144. Genes, Peoples and Languages

தீட்டென்பவனை
நாப்கின் கழற்றி
அவன் வாயில் அடி.
நினைவிற்கு வரட்டும்
அவன் பிறப்பு.
– திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் + தயா கவிசிற்பி (என இணையத்தில் படித்தேன்)

யாரு மேல‌ கீறினாலும் ரத்தம் ஒண்ணுதான்
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தான்
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே வாசல் ஓரே கூடு ஓரே ஆவி
– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பேசும் மொழி, தோல் நிறம், உடை, உணவு, கண் / மயிர் / முகம் / உடல் அமைப்பு, பொதுவான கடவுள் / எதிரி, வாழும் முறை / நிலம் / காலநிலை என பல காரணிகளின் அடிப்படையில் மனிதன் என்ற விலங்கினம், பல இனங்களை உண்டாக்கி வைத்திருக்கிறது. தனது இனம்தான் மற்ற எல்லா இனங்களைவிட தலை சிறந்தது என ஒவ்வோர் இன‌மும் நம்புகிறது. தனது இன‌த்திற்கு என சில தனிப்பட்ட சிறப்புகள் தலைமுறை தலைமுறைகளாக தனது மூதாதையர்கள் மூலம் சந்ததிகளைச் சேர்வதாக பெரும்பாலான இனங்கள் நம்புகின்றன. தன் இனம் மட்டும்தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட இனம் என சில இனங்கள் சொல்கின்றன‌. தன் இனம் மற்ற இனங்களை எல்லாம் ஆள்வதற்காகவே படைக்கப்பட்ட இனம் என சில இனங்கள் நிரூபிக்கின்றன. ஒவ்வோர் இனத்திற்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இருப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மற்ற இனங்களுக்குப் பாதமான தனக்கு மட்டுமே சாதகமான தனது நம்பிக்கைகளை மற்ற இனங்கள் மீது திணிக்கும் போதுதான் பிரச்சனைகள் எழுகின்றன. உதாரணமாக பசுமாட்டைச் சிறந்தது என ஓர் இனம் நம்புவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை; பக்கத்து இனமும் அவர்களது பசுமாட்டைச் சிறந்தது என நம்ப வேண்டும் எனத் திணிப்பதில் தான் பிரச்சனை.

கடவுளால் சுடப்பட்ட சப்பாத்திகள் மூன்றுவகை. பாதி வேகாமல் வெளிரியவர்கள் பிரிட்டிஷ். அதிகம் வெந்து கருத்தவர்கள் ஆப்பிரிக்கர். சரியாக சமைக்கப்பட்டவர்கள் இந்தியர். இப்படியொரு உதாரணம் நம்மில் பலருக்கும் சொல்லப்பட்டிருக்கலாம். யார் இதை முதலில் சொன்னதென்று தெரியவில்லை. இதைப் பிரபலமாக்கியவர் முன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன். பிரிட்டிஷைக் கீழ்த்தள்ளி இந்தியரை மேலுயர்த்த ஆப்பிரிக்கரைப் பழிப்பதில் ஏது நீதி? பண்டைய காலத்தில் இந்தியா வந்த ஒரு மேற்கத்திய பயணி (மார்கோ போலோ / மெகஸ்தனீஸ்), இந்தியர்கள் நன்றி (thanks) சொல்வதில்லை எனத் தன் நாட்டில் சொல்கிறார். அங்கு தொடர்பே இல்லாமல் அடிக்கடி excuse me, sorry சொல்கிறார்கள் என நாமும் குறை சொல்லலாம். மெக்சிகோ மற்றும் சில கேரள மக்களின் ஆங்கில உச்சரிப்பைப் பெரும்பாலானோர் கிண்டல் செய்வதுண்டு.

சக மனிதனை இனம் பிரித்து தொன்றுதொட்டு தன்னைவிட தாழ்ந்த நிலையில் வைத்துப் பார்க்க பழகிப் போன நமது வாழ்க்கை முறையைப் பழமொழிகள் சொல்லும்:
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?
ஆட்டுக்கும் அளந்துதான் வெச்சான் ஆண்டவன் கொம்பை.
நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வெச்சாலும் கம்பத்தப் பாத்தா காலத்தான் தூக்கும்.
வண்ணாத்தி மூத்தரம் ஆத்தோட போனா என்னா கொளத்தோட போனா என்னா?
குலவித்தை கல்லாமற் பாகம்படும்.
பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்யில் அரைவாசியாகாது.
ஆசாரி செஞ்ச ஆக்கினைக்கு ராசாதி ராசனானாலும் தல குனிஞ்சுதான் போகணும்.

