137. சோறு போடும் சொற்கள்

நீ இன்னும் ரெண்டு மாசத்துல 10,000 ரூவா சம்பாதிச்சுக் காட்டணும். நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. பிக்பாக்கெட் அடி. கொள்ளைய‌டி. ஊர் சொத்தத் திருடு. மந்திரியாப் போ.
– எஸ்.வி.சேகரின் ‘சாதல் இல்லையேல் காதல்’ நாடகத்திலிருந்து

Offer some plums before them, give a laddu to one, a rasagulla to another…. members from Independents will join and you will then be able to produce a majority. This is a mockery of the Constitution.
– Kailash Nath Katju

புத்தகம் : சோறு போடும் சொற்கள் (அரசியல் அங்கதச் சிறுகதைகள்)
ஆசிரிய‌ர் : ஆர்.நடராஜன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை
முதற்பதிப்பு : 2009
விலை : 80 ரூபாய்
பக்கங்கள் : 160
அணிந்துரை: தோழர் ஆர்.நல்லக்கண்ணு
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று. இப்படி சிலப்பதிகாரத்தில் இருந்து மேற்கோள் காட்டி நம்மை நாமே ஆறுதல்படுத்திக் கொள்ளலாம். இன்னும் எட்டுத்தொகை குறுந்தொகை எல்லாம் சொன்னாலும் கூட, பெருந்தொகை இல்லாவிட்டால் கடவுளானாலும் கதவைச் சாத்தும் என்பதுதான் எதார்த்தம். அரசியல் ஆன்மிகம் கல்வி மருத்துவம் பத்திரிக்கை சினிமா எல்லாம் ஒன்றுக்கொன்று கூட்டு சேர்ந்து நிகழ்த்தும் கள்ள உறவுகளில் சாமானியனை வாட்டி வதைக்கும், ஓர் அபாயகரமான காலம் நமது. இப்பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கும் இன்று, இப்பட்டியலில் நீதியும் சேர்ந்து கொண்டதுதான் தலைப்புச் செய்தி. நம் பரிதாப நிலையை நாமே நொந்து கொண்டு, நமக்கு நாமே சிரித்து ஆற்றிக்கொள்ள வேண்டியதுதான். அப்படி ஒரு புத்தகத்துடன் வந்திருக்கிறேன்.

சோறு போடும் சொற்கள். அரசியல் அங்கதச் சிறுகதைகள். 20 சிறுகதைகளின் தொகுப்பு. அங்கதம் என்ற சொல்லுக்கு அர்த்தமாக விக்கிபீடியா இப்படி சொல்கிறது: தற்காலத்தில் அங்கதம் என்பது எதிர் முரணாக நகைச்சுவையாக ஒரு விடயத்தை எழுதுவதைக் குறிக்கும். வெளிப்படையாக சொல்லப்படுவதற்கும் உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமையும். இதில் வாசகரின் புரிதல் நகைச்சுவையை உணர தேவை. அதாவது கார்ட்டூன் சித்திரங்கள் போல, நிகழ்கால நிகழ்வுகள் தெரிந்தால் தான் நகைச்சுவை புரியும். ஐயோநீ, புயற்குழு உறுப்பினர்கள், ஜெமிழ், கலைஞ‌மிழ், பாலமான் சாத்தையா போன்று வெளிப்படையாக புரியும் சில வார்த்தைகள், ‘கோவில் வேறு, உண்டியல் வேறு’ என்ற நாவலுக்கு நாத்திக சிகாமணி பரிசு பெற்றிருந்த முதல்வர் என்று குறிப்பால் உணர்த்தப்படுபவர்கள் என சில உதாரணங்களை இப்புத்தகத்தில் இருந்தே சொல்லலாம். ‘விரைவில் சட்டசபைகளும் ஆலயங்களாக்கப் படலாம்; செருப்புடன் நுழைவது அங்கும் தடை செய்யப் படலாம்’ என்று கவிஞர் வைரமுத்து சொன்னது போல், இன்றைய அரசியல் சூழலில் உண்மை நிகழ்வுகளே நல்ல நகைச்சுவை கொண்டுள்ளன. இந்தத் தேர்தலில் நிறைய கண்டிருப்போம்.

வெளிப்படையாகவே புரியும் சில வசனங்கள் புத்தகத்தில் இருந்து உங்களின் வாசிப்பிற்கும்:

– கணக்கு கேட்காதே; கணக்கிடம் கணக்கு கேட்காதே; கணக்கு கேட்டதாலே கட்சி உடைஞ்ச வரலாறெல்லாம் இருக்கு.

– தலைவரே முதல் பதிப்பு அகர முதலி என்று வந்தது. பிறகு ஜாதிப் பெயர் கூடாது என்பதனால் இரண்டாம் பதிப்பு அகர நிரலி என்று வந்துவிட்டது

– இதோ பாருங்க இவனிட்ட கப்பலைக் கொடுக்க மாட்டேன். இவன் கப்பல் ஓட்டுற அழகுக்கு உடைக்கக்கூடாத பாலங்களை உடைக்க வேண்டியிருக்கு. தண்ணியிலே இருக்கிற பாலத்தை உடைக்கப்போனா தரையிலிருந்து பூதம் கிளம்புது.

– அவன் பெயர் விருத்தாச்சலம். ஊரும் அதுவே. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் நியதிப்படி பெயர் தமிழில் இருக்க வேண்டும். அத்துடன் ஊர்ப் பெயரும் சேரவேண்டும் என்பதனால் அவன் முதுமலை முதுமலையான் ஆகிப்போனான்.

– ரெவின்யூ அதிகாரிகள், வக்கீல்கள் தாக்கினால் மட்டும்தான் போலீஸ்ல ஒத்துமை வரும். அதிலெல்லாம் கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருக்கு. எம்எல்ஏ எம்பிக்கள் அடிச்சா, மக்கள் பிரதிநிதின்னு நாங்க பெரிசு படுத்தறதில்லே.

– மொழிப்பெயர்ப்புத் துறைன்னு அரசாங்கம் ஒரு துறை வெச்சிருக்கு. அதுல பாதி தமிழும் பாதி ஆங்கிலமும் தெரிஞ்ச ஒருத்தர் தெரியாத ரெண்டு பாதியையும் சேர்த்து முழுசாக்கிட்டாரு. அதாவது ‘ஹாண்டிகேப்டு’ அப்படீன்னா ஊனமுற்றவர்னு சொல்லலாம். ஏதோ குறைபாட்டைச் சொல்றாப்ல இருக்கு அதுன்னு இங்லீஷ் தெரிஞ்சவங்க அதை ‘ஃபிஸிகலி சேல்லஞ்ச்டு’ அப்டின்னாங்க. அந்த ரெண்டு வார்த்தையையும் சேர்த்து ‘மெய்ப்புல அறைகூவலர்’னு போட்டுட்டாரு மத்திய அரசாங்க மொழிபெயர்ப்புத் துறை டைரக்டர். அதுதான் சென்னை விமான நிலையத்திலே தனிக் கக்கூஸ் கட்டி வாசல்லே இதை எழுதி வச்சிருக்காங்களே. பாக்கிறவங்க, ரொம்ப அவசரமா வந்தாலும் அது பாதுகாப்புத்துறை அலுவலகம்னு நினச்சு வேறே எங்கியாவது போயிடுவாங்க‌.

‘என்னாது, சென்னாவும் ரொட்டியுமா வாங்கியாந்தே? சென்னா, ரொட்டி அம்மாவுக்குப் புடிக்காதுன்னு ஒனக்குத் தெரியாது?’ என்று ஒரு வசனம் எஸ்.வி.சேகரின் ‘தத்துப்பிள்ளை’ என்ற நாடகத்தில் வரும். என்ன புரியவில்லையா? ஏற்கனவே நான் சொன்னது போல், அங்கதங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் போல. காலத்தைப் பிரதிபலிப்பவை. சொல்லப்பட்ட காலத்தின் நிகழ்வுகள் தெரிந்தால் தான் நகைச்சுவை புரியும். அது போல ஒரு வசனம் புத்தகத்தில் இருந்து:

– அண்ணே பலராமன்ங்கிற என்னோட பேர என்ன வேண்டுமானாலும் சொல்லித் திட்டுங்க. ஆனா பாலம் ராமன் ரெண்டையும் சேர்த்துச் சொல்லிடாதீங்க. தலைவருக்குப் பிடிக்காது.

‘என்னுயிர்த் தோழன்’ திரைப்படத்தில் ஓர் அரசியல்வாதி கதாநாயகனுக்குப் போதனை செய்து தன் வழிக்குக் கொண்டு வருவதை லாங் ஷாட்டில் அற்புதமாக எடுத்திருப்பார், பாரதிராஜா. அதே போல் ஒரு போதனை இப்புத்தகத்தில் இருந்தும்:

– நல்லதோ, கெட்டதோ, சிலவற்றை நீக்க வேண்டுமென்றால் உடனே அதை நீக்க வேண்டும். நல்லதை நீக்கறமேன்னு கவலைப்படக்கூடாது. அதுதான் நீக்கு என்பது. கெட்டதோ, நல்லதோ, கெட்ட வழிகளிலும் நாம் போய்த்தான் ஆகணும். அதுதான் போக்கு என்பது.

அம்மா என்ற வார்த்தையின் அர்த்தத்தை ஐகோர்ட் வரை போய் விவாதித்த பெருமை தமிழ் கூறும் இந்நல்லுலகிற்கு உண்டு. ஒரு அரசியல்வாதியின் மனைவி – துணைவி – இணைவி முதலான இன்னும் பலரையும் குறிக்க, அம்மா என்ற வார்த்தைதான் அனைத்துச் சிறுகதைகளிலும் பயன்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். அந்த ஒருசொல் பன்மொழி பற்றி சில வசனங்கள் புத்தகத்தில் இருந்து உங்களின் வாசிப்பிற்கும்:

– கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. வேறே சட்டை சுமாரானதா போட்டுக்கிட்டு வந்துடறேன். நான் நல்ல சட்டையும் சால்வையும் போட்டுட்டுப் போனா அம்மாவுக்குப் பிடிக்காது.

– அம்மா, பட்ஜெட்டின் வசனங்களை எழுதியாச்சு. முன்னுரையில் நம்ம ஆட்சி செய்த நன்மைகளை ஒன்றுவிடாமல் குறிப்பிட்டிருக்கோம். எல்லா இடங்களிலும் இலக்கணப்படி வார்த்தைகள் இருக்குதான்னு அரசவைக் கவிஞர் படிச்சுப் பார்த்துத் திருக்குறளும் சேர்த்துக் கொடுத்துட்டாரு. ரிட்டயரான எகனாமிக்ஸ் ப்ரொஃபசர் டெக்னிகல் வார்த்தைகளை அங்கே இங்கே தூவிக் கொடுத்துட்டாரு.

– ஏதோ கல்யாணங்கள்லே ஆம்பிளைப் புரோகிதர்கள் மட்டும்தான் மந்திரம் சொல்லணுமான்னு யோசிச்சுப் பார்த்து அந்த அம்மாவை இவங்க பெரிய புரோகிதரா நியமிச்சிருக்காங்க. அவங்க இப்போ ரொம்ப அலட்டிக்கலாமா.

2009ல் வெளிவந்த இப்புத்தகத்தில் சொல்லப்படும் ஓர் அங்கதம், இன்னும் 2014ல் கூட முடிவது போல் தெரியவில்லை:

கிழிச்சே, கொஞ்சம் வைரத்தை நீ சாப்பிட்டுட்டே. அவனை மாதிரி மாதிரி நீயும் பத்திரமா வச்சிருந்தாப் பரவாயில்லே. நீ சாப்பிட்ட வைரத்தின் விசம் உன்னையும் தாக்கி, எங்களையும் தாக்கி, நாங்க உனக்கும் மத்தவங்களுக்கும் அதிகச் செலவுல வைத்தியம் செய்ததை மறந்துட முடியுமா? நீ இனிமே டெலிஃபோன் பக்கமே வரக்கூடாது.

நான் ரசித்தவை:
நான் மிகவும் ரசித்த சிறுகதைகள்:
1. சோறு போயும் சொற்கள் – எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து அகரம் தலைமையில் நடக்கும் சொற்களின் மாநாட்டுக் கதை
2. துண்டுச் சீட்டுகள் – கல்வி நிறுவனங்களுக்கும் அரசியலுக்கும் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல் கதை
3. மனம் வனம் பணம் – பெருங்கடைகளுக்கும் அரசியலார்களுக்கும் உள்ள இரகசிய தொடர்பு சொல்லும் கதை
4. கொடுத்த‌தெல்லாம் கொடுத்தான் – தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை கெடுபிடிகளுக்கு இடையே பணப்பரிவர்த்தனை நடக்கும் நூதன வழிகள் சொல்லும் கதை
5. முகூர்த்த‌த்திற்கு நேர‌மாச்சு – கூட்டணி பேரக் காமெடிகள்
6. வ‌ந்தார‌ய்யா புது ம‌ந்திரி – மத்திய மந்திரியான ஓர் அரசியல் வாரிசின் முதல்நாள் அலுவல்கள் பற்றிய கதை
7. செவ்வாய் தோஷ‌ம் – அடுத்து ஜனாதிபதியாக நினைக்கும் ஒரு துணை ஜனாதிபதியைத் தேர்தல் நேரத்தில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு அனுப்பும் கதை
8. த‌வ‌ளை பிடிப்ப‌வ‌னா? – நாட்டின் முதல் குடிமகனை/ளை அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் கதை

கூட்டணி பேரம் நடக்கும் நேரங்களில் நடக்கும் கூத்துகளுக்கு ஆசிரியர் சொல்லும் ஓர் உவமையை மிகவும் ரசித்தேன். ஐயர் வீட்டுக் கால்யாணத்திலேயே மாப்பிள்ளை காசி யாத்திரை போறதா பாவலா காட்டற மாதிரி.

நான் மிகவும் ரசித்த ஓர் உரையாடல்:
‘இந்திரா காந்தி காலத்திலே ஏதோ செஞ்சாங்களே, அது மாதிரியா?’
‘அந்த அம்மா என்ன செஞ்சாங்கன்னு எனக்குத் தெரியாதுங்க. ஆனா நான் பார்த்தது நம்ம வாத்தியார் நடிச்ச படத்திலே வந்த கண்காட்சி நடந்த இடம்’
‘கட்சி மாறிவந்த உன்னைச் சேத்துக்கிட்டு மந்திரி பதவி குடுத்தா நீ இன்னமும் பழைய விசுவாசத்தைக் காட்டறியே’

இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றிய விவாதம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராய் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார்: ‘இந்தியர்களுக்கு ஆளத் தெரியாது. அதன் ஆட்சியாளர்கள் சுயநலவாதிகள். அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால், குடிக்கும் தண்ணீருக்கும் சுவாசிக்கும் காற்றுக்கும் கூட வரி விதிப்பார்கள் அக்கயவர்கள். சுதந்திரம் தந்தமைக்காக இந்தியாவின் வருங்கால சந்ததியினர் ஆண்டாண்டுகாலம் பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தைச் சபிப்பார்கள். ஆதலால் தான் சொல்கிறேன், வேண்டவே வேண்டாம் இந்தியாவிற்குச் சுதந்திரம்‘. துரதிஷ்டவசமாக சர்ச்சில் சொன்னது தான் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

கண்ணதாசனின் ஒரு திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது:
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே – அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements