142. கஷ்மீர் (Kashmir)

(இத்தளத்தில் இது எனது நூறாவது புத்தகம்ங்கள். காணாமலடிக்கப்பட்டவர்களுக்குச் சமர்ப்பணம்)

இன்று செப்டம்பர் 11. தனது செயல்களை நியாயப்படுத்த அமெரிக்கா சுட்டிக்காட்டும் நாள். இலங்கைக்கு ஈழம். கர்நாடகாவிற்குக் காவிரி. கமல்ஹாசன் சொன்னதையும் சேர்த்தால், பாம்புக்கு விடம்; மாட்டுக்குக் கொம்பு; மனிதருக்குப் பொய். இந்தியாவுக்கு இந்தி கிரிக்கெட் பசுமாடு மற்றும் பாகிஸ்தான்.

இதுவரை இந்தியா 5 போர்களைச் சந்தித்திருக்கிறது. அதில் 4 பாகிஸ்தானுடன். அதில் 3 கஷ்மீருக்காக! உலகின் மிகப் பெரிய படைமயமாக்கப்பட்ட பகுதி கஷ்மீர்! மதவாதிகள் காந்தியைக் குற்றம் சாட்டாத ஒரே பிரச்சனை இந்தக் கஷ்மீர் பிரச்சனை தான்! 5 பகுதிகளை உள்ளடக்கிய Pakistan என்ற தனிநாடு கோரிக்கையில் K என்பது கஷ்மீரைக் குறிக்கும். 1994ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திப்படி, இந்தியா 500 கோடியும் பாகிஸ்தான் 30 கோடியும் தினமும் கஷ்மீரில் தங்கள் படைகளுக்காக செலவு செய்கின்றன; படை வீரர்களில் இந்தியாவில் 5 பேரும், பாகிஸ்தானில் 3 பேரும் தினமும் இறக்கிறார்கள்; ஒவ்வொரு 5 கஷ்மீரிக்கும் ஒரு படைவீரர் என்ற வீதம், இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. இன்று வெறும் இராணுவப் பிரச்சனையாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டாலும், ஈரானிய புரட்சிக்குப் பின் மதத்தை முன்னிலைப்படுத்தி அடையாளம் தேடிய‌ பக்கத்து ஆப்கானிஸ்தான் தாக்கம், எல்லைப் பாதுகாப்பு, கௌரவம் என கொஞ்சம் வெளிப்படையாக தெரியும் காரணங்கள் சிலவும் உண்டு. அமெரிக்காவின் காலின் பவல் சொன்னது போல் அணுவாயுதமும் ஒரு காரணம்.

புத்தகங்கள் தேடினேன். ஒரு சில புத்தகங்கள் படித்த பிறகுதான் தெரிந்தது, எல்லாம் ஒரு சார்பானவை. உண்மை மறைப்பவை. என்னருகில் யாரும் இருந்திராவிடில், ஒரு கஷ்மீர் தமிழ்ப் புத்தகத்தை இரயிலில் இருந்து வெளியில் எறிந்திருப்பேன். ‘கம்யூனிச ஆட்சி நடந்தாலும், சீனாவின் மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்குத் தெரியும். கஷ்மீரில் அப்படி இல்லை. அதைச் சுற்றி ஒரு மாய புகை மண்டலம். அதைத் தாண்டி, செய்திகள் பெரும்பாலும் வருவதில்லை’ என்று ஒருமுறை அருந்ததி ராய் சொன்னார். 5000 ஆண்டுகள் பழமையான மத்திய கிழக்கு பிரச்சனைக்கு நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்த என்னால், 100 ஆண்டுகளுக்கும் குறைவான கஷ்மீர் பிரச்சனைக்கு நடுநிலையான புத்தகங்கள் கண்டுபிடிக்க எளிதில் முடியவில்லை.

சென்ற வருடம் உத்திர பிரதேசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக கைத்தட்டிய காரணத்திற்காக கல்லூரியில் இருந்து சில மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். கஷ்மீர் வெள்ளத்திற்கு நிதியுதவி கேட்ட உஜ்ஜயினி பல்கலைக்கழகத் துணை வேந்தர் தாக்கப்பட்டார். இராணுவ, உளவுத்துறை அதிகாரிகள் சிலர் ஓய்வு பெற்றபின் கஷ்மீர் பற்றி சொன்ன‌ உண்மைத் தகவல்கள் சிலவற்றிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். கஷ்மீர் பற்றி சில வரலாற்று உண்மைகளை அருந்ததி ராய் சொல்லப் போய், அவரின் அந்தரங்க உறுப்புகள் வரை நவநாகரீக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டார். தெலங்கானா போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, கஷ்மீருடன் ஹைதராபாத்தை ஒப்பிட்டு பேசியதற்காக இன்றைய முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கடும் எதிர்ப்புக்குப் பின் மன்னிப்பு கேட்டார்.

