148. The myth of the holy cow (புனிதப்பசு என்னும் புரட்டுக்கதை)

(இப்படி நடந்தது, இப்படியே நடக்கிறது, இப்படியும் இனி நடக்கும் என்று சொல்லித் தந்த அம்பேத்கருக்குச் சமர்ப்பணம்)

ஆதியிலும் பறையனல்ல‌
சாதியிலும் பறையனல்ல‌
நீதியிலும் பறையனல்லவே – நானே
பாதியிலே பறையனானேனே!
– அரிச்சந்திர மயான காண்டம்

A civilization can be judged by the way it treats its minorities.
– Mohandas Karamchand Gandhi

கேள்வி 1: ஒரு மானின் அழகில் மயங்கி, தன் மனைவி சீதை அதைப் பிடித்துத் தர சொன்னதும், ஆசையாய்க் கேட்ட மானை உயிருடன் கொண்டு வராமல், ஏன் இராமன் கொன்று கொணர்ந்தான்? எனக்கு இராமாயணம் சொல்லித் தரப்பட்ட போது, நான் கேட்ட கேள்வி இது. சைவம் அசைவம் என்ற வார்த்தைகளுக்கு எனக்கு அப்போது அவ்வளவாக அர்த்தம் தெரியாது.

கேள்வி 2: ‘தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்’ என்று பாட‌ப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் இருக்கும் தீண்டாமையை அப்போது அவ்வளவாக உணர்ந்ததில்லை. ஆனால் இன்று மாநில அரசுகள் அசைவ உணவைத் தடை செய்கின்றன. ஐஐடிகளின் சைவ-அசைவ உணவுகளுக்குத் தனித்தனி உண்ணும் இடங்கள் அமைப்பது சாத்தியமா என்று ஆராய, மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் உத்தரவிடுகிறது. அசைவ உணவு சாப்பிடுகிறவர்களால் தான் நாட்டில் கொலை கொள்ளை கற்பழிப்பு அதிகரித்து விட்டதாக சில பாடப் புத்தகங்கள் எழுதுகின்றன. மாட்டிறைச்சிக்காக சந்தேகத்தின் பேரில் கூட கொலை செய்யப்படும் அளவிற்கு நாடு போய்விட்டது. இயற்கையிலேயே ஊன் உண்ணியான மனிதயினம் அசைவம் சாப்பிடுவது தவறா? அதிலும் மனித உயிரை எடுக்கும் அளவிற்கு மாட்டிறைச்சி மாதவறா?

கேள்வி 3: பசுவைப் புனிதம் என்கிறார்கள். மாட்டிறைச்சி வழக்கம் நமது பாரம்பரியத்தில் இல்லை என்கிறார்கள். படையெடுத்த இஸ்லாமியர்களும் கிறித்தவ மிசனரிகளும் மாட்டிறைச்சியை இங்கு பரப்பியதாக சொல்கிறார்கள். உண்டால் பாகிஸ்தான் போகச் சொல்கிறார்கள். இஸ்லாமும் கிறித்தவமும் இங்கு வரும்முன் நம் முன்னோர்கள் மாட்டிறைச்சி உண்டதில்லையா? செய்யும் தொழிலை வைத்து இங்கு பல‌ சாதிகள் உண்டு. ஆனால் ஒரே ஒரு சாதி மட்டும் உண்ணும் உணவை வைத்து அறியப்படுகிறது. அவ்வுணவு மாட்டிறைச்சி! புனிதம் என்றால் ஒரு சாதியை மட்டும் ஏன் உண்ணச் சொல்ல வேண்டும்? புனிதத்தை உண்ணுபவனை ஏன் தாழ்த்தப் பட்டவன் என்று சொல்ல வேண்டும்? இப்பாரம்பரியம் காலங்காலமாக இஸ்லாமும் கிறித்தவமும் இங்கு வருவதற்கு முன்பிருந்தே உண்டென்பதும் நாம் அறிவோம். பின் ஏன் அவர்கள் மேல் பழி சொல்கிறார்கள்? திடீரென அத்தாழ்த்தப்பட்ட சாதியின் பாரம்பரிய உணவை ஏன் தடை செய்ய வேண்டும்?

கேள்வி 4: சமூகத்தில் இருக்கும் சாதீய ஏற்றத்தாழ்வுகளை அசைத்துப் பார்க்க காளமேகப் புலவர் ஒரு பாடல் எழுதினார்:
“மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான் கொல்லனே – தேடி
இரும்படிப்பான் செக்கான்எண் ணெய்விற்பான் வண்ணான்
பரும்புடவை தப்பும் பறை”
அப்படியே படித்தால் அதிர்ச்சியை உண்டாக்கும் செய்யுள் இது. ஈற்றடியின் ஈற்றுச் சீரை எடுத்துப் போய் முதலடியில் சேர்த்துப் படிக்க வேண்டும், என பூட்டுவில் பொருள்கோள் அணிக்கு மிகச் சிறந்த உதாரணமாக இச்செய்யுள் அறியப் படுகிறது. ஒரு வேளை காளமேகப் புலவர் இயல்பாக எழுதிய செய்யுளைப் பூட்டுவில் பொருள்கோள் அணியாக காலம் மாற்றிப் புரிந்து கொண்டதா?

ஒரே பதில்: வட இந்தியாவை முகமது கோரி தாக்கிய அதே காலத்தில் மாட்டிறைச்சியைத் தடை செய்யாத அரசர்கள் தென்னிந்தியாவில் இருந்தார்கள் என்பதும், பெரும்பாலான மொகலாய மன்னர்கள் தாமே முன்வந்து மாட்டிறைச்சியைத் தடை செய்தார்கள் என்பதும், மக்களின் உணர்வுகளை மதித்து மாடு கொல்லப் படுவதாகப் பைபிள் சொல்லும் இடங்களில் எல்லாம் ஆடு கொல்லப் படுவதாக கிறித்தவ மிசனரிகள் மொழிப் பெயர்த்ததும் தான் உண்மை வரலாறு. வெட்சித் திணை (ஆநிரை கவர்தல்), கரந்தைத் திணை போன்று பசுவோடு தொடர்புடைய புறத்திணைகள் தமிழ் இலக்கியங்களில் உண்டு. அவை எல்லாம் பசுவிற்குக் கொடுக்கப்பட்ட பொருளாதார முக்கியத்துவமே தவிர புனிதத்தன்மை இல்லை. தாழ்த்தப் பட்டவர்கள் மட்டுமே மாட்டிறைச்சி உண்பதாக 1910 மக்கள் தொகை கணக்கெடுப்பு சொன்னது. அதன்பின் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைசிறந்த கட்டுரை ஒன்றை எழுதினார். பொருளாதார விலங்காக இருந்த பசு, எப்படி மத விலங்காகி, இன்று அரசியல் விலங்காக அவதாரம் எடுத்திருக்கிறது என்பதை அற்புதமாக விளக்கும் கட்டுரை அது. அம்பேத்கர் சொல்கிறார்: “தீண்டாமையின் ஆரம்பம் மாட்டிறைச்சி. பவுத்த மதத்தின் மாபெரும் எழுச்சிக்கு ஈடு கொடுக்க முடியாததின் விளைவே இந்து மதத்தில் பசுவழிபாடு தோற்றம்“. அதனால்தான் அது மதச் சிறுபான்மையினரையும் சாதியால் தாழ்த்தப் பட்டவரையும் தாக்கும் ஆயுதமாக ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிமு 1500 முதல் கிபி 1993 வரை வரலாற்றில் அதை நிரூபிக்கும் புத்தகம் இதோ.

(1915 Kumbha Mela) Here I saw a cow with 5 foot! I was astonished. The fifth foot was nothing but a foot cut off from a live calf and grafted upon the shoulder of the cow.
– மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (தன் சுய சரிதையில், அதிகாரம் 131)

அவர்களின் அடுத்த ஆயுதம் உனது உணவுதான்.
– யாரோ

The world is a dangerous place to live, not because of the people who are evil, but because of the people who do not do anything about it.
– Albert Einstein
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: THE MYTH OF THE HOLY COW
ஆசிரியர்: டி.என்.ஜா (Dwijendra Narayan Jha)
வெளியீடு: Navayana (http://navayana.org/)
முதல் ஈடு: 2009
பக்கங்கள்: 207
விலை: ரூபாய் 200
கிடைக்குமிடம்: சாலையோர பழைய புத்தகக் கடைகளில் மட்டும் கிடைக்க வாய்ப்புண்டு
ஆன்லைனில் வாங்க‌: Scholars without borders (http://www.swb.co.in/)
நன்றி: இப்புத்தகத்தை அறிமுகம் செய்ததற்காக‌ வினவு இணையதளத்திற்கு (http://www.vinavu.com/)
————————————————————————————————————————————————————————————————————————————
சிறிய கட்டுரைகளும் அதற்குச் சான்றுகளாக கிட்டத்தட்ட அதேயளவு பக்கங்களைக் கொண்ட பின்னிணைப்புகள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட‌ சின்னப் புத்தகம் தான் இது. ஓர் ஆர்வத்தில் முதன்முறை ஒரே மூச்சில் படித்துவிட்டேன். இப்புத்தகம் மேற்கோள் காட்டும் ஏராளமான இந்து மத நூல்களில் பத்துக்கும் குறைவானவற்றை மட்டுமே நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த மத‌நூல்களின் தன்மையோடு மேற்கோள்களைப் புரிந்து கொள்ள, மதநூல்களைப் பற்றிய மேற்கோள்கள் வரும்போது எல்லாம் இணையத்தில் அவற்றைப் படித்துக் கொண்டே இரண்டாம் முறை படித்தேன். எந்தக் கவனச் சிதறலும் இன்றி மூன்றாம் முறை படித்த பிறகுதான் தெளிவு கிடைத்தது. இரண்டாம் முறை இணையத்தில் நான் சேகரித்த தகவல்கள் உங்களுக்கும் உதவக் கூடும்.

ரிக் யஜீர் சாமம் அதர்வணம் என நான்கு வேதங்கள். ரிக் வேதம் 1028 பாடல்களைக் கொண்டது. பெரும்பாலும் கடவுளுக்குப் பலி கொடுக்கும் போது அவரைப் பிரார்த்திக்கும் பாடல்கள். யஜீர் வேதம் உரைநடையில் எழுதப்பட்ட பலி கொடுக்கும் சூத்திரத்தைக் கொண்டது. சடங்கு ஆச்சாரக் காரியங்களுக்காகத் தொகுக்கப்பட்ட ரிக் வேதப் பாடல்களே சாம வேதம். அதர்வண வேதத்தில் முக்கியமாக மந்திரப் பாடல்களே உள்ளன. ஒவ்வொரு வேதத்துடனும் பிராமணங்கள் எனப்படும் பல்வேறு விளக்க உரைகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றின் இறுதிப் பகுதிகள் ஆரண்யகங்கள் எனப்படுகின்றன. இரகசியமானவையும் மந்திர சக்தியினால் ஆபத்தானவையுமான ஆரண்யகங்களைக் காட்டில் வைத்தே கற்பிக்க முடியும். ஆரண்யகங்களின் பிற்சேர்க்கையாக இருக்கும் விளக்க உரைகளே உபனிஷதங்கள். இவை ஆன்மீகத் தத்துவங்கள். ரிக் வேதம் மட்டும் கிமு 1500-1000 காலத்தைச் சேர்ந்த பழமையான‌து. மற்றவை எல்லாம் கிமு 1500-500. பகவத்கீதை இராமாயணம் மகாபாரதம் எல்லாம் அவற்றிற்குப் பின் கிமுவில் எழுதப்பட்டவை. ஏறத்தாழ அதே காலத்தில் எழுதப்பட்ட சட்ட நூல்களே தர்ம சாத்திரங்கள். மனுசாத்திரம் தான் அவற்றில் மிகப் பிரபலம். பிரம்மன் விஷ்ணு சிவனின் பல்வேறு கதைகளைச் சொல்லும் புராணங்கள் எல்லாம் கிபி 2ம் நூற்றாண்டுக்குப் பிந்தையவை.

இனி புத்தகத்திற்குள் போகலாம். இப்புத்தகத்தில் உள்ள தகவல்கள் எல்லாவற்றிற்கும் மூலச் சான்றுகள் புத்தகத்தில் உண்டு. உண்மை எதுவென்று தெரியாமலும், அதைத் தெரிந்து கொள்ள ஆவலுடனும், மாற்றுக் கருத்துகளைச் சமூக நலன்களுக்காக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் உள்ள நல்ல சக மனிதர்களைக் கொண்ட நம்பிக்கையில் தான் இது போன்ற புத்தகங்களும் பதிவுகளும் எழுதப்படுகின்றன. அவர்களின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக, என் குறிப்புகளில் இருக்கும் பெரும்பாலான‌ மேற்கோள்களை இப்பதிவில் தவிர்க்கிறேன். சொல்லப்பட்ட மேற்கோள்களில் எளிய தமிழ் விளக்கத்தைத் தவிர்க்கிறேன். என்னோடு சேர்த்து பலரின் வயிற்றுப் பிரச்சனைக்காக நானும் கொடுக்கும் ஒரு குரலே தவிர, வேறேதும் நோக்கம் இப்பதிவுக்கில்லை.

வேதங்கள். இத்தனை யாகங்களா என்று முதல்வர் ஜெயலலிதா சிறை புகுந்த பின் தான் பலருக்குத் தெரியும். கோபத பிராமணம் மட்டும் 21 யாகங்கள் சொல்கிறது. 100 காளைகளைப் பலி கொடுத்ததற்காக அகத்தியரைத் தைத்ரிய பிராமணம் புகழ்கிறது. வேதங்களில் சொல்லப்படும் 250ல் 50 விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு உண்ணத் தகுதி உள்ளவை என ஐதரய பிராமணம் சொல்கிறது. பலி கொடுக்கப்பட்ட விலங்குகளை 36 பங்குகளாகப் பிரித்து அனைத்து சமூகத்தினருக்கும் தரச் சொல்கிறது கோபத பிராமணம். கடவுளர்களுக்கான பலிகளில் மட்டும் அல்லாமல் அன்றாட வாழ்க்கையிலும் சாதாரண மக்களால் விலங்குகள் கொல்லப்பட்டதற்குப் பல உதாரணங்கள் சொல்கிறது இப்புத்தகம். ஐதரய பிராமணம், ஜைமினிய உபனிஷத் பிராமணம் போன்ற நூல்கள் எந்தெந்த விருந்தாளிகளை எந்தெந்த விலங்குகளைப் பலியிட்டு வரவேற்க வேண்டுமென சொல்கின்றன. இந்திரன் (தேவர்களின் அரசன்), அக்னி (நெருப்பு – இடி – மின்னல்), சோமா (நிலவு), புசன் (சாலை), மருத், அஸ்வினர்கள் (சகதேவன் நகுலனின் தந்தையர்கள்), மித்ரா, வருணா (மழை) போன்ற கடவுளர்களின் விருப்ப உணவுகளை மேற்கோள் காட்டுகிறது புத்தகம்.

vardhan yam visve marutah sajoshah pacac chatam
mahishan indra tubhyam
pusha vishnus trini saransi dhavan
vritrahanam madiram ansum asmai
VI.17.11 (இந்திரனுக்கான ரிக் வேதப் பாடல்)

ukshannaya vasannaya somaprishthaya vedhase
stomair vidhemagnaye
VIII.43.11 (அக்னிக்கான ரிக் வேதப் பாடல்)

agner varma pari gobhir vyayasva sam prornushva
pivasa medasa ca
net tva dhrishnur harasa jarhrishano dadhrig
vidhakshyan paryaukhayate
X.16.7 (அக்னிக்கான ரிக் வேதப் பாடல்)

ukshno hi me pancadasa sakam pacanti vinsatim
utaham admi piva id ubha kukshi prinanti me
visvasmad indra uttarah
X.86.14 (இந்திரனுக்கான ரிக் வேதப் பாடல்)

yasminn asvasa rishabhasa ukshano vasa mesha
avasrishtasa ahutah
kilalape somaprishthaya vedhase hrida matim
janaye carum agnaye
X91.14 (அக்னிக்கான ரிக் வேதப் பாடல்)

paramam annadyam yan mamsam
– ஸதபத பிராமணம் XI.7.1.3.9

pasavo hy annam
– ஸதபத பிராமணம் III.2.1.12

atho annam vai gauh
– தைத்ரிய‌ பிராமணம் III.9.8

வேதங்களில் அதர்வண வேதத்தில் ஓரிடத்தில் பசுவைக் கொல்லக் கூடாது என்று ஒரு வரி வருவதைப் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. O king, the gods did not give that (cow) to you to eat. O warrior, do not desire to eat the brahmana’s cow, she is not to be eaten. இவ்வரி பிராமணர்களின் பசுவைக் கொல்லக் கூடாது என்றுதான் சொல்கிறதே தவிர எந்தவொரு புனிதத்தன்மையும் சொல்லப்படவில்லை என்பதைக் கவனிக்கச் சொல்கிறது புத்தகம். இரட்டையாகப் பிறந்த பசுக்கள் வேதகாலத்தில் அமங்களமாகக் கருதப்பட்டதையும், அவை பிராமணர்களிடம் இருந்தாலும் கூட, பலி கொடுக்கப் பட்டதற்கான சான்றுகள் அதே அதர்வண வேதத்தில் இருப்பதாக புத்தகம் சொல்கிறது.

அஸ்வமேத யாகம் (https://wikimedia.org/)

அஸ்வமேத யாகம் (https://wikimedia.org/)

தர்ம சாத்திரங்கள். பிரிட்டிஷ் காலத்தில் இந்து மக்களுக்காக தனியே சட்டங்கள் எழுத உதவிய மனுதர்ம சாத்திரம் மனுவால் (கிமு 200 – கிபி 200) எழுதப்பட்டது. ஒட்டகத்தைக் கொல்லக் கூடாது என்று மனு குறிப்பிட்டுச் சொல்கிறார். பசுவைப் பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை. அவருக்குப் பின் தர்ம சாத்திரங்கள் எழுதிய யஜ்னவல்க்யாவும் (கிபி 100 – 300) ப்ரஹஸ்பதியும் (கிபி 300 – 500) பசு உட்பட‌ அசைவ உணவிற்குப் பெருந்தடைகள் எதுவும் சொல்லவில்லை எனச் சொல்கிறது புத்தகம்.

105. Agigarta, who suffered hunger, approached in order to slay (his own) son, and was not tainted by sin, since he (only) sought a remedy against famishing.
106. Vamadeva, who well knew right and wrong, did not sully himself when, tormented (by hunger), he desired to eat the flesh of a dog in order to save his life.
107. Bharadvaga, a performer of great austerities, accepted many cows from the carpenter Bribu, when he was starving together with his sons in a lonely forest.
108. Visvamitra, who well knew what is right or wrong, approached, when he was tormented by hunger, (to eat) the haunch of a dog, receiving it the hands of a Kandala.
– மனுதர்ம சாத்திரம் X

35. But a man who, being duly engaged (to officiate or to dine at a sacred rite), refuses to eat meat, becomes after death an animal during twenty-one existences.
53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat, obtain the same reward for their meritorious (conduct).
54. By subsisting on pure fruit and roots, and by eating food fit for ascetics (in the forest), one does not gain (so great) a reward as by entirely avoiding (the use of) flesh.
– மனுதர்ம சாத்திரம் V

பிற இலக்கியங்கள். மகாபாரதத்தில் அனுசாசன பருவத்தில் பீஷ்மரின் இறுதி அறிவுரைகள் சொல்லும் XIII.88.2-10 மட்டும் சான்றாகச் சொல்லி இராமாயணத்தையும் இவ்விடத்தில் தவிர்க்கிறேன். ரந்திதேவா என்ற அரசன் தினமும் 2000 பசுக்களைக் கொன்று அனைவருக்கும் உணவிட்டதால் நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தானாம். அப்படி வெட்டப்பட்ட பசுக்களின் இரத்தம், இன்றைய சம்பல் நதியாக ஓடுகிறதாம். ரந்திதேவனுக்கு மரியாதை செலுத்தச் சொல்லி, காளிதாசரின் மேகதூதம் காவியத்தில், காதல் தூதைச் சுமந்து போகும் மேகத்திற்கு யக்சன் ஒருவன் சொல்வதாக மேற்கோள் காட்டுகிறது புத்தகம். சங்க இலக்கியங்களில் பிராமணப் புலவர்கள் அசைவம் உண்டதற்கான சான்றுகள் இருப்பதாகப் புத்தகம் ஒரு வரியில் சொல்லிவிட்டது. கபிலரின் அப்புறநானூற்றுப் பாடல்களை நானே தேடிக் கண்டுபிடித்தேன்.

மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,
நட்டனை மன்னோ – 113

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்,
செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!
மெந்தினை யாணர்த்து – 119

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உலகிலேயே அதிக விலங்குகளைப் பலி கொடுக்கும் நேபாளத்தின் கதிமாய் திருவிழா. 2009ல் 5 இலட்சம் விலங்குகள். நேபாளத்தின் புதிய ஜனநாயக அரசு சமீபத்தில் இப்பலிகளைத் தடை செய்தது. (http://photosnack.net/)

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உலகிலேயே அதிக விலங்குகளைப் பலி கொடுக்கும் நேபாளத்தின் கதிமாய் திருவிழா. 2009ல் 5 இலட்சம் விலங்குகள். நேபாளத்தின் புதிய மதச் சார்பற்ற ஜனநாயக அரசு சமீபத்தில் இப்பலிகளைத் தடை செய்தது. (http://photosnack.net/)

மருத்துவ நூல்கள். பசுவின் இறைச்சியை மனுவின் மகன்களில் ஒருவனான ப்ரசதாரா உண்டதால்தான் வயிற்றுப்போக்கு வந்ததாக முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கரகா என்ற மருத்துவரின் குறிப்புகளைச் சான்றாகச் சொல்கிறது இப்புத்தகம். பல ஆயுர்வேத மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியைப் பலநோய்களுக்கு மருந்தாகப் பரிந்துரைப்பதைச் சொல்கிறது இப்புத்தகம். மூச்சுத்திணறல் நீர்க்கோப்பு சளி காய்ச்சல் போன்றவற்றிற்கு மாட்டிறைச்சி மிகச் சிறந்த மருந்தென சொல்கிறது ஆயுர்வேதம். கஸ்தூரி பாய்க்கு அவருக்கே தெரியாமல் மருந்தாக மாட்டுச் சூப் கொடுக்கப்பட்டதைக் காந்தி தனது சுயசரிதையில் சொல்கிறார். ஆபத்துக் காலத்தில் மருத்துவம் இப்படி அசைவ உணவுகளைப் பரிந்துரைத்து இருக்கலாம் என்று சிலர் சொல்லலாம். அசைவம் என்பது விலக்கப்பட வேண்டிய உணவாக இருந்திருந்தால், அதைப் பற்றி மருத்துவ நூல்கள் அதிகம் பேசவில்லையே என்கிறார் ஆசிரியர்.

பசுவின் பொருளாதார முக்கியத்துவத்தை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த 150 ஆண்டுகளாக அரசியலில் இடம்பெறும் பசு, எப்போது மதத்தில் புனிதம் பெற்றது என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்துபோன பெர்சிய பயணி அல்பெருனிக்கே பதில் கிடைக்கவில்லை என தன் பயணக் குறிப்பில் எழுதி வைத்ததாக‌ இப்புத்தகம் சொல்கிறது. சாலையோரக் குப்பைகளைத் தின்று கவனிப்பாரற்றுத் திரியும் பசுக்களைக் காசி நகரத்தில் கூட‌ காணலாம். பசு புனிதம் என்றால் காளையின் இறைச்சியும் ஏன் தடை செய்யப்பட வேண்டும்? பால் உள்பட பசுவின் அனைத்து விளைபொருட்களையும் தரும் எருமைக்கு ஏன் புனிதப்பிம்பம் தரப்படவில்லை? பல முரண்பாடுகள் பசுவைப் பற்றியும், அதுசார்ந்த குற்றங்கள் பற்றியும் இதுவரை சொல்லப்பட்ட நூல்களில் உண்டு. ஒரு நிலத்தில் பசு நடந்தாலே அந்நிலம் சுத்தமடையும் எனவும், மூத்திரம் சாணம் உட்பட‌ பசுவின் எல்லாப் பாகங்களும் புனிதம் எனவும் சொல்லும் சில நூல்களுக்கு இடையே, சில முரண்படும் உதாரணங்கள் உண்டு. முழுக்க முழுக்க வீட்டு விலங்காகி சைவ உணவை உண்டுவரும் பசு நுகர்ந்தாலே தீட்டென்கின்றன இவ்வுதாரணங்கள்.

(Food) which has been pecked at by birds, smelt at by cows, touched (with the foot), sneezed on, or defiled by hair or insects, becomes pure by scattering earth (over it).
– மனுதர்ம சாத்திரம் V.125

Bronze vessels smelt by the cow or touched by a crow and those in which a sudra has eaten, are to be purified by rubbing them with ashes for 10 days.
– Angirasa (பெரும்பாலான அதர்வண வேதத்தைத் தேவர்களிடம் நேரடியாக கேட்ட ரிஷி)

புத்தகம் முழுவதும் மதநூல்கள் தவிர ஏராளமான பிற நூல்கள் சான்றுகளாக வருகின்றன. அல்பெருனியின் Alberuni’s Indiaவும், Alf Hiltebeitel என்பரின் பல புத்தகங்களும் குறிப்பிடத்தக்கவை. புத்தகத்தில் ஆங்காங்கே பளிச்சிடும் சில நல்ல குறிப்புகள்:
1. பாகிஸ்தானில் வாழும் ஷின் இன இஸ்லாமிய மக்கள், மற்ற இஸ்லாமியர்கள் பன்றியை எப்படி பார்க்கிறார்களோ அப்படியே பசுவைப் பார்க்கிறார்கள். அவர்கள் பசுவோடு எந்தவொரு தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. பசும்பால் குடிப்பதில்லை. அதன் இறைச்சியை உண்பதில்லை. சாணத்தை எரிபொருளாகக் கூட பயன்படுத்துவது இல்லை. மொராக்கோ அல்ஜீரியா துனீசியா குர்திஸ்தான் இந்தோனேசியாவில் உள்ள சில இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சியைத் தவிர்ப்பதில்லை. (வங்காளப் பிராமணர்கள் மீன் இறைச்சி சாப்பிடுவதுண்டு. சில வங்காள இந்துப் பெண்கள் தாலி அணிவதில்லை)
2. சூரியன் நிலவு நிலம் நதி நெருப்பு மழை சாலை என்று பலவற்றிற்குக் கடவுளர்கள் உண்டு; பசுவுக்கு என்று தனியாக கடவுளோ கோவிலோ கிடையாது.
3. 1993 நிலவரப்படி கேரளாவில் மட்டும் 72 சாதிகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகவே மாட்டிறைச்சி உண்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை தாழ்த்தப்பட்ட சாதிகள் அல்ல. (இஸ்லாமியர்களுடன் இணைந்து இந்துக்களும் மாட்டிறைச்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதை இன்றும் கேரளாவில் காணலாம்)
4. புனிதப்பசுவைக் குறிக்கும் காமதேனு சுரபி நந்தினி போன்ற வார்த்தைகள் வேதங்களில் காணப்படுவதில்லை.
5. மற்ற விலங்குகளை விட மாடுகளின் எலும்புகள் மிகமிக அதிக எண்ணிக்கையில் அடிக்கடி நதிகளின் படுகைகளிலும், அகழ்வாய்வுகளிலும் காணக் கிடைத்ததாக இந்தியத் தொல்லியல் ஆய்வுகள் சொல்கின்றன.
6. ஆந்திராவின் ரெட்டி, மத்திய இந்தியாவின் காரியா, சட்டீஸ்கரின் காமர், ஒரிசாவின் சபராஸ் போன்ற சமூகத்தினர் மிகச் சமீபத்தில் தான் மாட்டிறைச்சியைக் கைவிட்டதாக Frederick J.Simoons தனது Eat not this flesh என்ற புத்தகத்தில் சொல்கிறார்.
7. வெட்டப்பட்ட எருமையின் தலையின் மீது கால் வைத்து நிற்கும் ஒரு பெண் தெய்வத்தின் சிலையைச் சோழ, பல்லவ மற்றும் பாண்டியர்களின் கோவில்களில் பரவலாகக் காணலாம்.

A group of people in Shillong hold a 'beef party' to mark their protest against BJP chief Amit Shah (http://www.hindustantimes.com/)

A group of people in Shillong hold a ‘beef party’ to mark their protest against BJP chief Amit Shah (http://www.hindustantimes.com/)

தினமும் இரு மயில்களையும் ஒரு மானையும் அரண்மனை சமையலில் சேர்த்து வந்த பேரரசர் அசோகர், உயிர்ப்பலி துறந்து அகிம்சை வழிக்கு மாறிய பின்னும் கூட மக்களின் உணவில் சட்டங்கள் திணிக்கவில்லை. அவரின் குடிமக்கள் வழக்கம் போல் அசைவம் உண்டனர். பள்ளிகளின் மதிய உணவில் முட்டையை நீக்கிவிட்டு சைவ சத்துப் பொருள் ஏதாவது சேர்ப்பதற்கு மத்தியப் பிரதேச அரசு முடிவெடுத்தவுடன் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று அருமையாக எழுதியது: ‘தன்னைப் பட்டினி போட்டு இந்திய மக்களைப் பலமாக்கி சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவனைக் கொண்டது இந்திய சுதந்திரப் போராட்டம். சுதந்திர இந்தியாவின் இன்றைய தலைவர்கள் தங்கள் உணவில் ஏதும் தியாகம் செய்வதில்லை. மாறாக மக்களைத் தியாகம் செய்யச் சொல்கிறார்கள். அவர்களின் அரசு சார்ந்த முடிவுகள், ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இருக்கும் இந்தியாவின் வருங்காலத் தலைமுறைகளை இன்னும் பலவீனமாக்கிக் கொண்டிருக்கின்றன’.

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் மடமையினைக் கொளுத்துவோம்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)