152. பாரதியார் ஆத்திசூடி விளக்கக் கதைகள்

(நாளை யாரையோ கொண்டாடக் கட்டாயப்படுத்தப்படும் என் தமிழ்ச் சமூகத்திற்கு, இன்று நம் பாரதியின் பிறந்த நாள் நினைவாக …)

ஆத்திச்சூ இது ஆத்திச்சூ

இது நியூ வே ஆத்திச்சூடி
கூழானாலும் குளிச்சுக் குடி
கந்தையானாலும் கசக்கிக் கட்டு
அறம்செய விரும்பு
மவனே ஒப்புரவொழுகு

ஆத்திச்சூடி டெல் மீ நவ்
தமிழ்ப் பேசும் மக்களுக்கு வணக்கம் சொல்லி மூவ் அரவ்ண்ட்

டர்ர்ர்னா டர்ர்ர்னா டர்ர்ர்னா டர்ர்ர்னா ஏ

‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற தமிழின் முதல் புதினம் எழுதிய மயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரன் விஜய் ஆண்டனி இசையமைத்துப் பாடிய பாடல் இது.
——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: பாரதியார் ஆத்திசூடி விளக்கக் கதைகள்
ஆசிரியர்: லக்ஷ்மி அம்மாள்
வெளியீடு: LKM பப்ளிகேஷன், தி.நகர், சென்னை
முதல் ஈடு: சூலை 2009
பக்கங்கள்: 448
விலை: ரூபாய் 250
வாங்கிய இடம்: Higginbothams, அண்ணா சாலை, சென்னை
——————————————————————————————————————————————————————————————–
அறம்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விலம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண்ணெழுத் திகழேல்
என இருசீர் வருக்கமாலையில் அவ்வையார் நற்கருத்துகள் சொன்னார். ஆத்திப்பூ சூடிய கடவுளை வாழ்த்தித் தொடங்குவதால், இது ஆத்திசூடி என அறியப்படுகிறது. வேதமே ஆனாலும் புதுமை செய்யச் சொன்ன மகாகவி, பின்னாளில் புதிய ஆத்திசூடி என்று தலைப்பிட்டு எழுதினார்.
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
என இருசீர் வருக்கமாலையாகவே எழுதினார். மொத்தம் 110 வரிகள். எனக்கு மனப்பாடமாகத் தெரியும். என் பெயர்தான் ஞானசேகர்; ஆனால் ஞகர வரிசையில் சொல்லப்படும்,
ஞமலிபோல் வாழேல்
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்
ஞேயம் காத்தல்செய்
என்ற‌ வரிகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே பல நாட்களாக நினைவில் வைத்திருந்தேன். தெய்வமிகழேல் என்றது ஆத்திசூடி. தெய்வம்நீயென்றுணர் என்றது புதிய ஆத்திசூடி. ‘தையல்சொல் கேளேல்’ என்றார் அவ்வையார் என்ற தையல். ‘தையலை உயர்வுசெய்’ என்றார் பாரதி என்ற முண்டாசுக்கவி.

அஞ்சாதே திரைப்படத்தின் ஆரம்பத்தில் புதிய ஆத்திசூடியின் வரிகளைக் கொண்ட ஒரு பாடலை இயக்குனர் மிஷ்கின் பாடியிருப்பார். பாரதியாரின் புதிய‌ ஆத்திசூடியின் ஒவ்வொரு வரிக்கும் விளக்கமாக ஒரு கதை சொல்லும் புத்தகம் இது. மொத்தம் 110 கதைகள். ஒரு ஊர்ல… ஒரு காட்ல… போன்ற‌ கற்பனைக் கதைகள் இல்லை. சில இதிகாசங்களில் இருந்தும் இருக்கின்றன. லக்ஷ்மி மிட்டல், ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல், திருப்பூர் குமரன், சிட்னி ஷெல்டன், வாஞ்சிநாதன், தெனாலிராமன், C.V. ராமன், ஷெர் ஷா சூரி, ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன், ஹென்றி போர்டு, அக்பர், மன்னர் சிவாஜி, திருபாய் அம்பானி, கூகிள் நிறுவனர் லாரி பேஜ் என பலரின் கதைகள் உள்ளன. டெல்லியின் முதல் பெண் மேயர், துப்பறியும் புதினம் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என பலரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.

