143. Bitter Fruit – The Story of the American Coup in Guatemala

Bitterfruit
stephen_schlesinger
World Policy Instituteன் முன்னாள் தலைவர் Stephen Schlesinger. குவாத்தாமாலவின் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவின் பங்கு குறித்த CIA ஆவணங்களை வெளியிட வைத்தவர். 1977ல் முதன் முறையாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிக் கொணர முயன்றார். அது தோல்வியில் முடிந்த‌ பிறகு வழக்கு தொடுத்தார். அதுவும் தோல்வியில் முடிந்த‌ பிறகு தன் பிராச்சாரத்தின் மூலம் அழுத்தத்தை ஏற்படுத்தி ஆவணங்களை வெளியிட வைத்தார்.
kinzer
இலத்தின் அமெரிக்கா நாடுகள் குறித்து 13 வருடங்களாக பல்வேறு பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார் Stephen Kinzer. பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான Maria Moors Cabot விருது 1988ல் இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு யூகோஸ்லாவியா யுத்தம், ரஷ்யாவிலிருந்து பிரிந்து உருவான தேசங்கள் குறித்தும் எழுதிவந்திருக்கிறார்.

தொலைக்காட்சி விவாதங்களில் அன்னிய முதலீடு, அணுவுலைகள், மீத்தேன் திட்டம் என‌ தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய எந்தவொரு திட்டம் குறித்தும் சிறு சந்தேகத்தை எழுப்பினாலும் ஒட்டுமொத்த அறிவியலுக்கும் எதிரானவர் என்ற முத்திரை குத்துவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. முகநூலில் அணுவுலை விபத்தைப் பேருந்து விபத்தோடு ஒப்பிடுவதும், லாக்டிக் அமிலத்திற்குப் பரிட்சயம் இல்லாத மனிதவுடல் பால் செரிப்பதற்குப் பழகிக் கொண்டதைச் சுட்டிக் காட்டி அணுக் கதிரியக்க மரபுப் பிறழ்வை ஒப்பிடுவதும், இப்படி இந்தப் பிரச்சனைகள் குறித்து நடக்கும் விவாதங்கள் உண்மையிலேயே நாம் படித்தவர்கள் தானா என்றொரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன‌. மனித உடல் பால் செரிப்பதற்குப் பழகிக் கொண்டது இணைபரிணாம வளர்ச்சி(Coevolution) ஆய்வில் வெளிவந்தது என்பதையாவது அந்த ஒப்பீட்டை முன்வைத்தவர் அறிந்திருந்தாரா என்று தெரியவில்லை. எல்லோரும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய பிரச்சனைகளிலாவது ஒரு தேடலோடு கூடிய நியாயமான ஒரு விவாதத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

அன்னிய முதலீட்டிற்காக இந்தியாவின் அனைத்துக் கதவுகளும் திறந்துவிடப்படுகின்றன. விவசாயிகள் ஒருபுறம் பெருமளவில் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள். எப்படி பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டுமென்றே நஷ்டத்திற்குத் தள்ளப்பட்டு பெரும் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்படுமோ, அதே திசையை நோக்கி விவசாயமும் தள்ளப்படுகிறது. அப்படி நேர்ந்தால் என்னவாகும் என்பதற்குத் தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள குவாத்தமாலா நாடு ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்கா இதுவரை தான் கால்பதித்த இடங்களில் எல்லாம் பெரும் அழிவைத் தனியார் நிறுவனங்களுக்காக ஏற்படுத்தியிருக்கிறது. எண்ணெய் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்காக மத்திய கிழக்காசிய நாடுகளைத் தரைமட்டமாக்கியிருக்கிறது. வாழைப்பழத்திற்காக மத்திய அமெரிக்க நாடுகளை அழிவிற்குத் தள்ளியிருக்கிறது. அப்படி தள்ளப்பட்ட Guatemalaவைப் பற்றிய புத்தகம் தான் “Bitter Fruit – The story of the American coup in Guatemala”.

United Fruit Company என்ற தனியார் நிறுவனத்திற்காக அமெரிக்க உளவு நிறுவனமான CIAவும் அமெரிக்க அரசும் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில் கிட்டதட்ட 2 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் பலர் எங்கு புதைக்கப்பட்டார்கள் என்று தேடும் பணி இன்றும் தொடர்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் குவாத்தமாலாவில் ஆசிரியர்களும் மாணவர்களும் சர்வாதிகாரியான உபிகோவிற்கு எதிராக போராடுகிறார்கள். அர்பென்ஷ் அரானா என்ற இரண்டு இராணுவ தளபதிகள் இந்த போராட்டத்தின் போது தங்கள் உயர் அதிகாரிகளைத் தாக்கி ஆயுதங்களை மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். பின்பு மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் இராணுவத்தினரும் சேர்ந்து காவல்நிலையம் மற்றும் இராணுவத் தளங்களைக் கைப்பற்றுகிறார்கள். இதன்மூலம் உபிகோவின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வருகிறது. அர்பென்சும் அரானாவும் டாரில்லோ என்ற தொழிலதிபருடன் சேர்ந்து ஓர் இடைக்கால அரசை அமைக்கிறார்கள். பின்பு முதன்முறையாக குவாத்தமாலாவில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

அர்வெலோ எனும் பேராசிரியர் நாடுகடத்தப்பட்ட நிலையில் 14 ஆண்டுகளாக அர்கெந்தீனாவில் (Argentina) பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய ஆசிரியர்கள் அர்வெலோவை அதிபர் வேட்பாளராக அறிவிக்கிறார்கள். அவர்களின் அறிவிப்பை ஏற்கும் அர்வெலோ குவாத்தமாலா வருவதற்குக்கூட பணமில்லாமல் தவிக்கிறார். இதை அறிந்து புரட்சியாளர்கள் பணம் திரட்டி பயணத்திற்கான ஏற்பாட்டைச் செய்கிறார்கள். 1945ஆம் ஆண்டு 85% வாக்குகள் பெற்று அர்வெலோ ஜனாதிபதியாகிறார். அர்பென்சும் அரானாவும் அர்வெலோவின் ஆட்சியில் பங்கெடுக்கிறார்கள். புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்படுகிறது. தனிமனித உரிமை சார்ந்து பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன‌.

தேர்தலில் நிற்பவர்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் அளிக்கப்படவேண்டும். இனத்துவேசமும் அடிமைமுறையும் குற்றமாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பான பணி சூழ்நிலை, குறைந்தபட்ச ஊதியம், மகப்பேறு உதவித்தொகை, விபத்துக்கான இழப்பீடு, அடிப்படை கல்வி மற்றும் மருத்துவம் போன்றவை மக்களின் அடிப்படை உரிமைகளாக‌ அறிவிக்கப்பட்டன‌.

தன் ஆறாண்டு கால ஆட்சியில் பல ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உதவியுடன் முறியடித்தார் அர்வெலோ. தான் விடைபெறும் போது நிகழ்த்திய கடைசி உரையில் அமெரிக்கர்கள் குவாத்தமாலாவின் ஜனநாயகத்திற்கு ஏற்படுத்திய இடையூறுகளை மறைமுகமாக குறிப்பிட்டு ரூஸ்வெல்ட் இரண்டாம் உலகப் போரை வென்றாலும் தத்துவார்த்த போரில் ஹிட்லரிடம் தோற்றுவிட்டதாக குறிப்பிடுகிறார். இராணுவத்தில் மிகச் சிறந்த அதிகாரிகளில் ஒருவராக அறியப்பட்ட அர்பென்சு அர்வலோவிற்குப் பின் குவாத்தமாலவின் அதிபராகிறார். 1939ஆம் ஆண்டு அர்பென்சு மிகப் பெரிய தொழிலதிபரின் மகளான மரியா கிரிஸ்டினா விலனோவா காஸ்ட்ரோவை திருமணம் செய்துகொள்கிறார். சமுக ஏற்றத்தாழ்வுகள் மரியாவை மிகவும் பாதித்தது. அவர் இரகசியமாக அரசியல் சித்தாந்தங்கள் குறித்து வாசிக்கவும் சிந்திக்கவும் தொடங்கினார். அர்பென்சுவை அரசியல் நோக்கி நகர்த்தியதும் அவர் அதிபரானவுடன் திரைமறைவில் இருந்து இயக்கியதும் மரியா என்றொரு கருத்து மக்களிடம் இருந்தது. அர்பென்சு அதிபரானவுடன் நிலச் சீர்திருத்த மசோதாவைக் கையிலெடுத்தார். குவாத்தாமாலாவில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் உணவிற்குத் தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையே இருந்தது. அதற்குக் காரணம் பெரும்பாலான விவசாய நிலங்கள் பணக்காரர்களிடமே இருந்தன‌. அர்பென்சு பயன்படாமல் இருக்கும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி ஏழைகளுக்குப் பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கிறார். அதன்படி அர்பென்சு உட்பட பலருடைய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நிலமில்லாதவர்களுக்கு விவசாயத்திற்கு வழங்கப்பட்டன‌.

United Fruit Company கிட்டதட்ட 2 லட்சம் ஏக்கர்களை விவசாயம் செய்யாமல் வைத்திருந்ததோடு நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவித்தது. அரசு வாங்கிய விலையான 6 லட்சத்தைத் தரத் தயாராக இருந்தும் United Fruit Company 15 கோடி வேண்டுமென்று கேட்டதோடு மட்டுமில்லாமல் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலையிலும் இறங்கியது. உளபகுப்பாய்வின் தந்தை என்று அறியப்படும் சிக்மண்ட் பிராய்டின் மருமகனான எட்வர்ட் பெர்னேஸ் மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பெர்னேஸ் பல பத்திரிகையாளர்களுடனும் அதிபர்களுடனும் தொடர்பிலிருப்பவர். மேலும் ஜனநாயக நாட்டில் பிரச்சாரத்தின் மூலம் மக்களைத் தனக்கு தேவையான வகையில் கையாளவேண்டுமென்ற சிந்தனை உடையவர். 1928 ஆம் ஆண்டு வெளியான தன் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

The conscious and intelligent manipulation of the organized habits and opinions of the masses is an important element in democratic society.Those who manipulate this unseen mechanism of society constitute an invisible government which is the true ruling power of our country..

பெர்னேஸ் தன் பத்திரிகை நண்பர்கள் மூலம் குவாத்தமாலா கம்யூனிச நாடாக மாறிக் கொண்டிருப்பதாகவும் பனாமா கால்வாயைக் கைப்பற்றும் எண்ணமிருப்பதாகவும் வதந்திகளைப் பரப்புகிறார். தன் பத்திரிகை நண்பர்களைக் குவாத்தமாலாவிற்கு அழைத்து வந்து அரங்கேற்றப்பட்ட போராட்டங்களை நிகழ்த்தி மக்கள் அரசிற்கெதிராக இருப்பதான பிம்பத்தை உருவாக்குகிறார். இவற்றிற்குப் பிரதிபலனாக அந்தப் பத்திரிக்கைகளில் பலமடங்கு அதிக விலையில் விளம்பரங்களை வெளியிடுகிறார். United Fruit Company தன் நிறுவனத்தின் பங்குகள் வாங்கிய செனட் உறுப்பினர்களைக் களமிறக்கி அமெரிக்க மேலவையில் பேசவைக்கிறது. பின்னர் Foster சகோதர்களென்று அழைக்கப்படும் Secretary of State ஜான் பாஸ்டர் டல்லசும் CIA தலைவர் ஆலன் டல்லசும் இணைந்து ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பச்சைக்கொடி காட்டுகிறார்கள்.

CIA குவாத்தமாலாவில் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்திய முறையை உங்களின் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன். ஒரு தனியார் நிறுவனத்திற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்ததின் வழியாகவும் ஆயுத உதவின் மூலமாகவும் அமெரிக்கா கிட்டதட்ட 2 லட்சம் பேர் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது இந்த படுகொலைகள் அனைத்தும் ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின் நடந்தேறியவை. அர்பென்சு ஆட்சிக் காலத்தில் நடந்த சமூக மாற்றத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் குவாத்தமாலாவில் தங்கி புத்தகம் விற்று தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார் மருத்துவர் ஒருவர். அவர் இந்த ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின் மெக்சிகோ சென்று காஸ்ட்ரோவுடன் இணைந்தார். ஒருவேளை அமெரிக்கா குவாத்தாமாலாவில் தலையிடாமல் இருந்திருந்தால் சேகுவாரா என்ற போராளி உருவாகியிருப்பாரா என்று தெரியவில்லை. ————————————————————————————————————————————————————————————————— புத்தகம்: Bitter Fruit – The Story of the American coup in Guatemala
ஆசிரியர்: Stephen Schlesinger and Stephen Kinzer
வெளியீடு: Harvard University
பக்கங்கள்: 265 ————————————————————————————————————————————————————————————————— – பிரேம்குமார் (http://premkumarkrishnakumar.wordpress.com)

Advertisements