ஸ்ரீ நகரை அமைத்த அசோகர் முதல் இன்றைய முதல்வர் மப்தி முகமது சயீத் வரை, பட் ஷா முதல் ஜக்மோகன் மல்ஹோத்ரா வரை, ரின்சின் முதல் யாசின் மாலிக் வரை, அக்பர் முதல் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி வரை,  ஜிஸ்யா வரி முதல் அமர்நாத் பனிலிங்கம் வரை, ஹரி சிங், ஷேக் அப்துல்லா, ஹஜ்ரத்பால், ஹுரியத் எல்லாம் இங்கு எழுதிவிட ஆசைதான். நம்பிக்கைகள் தீர்ப்புகள் எழுதும் வறண்ட காலம் நமது. பல‌ர் ஏற்கனவே குழப்பிக் கொண்டிருக்கும் ஒரு குளத்தில் நானும் ஒரு கல்லெறிய விரும்பவில்லை. அதனால் நான் கண்ட சில நல்ல புத்தகங்களை இங்கு அறிமுகப்படுத்துகிறேன். உங்கள் மனிதநேயமிக்க‌ பாதைகளைத் தைரியமாக அவற்றின் மீது அமைக்கலாம்.

சவரக்கத்தி நுனியில் துளி இரத்தம் போதும் ஒரு கஷ்மீரியைப் பயமுறுத்த.
– பஞ்சாப் பேச்சு வழக்கு

If there is a paradise on earth,It is this, it is this, it is this.
– Poet Amir Khusrow

கஷ்மீர், மற்றதெல்லாம் ஒன்றுமேயில்லை.
– தன் மரணப்படுக்கையில் கடைசி ஆசையாக முகலாயப் பேரரசன் ஜஹாங்கீர் சொன்னது

என் மார் முட்டி
தலை பாதி
வெட்டிப்போனது ஒன்று;
மக்களைக் கூட்டி
சமரசம் செய்ய
மன்றம் போனால்
உச்சந்தலையில்
விதைக்கிறான் குண்டுகள்!
– ஞானசேகர் (‘110 கோடி முகமுடையாள்‘ கவிதையிலிருந்து)

வெடவெடவென்று குளிரும்போது கதகதப்பாக இருப்பதற்கு
இங்கே வாழும் மனிதர் யாவரும் வயிற்றில்
கட்டி வைத்திருப்பார் ஒரு கனப்பு.
வாடைக்குப் பயந்தாரோ? இல்லை வாழ்வுக்குப் பயந்தாரோ?
மடியினில் நெருப்பைக் கட்டிக் கொள்வார் என்னும்
பழமொழி இவர்தான் படைத்தாரோ?
– இதயவீணை திரைப்படப் பாடல்

Here it is. We have Kashmir. The bastard (கஷ்மீரின் கடைசி மன்னர் ஸ்ரீமான் இந்தர‌ மொஹிந்தர‌ இராஜராஜேஷ்வர மஹாராஜாதிராஜ ஸ்ரீ ஹரி சிங்) signed the Act of Accession.
– V.P. Menon (Constitutional Advisor to the British Viceroy)

One of the reasons that I was fighting America is because of its support for India on the Kashmir issue.
– Osama bin Laden
——————————————————————————————————————————————
புத்தகம்: Kashmir: Behind the Vale
ஆசிரியர்: M.J.Akbar (http://www.mjakbar.org/)
வெளியீடு: Roli Books
முதல் ஈடு: 2002
பக்கங்கள்: 232
விலை: ரூபாய் 295
வாங்கிய இடம்: Higginbothams, அண்ணா சாலை, சென்னை
——————————————————————————————————————————————
ஆசிரியர் இன்றைக்குப் பாஜகவில் இருக்கிறார். புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் காங்கிரஸ். அத்தாவல்களைக் கருத்தில் கொள்ளாமல், கஷ்மீர் பற்றி முதன்முதலில் ஒரு புத்தகம் படிக்க விரும்பினால் இப்புத்தகம் சரியான தேர்வுதான். அசோகர் கனிஷ்கர் சீனர்கள் மொகலாயர்கள் ஆப்கானியர்கள் சீக்கியர்கள் பிரிட்டிஷ் டோக்ராக்கள் இந்தியா பாகிஸ்தான் என கஷ்மீர் கை மாறி மாறி வந்த கதைகளைத் தெளிவாகச் சொல்கிறது இப்புத்தகம். பவுத்தம் இந்து இஸ்லாம் மதங்கள் காலங்காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த‌ இப்பூமியில், மதவாதம் தலையெடுத்த காலங்களையும் சொல்கிறது. கஷ்மீரின் வரலாறு சொல்லும் இராஜதரங்கினி நூலில் இருந்தும், இந்திய அரசு ஆவணங்களில் இருந்தும் பல மேற்கோள்கள் உண்டு. வரலாற்றின் பல தருணங்களில் ஆட்சியாளர்கள் கஷ்மீரை விட்டுவிட்டு ஒடிப்போன கதைகள். மது ஊற்றிக் கொடுத்து ஆட்சியைக் கவிழ்த்த கதைகள்.

நம் காலத்தில் மிகப்பெரிய தடையாகப் பேசப்படும்  அரசியலமைப்பு பிரிவு 370 உருவானபோது, அதை யாருமே எதிர்க்காததை இப்புத்தகம் பதிவு செய்கிறது. அக்காலத்தில் இந்திய ஒற்றுமையின் வெற்றியாகக் கருதப்பட்ட அப்பிரிவைக் காலப்போக்கில் மதச்சாயம் பூசி அச்சுறுத்தலாகச் சித்தரிக்கப்படுவதையும் சொல்கிறது. கஷ்மீரி என்ற இனத்தின் மன‌நிலையுடன் அதன் அடிப்படை வரலாறு படிக்க இது சரியான புத்தகம். புத்தர் முதல் விபி சிங் ஆட்சியில் இன்றைய முதல்வரின் மகள் ரூபையா சயீத் கடத்தப்பட்டது வரை பேசுகிறது இப்புத்தகம். வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் அதன்பிறகுதான் வெகுவேகமாக பரவ ஆரம்பித்தன‌.

Kashmir may be conquered by the force of spiritual merit but never by the force of soldiers.
– Kalhana (Rajatarangini)

Their fields, their crops, their streams
Even the peasants in the vale
They sold, they sold all, alas!
How cheap was the sale!
– Poet Muhammad Iqbal

If 15 years after freedom, the people of Kashmir could rise against the government like this, then there was something radically wrong with their Kashmir policy.
– Jawaharlal Nehru
——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: காஷ்மீர் – என்ன நடக்குது அங்கே?
ஆசிரியர்: அ.மார்க்ஸ்
வெளியீடு: புலம்
முதல் ஈடு: சூன் 2009
பக்கங்கள்: 217
விலை: ரூபாய் 130
——————————————————————————————————————————————————————————————–
உண்மையறியும் குழு ஒன்றின் சார்பாக கஷ்மீர் சென்றுவந்த ஆசிரியரின் நேரடி அனுபவங்கள் மற்றும் கஷ்மீரின் நிகழ்கால நிலை பற்றிய பல கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். பயங்கரவாதம், ஜிஹாதி என்று நமக்கெல்லாம் ஊடகங்கள் சொல்லும் விடயங்களின் உண்மை நிலையைத் தெளிவாகச் சொல்லும் புத்தகம். தீவிரவாதச் செயல்களின் ஆரம்பகாலக் காரணங்களை விரிவாக விளக்குகிறது. அமர்நாத் பனிலிங்கம், கஷ்மீரப் பண்டிதர்கள், ஆயுதப் படைகளுக்கு வரம்பற்ற அதிகாரம் (AFSPA) போன்ற பல விடயங்களை மிகத் தைரியமாக பதிவு செய்கிறது இப்புத்தகம். முழுக்க முழுக்க கஷ்மீர் மக்களின் குரலாக ஒலிக்கும் இப்புத்தகம் தமிழில் கண்டிப்பாக படிக்கப்பட வேண்டும்.

அப்சல் குருவைத் துக்கிலிட்டது எங்கள் அரசின் தவறு. அவரின் உடற்பாகங்கள் அவரது குடும்பத்தாருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
–  மாநிலங்களவை தேர்தலில் இடம் கிடைக்க வேண்டி குலாம் நபி ஆசாத் சொன்னது——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: காஷ்மீர் – சீற்றம் பொதிந்த பார்வை
ஆசிரியர்: அருந்ததி ராய்
தமிழில்: மணி வேலுப்பிள்ளை
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
முதல் ஈடு: சூலை 2013
பக்கங்கள்: 119
விலை: ரூபாய் 100
——————————————————————————————————————————————————————————————–
அருந்ததி ராயின் Listening to Grasshopper நூலில் இடம்பெற்ற கஷ்மீர் தொடர்பான கட்டுரைகளும், அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட போது அருந்ததி ராய் எழுதிய இரண்டு கட்டுரைகளும் சேர்த்து இப்புத்தகம். கஷ்மீரில் வேறெதையும் விட உண்மையே மிகவும் ஆபத்தானது! ‘அப்சல் தூக்கிலிடப்பட்டால் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கியது யாரென்ற உண்மையான கேள்விக்கான விடையை நாம் என்றுமே அறியப் போவதில்லை’ என்னும் ஆசிரியரைப் படித்துப் பாருங்கள்.

இம்மூன்று புத்தகங்கள் தவிர, சென்னை அண்ணா நூலகத்தில் கஷ்மீர் பிரச்சனை பற்றி இருந்த கிட்டதட்ட 15 புத்தகங்களை நுனிப்புல் மேய்ந்திருக்கிறேன். அவற்றில் முக்கியமானவை:

புத்தகம்: Hindu Rulers, Muslim Subjects: Islam, Rights, and the History of Kashmir
ஆசிரியர்: Mridu Rai

புத்தகம்: In Search of a Future: The Story of Kashmir
ஆசிரியர்: David Devadas

புத்தகம்: Constitutional Autonomy
ஆசிரியர்: K. K. Wadhwa

காலிஸ்தான் பிரச்சனையில் பக்கத்து பஞ்சாப் பற்றி எரிந்த போதும் காஷ்மீர் அமைதியாகப் போராடி இருக்கிறது. இலங்கையின் முதல் தோட்டா தமிழக மீனவர்களைத் துளைத்து வெள்ளோட்டம் பார்த்தது 1983ல். கஷ்மீரின் முதல் குண்டுச்சத்தம் 31.7.1988ல் தான். தமிழ்நாட்டின் வாச்சாந்தி வன்கொடுமைகள் போல் 1991 குமன் பொஷ்போரா வன்கொடுமைகள். பிரிட்டிஷ் காலத்தில் ஜாலியன் வாலாபாக் போல் 1993ல் லால் சௌக் துப்பாக்கிச் சூடு. அமிர்தசரஸ் பொற்கோவில் தாக்குதல் போல் 1993ல் பிஜ்பெஹரா படுகொலைகள். போலி என்கௌன்டர்கள் கஷ்மீரில் மிகச் சாதாரணம்.

வரலாறு எத்தனையோ பிரிவினைகளையும் இணைப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உடைந்த ஜெர்மனி மீண்டும் இணைந்தது. சேர்ந்திருந்த சோவியத் சிதறிப் போனது. மக்கள் வாக்கெடுப்பில் சூடானில் இருந்து தென் சூடான் பிரிந்தது; இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இருந்து கொண்டது. ஜுனாகத் எந்த நாட்டுடன் சேர வேண்டுமென வாக்கெடுப்பு நடந்தது. கோவா எந்த மாநிலத்துடன் சேர வேண்டுமென வாக்கெடுப்பு நடந்தது. மக்களைக் கேட்காமல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. சிக்கிமை இந்தியாவுடன் இணைத்தார் ஒரு பிரதமர். மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதைத் தவறென்று வருத்தம் தெரிவித்தார் அடுத்த பிரதமர். சுதந்திர இந்தியாவுடன் சேர விரும்பாமல் பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தக உடன்பாடுகள் செய்யப்போன திருவிதாங்கூர் திவான் பெயரில் சென்னையில் ஒரு சாலை இருக்கிறது. எவ்வளவு கத்தியும் ஈழக்குரல் கடல் தாண்டவில்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்த வியட்நாம் போர், பேச்சு வார்த்தையில் தான் முடிவுக்கு வந்தது.

விதியே! விதியே! என் செய் நினைத்திட்டாய் கஷ்மீரி சாதியை?

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)