151. குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?

(குற்றவாளிகளை அரசே பாதுகாப்புடன் விமானம் ஏற்றி அனுப்பி வைத்த‌ போபால் விசவாயு கோரத்தின் நினைவுதினம் இன்று. இத்தேசத்தில் நீதி மறுக்கப்பட்ட இன்னுமொரு மக்கள்கூட்டம்)

பூகோள நியமத்தில்
ஊர்க்கோடியில் சுடுகாடிருக்கும்
நமக்கு இலங்கை போல.
– ஆதவன் தீட்சண்யா

பொய் எவ்வளவு பகட்டாக இருக்கிறதோ அந்தளவுக்கு அது மக்களால் நம்பப்படும்.
– அடால்ப் ஹிட்லர்

ஒரே மகள். நாலு மாசக் கர்ப்பிணி. பெத்தவங்க கூட இருக்கணும்னு அவங்க வீட்டுக்கு வந்திருக்கா. வட இந்தியா. குளிர்காலம். ஒரு நாள் ராத்திரி நடு பஜார்ல அந்த‌ நடுங்குற குளிர்ல அந்தப் பொண்ண ஓட ஒட வெறட்டுனானுங்க. எங்க ஆண்டவனக் காப்பாத்துன்னு கையத் தூக்கி கும்புட்ருவாளோன்னு பின்னாடி வேற கட்டி வெச்சிட்டாங்க. அந்தப் பொண்ணு தடுக்கி நடு ரோட்டுல விழுந்ததும் அந்தப் பொண்ணோட ஒடம்புல ஒரு பொட்டுத் துணி கூட இல்லாம உருவி எடுத்துட்டாங்க. சுத்தி கூட்டம். அந்தக் கூட்டத்துல எத்தன ராமன் கிருஷ்ணன் லால்கிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் இருந்தானோ தெரியாது. ஒரு கிருஷ்ணன் கூட ஒதவிக்கு வரல. அப்பறம் அந்தப் பொண்ணோட பெண் உறுப்புக்குள்ள கைய விட்டு கருவறுத்துட்டான்.
– ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்பட வசனம் (அவள் பெயர் கௌசல் பானு)

காரில் போய்க் கொண்டிருந்த நேருவைத் திடீரென ஒரு கிழவி வழிமறித்து, ‘சுதந்திரம் சுதந்திரம் என்று எங்களைப் போராடச் சொன்னீர்களே, இந்த சுதந்திரம் எங்களுக்கு என்ன தந்தது?’ என்று கேட்டாள். ‘ஒரு ஆங்கிலேய வைசிராயை வழிமறித்து இதே கேள்வியைக் கேட்க முடியாது. இந்த நாட்டின் பிரதமரை இப்போது உங்களால் கேட்க முடிகிறது இல்லையா?’ என்றார். பெருமழைச் சேதங்களைத் துளி நீரும் படாமல் பார்வையிடும் முதல்வர்களைக் கண்ட நமக்கு இது போன்ற கதைகளை நம்பக் கடினமாக இருந்தாலும், காமராசர் பிறந்த இதே மண்ணில் இப்படியொரு கதை உண்மையாக இருக்க அதிக வாய்ப்புண்டு. இன்றைய பிரதமர் வீடியோ கான்பரன்ஸிங்கில் குழந்தைகளுடன் நேரடியாக இந்தியில் பேசுவதை ஊடகங்கள் பெருமையுடன் செய்தி சொல்கின்றன. தொடர்ந்து 12 ஆண்டுகள் அமெரிக்கா இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அவருக்கு விசா மறுத்ததை ஏன் என்று அவர்கள் கேட்கப் போவதில்லை அல்லவா?

மாற்றம் வேண்டும், வளர்ச்சி வேண்டும் என்று சென்ற வருட நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு வாக்களிக்கப் போவதாக பேசிக் கொண்டிருந்த பல‌ நண்பர் கூட்டங்கள் என் வாயையும் கிளறியதுண்டு. குஜராத்தில் இஸ்லாமியர்கள் இனப் படுகொலை செய்யப் பட்டதையோ, அதனால் தொடர்ந்து 12 வருடங்களாக அவருக்கு அமெரிக்கா விசா மறுத்து வந்ததையோ, தொலைக்காட்சி விவாதங்களில் அதைப் பற்றிய கேள்விகளில் முதல்வன் இரகுவரன் போல் மழுப்பி தவிர்த்து வெளியேறியதையோ, அவர்களுக்குப் பெரும்பாலும் தெரிந்திருக்கவில்லை. இவ்வளவு மீடியாக்கள் இருக்கும் இன்றைய உலகில் அவ்வளவு படுகொலைகள் சாத்தியமில்லை என்று என்னைத் தான் பலர் சந்தேகமாகப் பார்த்தனர். கற்பழிப்புகளுடன் 2000 பேர் படுகொலை செய்யப்பட்டு 2 இலட்சம் பேர் அகதிகளாக்கிய கதையைக் காலம் பக்குவமாக புதைத்துப் போனது.

படம் முழுவதும் அமெரிக்கா முழுவதும் சுற்றி, கடைசிக் காட்சியில் ஜனாதிபதியிடம் My name is Khan, I am not a terrorist என்று சொல்லும் திரைப்படங்கள் தான் இங்கு அதிகம். அதே செயலை இங்கு குஜராத்திலோ கர்நாடகாவிலோ ஒரு கவுன்சிலரிடம் கூட சொல்ல முடியாது என்பதே எதார்த்தம். இன்று இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், பாபர் மசூதியை இடித்து இந்நாட்டை மதக் கலவரங்களை விதைத்த கட்சியின் இன்றைய அடையாளமான‌ நம் பிரதமர், குஜராத் படுகொலைகளுக்கு வருத்தப்பட எதுவுமே இல்லை என வெளிப்படையாகவே இங்கு சொல்லிவிட்டு, ‘காந்தியும் புத்தனும் பிறந்த மண்ணில் சகிப்புத் தன்மையற்ற சம்ப‌வங்களை அனுமதிக்க மாட்டோம்’ என்று கைத்தட்டலுக்காக இங்கிலாந்தில் பேசுகிறார்.

ஈழத் தமிழனுக்கும், குஜராத் இஸ்லாமியனுக்கும் பெரும்பாலும் இந்தியா அணுகுமுறையில் வேறுபாடு காட்டவில்லை. ந‌ம் கண்முன் விதைக்கப்பட்ட நஞ்சைப் பற்றி, இன்னும் மிகப்பெரிய விருட்சமாக வளரக் காத்திருக்கும் மதவாதம் என்ற வித்தைப் பற்றி, …..

——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?
ஆங்கிலத்தில்: தெகல்கா பத்திரிக்கை (http://www.tehelka.com/)
தமிழில்: அ.முத்துக்கிருஷ்ணன் (Green Walk / பசுமை நடை ஒருங்கிணைப்பாளர்)
வெளியீடு: வாசல் பதிப்பகம் + தலித் முரசு
முதல் ஈடு: சனவரி 2008
பக்கங்கள்: 104
விலை: ரூபாய் 130
வாங்கிய இடம்: சென்னை புத்தகக் கண்காட்சி 2015
——————————————————————————————————————————————————————————————–
பிப்ரவரி 27, 2002. இராம ஜென்ம பூமி என அறியப்படும் அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸின் 5 மற்றும் 6வது (S5, S6) பெட்டிகள், குஜராத்தின் கோத்ரா இரயில் நிலையத்தை விட்டு கிளம்பிய சற்று நேரத்தில் தீவிபத்துக்கு உள்ளாயின‌. விஷ்வ ஹிந்து பரிசத்தின் (VHP) தன்னார்வத் தொண்டர்களான (பாபர் மசூதி இடிப்பில் பிரபலமான) கரசேவகர்கள் மற்றும் சக பயணிகள் என 59 பேர் மாண்டனர். அது இயல்பாக நடந்த தீவிபத்து என்றொரு அறிக்கை உண்டு. இஸ்லாமியர்களால் திட்டமிட்டு செய்யப்பட்டதென இன்னொரு அறிக்கையும் உண்டு. கோத்ரா இரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் போது, நடைமேடையில் இஸ்லாமிய தேநீர் வியாபாரி ஒருவருடன் கரசேவர்களுக்கு ஏற்பட்ட மோதல் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இஸ்லாமிய பெண் ஒருத்தியைக் கரசேவகர்கள் சீண்டியதாக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

அந்நிகழ்வுக்குப் பின் அடுத்த சில நாட்களுக்குக் குஜராத் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வன்முறைகளை, திட்டமிட்ட‌ இனப்படுகொலை எனப் பதிவு செய்கிறார்கள் நடுநிலையாளர்கள். அழிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் புனிதத்தலங்கள் ஏராளம். அகமதாபாத்தில் குல்பர்கா குடியிருப்பு படுகொலைகள், அகமதாபாத்திற்கு அருகில் நடந்த நரோடா பாட்டியா படுகொலைகள், வதோதராவில் நடந்த பெஸ்ட் பேக்கரி படுகொலைகள் போன்றவை பின்னாளில் அதிகம் விவாதிக்கப்பட்டவை. இஸ்லாமியர்களைக் காக்க முயன்ற முன்னாள் காங்கிரஸ் எம்பி எஹ்சான் ஜஃப்ரி என்பவரும் உயிருடன் எரிக்கப்பட்டார். அவரின் மனைவியும், தீஸ்டா செதல்வாட் போன்ற சமூக ஆர்வலர்களும் இன்றும் நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி கலவரங்களைத் தடுக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை எனவும், அவரின் பேச்சு கலவரக்காரர்களுக்குத் தெம்பூட்டியது எனவும், இந்தியா முழுவதும் பிரபலமானார். அமெரிக்கா அவருக்கு விசா மறுத்தது. நரேந்திர மோடியின் ஆட்சியைக் கலைக்கச் சொல்லி அன்று குரல் எழுப்பியவர்களில் மிக முக்கியமானவர், இன்று பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு! குஜராத் கலவரங்களில் பத்திரிக்கை ஊடக‌ங்களைத் தான் சரியாக கட்டுப்படுத்தவில்லை என்ற ஒரேயொரு வருத்தத்தைத் தவிர வேறேதும் வருத்தமில்லை என நரேந்திர மோடியே பேட்டி அளித்தார். அதன்பிறகு அவரின் நடை உடை முகபாவம் புகைப்படம் போன்ற ஒவ்வொன்றையும் ஊடகங்கள் எப்படி வெளியிட வேண்டும் என பலகோடி ரூபாய் செலவில் அயல்நாட்டு நிறுவனங்கள் பின்னணியில் இயக்கி வருகின்றன‌. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு ஆதரவான கருத்துகளை twitter facebook போன்ற இணையதளங்களில் பதிவிட 400 பேர் முழுநேரப் பணியில் அமர்த்தப்பட்டனர். போதும், புத்தகத்திற்குள் போகலாம்.

குஜராத் இனப்படுகொலைகளைச் செய்தவர்களே மிகப் பெருமிதத்துடன் அளித்த வாக்குமூலங்களின் பதிவே இப்புத்தகம். தெகல்கா பத்திரிக்கையின் புலனாய்வுப் பிரிவு சேகரித்து வெளியிட்ட விவரங்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பு. இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்த சில பொதுமக்கள், ஒத்துழைப்பு தந்த‌ காவல்துறை, அத்தாக்குதல்களில் இணைந்த காங்கிரஸ்காரர்கள், பின்னாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக புனிதக் கடமையென வாதாடிய வழக்கறிஞர்கள், சிறையிலும் எல்லா வசதிகளையும் பெறுபவர்கள், உதவிய நீதிபதிகள், ஏற்றுக் கொள்ள முடியாத புனைவுகள், இலஞ்சம் பெற்ற சாட்சியங்கள், மிரட்டிப் பெறப்பட்ட வாக்குமூலங்கள், தாழ்த்தப் பட்டவர்களை அணி திரட்டி கலவரத்தில் ஈடுபடுத்தியமை என நம் காலத்தின் கோர முகங்களைக் காட்டுகின்றன இப்புத்தகத்தின் வாக்குமூலங்கள். சில உதாரணங்கள்:

‘பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எங்களுக்குப் பெட்ரோலையும் டீசலையும் இலவசமாகக் கொடுத்தார்கள்.’
‘நாங்கள் இவர்களைக் கொளுத்துவதைத் தான் விரும்புகிறோம். ஏனெனில் இந்தத் *****கள் இறந்த பின் எரிக்கப் படுவதை விரும்புவதில்லை.’
‘அன்று நிகழ்ந்தது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நிகழ்ந்தது போலிருந்தது.’
‘நான் ராணா பிரதாப்பைப் போல் உணர்ந்தேன்.’
‘மவுண்ட் அபுவில் இருக்கும் குஜராத் பவனில் என்னை நரேந்திர மோடி தங்க வைத்தார்.’
‘என்னை வெளியே கொண்டுவர நரேந்திர மோடி மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார். நான்காவது நீதிபதி கோப்புகளைத் திறந்து கூட பார்க்கவில்லை. நாங்கள் வெளியே வந்துவிட்டோம்.’
– பாபு பஜ்ரங்கி (பஜ்ரங்தள் தலைவர்)

‘முஸ்லீம்கள் எங்களுடன் ஒரு நாள் போட்டி விளையாடி 60 ஓட்டங்கள் என்ற இலக்கைத் தீர்மானித்தார்கள். நாம் என்ன விலை கொடுத்தாகிலும் இந்தப் பந்தயத்தில் விளையாட வேண்டும். 600 ஓட்டங்களை எட்டும் வரை யாரும் விளையாட்டை நிறுத்தி விடாதீர்கள்.’
‘நாங்கள் இரயிலில் கிளம்பியபோது எங்களுடன் 1800 பேர் இருந்தார்கள். பயணச்சீட்டு 50 பேருக்கு மட்டுமே எடுக்கப்பட்டது. மற்றவர்கள் ராமரின் பெயரால் பயணித்தார்கள்.’
‘நரேந்திர மோடி காவல் துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார்.’
– ராஜேந்திர வியாஸ் (சபர்மதி எக்ஸ்பிரஸில் இருந்த கரசேவகர்களின் பொறுப்பாளர்)

‘இங்க பாருங்க எம் பொண்டாட்டி உட்கார்ந்திருக்கா. அவள் முன்னாலயே சொல்கிறேன். பழங்கள் இருந்ததால் எடுத்து சுவைத்தேன். சாப்பிட்டேன். நானும் சாப்பிட்டேன். நான் ஒரு பழத்தைச் சாப்பிட்டேன்.’
‘காவல் துறையினர் எப்படியும் 70-80 பேரைக் கொன்றிருப்பார்கள்.’
– சுரேஷ் ரிச்சர்ட் (ஆர்.எஸ்.எஸ்)

‘ராக்கெட் செலுத்தும் கருவி ஒன்றை நாங்கள் இங்கு தயாரித்தோம். நாங்கள் வினியோகித்த ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்த்து எங்கள் ஆட்களே திகைத்துப் போனார்கள்.’
‘வேறு எந்த முதல்வரும் செய்ய முடியாததை மோடி செய்தார்.’
– ஹரேஷ் பட் (கோத்ரா சட்டமன்ற உறுப்பினர்)

(http://www.tehelka.com/)

நரோடா பாட்டியாவில் சவக்குழியான உயிர் பிழைக்க பதுங்கிய கிணறு (http://www.tehelka.com/)

‘ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தபோது எனக்கு பயணிக்க சிறப்பு அனுமதி இருந்தது.’
– திமந்த்பட் (எம்.எஸ். பல்கலைக் கழகத் தலைமை தணிக்கையாளர்)

‘நீங்கள் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறினால் காவல் துறையினர் புரிந்து கொள்வார்கள்.’
– தவால் ஜெயந்தி பட்டேல் (VHP தலைவர்)

‘மோடி முதல்வராக இருந்திருக்காவிட்டால் அவர் வெடிகுண்டையும் வீசியிருப்பார்.’
– அரவிந்த் பாண்டியா (மாநில அரசு தலைமை வழக்கறிஞர்)

‘ஆயுதங்களை எல்லாம் மிகவும் பாதுகாப்பாக நகரமெங்கும் வினியோகித்தார்கள்.’
– அனில் பட்டேல்

‘காவல் துறையினர் எங்களை வேடிக்கை பார்த்தது தவிர வேறு எதனையும் செய்யவில்லை.’
– பிரகலாத் ராஜீ

‘அது வரலாறு காணாததாக இருக்க வேண்டும்.’
– தீபக் ஷா (பாஜக தலைவர்)

ரோமானியப் பேரரசிற்கு எதிராக மக்களின் கிளர்ச்சி உச்சத்தில் இருந்த நேரத்தில், இயேசு எனப் பெயர் கொண்ட மனிதருக்கு மரண தண்டனை விதிக்க ஆளுநரைப் பரிந்துரைக்கிறார்கள் யூத மதக் குருக்கள். விசாரித்த ஆளுநர் பிலாத்து மரண தண்டனை விதிக்கும்படி அந்த மனிதரிடம் எந்தவொரு குற்றமும் காணவில்லையே என்கிறார். அம்மனிதனுக்கு மரண தண்டனை என்பது மக்களின் விருப்பம் என மதக் குருக்கள் கட்டாயப் படுத்துகின்றனர். மதத்தை மீறி எதுவும் செய்ய இயலாத ஆளுநர், தனக்கும் அம்மனிதனின் கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என பொதுமக்கள் முன்னிலையில் கைகழுவுகிறார். அது மன்னராட்சி. குஜராத் படுகொலை நடந்தது மக்களாட்சியில். மைக்ரோசாப்ட் தலைவர் கைகுலுக்கிய பின் தற்செயலாக துடைத்துக் கொண்டதை ஒருநாள் முழுக்க விவாதித்த உலகம், குஜராத் படுகொலைகளின் இன்னும் காயாத பிசுபிசுக்கும் ரத்தக்கறைகளை என்றேனும் என்னவென்று கேட்குமா?

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)