149. தமிழகத்தில் அடிமைமுறை

என்னைக் கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித் தின்றதைத்தவிர‌
பரந்த இந்நாட்டில் எங்களின் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப் பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலே
சூரிய சந்திரச் சுழற்சிகள் இன்னும் எதுவரை?
– ஆதவன் தீட்சண்யா (‘ஆமென்’ கவிதையிலிருந்து)

56 அங்குல மார்பையும் மறைத்துவிடும் ஒரு பெரிய கண்ணாடி சட்டம் போட்ட படம் எங்களிடம் இருந்தது. என் அப்பா – அம்மா திருமணத்திற்கு வந்த பரிசு அது. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படக் காட்சிகளைக் கொண்டது. நடுவில் வாளுடன் எம்.ஜி.ஆர். நிற்பார். நம்பியாருடன் சண்டையிடுவது போல், ஜெயலலிதாவுடன் பாடுவது போல் என சுற்றி சின்ன சின்ன வட்டங்களில் பல காட்சிகள் இருக்கும். அதில் உள்ள ஒரு காட்சிதான் அடிமை என்ற வார்த்தையை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். கடன்பட்ட அரிச்சந்திரன் தன் மனைவியை நகர் நடுவில் ஏலம் விட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. கொள்ளை கடத்தல் போரில் தோற்றவர்களை அடிமைகளாக்கிய கதைகளால் நிரம்பியது தான் வரலாறு. மொத்த அமெரிக்க வரலாறும் அடிமைகளின் இரத்தத்தால் எழுதப்பட்டது தான். இன்று பெற்றோர்களால் விற்கப்படும் குழந்தைகள் கூட அடிமைச் சந்தையில் உண்டு. பண்ணையடிமைகளை நானே நேரில் கண்டிருக்கிறேன். கொத்தடிமைகள் பற்றிய செய்திகளை இன்றும் அடிக்கடி செய்தித்தாள்களில் படித்துக்கொண்டு இருக்கிறேன். மக்கள் கூட்டத்தின் மகிழ்ச்சிக்காக சண்டையிட்ட‌ கிளாடியேட்டர்கள் போன்ற வெளிநாட்டு அடிமைகளின் பிரம்மாண்டங்கள் உலகெங்கும் மிகப் பிரபலம். பண்ணையடிமைகளின் வாழ்க்கையைக் களமாகக் கொண்ட ‘வெண்ணிலா கபடிக் குழு’ போன்ற திரைப்படங்கள் நம் சமூகத்தில் மிக அரிது. ‘நமக்கொரு அடிமை சிக்கிக்கிட்டான்டா’ போன்ற உள்ளூர் நகைச்சுவைகள் இங்கு அதிகம். சீனப் பெருஞ்சுவருக்கும், கிரேக்கப் பிரமிடுகளுக்கும் பின் ஏராளமான அடிமைகளைக் கொண்ட வரலாற்றின் கருப்புப் பக்கங்கள் உண்டு. மிகப் பிரம்மாண்ட கோவில்களும், ஆண்டாண்டு காலமாக ஓரிடத்தில் குவிந்த செல்வங்களும் கொண்ட தமிழகத்தில்?
——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: தமிழகத்தில் அடிமைமுறை
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
முதல் ஈடு: ஏப்ரல் 2005
பக்கங்கள்: 100 + 58 பக்கங்களில் 29 ஆவணங்களின் பின்னிணைப்புகள்
விலை: ரூபாய் 120
வாங்கிய இடம்: சென்னை புத்தகக் கண்காட்சி 2015
——————————————————————————————————————————————————————————————–
தமிழகத்தில் அடிமை முறை. சங்ககாலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரை தமிழகத்தில் நிலவிய அடிமை முறையைக் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியங்கள் துணையுடன் ஆராய்கிறது இப்புத்தகம். பல்லவர், பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசு, தஞ்சை மராட்டியர் ஆட்சி, நாஞ்சில் நாடு, கொங்கு நாடு, ஆங்கில ஆட்சி, மதுரை நாயக்கர் ஆட்சி, இராமநாதபுரம் சேதுபதி ஆட்சி என தமிழகத்தின் பல்வேறு நிலப்பகுதிகள், பல்வேறு காலங்களில் நிலவிய அடிமை முறைகளை ஆவணப்படுத்துகிறது இப்புத்தகம். திருக்குறள், சிலப்பதிகாரம், பதினென்கீழ்க்கணக்கு நூல்கள், பக்தி இலக்கியங்கள் போன்றவற்றில் இருந்து பல உதாரணங்களும் இப்புத்தகத்தில் உண்டு. சேக்கிழார் திருநாவுக்கரசர் திருமூலர் திருமழிசையாழ்வார் சுந்தரர் போன்றவர்களின் பாடல்களும் மேற்கோள்களாக அமைகின்றன.

போர் அடிமைகள், வீட்டடிமைகள், கோவில் அல்லது மட அடிமைகள் என்று அடிமைகளில் பல வகையுண்டு. அமிஞ்சி அடிமை அடியான் மூப்படியான் படியாள் பண்ணையாள் குடிப்பறையன் கொத்தடிமை தொழுத்தை அடிச்சி விலையர் அடையாள் சோபல் என்பன அடிமையைக் குறிக்க தமிழில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள். ‘ஆளப் பாத்தா அழகுபோல, வேலயப் பாத்தா எழவுபோல’, ‘நான் என்ன நீ வெச்ச ஆளா?’ போன்ற பழமொழிகளில் இருந்தும், இன்னும் சில உதாரணங்களில் இருந்தும் ‘ஆள்’ என்ற வார்த்தை அடிமையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்கிறார் ஆசிரியர். சிறைப் பிடித்து வரப்பட்டு காவிரிப் பூம்பட்டிணத்து அம்பலங்களில் விளக்கேற்றி நிற்கும் பெண்களைக் ‘கொண்டி மகளிர்’ என்று பட்டினப்பாலை குறிக்கிறது. வெளிநாட்டு அடிமைகள் மதுரையில் காவலர்களாகப் பணிபுரிந்ததைக் ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள்யவனர்’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தேவரடியார்களுக்கு என்று தனியாக ஒரு கட்டுரை இப்புத்தகத்தில் உண்டு. பிராமணர் அடிமையாகும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததில்லை. இலக்கியக் கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் அடிமைகள் மேலை நாடுகளில் இருந்தனராம்.

நான் படித்த பள்ளியில் ஓர் ஆசிரியர் கொக்குப்பிடி என்று ஒரு வித்தியாசமான தண்டனை தருவார். சுவரோடு முதுகை ஒட்டி, முதுகு தொடை கால்களை ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்து நாற்காலி போன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும். இருகைகளையும் தொடைகளுக்கு இணையாக நீட்ட வேண்டும். உயிர்போகும் வலிதரும் இத்தண்டனை அடிமைகளுக்கு வழங்கப்பட்டதாக இப்புத்தகம் சொல்கிறது. ஒவ்வொரு பண்ணையாரும் வித்தியாசமான தண்டனை முறைகள் வைத்திருந்தனராம். ஓர் உதாரணம்: ‘புருசன் ஏதோ தவறு செய்கிறான் அல்லது தவறு செய்ததாகப் பண்ணையார் நினைத்துக் கொள்கிறார். உடனடியாக அவனைப் பிடித்துக் கட்டுவார்காள். அவன் பொண்டாட்டி உடனடியாக வரவழைக்கப்படுவாள். கலயத்தைக் கொடுத்து அதில் அவள் சிறுநீரைப் பெய்து வரச் சொல்வார்கள். சூடு ஆறுவதற்குள் அவன் அதைக் குடித்தாக வேண்டும். குடிக்க மறுத்தால் மயங்கும் வரை அடித்து, தாகத்தால் முனகும்போது அந்தச் சிறுநீரைக் கொடுத்துக் குடிக்கச் சொல்வார்கள்.’

கிபி 1560ல் அக்பர் அடிமை வாணிபத்தைத் தடை செய்ததுடன் 1582ல் தனது அடிமைகளை விடுதலை செய்தார். இந்தியாவில் நிலவிய அடிமை முறையை ஒழிக்க 1843ல் அடிமையொழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் அடிமைகள் இருந்தார்கள். ஆனால் அடிமைச் சமூகம் இருந்ததில்லை என முடிகிறது புத்தகம். இதற்குக் காரணம் உற்பத்தி முறையின் வளர்ச்சிக் குறைவும், சுயதேவைப் பூர்த்தியுடைய கிராமங்களின் வளர்ச்சியும் என்கிறது புத்தகம். தீண்டாமை என்பது அடிமையின் இந்திய வடிவம் என்ற‌ அம்பேத்கரின் கட்டுரை ஒன்று மேற்கோளாக உள்ளது. கட்டாயம் என்பதாலும், விடுதலை பெறும் வாய்ப்பில்லை என்ப‌தாலும் அடிமை முறையைவிட தீண்டாமை மிக மோசமானது என்கிறார் அம்பேத்கர். அடிமை முறையின் உள்ளூர் வடிவம் தீண்டாமை. தீண்டாமையின் நவீன வடிவம் கொத்தடிமை!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)