இவற்றின் தொடர்ச்சியாக புதுக்கவிதைகள் மாதிரி புதுமொழிகள் சில:
எக்குலமும் வாழணும், முக்குலம்தான் ஆளணும்.
கடவுளைக் கண்டவரும் இல்லை, கள்ளனை வென்றவரும் இல்லை.
நாடு பாதி, நாடார் பாதி.
பத்து பைசா முறுக்கு, பள்ளி வாசல நொறுக்கு.
செவப்பா இருக்றவன் பொய் சொல்ல மாட்டான்டா.

இப்படி காலங்காலமாக இன்றளவும் சக மனிதன் மேல் கொடூரமான வன்முறைகளாக வரலாற்றாளர்கள் சொல்லும் அடக்குமுறைகளில் முதலாவது, நிறம் மூலம் இனம் பிரித்த அமெரிக்கா; இரண்டாவது சாதி என்ற மாயக் கோட்பாட்டின் மூலம் இனம் பிரித்த இந்தியா! அறிவுடைய மாந்தரும் கற்புடைய மாதரும் இன்னின்ன‌ குலத்தில் தான் பிறக்க வேண்டும் என்கிறது சாதியம். இன்று மதவாதிகள் தேசிய நூலாக சித்தரிக்கும் பகவத் கீதையில், ‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’ என்று கிருட்டிணர் சொல்கிறார். அதாவது ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’. அந்த நான்கு அடிப்படை சாதிகள் பல்கிப் பெருகி இன்று எண்ண முடியாத அளவிற்கு வந்து நிற்கின்றன. அதில் மனிதயினத்தில் சரிபாதியான பெண்ணினத்தின் நிலை பற்றி நான் சொல்லித் தெரிய தேவையில்லை. ‘தனது தந்தையின் கடனைத் தீர்க்காத ஆண்மகன், மறுபிறவியில் நாயாகவோ அடிமையாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கிறான்’ என்று சாதிகளைச் சட்டமாக்கிய மனுதர்மம் சொல்கிறது. பொண்ணுக்குப் பத்து வயசான்னா பறையன் கையிலாவது பிடித்துக் கொடு என, கடவுளின் சொந்த நாடான‌ கேரளாவில் ஒரு சொல்லாடலே உண்டு.

சிகந்தர் ஆட்சியில் 15ம் நூற்றாண்டில் முதன்முதலில் இந்து – முஸ்லீம் வன்முறைகள் கஷ்மீரில் நடந்தன. இரு பத்தாண்டுகள் கழித்து 11 இந்து குடும்பங்கள் மட்டும் தான் கஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் நிலைத்து நின்றன‌. அவர்களுக்குள்ளாகவே ஒரு சாதியை உண்டாக்கினர். கஷ்மீரிலேயே தங்கியவர்கள் மலமாசி. கஷ்மீரைவிட்டு வெளியேறியவர்கள் பலமாசி. பட் ஷா என்ற இஸ்லாமிய‌ மன்னன் வெளியேறிய இந்துக்களை எல்லாம் மீண்டும் அழைத்து அரசுப் பதவிகள் அளித்தான். அரசுப் பதவி வகிக்கும் இந்துக்களுக்கு இடையே இன்னொரு சாதியை உண்டாக்கினர். பெர்சிய மொழி பேசத் தெரிந்தவர்கள் கர்கும். அது தெரியாதவர்கள் பாச்சி பட். அவர்களுக்கு இடையே பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்கள் என்பது அடுத்த விடயம். அடுத்த சாதியர் கைப்பட்ட தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள் என்கிறது கஷ்மீர் வரலாறு. ஒரு ‘ப்’பில் இனங்காணும் நாகபதனி, நாகப்பதனி சாதிகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சாதி மூலம் இனங்காணுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்று ஏற்கனவே சொல்லப்பட்ட கோடி உதாரணங்களில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதைவிட அபத்தம், இந்தியா என்பது ஒரு காலத்தில் இந்துவாய் இருந்த ஒரே இனம் என மதவாதிகள் கூறுவது. ஆரிய இனம்தான் சிற‌ந்தது என்று என்றோ ஆர்தர் டீ கோபின்னவ் சொல்லிப் போனது, பின்னாளில் ஹிட்லர் மூலம் யூதர்களைக் கொன்று குவித்தது. மதச்சாயம் பூசி கோபின்னவ்கள் அதிகம் வலம்வரும் இன்றைய நமது சமூகத்தில் ஹிட்லர்களைத் தவிர்க்க இதோ ஓர் அறிவுச் சாயம் பூசிய‌ இன்னொரு புத்தகம்!——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: Genes, Peoples and Languages
ஆசிரியர்: Luigi Luca Cavalli-Sforza
வெளியீடு: Penguin
——————————————————————————————————————————————————————————————–
சென்னையின் சாலையோரப் பழைய புத்தகக் கடைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவன், நண்பன் சேரலாதன். எங்கும் கிடைக்காத பல அரிய புத்தகங்கள் சில, அப்பழைய புத்தகங்களின் குவியலில் கிடைக்கக் கூடும் என அடிக்கடி சொல்வான். சுஜாதாவின் ‘எப்போதும் பெண்‘ புத்தகத்தை அப்படி ஒரு கடையில் கண்டெடுத்ததாகச் சொல்வான். சமீபத்தில் பழைய புத்தகக் கடைகள் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை ஒன்றைப் படித்தேன். இரண்டாண்டுகள் சென்னை வாழ்க்கையில், அதுவும் திருவல்லிக்கேணியில், பழைய புத்தகக் கடைகளில் அதிக நேரம் செலவிடவில்லை என்ற வருத்தம் தொற்றிக் கொண்டது. இங்கு ஹைதராபாத்தில் அது போன்ற கடைகள் அதிகம். ஒரு விடுமுறை நாளில், ஒரு பழைய புத்தகக் கடை திறந்தவுடன், முதல் ஆளாய் நுழைந்து, அதிக தேடுதலுக்குப் பின், விலைபேரம் ஏதும் பேசாமல், 200 ரூபாய்க்கு நான் வாங்கி வந்த புத்தகம் இது. இனம் என்ற‌ கோட்பாட்டை அறிவியல் முறைப்படி ஆராய்வதுதான் இப்புத்தகம்.

வெப்ப மண்டலத்தில் வாழ்பவர்களுக்கு உடலெல்லாம் நிறைய மயிர்கள் இருந்தால், அது வியர்வையை அதிக நேரம் தக்க வைத்து குளிருணர்ச்சி தருவதற்கும், இன்னும் வியர்வை மூலம் அதிக நீர் வெளியாவதைத் தடுப்பதற்கும். குளிர் மண்டலத்தில் வாழ்பவர்களுக்கு மூக்கு சிறிதாக இருந்தால், அது காற்றைச் சூடாக்கி நுரையீரலுக்கு அனுப்புவதற்கு. கண்கள் சிறியதாக இருந்தால், அது குளிர்க்காற்றில் இருந்து காப்பதற்கு. உயரம், கபால அளவு என பல காரணங்களை வாழிடங்களுக்கு ஏற்றவாறு இயற்கை வைத்திருக்கிறது. குடியேறிய நிலத்தின் கலாச்சார, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மனிதனும் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான். மனித மாமிசம் சாப்பிட்ட பல‌ இனங்கள் இன்று அதை விட்டுவிட்டன. பெண்களை உடன்கட்டை ஏற்றும் சதி என்னும் கொடுமையை இந்தியா சட்டம் போட்டு தடை செய்தது. வெள்ளையனே வெளியேறு என்று ஒரு காலத்தில் வெகுண்டெழுந்த மக்களின் இன்றைய வாரிசுகள், மெலனின் போர்த்த‌ தோலை வெள்ளையாக்க எவ்வளவோ செலவு செய்கிறார்கள். கடல் தாண்ட தடை போட்ட எத்தனையோ சாதிகள் இன்று அமெரிக்கத் தூதரக வாசலில் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன. அசைவப் பிரியர்களாய் பலிகள் பல செய்த‌ பல‌ சாதிகள் இன்று சைவர்களாய் காட்டிக் கொள்கின்றனர். எலிகளைக் கும்பிடும் எத்தனையோ மக்கள், பிளேக் நோய் காலத்தில் எலிகளைக் கொன்று குவித்திருக்கின்றனர். ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். இனம் என்பது வெளித் தோற்றத்தில் இல்லை.

உள்ளோடும் இரத்ததில் உள்ள பிரிவுகளில், மனிதயினத்தின் ஆரம்பமாகக் கருதப்படும் ஆப்பிரிக்காவில் A B O என அனைத்து வகைகளும் உண்டு. ஆசியாவில் B அதிகம். ஐரோப்பாவில் A அதிகம். பூர்வகுடி அமெரிக்கா முழுவதும் O என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பரவலாக உள்ளது (Genetic drift). ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து, பேரிங் நீரிணை வழியாக அமெரிக்காவில் குடியேறிய அதன் முன்னோர்கள் பெரும்பாலும் O வகை இரத்த‌த்தைக் கொண்டிருக்கக் கூடும் (Founder’s effect). O இரத்தம் சிபிலிஸ் நோய்க்குக் கொஞ்சம் அதிகப்படியான எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. அமெரிக்காவில் காலங்காலமாக மிகப் பரவலாகக் காணப்படும் இந்நோய்க்குப் பரிணாமத்தில் O இரத்தம் மூலம் கொஞ்சம் அதிகப்படியான எதிர்ப்பு சக்தியை இயற்கை கொடுத்திருக்கிறது. கடல் வழியாக நாடு பிடிக்க கிளம்பிய ஐரோப்பியர்கள் மூலம், அமெரிக்காவில் இருந்து ஸ்பெயின் வழியாக ஐரோப்பா முழுவதும் சிபிலிஸ் நோய் பரவ, அக்கண்டம் முழுவதும் விபச்சார விடுதிகள் மூடப்பட்ட கதைகள் ஏராளம். சல்மான் ருஷ்டியின் The Enchantress of Florence புதினம் அக்கதைகள் கொஞ்சம் சொல்லும். இனம் என்பது இரத்த‌த்திலும் இல்லை.

அப்படி என்றால் இனம் என்பது எதில் இருக்கிறது? XX குரோமசோம்கள் கொண்ட பெண்ணில் இருந்து மரபணு (Gene) குளறுபடியில் XY என ஆண் தோன்றியதாக சொல்லும் அறிவியல், நம்புவது மரபணுவை மட்டுமே. அதன்படி 3 முதல் 100 இனங்கள் இருப்பதாக பல்வேறு அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஒவ்வொரு பெரும் நிலப்பரப்பும், அருகில் உள்ள மற்றதில் இருந்து எந்த அளவிற்கு மரபணுவில் வேறுபடுகிறது என்பதைத் தனது ஆய்வுகளுக்காக‌ கணக்கிடுகிறது அறிவியல் உலகம். பரந்து தொடர்ந்து கிடக்கும் நிலப்பரப்பும், காலங்காலமாக கட்டற்று நிகழ்ந்துவரும் உடலுறவுகளும் மரபணு எல்லைகளை முடிவு செய்வதில் அறிவியலைக் குழப்பிவிடுகின்றன.

தக்கன தகவமைத்தலே பரிணாம வளர்ச்சி. ஆங்கிலத்தில் Survival of the fittest and luckiest என்று படித்திருப்பீர்கள். நம் எல்லாருக்கும் பள்ளியில் குறுக்குநெடுக்காக‌ படம்போட்டு சொல்லப்பட்ட அதே எளிய உதாரணத்தைத்தான் புத்தகமும் சொல்கிறது. இரத்தச் சிவப்பணுக்களைக் குறைக்கும் ஒருவகை நோய் தலசீமியா. அது இயற்கையிலேயே சிவப்பணுக்கள் குறைவாய் இருக்கும் பெண்ணினத்தைத் தாக்கும் போது, பூப்பெய்திய பிறகு அதிக இரத்தப்போக்கில் உயிரையே எடுத்துவிடும். மரபுவழியாகப் பரவும் இந்நோயைத் தாங்கிச் செல்லும் மரபணுவை T என்றும், இயல்பான மரபணுவை N என்றும் அழைத்தால், மலேரியாவை எதிர்க்கும் சக்தியை Tக்குக் கொடுத்திருக்கிறது இயற்கை. தாய்-தந்தையரிடம் இருந்து இம்மரபணுக்களைப் பெறும் குழந்தைகளில்,
TT – இனப்பெருக்கத்திற்கு முன்பே தலசீமியாவால் இறக்கின்றன.
NN – மலேரியாவால் இறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
NT – மலேரியாவுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம்; தலசீமியா பாதிப்பும் குறைவு.

இப்படி ஒவ்வொரு தலைமுறையிலும் சம அளவிலான Tயும் Nனும் மறைந்து போகின்றன. மலேரியா முற்றிலுமாக அழிந்தொழியும் தலைமுறையில் தலசீமியாவும் அழிந்துபோகும். 24 கேரட், அக்மார்க் சுத்தமான ஒற்றை மரபணுவைக் கொண்ட சுத்தமான இனங்கள் இயற்கையில் நிலைப்பதில்லை. கலப்பினங்கள் இல்லாததாக சொல்லப்பட்ட யூத இனத்திலேயே நிரூபிக்கப்பட்ட உண்மையிது. இயற்கைக்கு Tயும் Nனும் சேர்ந்த இரட்டைத் தன்மையே தேவைப்படுகின்றன. Nature selection will always maintain heterogeneity for a gene in a population until heterozygotes are at an advantage. பல இனக்குழுக்களை உள்ளடக்கிய இந்தியா என்ற அற்புதமான நாட்டைப் போலத்தான் இயற்கையும். காலங்காலமாக பரிணாமம் பெற்று இப்படி அடைந்த நிலையைத் தான், இந்தி இந்து என்ற ஒற்றை அணுக்களைத் திணித்து கலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தகத்தின் பிற்பாதி மொழிகளின் பரவல் மூலம் மனிதயினத்தை ஆராய்கிறது. 5000க்கு மேற்பட்ட மொழிகள் இன்று உள்ளன. சிந்து சமவெளியில் ஹரப்பா மக்கள் பேசிய மொழி ஆரிய சமஸ்கிருதமா, திராவிடத் தமிழா என பல கோட்பாடுகள் இன்றளவும் உண்டு. இப்புத்தகமும் தமிழுக்கு ஆதரவாக பல சான்றுகள் சொல்கிறது. ஈரானின் அழிந்து போன ஒரு நாகரீகத்தின் மக்கள் பேசிய எலாம் (Elam) என்ற மொழி, திராவிட வகையைச் சேர்ந்தது என்று இப்புத்தகத்தில் படித்த தகவல் ஆச்சரியம். சமஸ்கிருதம் என்பது ஐரோப்பாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து, ஆசியக் கலப்புடன் உண்டான மொழி என ஆரியர்கள் ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்துகிறது இப்புத்தகம். சமஸ்கிருதம் கிரேக்கம் இலத்தீன் போன்ற மொழிகள் எல்லாம் கோதி மொழியில் இருந்து தோன்றி இருக்கலாம் என்று சில பொதுவான உச்சரிப்புகள் மூலம் சொல்கிறது புத்தகம் (lexicon diffusion).

கோதி என்பது ஆரியத்தின் அச்சாரமான இன்றைய ஜெர்மன் மொழியின் மூதாதை. ஈரானுக்கும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஆரியர்கள் இடம்பெயர்ந்ததாக சொல்கிறது அறிவியல். இந்தியாவில் இந்துஸ்தானில் இருந்து மேற்கு நோக்கிப் போனதாக சொல்கிறது மதவாதம். திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தை விட பழமையானவை என ஆதாரங்கள் சொல்கிறது இப்புத்தகம். மதவாதிகள் சொல்வது போல் எல்லாரும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வேண்டும் என்றால், எல்லாரும் தமிழைத்தான் படிக்க வேண்டும். சரி, மரபணுவும் மொழியும் கிட்டத்தட்ட தனித்தன்மை கொண்ட இனம் ஏதும் உண்டா? இல்லை என்று, ஒரு பெரிய படம் போட்டு ஒப்பிடுகிறது புத்தகம். உதாரணமாக எத்தியோப்பியர்கள். அவர்கள் மரபணுவில் ஆப்பிரிக்கர்கள். அவர்களின் மொழி ஆசிய-ஆப்பிரிக்கக் கலப்பு.

யூதர்களும் தென்னிந்தியப் பிராமணர்களும் புத்திக்கூர்மை (IQ) உடையவர்கள் என்று ஒரு புரட்டுக்கதை நம்மில் உண்டு. அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. புத்திக்கூர்மை என்பது வாழும் கலாச்சார சூழ்நிலைகளைப் பொறுத்தது. சார்லஸ் டார்வின் இதை நிரூபித்து இருக்கிறார் என அட்லாண்டிக் புத்தகத்தில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நம்கால மதவாதிகள் சொல்வது போல் இஸ்லாமியர்கள் மட்டும் அதிக மக்களைப் பெற்றுக் கொள்வதில்லை. குஜராத் இனப்படுகொலையில் பங்குபெற்றதை மிகப் பெருமையாக பின்னாளில் வாக்குமூலம் கொடுத்தவர்கள், இந்தப் பொய்யை உண்மை போல அழுத்திக் கூறினர். உடலுறவுக்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்க வேண்டிய அளவிற்காக மதம் நம்மைப் பீடித்திருக்கிறது? மதமாறியவர்களையும் மதமற்றவர்களையும் கூட்டிக் கழிக்கும் அடிப்படை கணக்கு கூடவா நமக்கு தெரியவில்லை?

இனம் என்ற ஆய்வை அறிவியல் நடத்திக் கொள்ளட்டும். வல்லரசு நாடுகளுக்குத் தேவைப்படாத ஏதோவொரு தீவில், வெளியுலகத் தொடர்பில்லாமல் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள்தான் பெரும்பாலும் அறிவியலுக்குத் தேவைப்படும் ஆதாரங்களைத் தருகின்றனர். மனிதன் எப்படி வந்தான், எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான் என அறிவியலுக்கும் அவ்வாய்வுகள் உதவக்கூடும். சாமானியர்கள் நமக்கு எல்லாம் தெரிய வேண்டியது – எல்லா உயிரும் பிறக்கிற‌ வழியும், பொறுக்கிற‌ வலியும் ஒன்றுதான்! யாதும் ஊரே யாவரும் கேளிர்!

காற்று பூகம்பம் நோய் நெருப்பு என்ற இயற்கையின் தூதுவர்களுக்கு இனம் தெரியாது. அவை இனம்பிரித்து விலகுவதுமில்லை தாக்குவதுமில்லை. ஆண்டுக்குக் கிட்டதட்ட 200 பேரைப் பலியாக்கி, இரத்தம் மூலம் பரவாமல், உடலுறவு மூலம் பரவாமல், மரபணு மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்த பொறுமை இல்லாமல், வெகுவேகமாகப் பரவி, கிட்டத்தட்ட 4 இலட்சம் மக்கட்தொகை கொண்ட‌ ஒரேயொரு இனத்தை மட்டுமே குறிவைத்து தாக்கி, அதுவும் அவ்வினத்து ஆண்களை விட்டுவிட்டு பெண்களை மட்டுமே தாக்கிய‌ ஒரேயொரு நோயை ஒரேயொரு முறை ஒட்டுமொத்த உலகமும் புரியாமல் தள்ளிநின்று, வேலியிட்டு அவர்களைப் பிரித்து ஆச்சரியத்தோடு பார்த்த கதை வரலாற்றில் உண்டு. உயிரியல்படி அவ்வினத்துப் பெண்களைக் குறிவைத்து தாக்க அந்நோய்க்கும் இனம்பிரிக்கத் தெரியாதுதான். இயற்கையிடம் இருந்து மனிதன் கற்றுக் கொண்டது, இயற்கையை என்றுமே கற்றுவிட முடியாது என்பதுதான். உலகின் மிகமிக அரிதான நோய் என்று கின்னஸ் புத்தகம் குறித்து வைத்திருக்கும், இயற்கையின் விசித்திர அந்நோய் பற்றி மனிதவுடல் பற்றிய அடுத்த புத்தகத்தில் விரிவாகப் பேசலாம்.

குண்டாக சுட்டாக்கா இட்லி
அதையே ரௌண்டாக சுட்டாக்கா
ஊத்தப்பம் தோசை
எல்லாமே ஒரு கரண்டி மாவு
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கான்

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements