138. காஃபிர்களின் கதைகள்

புத்தகம்: காஃபிர்களின் கதைகள்
தொகுப்பாசிரியர்: கீரனூர் ஜாகிர்ராஜா
வெளியீடு: எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/)
பக்கங்கள்: 208
விலை: ரூபாய் 160
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)

காஃபிர்களின் கதைகள். காஃபிர் என்றால் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றாதவர் அல்லது நம்பிக்கை இல்லாதவர் என அர்த்தம். அப்படி இஸ்லாம் மார்க்கத்தைச் சாராத காஃபிர்க‌ளின், இஸ்லாமிய மக்கள் பற்றிய 17 சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். பாரதியார், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், பிரபஞ்சன், வண்ணநிலவன், சுகுமாரன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் 17 பேரின் சிறுகதைகளின் தொகுப்பு. என்னை மிகவும் கவர்ந்த 5 சிறுகதைகள் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.

ஹசர் தினார்: எஸ்.ராமகிருஷ்ணன்
தமிழில் நான் மிகவும் ரசித்த‌ தலைப்புகளில் இதுவும் ஒன்று – ஹசர் தினார். உயிர்மை பதிப்பக வெளியீடான எஸ்.ராமகிருஷ்ணனின் ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை‘ என்ற சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கதையிது. அப்புத்தகத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். நிறைய பேருக்கு நான் அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகமிது. டெல்லியில் கில்ஜி அடிமை வம்சத்தவர் ஆட்சிக் காலத்தில் மாலிக் கபூர் தலைமையில், முதன்முதலில் தென்னாடுகள் வரை படையெடுத்து வந்ததை நீங்கள் வரலாற்றில் படித்திருப்பீர்கள். தென்னிந்தியா முழுமைக்கும் அப்படியொரு பய‌த்தை உண்டாக்கிப் போன மாலிக் கபூர், ஒரு திருநங்கை/நம்பி என்று உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அடிமையான மாலிக் கபூர், பின் மன்னரின் அந்தரங்கக் காதலனாக மாறி, தன் படை ஆவேசத்தைக் கண்டு யாவரும் பயந்து நடுங்கும்படி வலம்வந்தும், தன்மீது படிந்திருக்கும் அடிமை அடையாளத்தை அழிக்க முடியாமல் தவிப்பதைச் சொல்லும் அற்புதமான புனைவு இச்சிறுகதை.

கான் சாகிப்: நாஞ்சில் நாடன்
தமிழினி பதிப்பக வெளியீடான நாஞ்சில் நாடனின் ‘கான் சாகிப்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கதையிது. அப்புத்தகத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். எளிய இஸ்லாமியர்களுக்கு வாடகை வீடு கூட தர மறுத்து எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் பம்பாய் நகரில், ஓர் இஸ்லாமியருடன் நெருங்கிய நட்பு கொள்ளும் ஆசிரியரின் சொந்தக் கதையிது. ‘சீக்கிரம் சுன்னத் கல்யாணம் செய்து மார்க்கத்திற்கு மாறிவிடு’ என்று நண்பர்கள் கிண்டல் செய்யும் போது, இச்சிறுகதையில் வரும் சில வரிகள் உங்களின் வாசிப்பிற்கும்: ‘பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் அந்த எண்ணம் இருந்தது. பெரியார்தாசனுக்குத்தான் இப்போது நிறைவேறி இருக்கிறது‘. தீவிரவாதத்திற்கு மட்டுமல்ல, நட்பிற்கும் மதமில்லை!

க்யாமத் எனும் இறுதித் தீர்ப்பின் நாள்: தஞ்சை பிரகாஷ்
இஸ்லாம் மார்க்கத்தில் இல்லாத ஒருவனை, அதாவது ஒரு காஃபிரைக் காதலித்து மண‌ந்து கொள்ளும் ஒரு இஸ்லாமிய பெண் பற்றிய கதையிது. ஒரு குறும்படமாக எடுக்கப்பட அனைத்துக் கூறுகளும் இக்கதையில் உள.

பேராசிரியர் தக்கியின் ஆடு: விட்டல்ராவ்
சென்னை மீர்சாகிப்பேட்டையில் புதிதாகக் குடியேறும் பேராசிரியர் தக்கியின் குடும்பம் பற்றிய கதையிது. தமிழ் மட்டுமே பேசும் அவரின் குடும்பத்தை, த‌மிழும் உருதும் பேசும் அருகாமை இஸ்லாமியர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது, தான் வளர்க்கும் ஓர் ஆடு மூலம் அத்தெரு முழுவதும் பிரபலமாவதைச் சொல்லும் கதையிது. ஓர் ஆட்டை வைத்து எவ்வளவு சமூக விடயங்களைச் சொல்கிறது இச்சிறுகதை! கடைசி வரிகள் அற்புதம்.

பயம்: ரமேஷ்-பிரேம்
இத்தொகுப்பின் மிகச் சிறந்த கதை இதுவென்பேன். தாடி வைத்து இஸ்லாமியர் போல முகவமைப்பு கொண்ட ஆசிரியரின் சொந்தக் கதையிது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிந்தைய, இன்றைய எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் சில வரிகள் அக்கதையில் இருந்து உங்களின் வாசிப்பிற்கும்:
சகோதரன் என்று என்னை என் மதத்தவர் இதுவரை அழைத்ததில்லை. என்னை யார் என்று தெரியாமலேயே ‘பாய்’ என அழைக்கும் பண்பு பிடித்திருந்ததது. என்னைப் ‘பாய்’ என்று முஸ்லீம்களைவிட இந்துக்களே பலமுறை அழைத்திருக்கிறார்கள். ‘பாய்’ என அழைத்தபோது பத்தாண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்த மனநெகிழ்ச்சி நாளடைவில் இல்லாமல் போனது. நான் என்னை ஒரு முஸ்லிமாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இன்று நான் ஒரு முஸ்லிமுக்கு ‘அலைக்கம் சலாம்’ எனச் சொன்னால் என் முதுகுக்குப் பின்வரும் உளவு பார்ப்பவர்கள் என்னையும் ஒரு முஸ்லிமென அரசு காவல் இயந்திரங்களுக்கு அடையாளப்படுத்துவார்கள். ஏன் அபத்த வம்பு என நான் என்னை வாஞ்சையோடு ‘பாய்’ என்றழைப்பவர்களை வெறுப்போடு தவிர்த்து நடக்கிறேன்.

எவ்வளவு ஆழமான வார்த்தைகள்! இந்த ஒருவாரமாக சானியா மிர்சா பற்றி ஊடக‌ங்களில் வெளிவரும் செய்திகள் சமீபத்திய உதாரணங்கள். இப்படி இஸ்லாம் பற்றிய எதிர்மறையான விடய‌ங்களால் பலவீனப்படுத்தப்படும் தேசம் நமது. இஸ்லாம் பற்றிய நேர்மறைச் சிந்தனைகளைக் காஃபிர்களுக்குக் கொடுப்பதன் மூலமே, இத்தேசம் பலம் பெறும். இப்படி சொல்லியும் செய்தும் காட்டிய காந்தி என்ற காஃபிர் சுட்டுத்தான் கொல்லப்பட்டார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்ற முறையில் நானும் ஒரு காஃபிர்தான். ஈழம் என்ற சுதந்திர நாட்டை வாழ்நாளில் சந்தித்துவிட வேண்டும் என்ற‌ ஆவலைவிட, பாலஸ்தீனம் என்ற சுதந்திர நாட்டிற்கான பேராவல் எனக்குண்டு. இந்தத் தமிழ்க் காஃபிர் இதே தளத்தில் எழுதிய புத்தகங்களில், மிகவும் சிரத்தை எடுத்து எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இஸ்லாம் பற்றியதே – A World without Islam. காஃபிர்களிடம் இருந்து தோன்றும் இதுபோன்ற படைப்புகள் இன்றைய சூழலில் இந்தியாவிற்குக் கட்டாயம் தேவை.

அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements