145. நளவெண்பா

இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்
வாங்கிக் கொள் வள்ளுவனிடம்!
– கவிஞர் அறிவுமதி

பதினெட்டாம் நூற்றாண்டில் தாவரங்களை வகைப்பிரித்த கார்ல் லின்னேயஸ், அடர்ந்து உயர்ந்து வளர்ந்தாலும் மூங்கில் மரமல்ல என்று புல் இனத்தில் வைத்தார். உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரமான மூங்கில், ஒருவித்திலை வகை புல் என்று தாவரவியல் படித்த அனைவருக்கும் தெரியும். மூங்கிலை முதன்முதலில் புல்லென்று அறியும் அனைவருக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஆனால் மூங்கிலில் செய்யப்பட்ட ஒரு பொருளுக்கு ஆதிகாலத்திலேயே புல்லாங்குழல் (புல்லால் ஆன குழல்) எனப் பெயரிட்டவர்கள் நம் முன்னோர்கள்! அதை அறிவியல் கண்டுபிடித்து இருநூறு ஆண்டுகள் தான் ஆகிறது. இப்படி பேராசிரியர் ஞானசம்மந்தன் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘குறிஞ்சி நாடன் கேண்மை’ என்று தெள்ளத் தெளிவாகப் பொருள் புரியும் ஒரு சங்கப் பாடல் வார்த்தைகளுக்கு, அவர் தெளிவுரையில் அசந்து போனேன்! குறிஞ்சி என்ற ஒற்றை வார்த்தைக்குள் அவ்வளவு கதைகள்! ‘அச்சம் தாண்டி உச்சம் தொடு’ என்று நடிகர்கள் குளிர்பானம் விற்க, விளம்பரப் பொருளாகிப் போனதுதான் குறிஞ்சியின் இன்றைய நிலை.

தமிழ் இலக்கியங்களின் ஆழம் அதிகம்! Wireless அணுவாயுதம் Plastic surgery விமானம் Television தலைமாற்று அறுவை சிகிச்சை Stem cells குளோனிங் Surrogacy சோதனைக் குழாய் குழந்தை போன்ற விஞ்ஞான அறிவை முன்னோர்கள் பெற்றிருந்ததாக விஞ்ஞானிகள் மாநாட்டிலேயே இன்றைய மதவாதிகள் எடுத்துரைக்கிறார்கள். தயவுசெய்து நான் சொன்ன மூங்கில் குறிஞ்சி உதாரணங்களை அவர்களோடு ஒப்பிட்டு என்னை ஏளனமாகப் பார்க்காதீர்கள். நான் சொன்ன முன்னோர்களின் அறிவு எல்லாம் முழுக்க முழுக்க இயற்கை அழிக்காத எளிய அறிவு. இயற்கையோடு இயைந்த அறிவு. ஏவுகணைகள் செய்து கடவுளர்கள் பெயர் சூட்டியதில்லை நம் மரபு. ஐந்து நிலங்களுக்கும் பூக்களின் பெயர் வைத்தவர்கள் நாம். ஐம்பெருங் காப்பியங்களுக்கும் அணிகலங்களின் பெயர் வைத்தவர்கள் நாம். நம் இலக்கியங்களில் தேடினால் பித்தாகரஸ் தேற்றம் கிடைக்கும்; பீட்சா கிடைக்காது.

தாதூண் பறவை பேதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரனின் பேரன் பேத்திகளான நமது இன்றைய நிலை வேறு! தமிழ் வருடப் பிறப்பையே ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாற்றி மாற்றிக் கொண்டாடுகிறோம். அங்கு யாழ் நூலகக் கதை கேட்டு கொதித்துப் போகிறோம். இங்கு பெருமாள் முருகனை நம்மால் காப்பாற்ற முடியவில்லை. உண்மையான கண்ணகிக் கதையையும், புனைவான தாலிக் கதையையும் அரசியல் அரங்கத்தில் ஏற்றி விட்டு, நமக்கான வாழ்வை யார்யாரோ தீர்மானிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அமைச்சர், சமஸ்கிருதம் படிக்காததற்காக வெட்கப்படுவதாகச் சொல்கிறார். சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த ஒரு வடநாட்டு அரசியல்வாதி, தமிழ்தான் சிறந்த மொழி என்று ஒரு புதிய கண்டுபிடிப்பைத் தமிழ் மக்களுக்குச் சொல்கிறார். பலருக்குத் திருக்குறள் பரிசளிப்பது போல் புகைப்படம் எடுக்கிறார். உள்ளூர் கவிப்பேரரசுகள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கின்றனர். கரூரில் அவர் தலைமையில் திருக்குறள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில், தமிழ்க் குழந்தைகள் வள்ளுவர் வேடமிட்டு வந்தனர். மேலெல்லாம் மூன்று கோடுகள் பட்டை தீட்டி, கமண்டலம் ஏந்தி, ருத்ராட்ச மாலை அணிந்து, வெள்ளுடை உரித்து, காவி தரித்து, சிவனடியார் வேடத்தில் வந்திருந்தனர் குட்டி வள்ளுவர்கள்! கஷ்மீருக்குள்ளேயே நுழைந்துவிட்ட மதவாதம் தமிழ்நாட்டையும் துளைத்துக் கொண்டிருக்கிறது. காலங்காலமாக நாமும் நம் மொழியை நீசமொழி என்று துரத்தி அடிக்கப் படுகிறோம். நாமும் நம்பி நம் மொழியை விட்டு வெகுவேகமாக விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம். பள்ளிப் படிப்புக்குப் பின், நம் வாழ்க்கைப் பதிவுகளான‌ நம் இலக்கியங்களைத் துறந்து விட்டோம். செம்புலப்பயனீரார் ஓரேருழ‌வனார்  என்று பெயர் சொல்லாமல் வளர்க்கப்பட்ட இலக்கியப் பாரம்பரியம் கொண்ட இந்நாட்டில், இன்று இலக்கியவாதிகள் என்ற‌ வட்டத்துள் சண்டையிட்டு மாள்கிறோம்.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று லெல்லாந் தலை’
என்று இன்று கேலிக்கூத்தாக்கப்படும் இடஒதுக்கீட்டின் உரிமையை கடமையை அன்றே சொல்லி இருக்கிறார் வள்ளுவர். அதுவும் புரியவில்லை என்றால், இதோ எங்கள் புதுக்கவிஞர் ஒருவர் சொல்கிறார்:
‘இட ஒதுக்கீடு வேண்டாம்.
வா…வந்து
நீயே பீ அள்ளு..’.
இப்படி பல்லாண்டுகள் பாரம்பரியத் தொடர்ச்சி உள்ள தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியில் இருந்து பெரும்பாலும் பள்ளிக்குப் பின் துண்டிக்கப் படுகிறோம்.

‘பள்ளிப் படிப்பிற்குப் பின்னும் செய்யுள்களை விட்டுவிடாமல் தொடர்ந்து படிக்கணும் பசங்களா; நம்ம இலக்கியங்கள்ல இருக்குடா நல்லது கெட்டது எல்லாமும்’. புலவனுக்கே உரிய வறுமையிலும், எட்டு மாதங்கள் மட்டுமே எனக்கு தமிழ் ஆசிரியராக இருந்தாலும், வாழ்க்கைக்கும் தமிழ்ப் படிக்கும் விதையை என்னுள் இப்படி விதைத்தவர் என் தமிழ் அய்யா அந்தோணிசாமி அவர்கள்.
காக்கை உகக்கும் பிணம் (மூதுரை)
மாகதர் போகதர் (பட்டினத்தார்)
குப்பைக் கோழித் தனிப்போர் (அகநானூறு)
அங்காடி நாய் (பட்டினத்தார்)
உலகியற்றியான் (திருக்குறள்)
இப்படி என் பல கவிதைகள் சிறுகதைகளுக்கான பெயர்களை நமது இலக்கியங்களில் இருந்து உருவி இருக்கிறேன். நான் கம்பராமாயணம் படித்ததில்லை ஆனாலும், மைக்கேல் மதன காமராசன் திரைப்படத்தில், கமலஹாசன் ஒருவரியாக‌ ஒருமுறை பாடிக் காட்டும் ‘கடன்பட்டார் நெஞ்சம்’ என் ஒரு சிறுகதையின் பெயர். குணா திரைப்படம் புரியாமல், தேடி அலைந்து வாங்கி, அபிராமி அந்தாதி முழுவதும் படித்திருக்கிறேன். பட்டினத்தார் வள்ளுவர் பாரதி கணக்கில்லாமல் நிறைய முறை படித்திருக்கிறேன். இன்னா நாற்பது, இனியவை நாற்பது, பழமொழி நானூறு, அகநானூறு, திருக்குற்றாலக் குறவஞ்சி, ஔவையாரின் தனிப்பாடல்கள் என பள்ளிக்குப் பிறகும் ஆர்வத்தில் படித்திருக்கிறேன். எனது பதிவுகளில் அவற்றின் தாக்கத்தைப் பரவலாகக் காணலாம். அடுத்து படிப்பதற்காக 1964ல் அச்சிடப்பட்ட‌ வீரமா முனிவரின் தேம்பாவணி வைத்திருக்கிறேன். ஏதேதோ புத்தகங்கள் தேடிப் படிக்கிறோம் எழுதுகிறோம். நமது இலக்கியங்களில் தேடுதல் எப்போதும் இருக்கட்டும் என்பதற்காக ஒரு சோறு பதமாக இப்பதிவு இருக்கட்டும்.
——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: நளவெண்பா
ஆசிரியர்: புகழேந்திப் புலவர்
தெளிவுரை: புலியூர் கேசிகன்
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பாண்டி பஜார், சென்னை
முதல் ஈடு: ஆகஸ்டு 2010
பக்கங்கள்: 158
விலை: ரூபாய் 75
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
——————————————————————————————————————————————————————————————–
எட்டாம் அல்லது ஒன்பதாம் வகுப்பில் நளவெண்பாவில் சில செய்யுள்கள் படித்ததாக நினைவு. நளன் தனது மனைவி தமயந்தியை விட்டுப் பிரிந்து விடுவான். நளனின் சமையலை வைத்து தமயந்தி கண்டுபிடித்து மீண்டும் சேர்ந்து விடுவார்கள். கதையில் வேறொன்றும் நினைவில் தங்கவில்லை. சண்டியர் விருமாண்டி பெயர்ப் பிரச்சனைகளுக்கு இடையில் ஒரு திரைப்படத்திற்கு நளதமயந்தி என்று ஏன் பெயரிட்டார்கள் என்று தெரிந்து கொள்ள, நண்பர்களிடம் நளராசன் கதை கேட்டால், எவருக்கும் நினைவில் இல்லை. ‘பெல்ட்டால அடிக்கிற சம்சாரத்துக்குப் பேரு நளாயினியா? செருப்பால அடிச்சா தமயந்தின்னு பேரு வெப்பியா?’ என்று எஸ்.வி.சேகர் நாடக வசனத்தைக் கேட்கும் போதெல்லாம், நளதமயந்தி கதை தெரியாதது நினைவுக்கு வரும். புத்தகமாகவே வாங்கிவிட்டேன்.

மாதவிலக்கு காலத்தில் ஓராடையில் இருந்த‌ ஒரு பெண் அவையோர் நடுவில் துகிலுறியப்படுவதையும், கதாநாயகன் மாதிரி ஒரு கடவுள் வந்து தன்னைக் காப்பாற்றுவார் என்று ஆத்திகத்தை மறைமுகமாகத் திணித்து பெண்ணைப் பலவீனமாகச் சித்தரிப்பதையும், கணவர்களால் அவள் பங்கிடப்படும் ஆணாதிக்கத்தையும், அவள் சினங்கொண்டு சபதஞ் செய்தது போல் பின்னாளில் குருதியைச் சிகையாய்த் தேய்த்து கூந்தலை வாரி முடிந்த வன்முறையின் உச்சத்தையும், பிஞ்சுகள் படிக்கும் பள்ளிகளில் பாடமாக ஏன் வைக்கிறார்கள்? சூதில் நாட்டை இழந்த பாண்டவர்கள் கானகம் புகுகிறார்கள். இலங்கலை நூல் மார்பன் – விண்ணிழந்த மின்போலும் நூல் மார்பன் – பாண்டவ கௌரவர்களின் தாத்தா – வேதங்களைத் தொகுத்த வியாச முனிவன், பாண்டவர்களில் மூத்த தருமனிடம் கலக்கம் அடைந்திருப்பதற்கான காரணத்தைக் கேட்கிறான். தருமனும் சூதாடிய கதை சொல்கிறான். இதெல்லாம் மன்னர்க்கு இயல்பே காண் என வியாசன் கதை சொல்கிறான். யாமத்தினுங்கூட ஒலிக்கும் கடல் சூழ்ந்த தன் நாடெல்லாம் ஒருங்கே சூதில் இழந்த (யாமத் தொலியாழி வையம் ஒருங்கிழப்ப) நளனின் கதைதான் நளவெண்பா. சுயம்வரக் காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்கள். 427 நேரிசை வெண்பாக்கள்.

வெற்றித் திருமகள் நிலைபெற்றிருக்கும் பரந்த தோள்களை உடையவனும், அழகான பூமாலையை அணிந்தோனுமாகிய நளன், நிடதநாட்டு மன்னன். பறிபீறி நெல்லிற் பருவரால் ஓடும் நெடுநாடன். பறந்து போன ஓர் அன்னப்பறவையைப் பிடித்துத் தா என பணிப் பெண்களுக்கு உத்தரவிடுகிறான். ‘பண்ணக்காட்டுத் தேன் ருசியா? பருவப் பொண்ணு வாய் ருசியா?’ என்ற கிழக்குச் சீமையிலே திரைப்படப் பாடல் போல், ‘அஞ்சாதே அன்னமே! அழகில் விஞ்சியது உனது நடையா, இல்லை இம்மாதர் நடையா என ஒப்பிட்டுப் பார்க்க நின்னைப் பிடித்தது’ என்கிறான் நளன். நளனின் புகழ்மிகுந்த தோளுக்கு இசைவானவள் தமயந்தியே என்று அன்னமும் தன் பங்கிற்கு வசனம் பேசி, காதல் தூது சொல்லப் பறக்கிறது.

அய்யோ! இவ்வளவு பருத்த இள‌முலைகளைச் சுமக்க முடியவில்லையே என்று வாய்விட்டுப் புலம்பும் நுண்ணிய இடையை (மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற மாட்டா திடை) உடைய தமயந்தி, குண்டினபுரத்தைத் தலைநகராகக் கொண்ட விதர்ப நாட்டு இளவரசி. அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும் சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து கிடக்குமாம் அவளது இடை.
‘செந்தேன் மொழியாள் செறியளகபந்தியின் கீழ்
இந்து முறியென் றியம்புவார் – வந்தேன்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்’
என்று தமயந்தியின் நெற்றிக்குத் தனிச் செய்யுளே செய்திருக்கிறார் ஆசிரியர். நள‌மன்னன்புயம் நின் வனமுலைக்குக் கச்சாகும் என அன்னம் தூது சொல்கிறது. காணாமலேயே காதல்நோய் தமயந்தியைப் பீடிக்க, தோழியர் மூலம் மன்னன் அறிய, அன்றிலிருந்து ஏழாம் நாள் சுயம்வரம் என பிறநாட்டு மன்னர்க்கெல்லாம் தூது அனுப்புகிறான்.

மகாபாரதக் கதை தெரிந்தவர்கள் இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் கவனிக்கவும். கணவனைச் சுட்டிக் காட்டி கட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தாள் பீஷ்மரின் தாய். பெண்ணிற்குக் கவுரவம் தந்த சமூகம் அது. சுயம்வரத்திற்கு ஆண்களை அழைத்து அதில் பிடித்தவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே பெண்ணிற்குத் தந்தது பிந்தைய‌ சமூகம். தமயந்தியின் காலம் அது. அப்படி சுயம்வரம் நடத்திய மூன்று சகோதரிகளைத் தான் பீஷ்மர் கடத்திப் போய் தன் சகோதரனுக்குக் கட்டி வைத்தார். பெண்ணுக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்ட பிந்தைய சமூகத்தைச் சேர்ந்தவள் பாஞ்சாலி. அதில் அவள் போட்டியில் வென்றவனுக்குக் கொடுக்கப்பட்டு, ஐந்தாகப் பங்கு போடப்பட்ட‌ பந்தயப் பொருள். ‘தர்மம் வெல்லும்‘ என்ற எனது கவிதையில் இவள்தான் இன்னொரு நாயகி.

அழகைச் சுமந்து சுமந்தே இளைத்துப் போன உடலை உடையவள் தமயந்தி. மாறுவேடத்தில் சென்று முனிவன் மனைவி கற்பெடுத்த கடவுளர்கள் உலாவும் பூமியில், தமயந்தியை எப்படி விடுவார்கள்? தேவர்களும் சுயம்வரத்திற்கு நளனுருவில் வருகின்றனர். கலி என்ற அரக்கனும் வருகின்றான். வழக்கம்போல் நளனைக் கண்டுபிடித்து மாலையிட்டு மணமுடிக்கிறாள். முகம் வெளுத்தனர் தேவர்கள். பலிவாங்க முடிவு செய்கிறான் கலி! ஊடல் காட்சிகள் இனிமேல் கதையில் இல்லை என்பதால், முதலிரவுச் செய்யுள் இதோ:
‘ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவரெனும் தோற்ற மின்றிப் – பொருவங்
கன‌ற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று’.
ஈற்றடியை நினைத்தாலே சிலிர்க்கிறது! போரிடுவதற்குரிய வெம்மையான நெருப்பினை ஒத்திருக்கிற வேலையுடையவன் என்று முதலிரவுக்குச் செல்பவனைச் சொல்வதில் உள்ள குறிப்பான குறும்பைக் கவனிக்கவும்.

Achilles heel போல்தான் கிருட்டிணக்கும் நளனுக்கும்; துரியோதனனுக்கும் தான். ஒருநாள் சந்தியா வந்தனம் செய்த நளனின் பாதத்தில் ஒருசிறு பகுதியில் நீர் படாததைக் கவனித்த கலி, அதன்வழி நளனுள் புகுகிறான். கலியின் தூண்டுதலால், சும்மா இருந்த இன்னொருவனைச் சூதாட அழைக்கிறான் நளன். சகுனியின் பகடையில் கந்தாரியின் தந்தை உருண்டது போல், கலி பகடையாய்ப் புரள்கிறான். வழக்கம்போல் நாடு, மனைவி, இரு பிள்ளைகள் எல்லாவற்றையும் சூதாடி இழந்து, கானகம் புகுகிறார்கள். பறவை உருவில் கலி பறந்து போக, அதைப் பிடித்துத் தா என்கிறாள். தான் உடுத்தி இருந்த ஆடையை அவிழ்த்து வளைத்துப் பிடிக்க நளன் எண்ணினால், அப்பறவை அந்த ஆடையைத் தூக்கிக் கொண்டு பறந்துவிடுகிறது. தமயந்தி ஒற்றை ஆடைக்குள் இருவரும். தன் நிலை நொந்த நளன், அவ்வாடையில் பாதி அறுத்துக் கொண்டு, தூக்கத்தில் இருந்த மனைவி மக்களை வனாந்தரத்தில் விட்டுவிட்டு ஓடி விடுகிறான். நகஞ்சிதையச் செல்கிறான்.

(ரவிவர்மாவின் நளதமயந்தி ஓவியம் https://wikipedia.org)

(ரவிவர்மாவின் நளதமயந்தி ஓவியம். https://wikipedia.org)

தமயந்தியை ஒரு பாம்பு விழுங்குகிறது. அறிவுடை அமைச்சர் ஊழல் போல், எதுவரை விழுங்க வேண்டுமென பாம்பிற்குத் தெரிந்திருக்கிறது!
‘கொங்கைக்கு
மேலெல்லாம் தோன்ற விழுங்கியதே வெங்கானின்
பாலெல்லாம் தீயுமிழும் பாம்பு’.
வேடன் ஒருவன் அவளைக் காப்பாற்றி காமவேட்கையுடன் துரத்துகிறான். தமயந்தியின் சீற்றப் பார்வையில் சாம்பலாகிப் போகிறான் வேடன். வணிகன் ஒருவன் அவளைச் சேதிநகர் கொண்டு சேர்க்கிறான். ஊரெல்லாம் நளதமயந்தியைத் தேடிய விதர்ப நாட்டு அந்தணர்களில் ஒருவன் தமய‌ந்தியைக் கண்டு, மீண்டும் தந்தையிடம் விதர்ப நாடு சேர்க்கிறான்.

ஒரு நாகத்திடம் இருந்து ஆடை பெற்ற நளன், அயோத்தி நகரம் அடைந்து அரண்மனை சமையல்காரனாகிறான். ஊரெல்லாம் நளனைத் தேடும் புரோகிதர்களில் ஒருவன், அயோத்தியில் அவனைப் போல் ஒருவனைக் கண்டதாகத் தமயந்தியிடம் சொல்கிறான். சந்தேகப்பட்ட அவள், உண்மை தெரிய, மறுநாளே தமயந்திக்கு இரண்டாம் சுயம்வரம் என தூது அனுப்புகிறாள். கணவனின் உயிர் பற்றிக் கவலைப்படாமல் மறுமணம் செய்யும் உரிமையைப் பெண் பெற்றிருந்தாள் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். நளன் தேரோட்ட, அயோத்தி மன்னன் இருதுபர்ணன் சுயம்வரத்திற்குப் போகிறான். தனக்கு எண்ணிக் காணும் திறமை இருப்பதாகக் கூறி, சாலையோரத் தோட்டத்தில் பத்தாயிரம் கோடி தான்றிக் காய்கள் இருப்பதாகச் சொல்கிறான் இருதுபர்ணன். நளனும் அதை எண்ணிப் பார்த்து உறுதி செய்கிறான். சுயம்வரத்திற்குச் சில மணி நேரங்களே இருக்கையில், இவ்வளவு காய்களை இரண்டு முறை எப்படி எண்ணினார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். இருபக்கமும் திரண்டு வெறியோடு நிற்கும் படைகளுக்கு இடையே, அவ்வளவு பெரிய பகவத் கீதையை அர்ச்சுனனுக்குக் கிருட்டிணன் சொல்ல முடிந்தது போலத் தான் இதுவும். வானத்தைப் போல திரைப்படத்தில் சின்ன விஜயகாந்த் மண்ணை எண்ணுவது போலத்தான். நளனின் தேரோட்டும் திறமையையும், இருதுபர்ணனின் எண்ணும் திறமையையும் ஒருவருக்கொருவர் கற்பித்துக் கொண்டே விதர்ப நாடு சேர்கின்றனர்.

நளன் நேராகச் சமையற்கூடம் சென்று தன் வேலைகளைப் பார்க்கிறான். தன் மக்களைக் கண்டு அடையாளம் காட்டிக் கொள்ளாமல், அவர்களைப் பற்றி விசாரிக்கிறான். தங்களுக்குரிய நாட்டை இன்னொருவன் ஆள, தாங்கள் தாத்தா நாட்டில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இப்படி இன்னொருவர் தயவில் வாழ்வது தாழ்ச்சி இல்லையா என நளன் கேட்கிறான். ‘உருண்டோடும் தலைகள் நான் எத்தி விளையாடும் பந்துகள்’ என்று 23ம் புலிகேசி சொன்னது போல‌, மணிமுடியிற் றேய்ந்த வடுக்களைப் பாதங்களில் கொண்ட தமது தந்தை, வாய்மையின் வலிமையை நிலைநாட்ட செய்தது, சமையற்காரருக்குப் புரியாது என்கிறார்கள். இதை ‘மன்னர் பெருமை மடையர் அறிவாரோ?’ என்று சிலேடையாகச் சொல்கிறார் ஆசிரியர். மடையர் என்றால் மடைத் தொழில் செய்யும் சமையற்காரர் என்று ஒரு பொருள்; அறிவிலி என்று இன்னொரு பொருள். இவ்வரிகளைப் படித்தவுடன், கவிஞர் கண்ணதாசன் சொன்ன கடைமடையர் – மடத்தலைவர் நகைச்சுவைதான் நினைவிற்கு வந்தது.

மக்கள் இருவரும் நடந்த‌தை அப்படியே அம்மாவிடம் சொல்ல, தமயந்திக்கு உண்மை புரிந்து குடும்பம் சேர்கிறது. தன் கணவனைச் சமையற்கூடத்தில் தமயந்தி கண்டதை எப்படி சொல்கிறார் ஆசிரியர் என்று பாருங்கள்:
‘கொங்கை யளைந்து குழல்திருத்திக் கோலஞ்செய்
அன்கை யிரண்டும் அடுபுகையால் – இங்ஙன்
கருகியவோ என்றழுதாள்’.
வழக்கம்போல் மீண்டும் சூதாடி நாட்டை மீட்க, ‘என்காலத் துன்சரிதம் கேட்டாரை யானடையேன்’ என்று கலியும் நீங்குகிறான். ‘வாழிநளன் காதை வழுத்துவோர்’ என்று நம்மையெல்லாம் வாழ்த்தி இனிதே நிறைவேறுகிறது புத்தகம்! மேலும் கலியைப் பற்றி கலியுகம் பற்றிய ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் விரைவில் பேசலாம்.

அரிச்சந்திர மகராசனின் நாடகம் பார்த்துவிட்டு வந்தவர்களிடம் கருத்து கேட்டார்கள். இனிமேல் வாழ்க்கையில் உண்மை மட்டுமே பேச வேண்டும் என கற்றுக் கொண்டதாக மகாத்மா காந்தி சொன்னார். அவசரத்துக்கு மனைவியை அடகு வைக்க‌லாம் என கற்றுக் கொண்டதாக இன்னொருவர் சொன்னார். தன் மனைவியை ஒரு பிராமணன் தூக்கிக் கொண்டு போனபோது, தடுத்த ஊர் மக்களைக் கணவனே வெட்டிச் சாய்த்த கதை, பெரிய புராணத்தில் உண்டு. சுய இன்பத்தில் வழிந்த விந்துத் திரவத்தை வீணாக்க விரும்பாமல் சேகரித்து, ஒரு பறவையிடம் கொடுத்து மனைவியுடம் பறந்து போய் சேர்க்கச் சொன்ன கதை மகாபாரதத்தில் உண்டு. மொத்த இனமும் அழிந்து போக, தன் இரு மகள்களுடன் உறவு கொண்டு அடுத்த தலைமுறையை உண்டாக்கிய தகப்பன் கதை, விவிலியத்தில் உண்டு. நாம் வயது முதிர்ந்தவர்கள். கதை எது, புனைவு எது, புரட்டு எது, புராணம் எது, பொய்யழகு சுமந்து வரும் கவிதை எது, அரசியல் பிழைப்போர் திணிப்பு எது என தரம் பிரிக்கத் தெரிந்தவர்கள் நாம். இனியவை நாற்பது இருந்தால், இன்னா நாற்பது இருக்கவும் செய்யும். இனியவை அறியாவிடினும், இன்னாததை அடுத்தவன் மேல் திணிக்காமல் இருக்க வேண்டி, முன்னோர்களைப் படிப்பீர் இனியவர்களே!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)