141. முடிசூடா ராணிகள்

பஞ்ச பாண்டவர்கள் பகையை வென்று
கொடி நட்டதும் பெண்ணாலே
கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை
தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே
பாண்டிமன்னன் அரண்மனை மண்ணோடு
மண்ணாகி போனதும் பெண்ணாலே
– திருமதி ஒரு வெகுமதி திரைப்படப் பாடல் (வைரமுத்து என நினைக்கிறேன்)

உலகெல்லாம் இராணுவ முகாமிட்டுக் கொண்டு அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அவர் மனைவி மிச்செலும் ஓர் உணவகத்திற்குச் சென்றார்களாம். அங்குள்ள வேலையாட்கள் அதிபரை விட, அவர் மனைவியை அதிக அக்கறையுடன் கவனித்துக் கொள்வதை அதிபர் கவனித்துவிட்டார். அது பற்றி மனைவியிடம் சொல்ல,
மிச்செல்: இவ்வுணவகத்தின் முதலாளி ஒரு காலத்தில் என்னைக் காதலித்தவர். என்னைச் சிறப்பாகக் கவனிக்கச் சொல்லி அவர் ஊழியர்களுக்குச் சொல்லி இருக்கலாம்.
பராக்: பேசாமல் நீ அவரையே திருமணம் செய்திருக்கலாம். ஒரு உணவகத்தின் எசமானியாகவாவது ஆகியிருப்பாய்.
மிச்செல்: இல்லை, அவர் அமெரிக்க அதிபராகி இருப்பார்.
இப்படி ஒரு கதையை ஆசிரியர் தினத்தன்று வசந்த் தொலைக்காட்சியில் பட்டிமன்றம் ஒன்றில் கேட்டேன். ஆட்சியாளர்களைப் பற்றிய நல்லெண்ணக் கதைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் இதுபோல பல உண்டாக்கப்படுவது உண்டு. ‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்’ என இக்கதையும் சொல்ல நினைக்கிறது. ‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னால் ஒரு தாய் இருக்கிறாள்; ஒவ்வொரு தோல்வியடைந்த ஆணுக்குப் பின்னால் ஒரு மனைவி அல்லது காதலி இருக்கிறாள்’ என்று விரித்துச் சொல்லி கிண்டல் செய்பவர்களும் உண்டு. பெண் என்பவளை ஆணுக்குப் பின் அண்டியே நிற்பவளாகத்தான் பெரும்பான்மைச் சமூகங்கள் நிர்ணயித்து வைத்திருக்கின்றன. விபச்சாரம் விதிவிலக்கு. விபச்சாரத்தில் மட்டும்தான் பெண்ணை முன்நிறுத்தி ஆண் தப்பித்துக் கொள்கிறான். வீடாளும் பெண்களை நாடாள வரலாறும் அவ்வளவாக அனுமதித்ததில்லை. Well-behaved women seldom make history என்றொரு சொல்வழக்கு உண்டு. அப்ப‌டியானால் வரலாறு என்பதே நன்னடத்தை இல்லாதது என்று பொருள் கொள்ளலாமா?
——————————————————————————————————————————————
புத்தகம்: முடிசூடா ராணிகள்
ஆசிரியர்: இ.எஸ்.லலிதாமதி
வெளியீடு: ஆர்.எஸ்.பி.பப்ளிகேஷன்ஸ், ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை
முதல் ஈடு: 2014
பக்கங்கள்: 96
விலை: ரூபாய் 60
வாங்கிய இடம்: சுதேசி புத்தக நிலையம், வாலாஜா – காயிதே மில்லத் சாலைகள் சந்திப்பு, சென்னை
——————————————————————————————————————————————
ஒரே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மனிதரான ஆபிரகாம்‌, தன் உயிரை மன்னனிடம் இருந்து காத்துக் கொள்ள, கட்டிய மனைவியைச் சகோதரி என்று சொல்லிக் கொண்டு எகிப்து தேசம் நுழைந்ததாக‌த் திருவிவிலியம் சொல்கிறது. தசரதன் என்ற மன்ன‌னுக்கு அறுபதனாயிரம் மனைவிகள் இருந்தனராம். ஒரு பேச்சுக்காக ஒரு நாளைக்கு ஒருத்தி என்று வைத்து வகுத்தாலும், 164 வருடங்களைத் தாண்டிப் போகிறது தசரதன் கணக்கு! மன்னர்களின் இறந்த உடலுடன் உயிருடன் எரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அந்தப்புர மகளிரின் ஓலங்கள், வரலாற்றுப் பக்கங்களில் வெறும் எண்ணிக்கைகளாக‌ மட்டுமே எழுதப்பட்டிருக்கின்றன‌. எதிரிகளால் கவரப்படுவதையும் வாரிசுரிமைப் போட்டிகளையும் தடுக்க, மன்னர்களின் மகள்களின் பிறப்பு மறைக்கப்பட்டமையும், மகன்கள் போல வேடமிட்டு வளர்க்கப்பட்டமையும் வரலாற்றின் பக்கங்களில் பரவலாகக் காணலாம். மதுரை ஒரு பெண்ணால் ஆளப்பட்டதாக ஒரு வெளிநாட்டுப் பயணி பதிவு செய்திருப்பதையும், நம்மூர் வரலாற்று ஆய்வாளர்கள் மறுத்திருப்பதையும் சொன்ன புத்தகம் ஒன்றைப் பற்றி இதே தளத்தில் படித்திருப்பீர்கள். ‘இதுதான்டா போலீஸ்’ அமெரிக்காவில் கூட‌ இன்றுவரை ஒரு பெண்ணும் அதிபர் ஆனதில்லை என்பதே எதார்த்தம்.

தாயைப் போலவே தாரம் வேண்டுமென குளக்கரையில் தவமிருக்கும் ஒரு சாமியைக் கடலில் கரைக்கும் ஊர்வலங்களுக்காக‌ சென்னையில் அப்படி இப்படி எப்படியோ போக்குவரத்து திருப்பி விடப்பட, காயிதே மில்லத் சாலையுடன் வாலாஜா சாலை சந்திக்கும் இடத்தில் இருக்கும் சுதேசி புத்தக‌ நிலையம் வந்து சேர்ந்தேன். சின்னச் சின்னதாய் நிறைய நல்ல புத்தகங்கள் இருந்தன. மூன்று வாங்கினேன். அவற்றில் ஒன்று இது. மன்னராட்சியில் அரியணை ஏறிய, கிட்டத்தட்ட அரியணை நெருங்கிய பெண்களின் கதை சொல்கிறது இப்புத்தகம். புத்தகத்தின் பெயர் ‘முடிசூடா ராணிகள்’ என்றாலும், முடிசூடிய ராணிகள் பற்றியும் சொல்கிறது; மேலும் இளவரசிகள், அரசக் குடும்பத்து மருமகள்கள் பற்றியும் சொல்கிறது. கருப்பழகி கிளியோபாட்ரா முதல் இளவரசி டயானா வரை மொத்தம் 26 பெண்களின் கதைகள் இப்புத்தகத்தில் உள்ளன.

சிலரைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியவைகளையும் சொல்கிறேன்.
1. ரசியா பேகம்: டெல்லியை ஆண்ட ஒரே பெண் என்று வரலாற்றில் படித்தது நினைவிருக்கலாம்.
2. அங்கவை சங்கவை: தமிழ் வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்பவர்களை வைத்தே இப்பெயர்களைக் கிண்டல் செய்து, குட்டீஸ்கள் வரை கொண்டு சேர்த்த பெருமை தமிழ் சினிமாவிற்கு உண்டு! பாரியின் மகள்களுக்குத் திருமணம் முடித்துவிட்டு, தென்பெண்ணை ஆற்றின் அருகில் இருந்த ஒரு குன்றில் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தாராம் கபிலர். ‘செயற்கைக் கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்‘ புத்தகம் வாங்கிப் படித்தீர்களா?
3. குந்தவை தேவி: எனது சிறுகதை ஒன்றிற்காக அக்காக்கள் உளவியல் பற்றி நண்பர்கள் சிலருடன் விவாதித்த போதுதான் இராசராசச் சோழனின் அக்காவைப் பற்றி கேள்விப்பட்டேன். ‘பொன்னியின் செல்வன்’ நான் படித்ததில்லை.
4. மங்கையர்க்கரசி: மதுரை 1000 கால் மண்டபத்தில், சைவ மதத்திற்கு மாறாத சமணர்கள் கழுவிலேற்றிக் கொள்ளப்பட்ட சித்திரங்கள் இருக்கும். திருஞானசம்பந்தர் மூலம் சமணத்தில் இருந்த சீர் நெடுமாறன் என்ற கூன் பாண்டியனைச் சைவத்திற்கு மாற்றிய மனைவி இவர். இப்படுகொலைகளுக்குச் சாட்சியாக இருக்கும் சாமநத்தம் கிராமம் பற்றி ஏற்கனவே ஒரு புத்தகத்தில் இதே தளத்தில் எழுதி இருக்கிறேன்.
5. ராணி மங்கம்மாள்: திருச்சி மற்றும் மதுரை நகர்களில் இப்பெயரை அடிக்கடி காணலாம். மதுரையில் தமுக்கம் மைதானத்தில் இருக்கும் காந்தி அருங்காட்சியகம், இவரின் கோடைகால அரண்மனையாய் இருந்திருக்கிறது. இவரையும் தமிழ் சினிமா விட்டுவைக்கவில்லை.
மதுரக்கார மச்சானுக்கு ஜாஸ்திதான் மஸ்து ஜாஸ்திதான்
ராணி மங்கம்மா மனசு வச்சா நாஸ்தி தான் மஸ்து நாஸ்தி தான்
ஏ மஸ்து மஸ்து மஸ்து இவ மசங்கிடாத மஸ்து
கொத்து கொத்து கொத்து நீ கத்திரிக்கா கொத்து
6. ஜான்சி ராணி லட்சுமி பாய்: ஜான்சியை ஆண்ட ராணி லட்சுமி பாய் பிறந்த ஊர் வாரணாசி. இயற்பெயர் மணி கார்ணிகா. வாரணாசியில் கங்கையில் பிணங்களைத் தள்ளிவிடும் இடத்தின் பெயரும் மணி கார்ணிகா. முதுகில் மகவைச் சுமந்து கொண்டே போரிட்ட இவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முதுகில் அவர் சுமந்த மகவு, அவர் வயிற்றில் சுமந்ததில்லை. அவரின் ஒரே பிள்ளையும் இறந்து போக, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டையும் மீறி தத்தெடுத்த மகவு!
7. கிளியோபாட்ரா: தன் இளமுலையில் விசப் பாம்பைக் கடிக்கச் செய்து இறந்துபோன எகிப்து நாட்டுப் பைங்கிளி கிளியோபாட்ராவிற்கு அறிமுகம் தேவையில்லை. அவர் 60000 பவுண்ட் மதிப்புள்ள முத்தைப் பானமாகக் குடித்ததாகச் சொன்ன புத்தகம் ஒன்றைப் பற்றி இதே தளத்தில் படித்திருப்பீர்கள்.

புனே நகரில் ஜாங்கிலி மகாராஜ் சாலையில் பலமுறை நடந்துபோய் இருக்கிறேன். அச்சாலையில் இருக்கும் லட்சுமி பாய் சிலையை நின்று நிதானமாகப் பார்த்துவிட்டு நகர்வேன். என்னோடு வந்த நண்பர்கள் கவனித்திருக்க வாய்ப்புண்டு. குதிரை முன்னங்காலைத் தூக்கி இருந்தால், போர்க்களத்தில் மடிந்ததாக அர்த்தமாம்.
Zanshi_Rani_Statue_in_Pune
விக்டோரியா எலிசபெத் போன்ற இங்கிலாந்து ராணிகள் கூட ஆண்வாரிசு இல்லாமையால் அரியணை ஏறியதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். பெண்களுக்கும் வாரிசுரிமை உண்டு என எலிசபெத் சட்டத்தைத் திருத்தியதாக இப்புத்தகத்தில் தான் படித்தேன். ஆண் வாரிசு இல்லாத சமஸ்தானங்கள் யாரையும் தத்தெடுக்க தடை விதித்த பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த லாப்ஸ் கொள்கை பற்றி இப்புத்தகம்தான் எனக்கு நினைவூட்டியது. தமிழக வரலாற்றில் போர்க்களத்தில் வீரமரணமடைந்த ஒரே ராணியையும், ஆணுடை தரித்து தர்பாருக்கு வந்த ராணியையும் இப்புத்தகத்தில் படிக்கலாம். ஆங்காங்கே தென்படும் எழுத்து மற்றும் வாக்கியப் பிழைகள் மட்டும் சிறுகுறை.

புத்தகம் சிறியதென்றாலும், அது சொல்லும் வரலாறுகள் கனமானவை. பதிப்பகத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. இதுபோன்ற நல்ல புத்தகங்களை வாங்கிப் படித்து ஊக்குவிப்போம்.

அனுபந்தம்:
—————-
இப்புத்தகத்தில் இல்லாத ஒரு ராணியின் கதை சொல்கிறேன். முந்தைய பதிவில் ஒரு புத்தத் துறவி கதை சொன்னேன், நினைவிருக்கிறதா? சீனாவில் இருந்து ஒரு புத்தத் துறவி இமயமலை தாண்டி இந்தப்பக்கம் வருகிறார். தன் கனவில் கண்ட தேசம் காண ஆப்கானில் இருந்து ஓர் இஸ்லாமியரும் அதே நேரத்தில் அங்கு வருகிறார். இருவரும் புதிதாக அரியணை ஏறிய ஓர் இந்து சிற்றரசனின் நட்பாகின்றனர். புத்தத் துறவி இளவரசியை மணந்து கொள்கிறார். மக்கள் படும் கொடுமைகளைக் காணச் சகிக்காமல், அம்மக்களோடு எப்பிணைப்பும் இல்லாத அப்புத்தத் துறவி, அரசனைக் கொன்றுவிட்டு அரசனாகிறார். அந்த ஆப்கான் பயணிக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவி. தனது தகப்பனைக் கொன்று ஆட்சியைப் பிடித்தவர்கள் மீது எச்சினமும் காட்டாமல் அரசனின் மனைவியான இளவரசி, அரசியாகிறாள். திடீரென அரசன் இறந்துபோக, அரசியின் சித்தப்பா ஆட்சியைப் பிடிக்க கலகம் செய்கிறார். சித்தப்பனை அரசனாக்கிவிட்டு அரசியாகவே நீடிக்கிறாள் அவள்.

ஒரு பேரரசன் படையெடுத்து வர சித்தப்பனான அரசன் பயந்தோடுகிறான். போர் தவிர்த்து அரசராகிக் கொள்ள பேரரசனுக்குச் ச‌மாதானத் தூது அனுப்புகிறாள். வீதியில் உலா வந்த பேரரசன் தலையைப் பொது மக்கள் கண்முன்னேயே துண்டித்து, அவன் படையை விரட்டுகிறாள். திரும்பவும் சித்தப்பனைப் பேருக்கு அரசனாக அமர்த்திவிட்டு அரசியாகவே நீடிக்கிறாள். ஒரு சிவராத்திரி நாளில் சித்தப்பனான அரசனும் இறந்து போக, அதுவரை அரசியின் பின்புலமாக இருந்த அந்த‌ ஆப்கான் ப‌ய‌ணிக்கும் அவ‌ளுக்கும் இடையே அதிகார‌ வேட்கை முற்றுகிற‌து. ஆம், நீங்க‌ள் யூகிப்ப‌து ச‌ரிதான். இருவ‌ரும் ம‌ண‌ந்து கொள்கிறார்க‌ள். அவ‌ன் அர‌ச‌னாகிறான். அவ‌ள் அர‌சியாக‌வே நீடிக்கிறாள். திரும‌ண‌மாகி 24 நேர‌த்திற்குப் பின் அவ‌ளை ம‌றுப‌டியும் யாருமே பார்க்க‌வே இல்லை! அர‌ச‌னிட‌ம் அர‌சியைப் ப‌ற்றி கேள்வி கேட்க‌ முடியாம‌ல் கால‌ம் அம்ம‌ர்ம‌த்தை மூடிவிட்ட‌து. என்ன நடந்திருக்கலாம் என வ‌ர‌லாற்று ஆசிரிய‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒரும‌ன‌தாக‌ ஒரு முடிவுக்கு வ‌ந்து வ‌ர‌லாற்றிலும் அதையே ப‌திவு செய்தார்க‌ள். மிகச் சிறந்த ஒரு மர்மப் புதினத்தை விட, மிகச் சிறந்த ஒரு மர்மத் திரைப்படத்தை விட நடைமுறை வாழ்க்கையின் புதிர்கள் மிக எளிமையானவை. அவளுக்கு நடந்தது என்ன? அடுத்த பதிவில்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements