140. கிறித்தவமும் சாதியும்

(மகாகவிக்குச் சமர்ப்பணம்)

மரித்தவனைச்
சிலுவையில் அறைகின்றன‌
கல்லறைகளின் சாதிச் சுவர்கள்.
– ஞானசேகர் (இக்கவிதைக்கு நானிட்ட தலைப்பு – புறவினத்தார்)

சீனாவில் இருந்து ஒரு புத்தத் துறவி இமயமலை தாண்டி இந்தப்பக்கம் வருகிறார். புதிதாக அரியணை ஏறிய ஒரு சிற்றரசனின் நண்பனாகிறார். மக்கள் படும் கொடுமைகளைக் காணச் சகிக்காமல், அம்மக்களோடு எப்பிணைப்பும் இல்லாத அப்புத்தத் துறவி, நண்பனைக் கொன்றுவிட்டு அரசனாகிறார். அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே, என்று நம்மூரில் மற்ற சாமி கும்பிடுகிறவர்களை ஒருவித பயநிலையிலேயே வைத்திருக்கிறார்கள் இல்லையா? எல்லார்க்கும் சமகல்வி அளிக்க வேண்டிய‌ கடமை தவறும் நம்மூர் அரசுகள், ஏற்கனவே நன்றாகப் படிப்பவர்களைச் சமஸ்கிருதம் ஹிந்தி சேர்த்துப் படிக்கச் சொல்கிறார்கள் இல்லையா? ஆனால் அந்தத் துறவிதான் நம்மூர் இல்லையே; அவர் என்ன செய்தார் தெரியுமா? குடிமக்கள் எவ்வழியோ அரசனும் அவ்வழியே, என்று அப்புத்தத் துறவி தன் மதம் துறந்து, பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் இந்து மதம் மாறத் துணிகிறார்! ஆனால் அவரை எந்த சாதியிலும் வைக்க முடியாது என்பதால் மதக்குரு மறுத்துவிடுகிறார். அந்நிலப்பரப்பின் வரலாறு அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. அதன்பிறகு அத்துறவி என்ன செய்தார்? மீதிக்கதை அடுத்த அல்லது அதற்கடுத்த‌ பதிவில். அதன்பிறகு 7 நூற்றாண்டுகளுக்குப் பின் இந்தியாவை ஆண்ட இந்திரா காந்தி வேற்று மதத்தவரை மணந்ததால், கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத சமகாலக் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

இந்துவாகவோ யூதராகவோ ஒருவர் பிறக்க வேண்டும். வாழ்நாளில் அம்மதங்களுக்கு மாற முடியாது. ‘இப்பிறவி போய் நீங்க எரியினிடை மூழ்கி வா’ என்று சிவபெருமானே நந்தனாருக்குச் சொல்லி இருக்கிறார்! கர்ணன் இன்னொரு சான்று. கட்டைவிரலைப் பயன்படுத்தாமல் இன்றும் அம்பெய்து கொண்டிருக்கும் ஏகலைவனின் வாரிசுகளான பழங்குடியின மக்கள், நிகழ்காலச் சான்றுகள். ‘தேர்தெடுக்கப்பட்ட இனம்’ என்று வேறு யாரையும் அனுமதிக்காத யூதமதத்தில்தான் இயேசுவும் பிறந்தார். மனிதர்கள் எல்லாரும் பாவிகள் என்றார். எல்லா மனிதர்களையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவே தாம் பிறந்திருப்பதாகவும், அதை உலகெங்கும் போய் எல்லா இனத்தவருக்கும் சொல்லச் சொன்னார். எதிர்மறையாக இருந்தாலும் ஒருவித சமத்துவ உத்திரவாதத்தைப் போதித்தது கிறித்தவம். (இப்பதிவில் நானே குறிப்பிட்டு சொல்லாத வரை, கிறித்தவம் என்றால் கத்தோலிக்கக் கிறித்தவம் என்று புரிந்து கொள்ளுங்கள்) நந்தனாரின் வாரிசுகளைச் சட்டம் போட்டு கோவிலுக்குள் அனுமதித்தது காலம். அவர்களால் இன்றுவரை கருவறைக்குள் வர முடியவில்லை. இன்றுவரை நந்தனாரின் மொழி நீசபாசை! மண்ணின் மைந்தர்களை அம்மண்ணில் தோன்றிய மதம் கோவிலுக்குள் அனுமதிக்காத நிலையில், எங்கிருந்தோ வந்த கிறித்தவம் அவர்களைக் கோவிலுக்குள் கூட்டிப் போய் கருவறை (பீடம்) பார்க்கச் சொல்லி, அவர்களைக் பார்த்து பேசியது. இத்தேசத்தில் புரையோடிக் கிடந்த சாதியழுக்கில் இருந்து தம்மைக் கழுவிக் கொள்ள அனேகர் மதம் மாறினர். பிறப்பில் வருணபேதம் பார்த்த மதத்தில் இருந்து, பிறப்பில் ஜென்மப்பாவம் பார்த்த மதத்திற்குப் போயினர். கிறித்தவத்தைச் சாதி விட்டு வைத்ததா? இஸ்ரேலில் இயேசு போதித்த சமத்துவம் இந்தியாவின் சாதிக்கு முன் சாதிக்க‌ முடிந்ததா?

——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: கிறித்தவமும் சாதியும்
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
முதல் ஈடு: டிசம்பர் 2001
பக்கங்கள்: 256
விலை: ரூபாய் 190
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
——————————————————————————————————————————————————————————————–
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து தெற்கே கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7ல், 60கிமீ பயணம் செய்தால் காவற்கிணறு விலக்கு என்ற நிறுத்தம் வரும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நிறுத்தத்தில் இருந்து கிழக்கே 5கிமீ தொலைவில் வடக்கன்குளம் கிராமம் இருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் தென்மேற்கு மூலையில் நாங்குநேரி தாலுக்காவில் இருக்கிறது. இக்கிராமத்தை ஆய்வுக்களமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். 20 பின்னிணைப்புகள் மட்டும் 126 பக்கங்கள்! இச்சமூகத்தில் சாதியின் தாக்கம் பற்றி சோழர் காலக் கல்வெட்டுகளில் இருந்து சென்ற நூற்றாண்டு வரை சில சான்றுகள் முன்னுரையில் சொல்கிறார் ஆசிரியர். அவற்றில் இரண்டைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்:

1) 1816ல் அச்சிடப்பட்ட ‘நத்தனார் சரித்திரக் கீர்த்தனை’ என்ற நூலில் ‘சுவாமி தரிசனம் நமக்குண்டோ புலை சாதியன்றோ வந்த நீதியறியாமல்’ என்று தாழ்த்தப்பட்ட நந்தனாரின் சிவபக்தி எள்ளிநகையாடப் படுகிறது. நடராசரைத் தரிசிக்கச் சிதம்பரம் சென்ற நந்தன் ‘இன்னல் தரும் இழி பிறவி இது தடை’ என்றஞ்சி ஊரினுள் செல்லாமல் ஊரின் எல்லையிலேயே தங்கி இருக்கிறார். பின் சிவனின் சொற்படி ஜோதியில் மூழ்கிய கதை கூட, ஒருவித கொலையை மூடி மறைக்கும் முயற்சியே என்கிறார் ஆசிரியர்.

2) ‘சாதியை மறந்து நீர் பக்தி செய்தல் தகுமோ’, ‘ஈனப் புலையருக்கோ பரமுத்தி’, ‘புலையனுக்கோ சிவநேசம் யாரும் புகன்றிடுவார் பரிகாசம்’ போன்ற வரிகளை 1915ல் அச்சிடப்பட்ட‌ ‘பெற்றான் சாம்பனார் சரித்திரக் கீர்த்தனம்’ நூலில் இருந்து மோற்கோள் காட்டுகிறார் ஆசிரியர்.

வெள்ளாளர் முதலியார் கம்மாளர் பரதவர் மறவர் நாடார் நாவிதர் கணியான் எனப் பலரும் வாழ்ந்துவந்த கிராமம் வடக்கன்குளம். 1855ல் ஒரு கிறித்தவக் கோவில் கட்ட ஆரம்பிக்கிறார்கள். அக்கோவிலின் உட்பகுதி V வடிவில் அமைந்திருந்தது. இருமுனைகளும் சந்திக்கும் இடத்தில் பீடம். வெள்ளாளர் போன்ற உயர்சாதியினர் பிரவேசிக்க ஒருமுனை. நாடார் போன்ற மற்ற சாதியினருக்கு மறுமுனை. ஒருபுறத்தில் இருப்பவர்கள் இன்னொரு புறத்தில் இருப்பவர் கண்ணில் படாமல் இருக்க‌ இடையே இரு பிரிவினைத் தடுப்புச் சுவர்கள். அச்சுவர்களுக்கு இடையேதான் பாதிரியார் பீடத்திற்குப் போக வேண்டும். பார்ப்பதற்குச் சிறுவர்களின் காற்சட்டை போல் இருப்பதால், காற்சட்டை ஆலயம் / Trousers Church / டவுசர் சர்ச் என்பதே பெயராகிப் போனது. சிவன் கோவில் பூவைப் பறித்து முகர்ந்ததற்காக மனைவியின் மூக்கை வெட்டிய அரசர்கள் ஆண்ட இப்பூமியில், சாதி அடக்குமுறையில் பெண்ணை அடக்காமலா? டவுசரின் பாக்கெட்டுகள் இருக்கும் இடத்தில் அச்சாதி பெண்களுக்கென தனிப்பாதைகள். வருடத்தில் ஏதோ 3 சந்தர்ப்பங்களில் மட்டும் கோவிலில் பாட்டுப் பாட மட்டும் மற்ற‌ சாதிக்காரர்களுக்கு உரிமை தரப்பட்டு இருக்கிறது. மற்றபடி மொத்த சாமியும் சம்பிரதாயங்களும் உயர்சாதியினருக்கு. இச்சிறப்புச் சலுகைகளை ஆயரே வழங்கி இருக்கிறார்! 1909ல் செபம் செய்ய வந்த‌ பாதிரியார்களையே அவர்கள் சாதிப்படி பிரிவினைச் சுவரின் படி பிரித்தனுப்ப, அவர்கள் செபம் செய்யாமலேயே திரும்பிப் போகின்றனர்.

trousers-church

1910ல் புனித வெள்ளியன்று மற்ற சாதிக்காரர் ஒருவர் பக்தியில் பாட்டுப் பாடிவிட பெரும் பிரச்சனையாகிப் போகிறது. ஆண்டாண்டுகாலமாக சாதியக் கொடுமைகளுக்காக மனுக்கள் மட்டுமே எழுதி வந்த அவர்கள் போராடக் காத்திருக்கின்றன‌ர். அந்நேரத்தில் அங்கு புதிய பாதிரியாராக வருகிறார் கௌசானல். சாதிக் கொடுமைகளைச் சகிக்காமல் எல்லாச் சாதிக்காரர்களையும் அவர் பாட ஊக்குவிக்கிறார். திருப்பலியில் பாடல்களைத் தாறுமாறாகப் பாடி உயர்சாதியினர் குழப்பம் விளைவிக்க, ஒரு ச‌மயத்தில் கௌசானல் உயிருக்கே ஆபத்துவர, காவல்துறையில் புகார் செய்யும்படி மற்ற சாதிக்காரர்களுக்குச் சொல்கிறார். உயர்சாதியினர் முந்திக்கொண்டு புகார் பதிவு செய்கிறார்கள். பேசித் தீர்க்க சில நடுநிலையாளர்கள் முன்வருகிறார்கள். உயர்சாதியினர் ஒத்துழைக்கவில்லை. தனது அனுமதி இல்லாமல் உயர்சாதியினர் டவுசர் சர்ச் நுழைய தடை விதிக்கிறார் கௌசானல். திருச்சிக்குப் போய் ஆயரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, உயர்சாதியினருக்கு வழக்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்ய உத்தரவு வாங்கிவிடுகிறார். இத்தீண்டாமையைக் கௌசானல் இப்படி சொல்கிறார்: “யூதர்களின் மாமூல்களை மாற்றியமைத்தமைக்காக யூதர்கள் கிறிஸ்துநாதரைச் சிலுவையில் அறைந்தனர். அவர் திரும்பவும் இங்கு வந்து வெள்ளாளர்களின் மாமூல்களை மாற்றியமைக்க நேர்ந்தால் இரண்டாவது தடவையாக அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று கூக்குரலிடத் தவற மாட்டார்கள்”.

1872ல் கட்டப்பட்ட ஆலயத்தின் பிரிவினைச் சுவரை 1910ல் இடித்தும் விடுகிறார் கௌசானல்! உயர்சாதியினர் திருநெல்வேலி துணை நீதிமன்றத்திற்குப் போய், மற்ற சாதியினருக்கு வழங்கப்பட்ட உரிமைகளுக்கு இடைக்காலத் தடை வாங்குகிறார்கள். கௌசானலின் சேசு சபைக் குருக்கள் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்திற்குப் போய் வெல்கிறார்கள். அவர்கள் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய, இறுதியில் கௌசானலுக்கே வெற்றி. 1924ல் தான் பெரியார் வைக்கம் போராட்டம் நடத்திக் காட்டினார். 1939ல் தான் மெட்ராஸ் மாகாணத்தில் தாழ்த்தப்பட்டவர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க சட்டம் வந்தது. 1910லேயே தீண்டாமையை எதிர்த்து கோவில் நுழைவை நிகழ்த்திக் காட்டிய சேசு சபைக் குருக்களும், வடக்கன்குளத்து மக்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

கிறித்தவம் – சாதி சந்திப்புகளை வரலாற்று ரீதியாக விளக்குகின்றன எஞ்சியுள்ள கட்டுரைகள். ஆரம்ப காலத்தில் கிறித்தவ மதத்தைப் பரப்பவந்த குருக்கள் சாதிய அடுக்குகளில் குழம்பிப்போய் இருக்கிறார்கள். 16ம் நூற்றாண்டில் ‘தமிழச்சுத் தந்தை’ எனப் போற்றப்படும் அண்ட்ரிக் அடிகளார் யூதக் கலப்பினத்தவர் என பிரான்சிஸ்கன் துறவற சபையில் இருந்து நீக்கப்பட்டார். ஐரோப்பாவிற்கு வெளியே, குறிப்பாக இத்தாலிக்கு வெளியே போப் தேர்ந்தெடுக்கப்படுவது அபூர்வம். அப்படி ஐரோப்பாவில் அவர்கள் கடைபிடிக்கும் நிறவர்க்க‌ப்பேதம் போலத்தான் இச்சாதிப்பேதமும் என காலப்போக்கில் சாதிகளுக்கு ஏற்றாற்போல் தகவமைத்துக் கொள்கிறார்கள். அந்தந்த சாதிக்காரத் துறவிகள் போலவே உடை அணிந்து வாழ்ந்து மதம் பரப்பி இருக்கின்றனர். வீரமா முனிவர் என்ற பெயரையும், அவர் தரித்திரிந்த உடையையும் இவ்விடத்தில் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கத்தோலிக்கர்களாக மாறிய பிராமணர்களுக்கென திருச்சியில் செயிண்ட் மேரிஸ் தோப்பு, சென்னையில் புஷ்பக நகர் போன்ற தனிக்குடியிருப்புகளைத் துறவிகளே அமைத்துத் தந்திருக்கின்றனர்.  இப்படி மதம் மாறியமைக்காக சாதிவிலக்கு செய்யப்பட்ட பிராமணர்களின் பொருளாதார நலனுக்காக பல்வேறு சுயவேலை வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டன.

கிறித்தவ மதத்திற்கு மாறும்போது சாதி மற்றும் பழக்கவழக்கங்களைத் துறக்க வேண்டியதில்லை, என்று ஒரு பாதிரியார் 1609ல் எழுதி கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். இயேசுவைத் ‘தச்சன் மகன்’ என்று சொல்வதிலும், ஊதாரி மைந்தன் கதையில் வரும் ‘கொழுத்த கன்று’ என்ற வார்த்தையும் இங்குள்ள பிராமணர்களை மதம் மாற்றுவதில் சிக்கல் தருமென்று 1815ல் ஒரு பாதிரியாரால் எழுதப்பட்ட கடிதத்தையும் சொல்கிறார். பின்னாளில் கிறித்தவ மதம் உடைந்தபோது, வடக்கன்குளம் போல சலுகைகளை இழந்த உயர்சாதியினர் புராட்டஸ்டண்ட்டாக மாறினர்; பழைய சாதி மரபுகளைப் பின்பற்றினால், மற்ற சாதியினரும் மாறினர். எந்த நிலையிலும் தனது மந்தையில் இருந்து தனது ஆடுகளை இழக்கும் நிலைக்குக் கத்தோலிக்கக் கிறித்தவம் ஆளாகப்பட்டமையைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். கும்பகோணத்தில் உள்ள இறையியல் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்படாதை எதிர்த்து ஊர்வலங்கள் நடந்ததையும், பெண் துறவியர்களைச் சாதிப்படி தேந்தெடுக்கும் சில சபைகளையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

1745லேயே புதுச்சேரியில் கத்தோலிக்கத் தேவாலயத்தில் சாதிப்படி தனித்தனியே அமர‌ பிரிவினைச் சுவர் இருந்ததையும், அதை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் புரட்சி செய்தமையையும் சுட்டிக் காட்டுகிறார். “முன் பிராமணர் வேளாளர் மறவர் முதலிய பல சாதிகளாயிருந்தவர் கிறித்து மதத்தினால் இந்து பிராமணர்கிறித்தவ பிராமணர், இந்து வேளாளர்கிறித்தவ வேளாளர் என்றாக சாதிகளின் தொகை முன்னிருந்தததற்கு இப்போது இரட்டிப்பாகி இருக்கிறது” என்ற கருத்து 1908லேயே இருந்ததைச் சொல்கிறார். இப்படி மன்னார் தீவு, கேரளா, மதுரை எனப் பல பகுதிகளில் சாதி அடிப்படையில் தனித்தனி கோவில்கள் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். இன்றளவும் புனித அருளானந்தர் மன்றாட்டு மாலையில் இடம்பெறும் ‘புகழ்பெற்ற தடியத் தேவரையும், இன்னும் பல உயர்குலத்தினரையும் திருச்சபையில் சேர்த்தவரான புனித அருளானந்தரே‘ என்ற வரிகளும், ‘சமயமாற்றம் நிச்சயமாக இனமாற்றமாகவோ அல்லது சமுதாயத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்களைக் கைவிடுதலோ அல்ல; இதற்குச் சாதியும் விதிவிலக்கல்ல‘ என்று யாழ்ப்பாணத் தமிழறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் சொன்னதையும் மேற்கோள் காட்டியமை அருமை. கிறித்தவத்திற்கு மாறியும் சாதிக் கொடுமைகளுக்குத் தப்ப முடியவில்லை; சாதி அடிப்படையில் சலுகைகளும் மறுக்கப்பட்டன. இப்படி மதம் மாறியவர்களின் பரிதாப நிலையைக் ‘கொதிக்கும் எண்ணெயில் இருந்து எரியும் கொள்ளிக்குள் விழுந்தது போல்‘ என ஒப்பிடுகிறார் அருந்ததி ராய், The God of Small Things புத்தகத்தில்.

bk155535_kristhuvam-sathiyum

திருச்சி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் நானே பார்த்திருக்கிறேன்:

  1. கல்லறைத் தோட்டங்களில் சாதி உண்டு. மேற்குலக் கத்தோலிக்கக் கல்லறைப் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பே இருக்கிறது.
  2. பங்குக்குரு நியமனத்திலும், இடமாற்றம் செய்வதிலும், ஆயரைத் தேர்ந்தெடுப்பதிலும் சாதி உண்டு. ஒரு தாழ்த்தப்பட்ட பாதிரியார் திருப்பலி நிறைவேற்றிய போது உயர்சாதியினர் முதுகைக் காட்டி அமர்ந்த கதை உண்டு.
  3. சாதிகளுக்கென்று தனித்தனி ஆலயங்கள் இன்றும் உள்ளன. பேரூர்கள் தவிர்த்து அப்படி இல்லாத ஊர்கள் ஏதேனும் இருப்பின் நீங்கள் சொல்லவும்.
  4. சில ஊர்களில் திருவிவிலிய நிகழ்வுகளை நாடகமாக நடித்துக் காட்டுவார்கள். யார் எவ்வேடம் ஏற்க வேண்டும் என்பதில் சாதி உண்டு.
  5. டிசம்பர் 25 கிறிஸ்மஸ். உயர்சாதிக்காரர்கள் எல்லாம் கிறிஸ்மஸ் கொண்டாடி முடித்தபின், 26ம் தேதி இயேசு பிறப்பைக் கொண்டாடும் கிராமங்கள் பற்றி நானே சிறுகதை எல்லாம் எழுதி இருக்கிறேன்! தை-மாடு-காணும் பொங்கல்க‌ள் எல்லாரும் கொண்டாடி முடித்தபின் தை 4ம் தேதி பொங்கல் வைக்கும் கிறித்தவர்கள் இன்றும் உண்டு. தை முதல் தேதி ‘தமிழர் திருநாள்’!!!
  6. திருச்சி மாவட்டத்தில் வீரமா முனிவரால் கட்டப்பட்ட இரண்டு பழம்பெரும் தேவாலயங்கள் உண்டு. ஒன்றில் ஆண்டாண்டு காலமாக நடந்துவந்த திருவிழா சாதிப் பிரச்சனையில் நின்றே போய்விட்டது. இன்னொன்றில் ஒருவர் சாதி மாறி திருமணம் செய்ததால் கோவிலில் உரிமைகள் மறுக்கப்பட நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.

கோவில் கட்ட முடியாமல், கட்டினாலும் திருவிழா கொண்டாட முடியாமல், திருவிழாவில் தேரோட்ட முடியாமல், தேரிலும் தங்கள் சிலையை வைக்க முடியாமல், தேரும் ஊரைச் சுற்றிவர முடியாமல், ஊரைச் சுற்றியும் வெடிவெடிக்க முடியாமல், திருவிழாவின் அன்னதான சாப்பாட்டைப் பிற சாதிக்காரர்கள் யாரும் சாப்பிடாமல், பிதா-சுதன்-பரிசுத்த ஆவியின் பெயரால் அந்தக் கர்த்தரை இன்றும் கும்பிடும் தாழ்த்தப்ப‌ட்டவர்கள் தான் கிறித்தவத்தில் அதிகம். சாணக்கியர் கூற்றுப்படி அவர்களை அரசுகளும் அப்படியேதான் வைத்திருக்க விரும்புகின்றன. மதத்தைவிட சாதி வலியதென்று பெரியார் அன்றே சொன்னார். சாதிகளால் கட்டப்பட்ட இத்தேசத்தில் கிறித்தவம் விதிவிலக்கல்ல! ஏதாவதொரு வகையில் சகமனிதனை அடிமைப்படுத்தியே வைத்திருக்கும் மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டச் சொல்லும் கிறித்தவம் என்ன செய்யும்?

இறைவா, இவர்கள் செய்வது இன்னதென்று தெரிந்தே செய்வதால் வழக்கம்போல் மன்னித்து விடாதேயும். ஆமென்.

அனுபந்தம்:
——————–
1. கிறிஸ்மஸ் வருவதற்குள் முதல்வரை அழைத்து பிரம்மாண்ட மேடையில் கேக் வெட்டிக் கொண்டாடும் மதக்குருக்களை மட்டும்தான் பெரும்பாலும் கிறித்தவ மக்கள் பற்றி ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கும் சலுகைகள் வேண்டி அடிக்கடி போராட்டம் நடத்தும் செய்திகள் பெரும்பாலும் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. சிறுபான்மையினர் தேவைகளை எப்போதுமே நிறைவேற்றிவிடாமல், எப்போதும் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென சாணக்கியரே ஆட்சியாளர்களுக்குச் சொல்லி இருக்கிறார். வருடாவருடம் கிறிஸ்மஸ் / ஈஸ்டர் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால், இக்கோரிக்கைகளை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து முதல்வர் கடிதம் எழுதுவது போல் புகைப்படத்துடன் செய்தி வருமே, கவனித்ததில்லையா?

2. I like your Christ. I do not like your Christians. Your Christians are so unlike your Christ. என்று மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி சொன்னதன் காரணம், சாதித் தீண்டாமையாகவும் இருக்கலாம்.

3. இந்தியர்கள் அனைவரும் ஒருகால‌த்தில் இந்துக்களாய் இருந்தவர்களே – இப்படி அடிக்கடி கருத்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி, வரலாற்றைத் திருத்தி எழுதி பிரபலமாக நினைப்பவர்களைக் காலங்காலமாக இந்நிலப்பரப்பு கண்டுகொண்டுதான் இருக்கிறது. இன்ன மதம் என்று சொல்ல இயலாதவர்களை எல்லாம் இத்தேசம் இந்து என்று கணக்கெடுத்துக் கொண்டதாக குஷ்வந்த் சிங் அழகாகச் சொல்வார். இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இண்டஸ் நதிபாயும் நிலப்பரப்பை இந்தியா என்று பெயரிட்டு, எட்டி நின்று பார்த்துவிட்டு எழுதி வைத்துப் போனார்கள், கிரேக்க வரலாற்று அறிஞர்கள். வரலாறு இப்படி இருக்க, இரண்டு எழுத்துக்களில் மதச்சாயம் பூசி வேறுமாதிரி சொல்ப‌வ‌ர்க‌ள் பிற்காலத்தில் சொல்ல‌க்கூடும் – கன்னடர்கள் அனைவரும் ஒருகாலத்தில் க‌னடாவில் இருந்தவர்கள் என்று!

தொடர்புடைய பிற பதிவுகள்:

  1. சாமிகளின் பிறப்பும் இறப்பும்
  2. கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)