139. குன்னூத்தி நாயம்

புத்தகம்: குன்னூத்தி நாயம்
ஆசிரியர்: ஹரிகிருஷ்ணன் (http://manalveedu.blogspot.in/)
வெளியீடு: எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/)
முதல் ஈடு: திசம்பர் 2013
பக்கங்கள்: 142 (உள்ளடகத்தில் பக்க எண்கள் தவறாக இருக்கின்றன. அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ளவும்)
விலை: ரூபாய் 120
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)

ஏதோவொரு நம்பிக்கையில் இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன். குன்னூத்தி நாயம். புத்தகப் பெயரின் அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. சமீபத்தில் நிறுத்தி நிதானமாக சிரமப்பட்டு படித்து முடித்த புத்தகமிது. மொத்தம் 13 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகத்தை முழுவதும் ஒருமுறை படித்து விட்டு, சில நாட்கள் கழித்து சில கதைகளை மட்டும் இன்னொரு முறை படித்தேன். 4 சிறுகதைகளின் தலைப்புகளுக்கு இன்னும் எனக்கு அர்த்தமே தெரியாது. புத்தகத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளையும், வரிகளையும், உட்பொருளையும் புரிந்து கொண்டேனா என்றால், அதுவும் இல்லை. இருந்தும் இப்புத்தகம் பற்றி நான் எழுதுவதன் நோக்கம், இவை வழக்கமான கதைகள் இல்லை. குறைந்தபட்சம் எனக்கு இவை மிகவும் புதியவை.

ஆசிரியர் ஹரிகிருஷ்ணன். மணல்வீடு ஹரிகிருஷ்ணன் என்றால் பலருக்குத் தெரியும். ‘மணல் வீடு’ என்ற சிற்றிதழ் ஆசிரியர். ஓர் எழுத்தாளன் என்பதைவிட கூத்துக் கலைஞன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுபவர். தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றின் ஆதார படிவம் மாறாது ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்குக் கையளிக்கும் பொருட்டு, களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கி முனைப்புடன் செயல்பட்டு வருபவர். கூத்துக் கலைக்காக தொடர்ந்து களப்பணியாற்றுபவர். முதன்முதலில் இத்தளத்தில் என்னைத் தெரிந்த ஓர் எழுத்தாளரின் புத்தகத்தை எழுதுவதில் எனக்கும் மகிழ்ச்சி. ‘விதைத்தவசம்’ என்ற இவரது ஆவணப்படத்தை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

குன்னூத்தி நாயம். வாய்மொழி வழக்கில் சொல்லப்படும் 13 சிறுகதைகளின் தொகுப்பு. சேலம் மாவட்டத்தில் ஏர்வாடி வட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர். அனைத்துக் கதைகளும் அப்பகுதி வட்டார மொழிவழக்கில் அமைகின்றன. வாய்மொழி வழக்கில் சொல்லப்படுவதால், அவ்வட்டாரப் பழமொழிகளும் கெட்ட வார்த்தைகளும் நிறைய உண்டு. ‘குன்னூத்தி நாயம்’ என்ற முதல் கதையின் தலைப்பைப் பார்த்தவுடன், வட்டார வழக்குச் சொற்களின் பொருள் சொல்லும் அகர முதலி இருக்கும் தாள்களைத் தேடினேன். இல்லை. புத்தகம் முழுவதும் எந்த வட்டாரச் சொல்லுக்கும் தனியாக பொருள் சொல்லப்படவில்லை! வாசிக்கும்போது வாசகன் சிரமப்பட்டாலும், அதிலொன்றும் தவறில்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கே பொருள் சொல்லும் கொடுமையை ஆசிரியர் தவிர்த்திருப்பது நன்று. ஒரு நல்ல வாசகன் கண்டிப்பாகத் தேடிப் பொருள் அறியத்தான் போகிறான்.

புத்தகத்தில் இருந்து சில சொற்கள்: தகோலு (தகவல்), திலுப்பி (திரும்பி), ரோனு (loan), வாத்துரும்பு (bath room), ரைட்டு (light), ரட்சிமி (லட்சுமி), ராரி (lorry), டைக்கி (strike), தகலாறு (தகராறு), ரீவு (leave), ஈச்பரி (ஈஸ்வரி), உருவா (ரூபாய்), திலுப்பூர் (திருப்பூர்), ரைனு (line), நத்தம் (ரத்தம்), வதுலு (பதில்), ரக்கிப்பிரேசு (lucky prize), ரவுக்குனு (லவக்குனு = சிக்கீரமா / திடீரென்று), ரேசா (லேசா), மரிகேதி (மரியாதை), பித்தி (புத்தி), பிலி (புலி), (பிரிசன்) புருசன், சாக்கிரிதி (ஜாக்கரதை), கண்ணாலங் கார்த்தி (கல்யாணங் காட்சி). இப்படிப்பட்ட சொற்கள் ஆரம்பத்தில் பயங்காட்டினாலும், வாக்கியங்களைப் பிரித்து நிறுத்திப் படிப்பதில் கொஞ்சம் திணறினாலும், புதிர்களை விடுவித்துக் கொண்டே படிப்பது போல ஆர்வங்கொண்டு படித்து முடித்தேவிட்டேன். மிக இயல்பாக சரளமாக அமையும் மொழிநடையும், எல்லாக் கதைகளிலும் இழையோடும் நகைச்சுவை உணர்வும், எவ்வளவு பெரிய விசயத்தையும் அசால்ட்டாக சொல்லிவிடும் நேர்த்தியும் இக்கதைகளின் மாபெரும் பலம்.

இப்புத்தகத்தில் வரும் சில சொல்லாடல்கள் உங்களின் வாசிப்பிற்கும்:
– நரிமின்ன நண்டுக் கரணமடிச்சாப்ல.
– இடுப்பொடிஞ்சகோழிக்கி ஒரளுக்குழியே கைலாசம்.
– நீ கொடலியே உருவி கைலக் காட்டு. அதயும் வெறும் வாழநாருன்னுப்புடுவான் தாயாலி.
– நண்டு கொழுத்தா வங்குல இருக்குமா?
– பேண்டு தாந்தின்னதப் பெருமயா வெளியச் சொல்ல முடியுமா?
– மலமழுங்கி மாரியப்பனுக்கு ஒரளுக்கல்லு எங்கித்தி மூல?
– கத்திரிக்கா தெரண்டுப்போச்சின்னா பெறவு சந்தைக்கு வந்துத்தானே ஆவுணும்?
– பால பாக்காட்டிப் போவுது சட்டிய பார்ராச் சீத்த சாமி.
– ஒக்காறச்சொன்னா படுத்துக்கறவன் இந்த தில்லுமாரி.
– ஏப்பா உரியேறன சாத்ரீகப் பூன தயிரிருக்க சட்டிய எத்தன நேரம் நக்கும்?
– உன்ன தோசயத் திங்கச் சொன்னாங்களா? இல்ல தொளய எண்ணச் சொன்னாங்களா?

இவரின் ‘ரவுசு’ என்ற கதையை முதன்முதலில் இணையத்தில் படித்துவிட்டு, சிரிப்பை அடக்க முடியாமல், ஆசிரியரை அலைபேசியில் அழைத்துச் சொன்னேன்: ‘எழுத்துக்கூட்டிப் படிச்ச எனக்கே சிரிச்சி சிரிச்சி பொரையேறிரிச்சு. நீங்களே இக்கதைய வாசிச்சுக் காட்டினா அவ்வளவுதான்’. இப்புத்தகத்தில் அதுதான் கடைசிக் கதை. இன்று படித்தால் கூட சிரிப்புத்தான். ‘ஒருநா ஒருப்பொழுது’ என்ற சிறுகதை இப்படி முடிகிறது:
…ராவு ஆசுபத்திரிக்கி வந்தம். கண்டதும் என்னய கட்டிப்புடிச்சிக்கிட்டு எங்கூட்டுக்காரி, சீத்துப்பூத்துன்னு அழுதா – வவுறு எறங்கிப்போச்சாம், பாவம்! ம்.. நானு கோவணம் அவுத்த நேரஞ் செரியில்ல.

மொழிநடைக்கும், சூழலை விவரிக்கும் விதத்திற்கும் இரு உதாரணங்கள்:
…உள்ளூட்ல பூந்து பொட்டியத் தெறந்து, சாக்கிட்டு ஒண்ண எடுத்தா. போட்டுக்கிட்டுருந்தத அவுத்து தூக்குமேல போட்டுட்டு, மாராப்ப வாயிலக் கடிச்சிக்கிட்டு சோத்தாங்கையச் சாக்கிட்டுக்குள்ளவுட்டா. பாக்காத பண்டமாட்டம் பச்சமுத்து பொண்டாட்டிய பொடக்கு பொடக்குன்னு பாத்திக்கிட்டிருந்தான். சனியம்புடிச்ச முந்தி நழுவி ரவுக்குனு கீழ வுழுவ, ஐயய்யோன்னுப் பதச்சி அவ குமிஞ்சி முந்திய அள்ள, கட்லடிய ச்சர ச்சர‌ங்க, என்னமோ ஏதோன்னு இவ உத்தப்பாக்க, அவுத்த செத்த ஆட்டுக் கண்ணாட்டம் ரெண்டு முட்டக் கண்ணு பிதுக்கா பிதுக்கான்னு முழிச்சிட்டிருந்திச்சி.

மிந்தி ஓராடம் மாமனாருக்கு வருசாந்தரங்கும்பட நானும் அவளும் எங்க குட்டிப்பிள்ளயும் மேட்டூருக்குப் போனம். பதனாறு கமானத்தாண்டி சேலம் கேம்ப்பு திலுப்பத்தல கிட்டு பஸ்சு டைவரு போட்டாம்பாரு பிரேக்கு! ரெண்டாளுச் சீட்டியிலக் குந்தியிருந்தவ பிள்ளயோடப் போயி படிக்கட்டுல வுழுந்தா. கண்ண மூடி கண்ண தொறக்கறதுக்குள்ள ரெண்டு உசுருங் காணாமப் போயிருக்கும். நானோடி பிள்ளயத்தூக்கனதும் வுட்டன் இவளுக்கொரு அப்பட்ட! பொம்பளைக்கி அத்தன அசால்ட்டு மயிரு! படிமானங் குடுத்து ஒக்காரத் தெரியாதா? உசுருப் போனாலும் போயிட்டுப்போவுது, ஒரு நாள்ல அழுது தொலச்சிப்புடலாம். காலி கையி ஒடஞ்சி கட்லோடக் கொடந்தா பீயி மூத்தரம் அள்ளி.. அந்தச் சீரெழுவ ஆரு கண்ல பாக்கறது?

காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் கருவறையில் சல்லாபம் செய்த சாமியார் கதை உங்களுக்கு நினைவிருக்கலாம். அக்குறுந்தகடு தமிழ்நாட்டில் தட்டுப்பாடாகி புதுச்சேரி போய் அதிக விலைக்கு வாங்குமளவிற்குப் பிரபலமான கதை. அதை ஒரு கதையின் ஒரு பத்தியில் இப்படி சொல்கிறார் ஆசிரியர்:
அதலெங்கியோவொரு பழையகாலத்து அம்மங்கோயிலு! அவத்தவொரு அய்யன். மின்னால மிங்குடுமி, முதுவுலப் பூணூலு! நெத்தியில விபுக்கூதிப்பட்ட! கழுத்துல உத்தராச்சக் கொட்ட! கற்பூரத்தட்டுங் கையுமா இருந்த அய்யன் கோயிலூட்ல ஒரு பொம்மணாட்டிய செஞ்செவிக்க சாமிச்செலயச் சாத்தி நிக்கவெச்சிட்டு ஓரெட்டு ஓடி வெளிய எட்டிப்பாக்கறது! ஓரெட்டு ஓடியாந்து அவளக் கட்டிப் புடிக்கறது! மணியச்செத்தநேரம் ஆட்டறது மறுக்க ஓடி அவ மாரப் புடிச்சிப் பெசையறதுன்னு அம்மாளுக்கு அருபூச, குரு பூச, ஆயிரத்தெட்டு லிங்கப்பூசயாவுது!

கூத்துக் கலைஞர்கள் பற்றியும், சற்றே உற்றுக் கவனித்தால் புரியும் அளவிற்குச் சாதியக் கொடுமைகள் பற்றியும் பெரும்பாலான கதைகள் சொல்கின்றன. ‘குடிநாசுவன்’ என்ற கதையில் சொல்லப்படுவது போன்றவொரு சம்பவம், சமீபத்தில் வெளிவந்த ‘நம்ம‌ கிராமம்’ திரைப்படத்தில் இடம்பெற்று இருந்தது. அக்காட்சியில் எனக்கு முன்னிருக்கையில் இருந்த ஒரு பிராமணப் பெண் ‘ohhh shhhit’ என்று தலைகுனிந்தவள், நிமிர வெகுநேரமாயிற்று. இத்தொகுப்பின் சிறந்த கதையாக ‘நாயி வாயிச்சீல’ என்ற கதையைச் சொல்வேன். திருநங்கைகள் பற்றி எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன்; நான் கூட ஒருகதை எழுதி இருக்கிறேன். ‘அம்மான்னு சொல்லாதடி மாதான்னுச் சொல்லுடின்னா’ என்ற உரையாடலும், ‘கைப்போட்டு’ போன்ற குழூஉக்குறி வார்த்தையும் நான் முதன்முதலில் இக்கதையில்தான் படித்ததாக ஞாபகம். திருநங்கைகளின் உடல் மற்றும் உள்ளத்து வலிகளைப் பதிவு செய்யும் அற்புதமான கதையிது.

நான் ரசித்த கதாப்பாத்திரம்: எல்லாக் கதைகளிலும் கதைசொல்லி தான்.

நான் ரசித்த சிறுகதைகள்:
1. நாயி வாயிச்சீல
2. குடிநாசுவன்
3. ஆதமத்த நாடு – திக்கத்தச்சனம்: மில்லுக்கு வேலைக்குப் போகும் ஒரு வயசுப் பெண்ணின் கதை
4. ஒருநா ஒருப்பொழுது
5. ஊருவாயி
6. வாயிக்கி வணங்காத பூவும் பல்லுக்கு மெதுவான கல்லும்
7. உத்திமியோலம்: கருகும்னு கெடக்கும் ஊருக்குள் பலதையும் போட்டு ஒளப்பிக்கிட்டு மெதுவா கட்டய உருட்டும் கதை
8. ரவுசு
9. மாடுமிதிச்சண்ட

இப்புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். ஆசிரியரைத் தொடர்ந்து படியுங்கள்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements