத்தைக் குறைக்கத் தான் எழுத்துக்கள் அவ்வாறு சிதறப்பட்டனவாம்.

இன்று கணினி வரை வந்துவிட்டோம். கணினிகள் மூலம் காகிதப் பயன்பாட்டை ஒழிப்பதே தனது இலட்சியம் என தனது சுயசரிதையின் ஆரம்பப் பக்கங்களில் பில் கேட்ஸ் சொல்வார். அரசு அலுவலகங்களில் கணினி புகுத்தப்பட்ட போது, எதிர்த்து போராட்டங்கள் இங்கு நடந்திருக்கின்றன. இன்று கணினி இல்லாத இடங்களே இல்லை என சொல்லலாம். மோசமான கையெழுத்தினால் விளைவுகள் எப்படி இருக்கும் என கொஞ்சம் புள்ளிவிவரங்கள் பார்ப்போம். டாக்டர் கையெழுத்துப் புரியாமல் மருந்தை மாற்றிக் கொடுத்த‌ விபரீதச் சம்பவங்கள் உலகம் முழுதும் உண்டு. கோடாக் (Kodak) நிறுவனத்தின் 4,00,000 படச்சுருள்கள் புரியாத முகவரியால் தேங்கிப் போயினவாம். 1994ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கத் தொழிற்துறையில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் நட்டம். அமெரிக்காவில் வருடத்திற்கு 38 மில்லியன் கடிதங்களில் முகவரியையே படிக்க முடியாமல் அப்படியே கிடக்கின்றனவாம். வெளியூர் கணக்கெல்லாம் இப்படியிருக்க, நம்ம சென்னையில் மட்டும் தினமும் 500 கடிதங்கள் இப்படித் தேங்குவதாக சமீபத்தில் இந்து பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்தது. மின்னஞ்சலும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் இப்பிரச்சனைகளைக் கிட்டத்தட்ட இல்லாமலேயே ஆக்கிவிட்டன. பரிணாம வளர்ச்சி இப்படி ஆரோக்கியமாக‌ இருக்கையில், திரும்பவும் பின்னோக்கிக் காகிதங்களில் போய் எழுதிக் கொண்டு இருக்க வேண்டுமா?

(http://www.pri.org) சார்லஸ் டிக்கன்ஸ் கையொப்பம்

(http://www.pri.org) சார்லஸ் டிக்கன்ஸ் கையொப்பம்

ஒரு நல்ல மனிதன் pen-pipe-wife என்ற மூன்றையும் கடன் கொடுப்பதில்லை என்றொரு சொல்லாடல் 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. நான் இன்றும் மையூற்றி எழுதும் பேனாவைத் தான் உபயோகித்து வருகிறேன். வெளிநாடு சென்றபோதும் மைப்பேனா தான். இந்த மைப்பேனாக்களில் சீக்கிரமே மை தீர்ந்து விடுதல், மை கசிதல், உயரமான இடங்களில் மை உறைந்து போதல் போன்ற குறைகளைப் போக்கவே பந்துமுனைப் பேனா (ball-point pen) கண்டுபிடிக்கப்பட்டது. அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், சக்கரத்தின் கண்டுபிடிப்பை எப்படி மனித அறிவின் முக்கிய கண்டிபிடிப்பாகச் சொல்வார்களோ அதற்கு இணையாக தாள்களின் மேல் உருளும் பந்துமுனைகளை ஒப்பிட்டு இருக்கிறார்கள்! மை (Ink), பந்துமுனைப் பேனா போன்றவற்றின் கண்டுபிடிப்பு, விளம்பரங்கள் பற்றி பேசுகின்றன சில கட்டுரைகள். மைப்பேனாவே சிறந்தது என்று என் அனுபவத்தை வழிமொழிகின்றன அக்கட்டுரைகள். புத்தகம் பெரும்பாலும் ஆங்கிலம் என்ற மொழியின் வரிவடிவ வளர்ச்சியின் வழியே பெரும்பாலும் அமைவதால், அவ்வாறான பகுதிகள் அவ்வளவாக ஈடுபாட்டுடன் வாசிக்க முடியவில்லை. பேட்டி காணும் கட்டுரைகளும், மை, பேனாக்கள், கையெழுத்து பற்றி பேசும் கட்டுரைகளும் தான் நமக்குத் தேவையான பகுதிகள். கையால் எழுதுவதை ஒதுக்கி விடாதீர்கள் எனவும், அதற்கென வாய்ப்புகளை நாமே அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் முடிகிறது புத்தகம்.

கீபோர்டுகளால் எழுதுவதில் ஓர் இயந்திரத்தனம் உண்டு. அங்கு எல்லா எழுத்துக்களும் வெறும் குறியீடுகளே (unicode). அங்கே Iக்குப் பிறகு J கிடையாது; Rக்குப் பிறகு S கிடையாது; பேனாவில் அப்படி இல்லை. மூளையில் இருந்து இரத்தநாளங்கள் வழியே பாயும் நமது சிந்தனைகள், வெளியேறும் இடம்தான் நம் விரல்கள். அங்கே ஒரு பேனாவைப் பிடித்து கையால் எழுதும்போது, இரத்தநாளங்களின் ஒரு தொடர்ச்சியாகவே பேனா உணரப்படுகிறது. அதனால் தான் கவிஞர் வைரமுத்து, ஆறாம் விரலாய்ப் பேனா கேட்டார். பேனாவை உணர்வுப்பூர்வமாகப் பிடித்தெழுதும் ஒருவரால்தான் அதைத் தன்னுடலின் ஓர் அங்கமாக உணர முடியும். 12 விதமான பண்புகள் கையெழுத்துடன் தொடர்புடைவனவாக இப்புத்தகம் சொல்கிறது. ஒரு நல்ல கையெழுத்தை உடையவருக்குக் கிடைக்கும் சில நல்ல விடயங்களை இப்புத்தகம் பட்டியல் இடுகிறது. அடியேனும் உணர்ந்த சில உங்களின் கவனத்திற்கு:
1. கையால் எழுதுவதில் ஈடுபாடு உடையவர்களின் வாசிப்பு வேகமும், வார்த்தைகளை ஊகிக்கும் திறனும் சிறப்பாக இருக்கும்.
2. கையால் எழுதுவதில் ஈடுபாடு உடையவர்கள், கருத்துக்களைக் கட்டமைத்து மற்றவர்களுக்குச் சொல்வதில் சிறப்பாக இருக்கிறார்கள்.
3. கையால் எழுதுவதில் ஈடுபாடு உடையவர்கள், தங்கள் ஞாபகங்களில் இருந்து விடய‌ங்களை மீட்டெடுப்பதில் அதிகம் சிரமப்படுவதில்லை.

(http://cdn.thewire.com) சார்லஸ் டிக்கன்ஸ் கையெழுத்து

(http://cdn.thewire.com) சார்லஸ் டிக்கன்ஸ் கையெழுத்து

இ-புத்தகங்கள் படிப்பவர்கள் பற்றி சில மாதங்களுக்கு முன்பு இந்து பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வந்தது. Are they biblophile or technophile? என்று தலைப்பிட்டு இருந்தார்கள். Thomas Loren Friedman அவர்கள் தனது Lexus and Olive Tree புத்தகத்திலும் கிட்டத்தட்ட இதையே தான் சொல்கிறார். விரல்நுனிகளில் தட்டித்தட்டி எல்லாவற்றையும் கணினியில் சேமித்துக் கொண்டோம். அதைவிட அற்புதமான நம்பிக்கைக்குரிய பொருள், உங்களின் சொந்த மூளை. உங்கள் கணினியை யாராவது கவர்ந்து கொண்டால்? ஒரு கட்டைவிர‌லில் தகவல் பரிமாறும் மனிதனின் விஸ்வரூப விஞ்ஞான வளர்ச்சி அற்புதம்தான். அதை மறுப்பதற்கில்லை. இப்பதிவைக் கூட டைப் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நாளை கட்டைவிரலும் தேவைப்படாமல் விஞ்ஞானம் வளரலாம். ஏகலைவனின் கட்டைவிரல் போல் நமது தலைமுறையின் கட்டைவிரலும் ஆகிவிடக் கூடாதெனில், மனிதயினம் பல்லாயிரம் ஆண்டுகளில் பெற்ற இந்த எழுதும் அறிவைக் கைவிடாதிருப்போம்! நம் தலைமுறைகளின் கைப்பிடித்து கற்றுக் கொடுப்போம்!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்!

அனுபந்தம்:
—————-
1. சென்னையில் இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில், Express Avenue என்றொரு பல்பொருள் அங்காடி இருக்கிறது. அங்கு இரண்டாம் தளத்தில் உள்ள Starmart என்ற கடையிலும் இப்புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)