ஒரு தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பெண்ணின் பிரசவத்தின் போது, குழந்தையின் தலை வெளியே வராமல் கால் முதலில் வரும். கதாநாயகன் சிகரெட் நெருப்பால் சுட்டபின், காலை உள்ளிழுத்துக் கொண்டு, வழக்கப்படி தலை முதலில் வெளிவரும். பேஸ்புக் டிவிட்டரில் வைரலாக ஒருநாள் பொழுதை ஓட்ட பொருத்தமான நகைச்சுவை போல் தோன்றும் இக்காட்சி, ஓர் உண்மை நிகழ்ச்சி. சென்னையில் ஈ.வே.ரா.பெரியார் சாலை எனும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் கிங்ஸ்டன் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ரங்காச்சாரியால் பார்க்கப்பட்ட ஒரு பிரசவம் அது. அவரின் கதைதான் ‘ஆண்மை தவறேல்’. ஒரு காலத்தில் நமது தொலைக்காட்சிகளில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதலில் வெளிவந்த‌, பாலைப் போலே வெண்மை என அடிக்கடி வரும் விளம்பரமான, வாஷிங் பவுடர் நிர்மாவின் நிறுவனர் கர்சன்பாய் பட்டேலின் கதை – ஏறுபோல் நட. ஈ.வெ.ராமசாமிக்குப் பெரியார் என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ஏழிசை மன்னர் என்ற பட்டத்தையும் அளித்த‌ தஞ்சை சரஸ்வதி என்ற தர்மாம்பாளின் கதை – ஓய்தலொழி. சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிற கார்டூன் என வேலை மறுக்கப்பட்ட‌ வால்ட் டிஸ்னி – காலம் அழியேல்.

ஐந்து நோபல் பரிசுகள் வாங்கிய மேரி கியூரி குடும்பம் – கூடித்தொழில் செய். நளதமயந்தின் மூலக்கதை எழுதிய ஸ்ரீஹர்சன் – கேட்டிலும் துணிந்து நில். உப்புச் சத்தியாகிரகம் நடத்திய வேதாரண்யம் வேதரத்தினம் – சுமையினுக்கு இளைத்திடேல். ஒன்றரைக் காசு மீதியைத் திருப்பித் தராததற்காக ஒரு ஊரையே எரித்த காளமேகப் புலவர் – ரௌத்திரம் பழகு. ஒலைச் சுவடிகளில் கிடந்த தமிழைக் கிட்டத்தட்ட 91 நூல்களாக்கிக் காத்த உ. வே. சாமிநாதையர் – நூலினைப் பகுத்துணர். பகீரதப் பிரயத்தனம் என உவமையாகச் சொல்லப்படும், கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்த பகீரதன் – பெரிதினும் பெரிது கேள். வேலு நாச்சியார் – மானம் போற்று. SMS எம்டன் கப்பலில் இருந்ததாகச் சொல்லப்படும் செண்பகராமன் – முளையிலே முகத்து நில். கிருஷ்ண பக்தர் இராமானுசர் – மூப்பினுக்கு இடங்கொடேல். கோவை வேளாண் கல்லூரியின் டி.எஸ்.வேங்கடராமன் – மேழி போற்று. கோழிக்குட்டி என்று சொன்னதால் கிண்டல் செய்யப்பட்டு, பின்னாளில் சதுரகராதி எழுதிய‌ வீரமா முனிவர் – ரூபம் செம்மை செய். காந்திக்குத் தென்னாப்பிரிக்காவில் விடுதலை உணர்வூட்டிய தில்லையாடி வள்ளியம்மை – தாழ்ந்து நடவேல். 16 வயதினிலே இறந்துபோன அவரை வழக்கம்போல் ஒரு குறிப்பிட்ட சாதி அடையாளத்துடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைச் சென்னை மாநகரத்திலேயே நான் பார்த்திருக்கிறேன்.

‘சௌரியம் தவறேல்’ என்பதில் சௌரியம் என்றால் சௌகரியம் அல்லது வசதி எனவும், ‘சூரரைப் போற்று’ என்பதில் சூரர் என்றால் வீரர் எனவும் நினைத்திருந்தேன். தவறுகளைத் திருத்தச் செய்தது இப்புத்தகம். திருப்பூர் குமரன் குடும்பத்தார் பட்டாசு வெடிப்பதில்லை. தாஜ்மகாலைச் சுற்றி இருக்கும் நான்கு மினார் கோபுரங்களும் வேண்டுமென்றே வெளிநோக்கி சாய்வாகக் கட்டப்பட்டன. புதன் கிரகம் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளாமல், தன் முகத்தைச் சூரியனுக்குக் காட்டிக் கொண்டே இருப்பதால், அம்முகம் தீய்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி புதிய தகவல்கள் பல இப்புத்தகத்தின் கதைகளினூடே உண்டு. ‘பிறக்கும் போது அருவருப்பாய் இருக்கும் அன்னக் குஞ்சினை மற்ற வாத்துகள் கேலி செய்கின்றன. ஆனால் வளர்ந்த பிறகு அன்னப் பறவையை எல்லாரும் கொண்டாடுகின்றனர்’. ஓர் எழுத்தாளர் பற்றிய ஒரு கதையில் அவர் எழுதியதாகச் சொல்லப்படும் இவ்வரிகளை மிகவும் ரசித்தேன். எருமைத் தயிர் உண்டுவிட்டு, அவரைப் பந்தலின் கீழ் இளைப்பாறச் சொல்லும் தகவல்கள் அருமை.

‘செய்வது துணிந்து செய்’ என்பதற்குச் சொல்லப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி, எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவனர். தேவதாசி முறை பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது, அது இந்தியப் பண்பாட்டின் ஓர் அங்கம் ஆதலால் அழிக்கக் கூடாது என சொன்னாராம் காமராசரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி (பவன்). ‘இத்தனை காலம் எங்கள் இளம்பெண்கள் தேவதாசிகளாக இருந்தனர். இனிமேல் உங்கள் வீட்டு மங்கையர்கள் தேவதாசிகளாக இருந்து இந்தியப் பண்பாட்டைக் காக்கட்டும்’ என்று டாக்டர் முத்துலட்சுமி வாதாடினார் என்பது போன்ற பல அருமையான தகவல்களை இப்புத்தகம் சொல்கிறது.

பெண் இலக்கியவாதிகள் அதிக ஆபாசத்துடன் எழுதுவதாக ஆண் எழுத்தாளர்கள் அடிக்கடி பிரச்சனைகள் கிளப்புவதைக் கண்டிருக்கிறோம். சண்டக்கோழி திரைப்படத்தில் ‘குட்டி ரேவதி’ என்ற வார்த்தைக்கு எவ்வளவு பிரச்சனைகள்! பெண்ணைக் காம இச்சையைத் தூண்டுபவள் என்றும், அதற்காக மட்டுமே இருக்க வேண்டியவள் என்றும் உலகம் முழுவதும், பெரும்பாலும் எல்லா மதங்களிலும் இலக்கியம் புனைந்தவர்கள் எல்லாம் ஆண்கள்! பெண்ணின் காம இச்சைகளை அவளே எழுதுவதை மறுக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தை எதிர்த்து இலக்கிய உலகில் சாதித்த ஒரு பெண்ணின் கதை போன்ற பல நல்ல கதைகள் இப்புத்தகத்தில் உண்டு.

மொகலாய மன்னர்கள் பற்றி பற்பல கெட்ட கட்டுக்கதைகள் புதிது புதிதாகச் சொல்லப்படும் நம் காலத்தில், அவர்களைப் பற்றி பல நல்ல கதைகளைச் சொல்லும் இது போன்ற புத்தகங்கள் கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டும். ஆனால் சிறுவர்களை நேரடியாகப் படிக்கச் சொல்ல நான் சொல்ல மாட்டேன். பெற்றோர்கள் முதலில் படித்துவிட்டு சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்வதே நல்லது. காரணங்கள் இரண்டு:
1. இதிகாசங்களில் இருந்து சொல்லப்படும் சில ரிஷிகளின் கதைகளில் கொஞ்சம் மூட நம்பிக்கைகளும் மதமும் அதிகம். சிறுவர்களுக்கு மதம் சொல்லித் தருவது, என்னைப் பொறுத்தவரை அவர்கள் மேல் திணிக்கப்படும் வன்முறை. Religion is a child abuse!
2. இசை வேளாளர், வேளாள செட்டியார், பிராமணர் என்ற சாதிப் பெயர்களுடன் அறிமுகம் செய்வதை அடுத்த பதிப்பில் தவிர்க்கலாம். ஏற்கனவே காமராசர் சிதம்ப‌ரனார் முத்துராமலிங்கம் போன்ற தலைவர்களைச் சாதிகள் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இவ்விரண்டையும் தணிக்கை செய்துவிட்டால் சிறுவர்கள் முதல் எல்லாருக்குமான ஓர் அற்புதமான புத்தகம் உங்கள் கையில்!

நான் அதிக புத்தகங்கள் படிப்பதைத் தெரிந்து கொண்ட தமிழ் நண்பர் ஒருவர் management inspirational self-motivation பற்றி ஏதாவது நல்ல புத்தகங்கள் சொல்லச் சொன்னார். ‘அப்படின்னா, ஒங்களுக்கு உருப்படியா அஞ்சு திருக்குறள் கூட தெரியாது. பாரதியார் பாட்டு ஒண்ணு கூட சுத்தமா தெரியாது. சரிதானே?’ எனக் கேட்டேன். இல்லை என்று அவர் மறுக்கவில்லை.
நன்று கருது.
நாளெல்லாம் வினை செய்.
நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுந்துணர்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements