146. இருநூற்று நாற்பத்து ஐந்து கிராமங்கள் (245 Villages)

Huáng Hé river. ஹோவாங்கோ ஆறு. சீன நாகரீகத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஆறு. ஆண்டுக்குப் 14 இலட்சம் டன் வண்டலைச் சேற்றுடன் கடல் சேர்ப்பதால், கலங்கிய நீர் கொண்ட ஆறு. இதனால் மஞ்சளாறு என்ற பெயரும் உண்டு. குதிரைக் கொம்பு, கோழி மூத்திரம், மேற்கில் உதயம் என்று நம்மூரில் சொல்வது போல், ‘மஞ்சளாறு தெளிவாக ஓடும்போது பார்க்கலாம்’ என்ற சொல்லாடல் சீனாவில் பிரபலம். அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கில் பெருஞ்சேதம் ஏற்படுத்தும் ஆறு. கொள்ளைநோய் பஞ்சம் தவிர்த்து, இதுவரை உலகம் கண்ட இயற்கையின் பேரழிவுகளில் மிகக் கொடூரமானது, 1931ல் மஞ்சளாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10-40 இலட்சம் மக்கள் மடிந்ததுதான்! இரண்டாவது மிகப் பெரும் பேரழிவும், மஞ்சளாற்று வெள்ளத்தால் 9-20 இலட்சம் மக்கள் 1887ல் இறந்ததுதான். இதனால் சீனாவின் துயரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. 1938ல் ஜப்பானுடன் நடந்த போரில், அவர்கள் முன்னேறுவதைத் தடுக்க, தடுப்பணைகளைத் திறந்துவிட்டு, கிட்டத்தட்ட தனது சொந்த மக்கள் 8 இலட்சம் பேரைச் சீன அரசே கொன்ற கதையும் உண்டு. இதுவரை சொன்ன விவரங்களில், ‘சீனாவின் துயரம் என ஹோவாங்கோ நதி அல்லது மஞ்சளாறு அழைக்கப்படுகிறது’ என்ற ஒற்றை வரியை மட்டும் நடுநிலை வகுப்புகளில் படித்திருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு விடுமுறையில் கவிஞர் நந்தலாலா அவர்களின் பட்டிமன்றம் ஒன்றை ஆடியோ கேசட்டில் கேட்டபோது, கூடுதல் விவரங்கள் கிடைத்தன. சீனாவின் துயரம் என்று அழைக்கப்பட்ட மஞ்சளாற்றின் குறுக்கே அணைகள் கட்டி, வெள்ளத்தைத் திசை திருப்பி, வறண்ட பகுதிகளில் பாயவிட்டு, பலர் பயனடையச் சீன அரசு செய்ததாகச் சொன்னார். இப்படி பண்டைய சீனாவின் துயரம், நவீன சீனாவின் அடையாளமாக மாற்றப்பட்டது 1950களில். அப்போது எந்தாயின் மூத்த சகோதரன் கூட பிறந்திருக்கவில்லை. ஆனால் என் காலத்தில், சீனாவின் துயரம் என்றுதான் அவ்வாற்றை எனக்குப் பாடப் புத்தகங்கள் சொல்லிக் கொடுத்தன. எனக்குப் பின் படித்தவர்களும் அப்படித்தான் படித்தார்கள் என்பதை அப்போதே சோசித்துத் தெரிந்து கொண்டேன். வாழ்க இந்திய கல்விமுறை!

மஞ்சளாற்றின் இன்றைய நிலை? 1972ல் முதன்முதலில் மஞ்சளாறு வறண்டு போனது! அடுத்த 35 ஆண்டுகளில் பெரும்பாலும் கடல் அடையவில்லை!! 1997ல் மட்டும் 230 நாட்கள் கடல் சேரவில்லை!!! ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆதிசீனர்கள் நாகரீகத்தின் தொட்டிலாகக் கருதி காத்து வந்த நீர்த்தாயை, 30 ஆண்டுகளில் ஊனமாக்கிப் பார்த்தது நவீன சீனா!!!! உயிருடன் ஓடிய‌ நதி, உயிரற்ற ஏரிகளாக குட்டைகளாக குளங்களாக ஆங்காங்கே தேங்கிப் போனது. இந்திய கல்விக் கூடங்கள் இன்றும் மஞ்சளாற்றைச் சீனாவின் துயரம் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அணைகளில் வேகமாகத் தேங்கும் வண்டலின் எடையையும் கொள்ளளவையும், தேக்கி வைக்கப்படும் நீரின் எடையையும், இவை இரண்டும் பூமிக்குக் கொடுக்கும் அழுத்தத்தையும், அதன் மூலம் நிலத்தில் எப்போதும் ஏற்படும் நடுக்கத்தையும் (Dam Quake), கான்கிரீட் கால்வாய்களால் நீரிறங்க முடியாமல் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்குப் போனதையும், நிலம் உப்பானதையும், பாசனத்திற்குக் கால்வாய்களில் நீர் வெகுதூரம் எடுத்துச் செல்லப்படும் போது மேற்பரப்பு அதிகரிப்பதால் ஆவியாதலும் அதிகரிக்கும் என்பதையும் கணக்கில் எடுக்காததை மிகப் பொறுமையாகத் தான் பொறியியல் புரிந்து கொண்டது.

இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப் பழமையான நாகரீகத் தொட்டில், சிந்து சமவெளி. இந்தியாவிற்குப் பெயர் கொடுத்த அச்சிந்து நதி, பிரிவினையில் பாகிஸ்தானின் பங்காகப் போனது. கஷ்மீரில் இஸ்லாமபாத் என்ற ஊரின் பெய‌ரையே பொறுக்க முடியாமல் அனந்தநாக் என்று மாற்றிய மதவாதிகள், சிந்து என்ற வார்த்தையைத் தேசிய கீதத்தில் இருந்து நீக்கச் சொல்லிக் கத்தினர். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்று பாரதி பாடிய அந்த‌ சிந்து நதிக்கும், இன்று மஞ்சளாற்றின் நிலைதான்! எப்போதாவது வந்து போகும் அந்நதிக்காக அரபிக் கடலும் காத்துக் கிடக்கிறது.

மூளையைப் போலவே ஆறுகளும் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட பாதையை இயற்கையிலேயே அமைத்து வைத்திருக்கின்றன. காயம்/பூகம்பம், சேதம்/வெள்ளம், ஊனம்/வறட்சி போன்ற காரணங்களால் அப்பாதைகளில் சின்னச்சின்ன மாறுதல்களை அவைகளே சில நேரங்களில் தாமாகவே செய்து கொள்வதுண்டு. வெளியாட்கள் செப்பனிடும் பாதைகளை அவை ஒரு காலத்தில் மிகக் கொடூரமாகவே மறுதலிக்கின்றன என மஞ்சளாறு மூலம் உலகம் உணர்ந்தது. வைரமுத்து பாடியது போல் நதியும் பெண்தான். ஆலைக்கழிவு கற்பழிப்பு. மணற்கொள்ளை கருவழிப்பு. பேரணைகள் கருச்சிதைப்பு.

அணைகளின் வன்முறை பற்றி பல புத்தகங்கள் தமிழிலேயே உண்டு. அவற்றில், பசுமைப் புரட்சி என்ற பெயரில் இந்தியாவில் அமெரிக்கா நடத்திய நாடகத்தில், பாரம்பரிய விவசாயமும் நீர்நிலைகளும் கொல்லப்பட்ட கதைகள் சொல்லும் நல்ல புத்தகம் இது:
புத்தகம்: பசுமைப் புரட்சியின் வன்முறை
ஆசிரியர்: வந்தனா சிவா
வெளியீடு: பூவுலகின் நண்பர்கள் + வம்சி
முதல் ஈடு: டிசம்பர் 2009
பக்கங்கள்: 225
விலை: ரூபாய் 100
இயற்கைப் பேரழிவுகளையும் கொள்ளை நோய்களையும் தவிர்த்து தினவாழ்க்கையை, அணை உட்பட அனைத்தையும் அணுவணுவாக அளக்கும் Everybody loves a good drought என்ற புத்தகமும் படிக்கலாம்.

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் நடந்ததுதான் மனிதயின வரலாற்றில் மிகப்பெரிய இடம்பெயர்வு. பங்களாதேஷை உருவாக்க பாகிஸ்தானுடனான போரில், 90000 பேரை இந்தியா கைது செய்ததுதான் யுத்த வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கை. இந்தியாவுடன் உலக அளவில் ஒப்பிட்டுச் சொல்ல இன்னொரு புள்ளிவிவரமும் உண்டு: சுதந்திரம் பெற்ற பின் அணைகளுக்காக உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்க்கப் பட்டவர்கள் மட்டும் 5.6 கோடிக்கும் மேல்!

வைகையில ஊர் முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டி வந்து
கரைசேத்து விட்டவளே!
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?
– வைரமுத்து
——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: 245 Villages – A Narmada Tutorial
ஆசிரியர்க‌ள்: Ravi Kuchimanchi, Aravinda Pillalamarri, Kirankumar Vissa, Om Damani, Nigamanth Sridhar, Mohan Bhagat
வெளியீடு: Association for India’s Development (AID India) (http://www.aidindia.org/main/)
முதல் ஈடு: 2005
பக்கங்கள்: 191
விலை: ரூபாய் 120
வாங்கிய இடம்: சென்னை புத்தகக் கண்காட்சி 2014
——————————————————————————————————————————————————————————————–
நர்மதா நதி. இந்தியாவின் ஐந்தாவது பெரிய நதி. விந்திய சாத்புரா மலைத் தொடர்களுக்கு இடையே மத்திய பிரதேசத்தில் தோன்றி மேற்காக ஓடி அரபிக் கடலில் கலக்கிறது. மத்திய பிரதேசத்தின் உயிர்நாடி என்ற பெயர் பெற்றது. மேற்கோடும் மூன்று இந்திய நதிகளில் மிக நீளமானது இதுதான். விந்திய மலைத் தொடரும் அதற்கு இணையாக ஓடும் நர்மதாவும்தான் காலங்காலமாக வட-தென் இந்தியாவின் எல்லைகளாகக் கருதப்படுகின்றன. ஆரியத்தால் அப்போது தாண்ட முடியவில்லை என்பதால் மதவாதிகள் சொல்லும் இந்துஸ்தான் என்பதெல்லாம் விந்திய மலைகளுக்கு வடக்கே தான். தெற்கே திராவிட நாடு. பாவங்களைக் கழுவுவதாக இந்துமதம் சொல்லும் ஏழு நதிகளில் நர்மதாவும் ஒன்று. சிவனின் வியர்வைத் துளிகள் நர்மதாவாக ஓடுவதாக ஒருகதை. பிரம்மனின் கண்ணீர்த் துளிகள் நர்மதாவாக ஓடுவதாக இன்னொரு கதை. மக்கள் குளித்துக் குளித்து அழுக்காகிப் போன கங்கை, கருப்புப் பசுவாக மாறி, தன்னைக் கழுவ நர்மதா வந்ததாக மற்றொரு கதை. கங்கையை விட மூத்தவள் நர்மதா. அருந்ததி ராய் சொன்னது போல், இந்து மதத்தை விடவும் மூத்தது நர்மதா நாகரீகம். நர்மதாவின் இன்றைய‌ கதை, நவீன இந்தியாவின் கதை!

நர்மதாவின் மொத்த‌ நீளம் 1315கிமீ. அதில் 1077கிமீ மத்திய பிரதேசத்தில். 35கிமீ மத்திய பிரதேச – மஹாராஷ்ட்ர எல்லை. 39கிமீ மஹாராஷ்ட்ர – குஜராத் எல்லை. 161கிமீ குஜராத்தில் ஓடி அரபிக் கடல் அடைகிறது. 1163கிமீக்கு அப்பால் குஜராத்தில் 1.21கிமீ அகலமுள்ள‌ சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டு இருக்கிறது. நவீன இந்தியாவின் மாபெரும் திட்டங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வைச் சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்த்த அணையிது. நர்மதாவின் நன்னீரில் தலை மட்டும் தெரியும் மட்டத்தில் நின்றுகொண்டு அம்மக்கள் போராடிய ஒரு சமயத்தில், நம்மக்கள் கூடங்குளத்தில் வங்கக்கடல் உப்புநீரில் அப்படி போராடியதைப் பெரும்பாலான‌ நம்மூர் ஊடகங்கள் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

1961 – சர்தார் சரோவர் அணைக்கு ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். நர்மதா பாயும் மூன்று மாநிலங்களும் தங்களுக்கென தனியாக சில திட்டங்கள் வைத்திருந்ததால் ஏற்பட்ட‌ கருத்து வேறுபாட்டால் கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது.
1969 – நர்மதா நதிநீர் ஆணையம் (Narmada Water Disputes Tribunal – NWDT) நிறுவப்பட்டது. கடல் மட்டத்திற்கு மேல் 455 அடி உயர அணைக்கும், அதில் அதிகபட்சமாக 460 அடிக்கு நீரைத் தேக்கி வைக்கவும் உறுதி செய்தது. மொத்தம் 28 Million Acre Feet (=1.234 TMC) நீரில், குஜராத்திற்கு 9MAF, மத்திய பிரதேசத்திற்கு 18.25MAF, மஹாராஷ்ட்ராவிற்கு 0.25MAF, இராஜஸ்தானிற்கு 0.5MAF. மின்சாரத்தில் மத்திய பிரதேசத்திற்கு 57%, மஹாராஷ்ட்ராவிற்கு 27%, குஜராத்திற்குப் 16%. இதை எல்லாம் நடைமுறைப்படுத்த நான்கு மாநிலங்களுக்கும் சம உரிமையும் தரப்பட்டது. இத்திட்டத்தால் துளி நிலமும் மூழ்கடிக்கப்படாத, நர்மதா பாயாத இராஜஸ்தானுக்கும் (non-reparian state) சம அதிகாரம் தரப்பட்டது. சர்வதேச விதிகளின்படி, இயற்கையாகவே ஆறு பாயும் மாநிலங்களுக்கே இவ்வுரிமைகள் உண்டு; அதுவும் ஆறு பாயும் நீளத்திற்கு ஏற்ப உரிமைகளின் பங்கும் அமையும். சர்வதேச விதிகளின்படி இராஜஸ்தானிற்கு இத்திட்டதைத் தீர்மானிக்கும் உரிமையில்லை.
1979 – 30 பேரணைகளையும், 135 நடுத்தர அணைகளையும், 3000 சிற்றணைகளையும் உறுதி செய்தது ஆணையம்.
1985 மே – அணைக்காக 45 கோடி டாலர்கள் கடனுக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்தது.
1987 ஏப்ரல் – பின்னாளில் தேர்தல் ஆணையத்தை வெகு மக்களுக்குக் கொண்டு சேர்த்து ஜனாதிபதி தேர்தலில் நின்ற‌ டி.என்.சேஷன், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தலைமைச் செயலாளராக இருந்தபோது, சர்தார் சரோவர் அணைத் திட்டத்திற்கு ஒப்புதல் மறுத்தார். ராஜீவ் காந்தியின் பிரதமர் அலுவலகம் அதைக் கண்டு கொள்ளவில்லை.
1987 – திட்டக்குழு சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஒப்புதல் அளித்தது.

பர்கி அணைதான் நர்மதாவின் மீது கட்டப்பட்ட முதல் அணை. அது பாசனம் செய்யும் நிலத்தை விட, மூழ்கடித்த நிலம்தான் அதிகம். திட்டமிடப்பட்டதில் வெறும் 5% நிலத்திற்கு மட்டுமே பாசனம் செய்கிறது. 1938ல் மஞ்சளாற்றில் செயற்கையாக உண்டாக்கப்பட்ட வெள்ளம் போல், ஒரு மழைக் காலத்தில் பர்கி அணை மதகுகளைத் திறக்காமல் முழுக் கொள்ளளவிற்கும் நிறையவிட்டு என்ன நடக்கிறது என்று பொறியாளர்கள் வேடிக்கை பார்த்தார்களாம். அது இன்னும் அதிக கிராமங்களைக் கரைத்துப் போனது. கிட்டத்தட்ட‌ 16கிமீ அகலத்தில், தனக்குப் பின் 214கிமீ நீளத்துக்கு நிலத்தை மூழ்கடிக்கிறது சர்தார் சரோவர் அணை. நீர்மூழ்கும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமே அணையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அரசாங்கக் கணக்கு. மேலும் பொறியாளர்களுக்கான குடியிருப்புகள், சரணாலயங்கள், வயல்களினூடே வெட்டப்பட்ட கால்வாய்கள் என வெளியேற்றப்பட்டவர்களையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 45,000 குடும்பங்கள். 2 இலட்சம் பேர். மொத்தம் 245 கிராமங்கள். அதில் குஜராத்தில் 19, மஹாராஷ்ட்ராவில் 33, மத்திய பிரதேசத்தில் 193. நீரில் மூழ்கிப் போன பழமையான காடுகளும், புராதனச் சின்னங்களும் ஏராளம். மீனவர்கள் போன்று, அணைக்கு அப்பால் இருந்து வாழ்வாதாரம் இழப்பவர்கள் கணக்கில் இல்லை.

21.10.1987 – மூன்று மாநிலங்களில் இருந்து திரண்ட மக்களின் மாபெரும் பேரணி கெவடியா நகரில் நடந்தது.
1988 – கெவடியா நகரில் 4000 பேர் போராட்டம் நடத்தினர்.
1989 – பல்வேறு ஒத்தக் கருத்துடைய அமைப்புகளை ஒன்றிணைத்து மேதா பட்கர் தலைமையில் நர்மதா பச்சாவோ ஆந்தோலன் (Narmada Bachao Andolan – NBA) உதயமானது.
1989 சனவரி – கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர்.
1989 பிப்ரவரி – அணைக்கு அருகில் 10000 பேர் ஊர்வலம் நடத்தினர்.
1989 செப்டம்பர் – ‘வளர்ச்சி வேண்டும் வளர்ச்சி வேண்டும், நாசம் செய்யாத‌ வளர்ச்சி வேண்டும்’ என்ற முழக்கத்துடன் ஹர்சுத் நகரில் 50000 பேர் போராட்டம் நடத்தினர்.
1990 மார்ச் – பம்பாய் ஆக்ரா நெடுஞ்சாலையில் 10000 பேர் மறியல் செய்தனர். பம்பாயில் காலவரையற்ற உண்ணாவிரதம்.

1990 – அணைக்காக ஒதுக்கிய 27 பில்லியன் யென் கடனை ஜப்பான் திரும்பப் பெற்றது.
1990 டிசம்பர் – 1991 சனவரி – மேதா பட்கரின் 21 நாட்கள் உண்ணாவிரதம்.
1991 ஆகஸ்ட் – அணையில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ள மணிபெலி கிராமத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் காவல்துறை கைது செய்தது.
1992 மார்ச் – மலு குடியிருப்பில் அமர்த்தப்பட்ட மக்கள், தங்கள் சொந்த கிராமமான வட்கானுக்குத் திரும்பினர்.
1992 – மணிபெலி கிராமத்தில் 18 வீடுகளை அப்புறப்படுத்த 500 காவல்துறையினர் தங்கி, கைதுகள் மற்றும் வன்கொடுமைகளுடன் இரு ஆதிவாசி பெண்களைக் கற்பழித்தனர்.
1992 நவம்பர் – நட்சத்திர ஓட்டலில் அழகிப் போட்டி கண்டு களித்ததால், பேச விரும்பிய‌ நர்மதா போராட்டக்காரர்களுக்கு நேரம் ஒதுக்க, பம்பாய் வந்திருந்த உலக வங்கி கவர்னரால் இயலவில்லை.
1993 மார்ச் – அணைத் திட்டத்தில் இருந்து உலக வங்கி விலகியது.
1993 சூன் – தன் சொந்த செலவில் அணை கட்டப் போவதாக குஜராத் அரசு அறிவித்தது. மணிபெலி கிராமம் முதலில் மூழ்கியது.
1994 பிப்ரவரி – சர்தார் சரோவர் அணைக்குக் காரணமான முதல்வர் சிமன்பாய் பட்டேலின் அஸ்தி அணையில் கரைக்கப்பட்டது. மாமிச உணவைத் தடை செய்து, அடுத்தவன் சோற்றில் மண்ணைப் போட்ட‌ முதல் இந்திய முதல்வர் இவர்தான்.

1994 பிப்ரவரி – குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி மதகுகள் மூடப்பட்டன.
1994 டிசம்பர் – மீள்க் குடியமர்த்த நிலமில்லை என மத்திய பிரதேசம் அறிவித்தது.
1995 சனவரி – மத்திய பிரதேசத்தின் எதிர்ப்பால் அணை வேலைகள் நிறுத்தப்பட்டன.
1995 மே – அணை வேலைகளைத் தொடரக் கேட்ட குஜராத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 262 அடியுடன் அணை நின்றது.
1999 – உயரத்தை 436 அடியாகக் குறைக்க மத்திய பிரதேசம் கேட்டது. அதனால் மற்ற மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, தனது பங்கு மின்சாரம் முழுவதையும் தாரை வார்க்க தயாராக இருந்தது.
1999 பிப்ரவரி – மேலும் 5 அடி உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஏப்ரல் 1999 – இந்தியாவின் முதல் தனியார்மய அணையும் நர்மதாவின் மீதுதான் கட்டப்பட்டது. மஹேஷ்வர் என்ற அந்த அணையில் இருந்து இரு ஜெர்மன் நிறுவனங்கள் விலகின.
2000 சனவரி – 2005க்குள் அணையைக் கட்டி முடிக்க முடிவெடுக்கப்பட்டது.

2000 அக்டோபர் – முழு உயரத்திற்கும் கட்டி முடிக்க இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது.
2000 – 1998ல் பொக்ரான், 1999ல் கார்கில், 2000ல் சர்தார் சரோவர் அணை என இம்மூன்றையும் தேசபக்தியுடன் இணைத்து அணைக்கு அருகில் உள்துறை அமைச்சர் லால் கிருஷ்ண‌ அத்வானி உரையாற்றினார்.
2002 – வளர்ச்சி என்ற பெயரில் பேர‌ணை செய்வதும், போர் என்ற பெயரில் அணுவாயுதம் செய்வதும் ஒன்றுதான் என்ற‌ அருந்ததி ராய்க்கு ஒருநாள் சிறைவாசமும், 2500 ரூபாய் அபராதமும்.
2006 – மேதா பட்கருக்கு ஆதரவு தெரிவித்த அமீர் கானின் ரங் தே பஸந்தி திரைப்படத்தைக் குஜராத் திரையரங்குகள் நிறுத்தின. திரைப்படம் வெளியான பின்பு அமீர் கானும் ஆதரவை நிறுத்தினார்.

மேட்டூருக்காகக் காத்திருக்கும் கல்லணை போல‌, கபினிக்காகக் காத்திருக்கும் மேட்டூர் போல, நர்மதா சாகர் என்ற மற்றொரு பெரிய அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர்தான் சர்தார் சரோவர் சேர்கிறது. அங்கிருந்து பிர‌தான‌ கால்வாய் குஜராத்தில் 460கிமீ, இராஜஸ்தானில் 74கிமீ செல்கிறது. அதிலிருந்து பிரிந்து செல்லும் சிறு கால்வாய்களையும் சேர்த்து மொத்த நீளம் 75,000கிமீ. உலகின் மிக நீளமான பாசனத் திட்டம் இது.
24.4.2008 – நர்மதா கால்வாய் திறக்கப்பட்டது. சூரிய ஒளித்தகடுகளால் மூடப்பட்டு ஆவியாதல் குறைக்கப் படுவதுடன், மின்சாரம் தயாரிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. வளர்ச்சியின் நாயகனாக முதல்வர் மோடி முன்னிறுத்தப்பட்டார்.
7.10.2010 – அணைக்கு அருகில் வல்லபாய் பட்டேலுக்கு உலகின் மிகப் பெரிய சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
13.7.2014 – நரேந்திர மோடி பிரதமரான சில‌ வாரங்களுக்குள், அணையின் உயரத்தை 17மீ உயர்த்த கேட்ட குஜராத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அனுமதி கிடைத்தது. அப்படி நடந்தால், சர்தார் சரோவர் உலகின் மிக உயரமான இரண்டாவது அணை.
24.7.2014 – எதிர்ப்புகளினால், மதகுகளை மட்டுமே கட்டப் போவதாகவும், அவற்றை மூடப் போவதில்லை எனவும் அரசு அறிவித்தது.

AID அமைப்பைச் சேர்ந்த சிலர் தன்னார்வத்துடன், நர்மதாப் பள்ளத்தாக்கில் களப்பணி அனுபவங்களே இப்புத்தகம். போராட்ட வரலாறு, அம்மக்களின் போராட்டக் கீதங்கள், அவர்களுடனான உரையாடல், தீர்ப்புகள், செய்தித் துணுக்குகள், உண்மை நிலை என பல தளங்களில் விரிகிறது இப்புத்தகம். மீள்க் குடியமர்த்த இல்லாத நிலத்தை வாக்களித்த மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் போராட்டத்தில் பதவி விலகிய கதையையும், அதே நிலையைச் சமாளிக்கத் தெரியாத துணை ஆட்சித் தலைவரின் பதவி உயர்வு நிறுத்தப்பட்ட கதையையும் நேரில் பார்த்து படம்பிடித்ததாக ஆசிரியர்கள் சொல்கின்றனர்.

அணைகள் என்பதே நீராதாரத்தை ஓரிடத்தில் குவித்து, யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானிப்பதுதான்! சர்தார் சரோவர் அணையின் முக்கிய நோக்கம், வறண்ட குஜராத் பகுதிகளுக்கு நீர் அளிப்பது. இடம்பெயர்க்கப் படுகிறவர்கள் எல்லாம் ஆதிவாசிகளும் தலித்துகளும் தான். இன்னும் கோத்ராவிற்குப் பதில் சொல்லாமல், நமக்கெல்லாம் விளம்பரப் படுத்தப்படும் குஜராத்தின் வளர்ச்சியின் நிலையிது. ம‌ஹாராஷ்ட்ராவின் தண்ணீர் மலைகளுக்கு இடையே மாட்டிக் கொண்டிருக்கிறது. நர்மதாவின் பெரும்பகுதி இருந்தும், இவ்வணையால் பெரும் இழப்புகள் சந்திக்கும் மத்திய பிரதேசத்திற்கு இத்திட்டத்தால் பலனில்லை. 436 அடி உயர அணையில் இருந்து 91 அடி உயர குஜராத்தின் கால்வாய்களுக்கு நீர், ஆண்டு முழுக்க சீராக திறந்து விடப்படுகிறது. அதாவது குஜராத்திற்குத் தேவையான நீர், மத்திய பிரதேசத்தின் நிலங்களில் தேக்கி வைக்கப்படுகிறது. 436 அடிக்குப் பதிலாக 110 அடியில், குஜராத்தின் இதே 9MAF நீர்த்தேவையை மழைக் காலத்தில் திறந்துவிட்டு, அதைக் குஜராத்தின் நிலங்களில் சேர்த்து வைத்து, தேவைப்படும் போது ஆண்டு முழுக்க பயன்படுத்திக் கொள்வதே மக்களை அதிகம் பாதிக்காத எளிய திட்டம் என வாதிடுகிறது புத்தகம். குஜராத்தின் உயிர்நாடியாகவும் மேற்கிந்தியாவின் முதுகெலும்பாகவும் இவ்வணை சொல்லப்படுகிறது. அதை மத்திய பிரதேசத்தின் உயிர்நாடியைக் குதறி அடைவதில் ஏது நீதி?

மஞ்சளாற்றைப் போல் வண்டல் படியும்வீதம் எதிர்பார்த்ததை விட 360% நர்மதாவில் அதிகம்! இவ்வணை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை இப்புத்தகம் கண‌க்கிடுகிறது. தோராயமாக 30 மெகா வாட். ஆனால் விளம்பரப் படுத்தப்பட்டது 250 மெகா வாட். ஒரு குளிரூட்டி (a/c) 1 கிலோ வாட் எடுப்பதாகக் கொண்டால், 30000 குளிரூட்டிகளுக்காக 45000 குடும்பங்கள் துரத்தப் படுகின்றன! கால்வாய்களுக்கு நீரேற்ற அணையும் கொஞ்சம் மின்சாரம் உறிஞ்சுகிறது. 18 இலட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுவதாகச் சொல்லப் படுகிறது. அணையில் இருந்து அந்நிலங்களுக்கு நீர் எடுத்துச் செல்ல ஆகும் செலவு 400 பில்லியன். வகுத்தால் 222222 ரூபாய். ஒரு ஹெக்டேருக்கு இவ்வளவு செலவு தேவையா? சுடுகாட்டுக் கொட்டகை வரை ஊழல் மலிந்த இந்நாட்டில் இவ்வளவு பெரிய அணையில் ஊழல் இல்லாமலா?

இன்று ஜவ்வாது மலையை வெட்டி ஒட்டி உருமாற்றி, மோதும் காற்றை மேலெழுப்பி, தவழும் மேகங்களை மழை பெய்யச் செய்து, அந்நீரைச் சென்னை கொண்டுபோய் குடிநீர் வழங்கும் ஒரு திட்டம் பரிசீலனையில் உள்ளது. இமயமலையில் இருந்து தார் பாலைவனத்தில் ஜெய் சால்மருக்குக் கால்வாய்களில் நீர் கொண்டு போன திட்டம் ஒன்றுண்டு. அக்கால்வாய்கள் இன்று பாலைவன மணல்மூடிக் கிடக்கின்றன. ஆண்டுக்கு வெறும் 5செமீ மட்டுமே மழை பெறும் அப்பகுதி மக்கள், நீருக்காக அரசை நம்பியில்லை. அவர்கள் நீரின் உன்னதம் அறிந்து அதை மதிக்கிறார்கள். ஆனால் புராண காலத்துச் சரஸ்வதி நதியைப் பாலைவனத்தில் தேட மதச் சார்பற்ற‌ அரசு நிதி ஒதுக்குகிறது. கட்டுக்கு அடங்காத சுற்றுலா பயணிகளுக்காக‌ இரு வாரங்களே ஆயுள் கொண்ட அமர்நாத் பனிலிங்கத்தின் ஆயுளை நீட்டிக்க, பஞ்சாப்பில் இருந்து அரசே உலர்பனி கொண்டு வருகிறது. புனித நதி நீரென குப்பிகளில் அடைத்து அரசே கோதாவரியை விற்பனை செய்கிறது. கவிஞர் அறிவுமதி சொன்னது போல் காமத்தைக் காசாக்கியவ‌ர்கள் நீரையும் விடவில்லை!

அன்று கவர்னர் ஜெனரல் திருவண்ணாமலை குடமுழுக்கிற்கும், ஜனாதிபதியும் உள்துறை அமைச்சரும் சோம்நாத் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கும் என மதம் நோக்கி சுதந்திர இந்தியா பயணித்தது. அவர்களைத் தடுத்த நேருவே, கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலை நிறுவ கட்டாயப் படுத்தப்பட்டார். அதனால் தான் நேரு, சட்லஜ் குறுக்கே பக்ரா அணை அடிக்கல் நாட்டு விழாவில், ‘அணைகள் நவீன இந்தியாவின் கோவில்கள்’ என்றார். அவர் வாழ்நாளிலேயே அது தவறு என்று உணரவும் செய்தார். நமது குளிரூட்டிகளுக்காகவும் ஆடம்பரச் சாதனங்களுக்காகவும் கூடங்குளம் போன்று எங்கோ மூலையில் எல்லாமும் பறிக்கப்பட்டு விரட்டப்பட்ட மக்கள், சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாய்த் திரிவதை நாம் என்று உணர‌ப் போகிறோம்?

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)