150. The tale of the Duelling Neurosurgeons

(உலகில் ஒரே ஒரு தலைசிறந்த பொருள்தான் உள்ளது. அது நம் ஒவ்வொருவ‌ரிடமும் உள்ளது. எல்லாம்வல்ல அந்தப் பரம்பொருளின் நினைவாக‌ இந்த 150வது புத்தகம்)

நீ என்பது நீ மட்டுமல்ல‌
மூளையின் மூலையில் ஓர் குரல் கேட்கும்
நான் என்பதில் இன்னொரு பாதி
யார் என்பதை இதயம் கேட்கும்
– வைரமுத்து

ஜில் ஜங் ஜக், அடக் படக் டிமிக்கி, டிங் டாங் டிங், டண்டணக்கா, பல்லேலக்கா என்று எவ்வளவோ சொற்கள் செந்தமிழில் இருக்க, ஏன் டான்டான் என்று பதில் சொல்லச் சொல்கிறார்கள்? இரண்டாம் காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு சுடுகாட்டு வழியே தனியாகக் திரும்பி வரவே பயப்படுபவர்கள் நிறைந்த இம்மனித இனத்தில், நொடிக்கு நொடி உயிர்ப்பயம் தரும் சிகரங்களை எப்படி சிலரால் மட்டும் தனியாக ஏற முடிகிறது? தமிழ்த் திரைப்படங்களில் வருவதுபோல‌ இறந்தவர்களின் ஆவிகளுடன் பேச முயலும் விளையாட்டில், உயிருள்ள ஒருவரின் வெட்டப்பட்ட கையோ காலோ ஆவியாக உங்களுடன் பேச விரும்பினால் எப்படி இருக்கும்? காக்கை துரத்தி துரத்தி தலையில் கொத்திய அனுபவம் உங்களுக்கும் உண்டா? வெகு அருகில் இருக்கிற பொருட்களைக் காண கண்ணைக் கசக்கி பார்வையைக் குவித்து நாம் எல்லோரும் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறோம்? திரையரங்குகளில் திரை மேல் எழும்பும் போது பொதுவாக நாம் அனைவரும் ஏன் இடது மூலையை ஆவலுடன் பார்க்கிறோம்? பெரும்பாலும் சிலுவையில் தொங்கும் இயேசுவும் மோனாலிசாவும் ஏன் இடது முகத்தைக் காட்டுகின்றனர்? தன்னைத் தான் வரைந்து கொள்பவர்களும் விஞ்ஞானிகளும் ஏன் பெரும்பாலும் வலது முகத்தைக் காட்டுகின்றனர்? எதற்காக கொட்டாவி விடுகிறோம்? நமக்கு அதிகம் ஆக்ஸிஜன் தேவைப்படுவதால் என்றால், நம்மைப் பார்ப்பவருக்கும் பரவி ஏன் கொட்டாவி வருகிறது? கனவில் இருந்து திடுக்கிட்டு விழிக்கும் நம்மால் சில நேரங்களில் யாரோ நம்மை அமுக்குவது போல் ஏன் திடீரென எழுந்திருக்க முடிவதில்லை? படுத்த படுக்கையாய் இருந்தவர்கள் சிலரால் திடீரென எழுந்து நடமாடி கடவுளைப் பார்த்தாக எப்படி ஆன்மீகம் பரப்ப முடிகிறது?
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: The tale of the Duelling Neurosurgeons
ஆசிரியர்: Sam Kean (http://samkean.com/)
வெளியீடு: Doubleday
முதல் ஈடு: 2014
பக்கங்கள்: 408
விலை: ரூபாய் 699 (நான் அதிக விலை கொடுத்து வாங்கிய புத்தகம் இதுவரை இதுதான் என நினைக்கிறேன்)
வாங்கிய இடம்: ஹைதராபாத் விமான நிலையம்
————————————————————————————————————————————————————————————————————————————
இறைவனின் இரத்த‌த்தைக் குடிக்கவும் மதத்திற்காக மனித உயிர்களை அழிக்கவும் அனுமதித்த மதங்கள், ஒருகாலத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்குக் கூட பிணமாக இருந்தாலும் மனித உடலைக் கீறி இரத்தம் சிந்த அனுமதிக்கவில்லை. மனித உடலின் உள்பாகங்களாக 15ம் நூற்றாண்டு வரை மருத்துவ உலகில் பிரபலமாக இருந்த சில வரைபடங்கள் பின்னாளில் போலியென நிரூபிக்கப்பட்டன. அதிக மடல்களைக் கொண்ட கல்லீரல், ஈரறைகள் கொண்ட இதயம், கொம்புகள் போன்ற சதைகள் கொண்ட கர்ப்பப்பை போன்ற முரண்பாடுகளை அவ்வரைபடங்கள் கொண்டிருந்தன. ஆடு மாடு குரங்குகளின் உள்பாகங்கள் போலத்தான் மனிதனுக்கும் இருக்கும் என அவ்வரைபடங்களை வரைந்த மருத்துவர்கள் தவறாகக் கருதியதாக பின்னாளில் நிரூபிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மருத்துவ உலகம் எவ்வளவோ வேகமாக வளர்ந்து வந்தாலும், சந்தையில் உள்ள மருந்துகள் எல்லாம் பெரும்பாலும் ஆண்களை வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டவை. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவை பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை. இயல்பான மனித உடல் இல்லாமல், மிக உயர்ந்த அல்லது குட்டையான அல்லது குண்டான, குறிப்பாக பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை நீக்கிவிட்டு ஏதாவது மாற்றம் கிடைக்குமா என்றுதான் மருத்துவ உலகம் ஒருகாலத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

தன் சொந்த உடலில் இருந்து வரும் இரத்தத்தைக் கூட அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், தன் சக்திக்குத் தேவையான சர்க்கரைகளில் குளுக்கோஸ் தவிர வேறெதையும் தன் எல்லைக்குள் அனுமதிக்காமல், நான் நீங்கள் என நம் எல்லாரையும் குணங்கள் மூலம் தீர்மானிக்கும், கபாலக் கூண்டிற்குள் மிகப் பாதுகாப்பாக ஒளிந்துகொண்டு இருக்கும் மூளையை, இவ்வளவு கெடுபிடிகளையும் மீறி மருத்துவ உலகம் எப்படி படித்திருக்கும்? ஓடு உடையாத வரை முட்டை பாதுகாப்பாக இருப்பது போல, கபாலம் உடையாத வரை மூளையில் பிரச்சனை இல்லை என ஒரு காலத்தில் நம்பப்பட்டது. தலையில் அடித்து செத்துப் போனால், கபாலம் உடையாதவரை கொலையில்லை என தீர்ப்புகளும் வழங்கப்பட்டன. கபாலத்தில் மை ஊற்றியும், குச்சியால் தட்டியும் தான் அக்காலத்தில் விரிசல்கள் சோதிக்கப்பட்டு இருக்கின்றன. மனித நாகரிகத்திலேயே மிக உயர்ந்த வளர்ச்சியை எட்டி இருக்கும் இன்றைய மருத்துவ உலகில், மூளைநரம்பியல் துறையின் சில உண்மைக் கதைகள் மூலம் மனித மூளையின் வரலாற்றைச் சொல்வதே இப்புத்தகம். நமக்கு மிகவும் பரிட்சயமான ஐன்ஸ்டீனின் மூளையும், அல்ஜீமர் பர்கின்ஸன் போன்ற நோய்களும் இப்புத்தகத்தில் இல்லை. விபத்துகள், நோயாளிகள், மருத்துவர்கள், சிகிச்சைகள், குணமடைதல் மூலம் மூளையின் இரகசியங்களை ஒவ்வொன்றாக வெளிக் கொணர்ந்த மொத்தம் 12 கட்டுரைகள். முதல் இரண்டு கட்டுரைகளை மட்டும் கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன்.

கண்ணைத் துளைக்கும் ஒரு காயம் உட்பட இரண்டு காயங்களால் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் ஹென்றி கொல்லப்படுவார் என 4 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கத் தரிசனம் சொல்கிறார் நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus). 16ம் நூற்றாண்டின் பிற்பாதியில் அந்நாளும் வந்தது. வேகமாக குதிரையில் எதிரெதிர் திசையில் வரும் வீரர்கள், கடக்கும் போது கையில் வைத்திருக்கும் ஆயுதத்தால் தாக்கிக் கொள்ளும் விளையாட்டு (Joustling) அக்காலத்தில் அரசக் குடும்பங்களில் மிகப் பிரபலம். எதிராளியின் தாக்குதலில் உடைந்து போன மூங்கில் துரும்புகள், 14 அடி மூங்கில் கம்புடன் போன இரண்டாம் ஹென்றியின் வலது கண்ணைக் கிழிக்க நிலைதடுமாறி கீழே விழுகிறார். அயல் நாடுகளில் இருந்து தலைசிறந்த மருத்துவர்கள் வரவழைக்கப் படுகின்றனர். மருத்துவர்கள் கண்ணில் இருந்த துரும்புகளை நீக்கியபின் மறுநாளே நினைவு திரும்புகிறது. நாஸ்ட்ராடாமஸ் இரு காயங்கள் அல்லவா சொன்னார்? கண்ணுக்குத் தெரியாத மூளைக்குள் இருந்த இரண்டாம் காயம் உடனே வேலையைக் காட்ட, வேறு வழியே இல்லாமல் அரசனின் கபாலத்தைத் திறக்க இரு மருத்துவர்கள் முடிவெடுக்கின்றனர். ஒத்திகை பார்க்க சிறையில் இருக்கும் நான்கு கைதிகளின் தலையை வெட்டிவர அரசி உத்தரவிடுகிறார். அந்த அறுவைச் சிகிச்சையின் முடிவில் இக்கதையில் அரசர் பிழைக்கவில்லை என்பதுதான் முடிவு. ஆனால் முகத்தில் விழுந்த‌ அடிக்குக் கபாலத்தில் விரிசல் இல்லாமலேயே மூளையின் பின்னால் காயம் இருப்பதற்கான சாத்தியம், கபாலத்தில் விரிசல் பெரும்பாலும் உயிர் காக்கும் என‌ பல புதிய விடயங்களை அந்த இரு மருத்துவர்கள் ஆவணப்படுத்தி வைக்கின்றனர். அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு அவை மருத்துவ உலகிற்கு அடிப்படைகளாக‌ அமைந்தன. அதன்பிறகு அவ்விளையாட்டு பிரெஞ்சு மண்ணில் தடை செய்யப்பட்டது. உயிர் மூளையைத் திறந்து காட்டிய‌ முதல் கட்டுரையான‌ இக்கதைதான் இப்புத்தகத்தின் பெயரும் கூட.

அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் ஆப்ராம் கார்ஃபீல்ட் கொல்லப்பட்ட பின் சாட்சி சொன்ன 140 பேரில் ஒருவர் மட்டும் குற்றவாளி மனநிலை பாதிக்கப்பட்டவன் என்கிறார். குடிமக்களிடம் இருந்து வந்த கொலை மிரட்டல்களைப் பற்றி கவலைப்படாமல் ஒரு மருத்துவரும் அவனின் மன‌நிலைக்காக வாதாடுகிறார். சட்டம் நிராகரிக்க குற்றவாளி தூக்கிலிடப் படுகிறார். குற்றவாளியின் மூளையை ஆய்வு செய்த மருத்துவர்கள், அவன் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததை ஏற்றுக் கொள்கின்றனர். கண்ணுக்குத் தெரியாத மூளையின் உள்ளமைப்பை அதன் பிறகும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்காக அமெரிக்கா அடுத்து இருபது ஆண்டுகளுக்கு இன்னொரு தேசியப் பிரச்சனை வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆம், இன்னொரு அதிபரின் கொலைதான் மூளையின் உள்கட்டமைப்பை நோக்கி நகர வைத்தது.

1901ல் நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் வில்லியம் மெக்கின்லி அந்நகருக்கு வந்தபோது ‘மின்சாரத்தின் அற்புதங்கள்’ என்ற கருத்தில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. மின்விளக்குகள் இரவையும் பகலாக்கி மிளிர்வதை மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். இரு குண்டுகளால் அதிபர் சுடப்பட்டபின் ஒன்றை மருத்துவர்கள் அகற்றிவிட்டார்கள். இன்னொன்று எங்கு போனதென்றே தெரியவில்லை. பொருட்காட்சியில் அவ்வாண்டு இடம்பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் நிறுவனத்தின் X-கதிர் எந்திரத்தைப் பயன்படுத்தி அக்குண்டைக் கண்டுபிடிக்கும் யோசனையை மருத்துவர்கள் மறுக்கின்றனர். மறுவாரத்தில் அதிபர் இறந்தபின், பொருட்காட்சியைச் சிறப்பிக்கும் விதமாக, அவ்வாண்டு அறிமுகப் படுத்தப்பட்ட மின்சார நாற்காலியில் மரண தண்டனை வழங்க முதன்முறை தீர்ப்பிடுகிறார்கள். உடலின் சிறுதுண்டு கிடைத்தாலும் தியாகியாக்கி விடுவார்கள் என்று கவனமாக அரசாங்கம் அப்புறப்படுத்தும் முன், குற்றவாளியின் மனநிலையைச் சந்தேகித்த ஒரு மருத்துவர் மூளையைக் கேட்கிறார். அவர் வேறு யாருமில்லை, முந்தைய கதையில் வந்த மருத்துவரின் மகன். மூளைத்திரவம், நியூரான்கள், நியூரான்களுக்கு இடையேயான சமிக்ஞைகள் என மருத்துவம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியதைச் சொல்கிறது இவ்விரு கதைகளைக் கொண்ட இரண்டாம் கட்டுரை.

(http://scienceblogs.com/)

(http://scienceblogs.com/) Sensory homunculus. உடலின் பல்வேறு பகுதிகளைக் கட்டுப்படுத்த மூளை கொண்டுள்ள பங்குகளுக்கு இணையாக உறுப்புகளைக் காட்டும் படம்.

நியூரான்கள் எப்படி இணைகின்றன, சேதமடைந்தால் எப்படி மீண்டும் வேறுவிதமாக இணைகின்றன, எப்படி தகவல் பரிமாறுகின்றன என அடுத்தடுத்த கட்டுரைகள் சொல்கின்றன. உடலில் இருந்து வரும் தகவல்களை எப்படி மூளை அலசி ஆராய்ந்து புரிந்து கொள்கிறது, உடலுக்கு வெளியே உலகுடன் எப்படி மூளை உறவாடுகிறது, நியூரான்கள் மூலம் மட்டும் அல்லாமல் ஹார்மோன்கள் மூலமும் எப்படி தகவல் பரிமாறுகிறது, தகவல்கள் மறக்கப்பட வேண்டுமா அல்லது நினைவுகளாகச் சேமித்து வைக்க வேண்டுமா என எப்படி தீர்மானிக்கிறது, இந்த மொத்தக் கட்டமைப்பில் ஏதாவது குளறுபடியானால் என்னவாகும், மனம் என்ற பொருளல்லாத ஒன்றை மூளை என்ற பொருள் எப்படி உண்டாக்குகிறது, நம் ஒவ்வொருவரையும் அடிப்படையில் தீர்மானிப்பது எது, மூளையின் அடிமைகளான நாம் நம் செயல்களுக்கு எந்த அளவிற்குப் பொறுப்பாக முடியும் என அக்கட்டுரைகள் விளக்குகின்றன. தன் கட்டளைகளைச் சரியாக உடல் நிறைவேற்றாத போது மூளையின் பல்வேறு விதமான எதிர்வினைகளும், சில நேரங்களில் அவசரக்குடுகையாகச் செயல்பட்டு குழப்பிக் கொள்ளும் மூளையின் தற்காப்புகளும், ஓர் உறுப்பின் உணர்வுகளை மற்றொரு உறுப்பின் மூலம் உணர வைக்கும் தகவமைப்புகளும், கனவுகளில் மூளையே உண்டாக்கும் கதைகளும், அக்கதைகளைப் பின் மூளையே நம்ப மறுப்பதும் அருமையோ அருமை!

X-கதிர்களைத் தன் மனைவியின் கைகளில் ஆராய்ச்சி செய்த ரான்ட்ஜன், தன் சோதனைகளாலேயே புற்றுநோய் பெற்ற மேரி கியூரி, செவிடான தாமஸ் ஆல்வா எடிசன் என தன்னைப் பணயம் வைத்து அறிவியல் உலகிற்குத் தொண்டு செய்தவர்கள் பலர். தனது ஆய்வுகளுக்கு நாடுவிட்டு நாடு இடம்பெயர்ந்தவர், 2000க்கு மேற்பட்ட மூளைக்கட்டிகளை அகற்றிய‌ மூளைக்கட்டி கொண்டவர், கடைசி காலத்தில் சிறுவர்களுடன் உடலுறவு கொண்டு சிறைக்குப் போனவர், போர்க் காலத்தில் தனது குறிப்புகளைப் பத்திரப்படுத்த போராடியவர் என மருத்துவர்களில் பல வகையானவர்கள் இப்புத்தகத்தில் வருகின்றனர். என் நினைவில் அனைவரும் இருந்தாலும் இப்பதிவிற்காக குறிப்பிட்டு வில்டர் பென்ஃபீல்ட் (Wilder Penfield) என்பவரைச் சொல்கிறேன். அவர் தன் சொந்த சகோதரிக்கு மனதைத் திடமாக்கி மூளை அறுவை சிகிச்சை செய்யும் பத்திகளைப் படித்து முடித்தபின், என் கண்கள் என்னை அறியாமல் கலங்கி இருந்தன. Brain surgery is a terrible profession என்று சொன்ன அவர் போன்றவர்களால் தான் மருத்துவம் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டி இருக்கிறது.

மருத்துவர்களைப் போலவே ப‌லரின் வித்தியாசமான மூளைகளும் என் நினைவில் இருந்தாலும் சிலரைப் பற்றி இங்கு சொல்கிறேன்:
1. ஹென்றி குஸ்டவ் மொலைசன். Henry Gustav Molaison. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக‌ உலகில் அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டது இவரது மனதும் மூளையும் தான். அவரது மூளை 2401 துண்டுகளாக ஆராய்ச்சிகளுக்காக வெட்டப்படுவது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
2. பினியாஸ் கேஜ். Phineas Gage. மதனின் ‘மனிதனுக்குள்ளே மிருகம்’ படித்தவர்களுக்கு இவரை மறக்க முடியாது. ஐன்ஸ்டீன் மற்றும் இவரின் மூளைகள் கண்டிப்பாக இப்புத்தகத்தில் வரும் என்ற எதிர்பார்ப்புடன் தான் படிக்கவே ஆரம்பித்தேன். செத்தான்டா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விபத்தில் இருந்து அதிசயமாக மீண்டு, ஆறு குதிரைகள் கட்டப்பட்ட வண்டியை இயல்பாக இயக்கும் அளவிற்குக் குணமடைந்து ஒரு டஜன் ஆண்டுகள் வாழ்ந்த இவர்தான் இப்புத்தகத்தின் கடைசி கட்டுரை. குமட்டும் வயிறுடையவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம் என புத்தகத்தில் ஒரேவொரு இடத்தில் மட்டும் ஆசிரியர் சொல்கிறார். அது இவருக்கு நடந்த அறுவை சிகிச்சை.
3. தன் சொந்த மன உந்துதலால் இதுவரை உலகில் அதிக தூரம் பயணித்ததாக அறியப்படும் மனிதன். கிட்டத்தட்ட பூமத்திய ரேகையைப் 10 முறை சுற்றி வந்ததற்குச் சமமான, ஒருமுறை நிலவுக்குப் போய் வந்ததற்குச் சமமான இரண்டரை இலட்சம் மைல்கள். அதுவும் போக்குவரத்து வசதிகள் அதிகமற்ற‌ 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில். உலகின் பாதுகாப்பற்ற பல மூலைகளுக்கும் சென்றிருக்கிறார். தனது பயண அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டார். அவர் கண்பார்வை அற்றவர்!

அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், இரஷ்ய எழுத்தாளர் ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி மற்றும் சில மதங்களில் தெய்வங்களை உணர்ந்ததாகச் சொல்லும் ஆன்மீக வியாதி கொண்ட‌ சிலரின் மூளைகள் திறக்கப்படாமலே இப்புத்தகத்தில் விவாதிக்கப் படுகின்றன. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான மெடுல்லா ஓப்லங்கடா, இப்புத்தகத்தின் ஒரேயொரு படத்தில் பாகமாகக் குறிப்பிடப் ப‌டுகிறது, அவ்வளவுதான். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ஞாபகங்களை மறக்கும் கதாநாயகனைக் கஜினி திரைப்படத்தில் கண்டோம். ஞாபகங்களை மறக்க முடியாமல் அவதிப்பட்டு, அந்த ஞாபகங்களால் நினைத்த நேரத்தில் வெப்பமோ குளிரோ உணரச் செய்யும், மற்றும் வலியை உணர முடியாமல் செய்யும் ஒருவர் இப்புத்தகத்தில் உண்டு. புதிய ஞாபகங்களை உண்டாக்க முடியாத ஒருவரும் இப்புத்தகத்தில் உண்டு. நமக்கு எல்லாருக்கும் இருக்கும் False memory பற்றி நானே என் சிறுகதைகளில் சொல்லி இருக்கிறேன்.

தோலின் ஸ்பரிசம் உணர்ந்த குழந்தை முலைக்காம்பைத் தேடி வாயைச் சப்ப ஆரம்பிக்கிறது. உள்ளங்கையில் தடவினால் குழந்தை உடனே விரல்களைச் சுருட்டிக் கொள்கிறது. வளர வளர இவற்றை நாம் செய்வதில்லை என்றாலும், குழந்தைப் பருவ எதிர்வினைகளை வயதான பின்னும் செய்யும் சிலரும் உண்டு. தங்கள் பிறப்புறுப்புகளை அந்நியமாக உணரும் திருநங்கைகள் போன்ற பால் பிறழ்வுகளைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள் நான் படித்து இருந்தாலும், உடல்-உள்ளம் தொடர்பை மூளையின் அடிப்படை அமைப்புடன் விளக்கும் ஒரு பகுதியில், கடைசி ஒரு வரியில் பால் பிறழ்வுகளின் நிலையை ஆசிரியர் சொல்வது பசுமரத்தாணி. அறுவைச் சிகிச்சைக்குப் பின் தோலின் நிறமிழந்த ஒரு வெள்ளைக்கார பெண்ணின் சொந்த குடும்பமே ஒதுக்கி வைத்து, அவரது தந்தையின் இறுதிச் சடங்கிற்குக் கூட வரவிடாமல் தடுத்த ஒரு கதை, தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொடுமைகளைச் சொல்கிறது. கறுப்பின மக்களால் தத்தெடுக்கப்பட்ட அவர், பின்னாளில் அவர்களின் உரிமைகளுக்காகப் போராடினாராம்.

(http://www.findmemes.com/)

(http://www.findmemes.com/) பினியாஸ் கேஜ் மற்றும் அவரின் இடது கண்ணையும் மூளையின் முன்மடலையும் துளைத்து எடுத்துப் போன கடப்பாறை

மூளை சம்மந்தம் இல்லாமல் அக்கதைகளோடு தொடர்புடையதாக இப்புத்தகத்தில் வரும் சில சுவாரசியமான‌ தகவல்கள்:
1. DC மின்சாரத்திற்குக் காப்புரிமை வைத்திருந்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது எதிரிகளின் AC மின்சாரத்தால் இயங்கும் மின்சார நாற்காலியின் வளர்ச்சியைத் தடுக்க காணொளி ஒன்றை உண்டாக்கினாராம். நீங்களும் பார்க்க: https://www.youtube.com/watch?v=bZl-Z8LKSo0
2. வில்லியம் மெக்கின்லி மேல் சுடப்பட்ட இரண்டாவது குண்டு, அவரது சட்டைக்குள் இருந்ததாம்.
3. நுரையீரலுக்குள் இருக்கும் காற்று சட்டென சூடாகி வெடித்து விடாமல் இருக்க, மூச்சை வெளியிட்ட பிறகுதான் மின்சார நாற்காலியில் மரண தண்டனை நிறைவேற்றும் ON பொத்தானை அழுத்துவார்களாம்.
4. ஸ்பானிஷ் மன்னர்கள் பெண்கள் பின்னால் செல்லாத கெத்தானவர்களாம். தனது திருமணத்திற்கே வர முடியாமல் தளபதியை விட்டு இளவரசியை மணந்தவர்களும் உண்டாம். அன்றிரவே முதலிரவுக்கும் வர முடியாமல், சம்பிரதாயப்படி முதலிரவை முடித்து வைக்க தளபதியே காலின் கட்டை விரலால் போர்வைக்கு அடியில், ….. உண்மையிலே கெத்துதான்! இளவரசி உச்சம் அடைந்தாளா என்று குடிமக்கள் பல நாட்களாக ஆச்சரியமாகப் பேசிக் கொண்டார்களாம்.

தனது அன்புக்குரியவர்களின் முகங்களை மறந்தவர்கள். இரு கண்களில் பார்வை இருந்தும் ஒருபாதி உலகை மட்டுமே பார்க்க முடிந்தவர்கள். மூன்று வார்த்தை தொடர்ச்சியாகப் பேசத் தடுமாறினாலும் அற்புதமாகப் பாடுபவர்கள். முகத்தின் ஒருபக்கம் மட்டும் சுயசவரம் செய்பவர்கள். கட்டாயப்படுத்திச் சிரிக்கச் சொன்னால் மிகவும் கோணலாக முகம் போனாலும் இயல்பான நகைச்சுவைகளுக்கு அழகாகக் சிரிப்பவர்கள். இடியையே கண்டு கேட்டாலும் அதிர்ச்சி அடையாமல் இயல்பாய் இருப்பவர்கள். சாதாரண மனிதர்களால் முடியாதபடி தொடர்ந்து சாப்பிடுபவர்கள் மற்றும் தொடர்ந்து உடற்புணர்ச்சி நாடுபவர்கள். கைத்தட்டச் சொன்னால் ஒருகையை மட்டுமே ஆட்டுபவர்கள் (ஒருகை ஓசை). வாழ்வில் சில பக்கங்களை மறந்தவர்கள். ஒரு கை செய்வது அடுத்த கைக்குத் தெரியாமல் என‌ இயேசுகிறித்து சொன்னது போல், ஒரு கையால் கதவைத் திறந்து கொண்டே மறுகையால் மூட முயல்பவர்கள். ஒரு கையால் சட்டைப் பொத்தானை மாட்டிக் கொண்டே மறுகையால் அதை அவிழ்ப்பவர்கள். இரண்டு மனம் வேண்டும் என இறைவனிடம் கண்ணதாசன் கேட்டது போல், சில நேரங்களில் ‘நான்’ என்றும், சில நேரங்களில் ‘நாம்’ என்றும் பேசுபவர்கள். அந்நியன் அம்பி போல் தனக்கு இரண்டு தலைகள் இருப்பதாக உணர்பவர்கள். சத்தியமாக தான் செத்துப் போய் விட்டதாக அடித்துக் கூறுபவர்கள். வேண்டுமென்றே கட்டாயமாகப் பொய் பேசுபவர்கள். நேரில் பார்க்கும்போது தனது தந்தையை யாரோ கடத்திவிட்டு வேறொரு ஆளை வீட்டில் வைத்திருப்பதாக தன் சொந்த தந்தையை விரட்டுபவர்கள்; அதே தந்தையுடன் தொலைபேசியில் அன்பாகப் பேசுபவர்கள். ஒரு மொழியை மட்டும் மறந்து போனவர்கள். மொழியில் வினைச் சொற்களை மட்டும் மறந்து போனவர்கள். இப்படி நம்மில் பலர் இப்புத்தகத்தில் வந்து போகின்றனர்.

முதல்முறை படிக்கும் போதே சொல்லப்படும் தகவல்கள் எளிதாக நினைவில் பதியும்படி, மிக அற்புதமான எழுத்து நடையைக் கையாண்டு இருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையின் ஆரம்பத்திலும் அக்கட்டுரையின் சாரமாக, சில படங்களின் மூலம் கேள்விகள் கேட்டிருப்பது அருமை. நான் குறிப்புகள் எதுவும் எடுத்து வைக்கவில்லை. அப்படி தேவைப்படவும் இல்லை. பள்ளியில் பயாலஜிக்குப் பயந்தவர்களும் பயப்படாமல் தைரியமாக இப்புத்தகம் படித்தறியலாம். எனது விருப்பப் புத்தகங்கள் பட்டியலில் இதற்குத் தாராளமாக இரண்டாம் இடம் தருகிறேன்!

பெரியம்மைக்கு மருந்து இல்லாமல் மருத்துவ உலகம் திணறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், மருந்தே இல்லாமல் மூளையைத் தாக்கிய ஒரு நோயும் இருந்ததாம். அந்நோய் உண்டாக்கிய கிருமி போன்ற ஏதோ ஒன்று, சூளையின் சூட்டிலும் கூலாக இருந்ததாம். அமிலங்களில் தோய்த்து எடுத்தாலும் அமைதியாக இருந்ததாம். புற ஊதாக் கதிர்களால் வறுத்து எடுத்தாலும் புறமுதுகிட்டு ஓடவில்லையாம். அணுக்கதிர்களைப் பாய்ச்சியும் அணுவளவும் அசையவில்லையாம். இவ்வளவு அவமானங்களையும் தந்தபின், நரசிம்மா திரைப்படத்து விஜயகாந்த் கதாப்பாத்திரம் கூட செத்திருப்பார். பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் எல்லாருக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு செய்ய அரசு முடிவெடுக்கும் அளவிற்கு, அது அப்படியே இருந்து இன்னும் நோய் பரப்பியதாம். தன் சொந்த உடலில் இருந்து வரும் இரத்தத்தைக் கூட அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், பலத்த பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தும் மூளையையே ஏமாற்றி அது உள் நுழைந்தால் பாருங்கள்! இயற்கை அவ்வளவு கொடூரமானதல்ல. இன்று அந்நோய் அறவே இல்லை. ஆனால் மீண்டும் வரலாம். இயற்கை அந்நோய் பரவுவதை மிக அரிதாக்கித் தான் வைத்திருக்கிறது. நம் மூளை எளிதாக பாதிக்கப்படும் அளவிற்கு மிக மிக இலகுவானது. அதைவிட நம் மூளை மீண்டு வருவதில் தகவமைப்பதில் மிக மிக மிக மிக‌ உறுதியானது. இலகுவிலும் உறுதியிலும் நம்மைப் போலத் தான் நம் மூளையும். தெய்வம்நீயென்றுணர்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements