153. In the light of what we know

இரகசியங்கள் சொல்கையில்
நான் மிகவும் தடுமாறுகிறேன்

உவமானங்களால்
சுற்றிச் சுற்றியே
பல சமயங்களில்
உவமேயங்களை
மறந்து விடுகிறேன்

ஆடையென உவமான‌ங்களை
அவிழ்த்துக் கொண்டு
என்னுடனேயே புதைக்கிறது
உவமேயங்களை உலகம்

உவமேயங்களைப்
புரிந்து கொள்ளாமல்
உவமானங்களில்
பூரித்துப் போகும் உலகம்
ஆடையற்றுத் தெரிகிறது
சவக்குழியில் இருந்து பார்க்கையில்!

– ஞானசேகர் (‘இரகசிய உருவகம்‘ கவிதையிலிருந்து)

இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் உலக வரைபடத்தைப் பார்க்காமலேயே பதில் சொன்னால் Very Good. பார்த்துவிட்டு சொன்னால் Not Bad.
1. ஆப்பிரிக்கா கண்டம், கிரீன்லாந்து நாடு – எது பெரியது?
2. பிரேசில் நாடு, அலாஸ்கா மாகாணம் – எது பெரியது?
3. பின்லாந்து, இந்தியா – வடக்கு தெற்காக எது நீளமானது?
உங்கள் பதில்கள் எல்லாம் தவறுதானா என நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு காலத்தில் என் நெருங்கிய நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பின் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது புத்தகம் அன்பளிப்பாகத் தருவதைப் பழக்கமாக வைத்திருந்தேன். அவர்கள் யாருமே அவற்றைப் படிக்கவே இல்லை என்று தெரிந்த பின் அப்பழக்கத்தை நிறுத்திக் கொண்டேன். ஆனால் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் புத்தகங்களைத் தரும் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் தெலுங்கு. பெரும்பாலும் வெளிநாட்டில் தான் இருப்பான். அவன் இந்தியா வரும்போது ஹைதராபாத் போய் அவனைப் பார்த்து வருவேன். அவனுக்காக சுறா போன்ற கொடூரமான திரைப்படங்களை எல்லாம் திரையரங்கில் பார்த்திருக்கிறேன். சென்ற ஆண்டு வரை அவன் கொடுத்த எந்தவொரு ஆங்கிலப் புதினத்தையும் முழுமையாகப் படித்ததில்லை. எங்களின் இரசனைகளின் முரண்பாடுதான் காரணம். அவனிடமே புத்தகங்கள் தர வேண்டாம் என சொல்லிவிட்டேன்.

சென்ற ஆண்டு ஒரு மாறுதலுக்காக அவன் சென்னை வந்து என்னைச் சந்தித்தான். அதற்கு முன் அவனைச் சந்திக்க ஹைதராபாத் சென்றிருந்த நாளில், பெரும்பாலான குடிமக்களைத் திருப்திப்படுத்த அப்சல் குரு தூக்கில் போடப்பட்டதால், மொத்த நகரும் வெறிச்சோடிக் கிடந்தது. அமீர்பேட் முதல் காச்சிகுடா வரை ஒரு மதுபானக்கடை கூட கண்ணில் படவில்லை. அதனாலும் அவனுக்குப் புதிதாய்த் திருமணமானதால் இருந்த கட்டுப்பாடுகளாலும் இந்தமுறை கண்டிப்பாக சென்னையில் குடிக்க வேண்டும் எனச் சொல்லி இருந்தான். அப்போது எனக்கு இருந்த ஓர் ஆங்கில வியாதியையும் பொருட்படுத்தாமல், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவனுக்காக மது குடித்தேன். சும்மா பீர் எனப்படும் பியர் தான். இந்த முறை ‘இருக்கு ஆனா இல்ல’ என்ற ஒரு நல்ல திரைப்படம் பார்த்தோம். கிளம்பும் போது இரு புத்தகங்களைக் கொடுத்து கண்டிப்பாக படிக்கச் சொல்லி போய்விட்டான்! இரு புத்தகங்களும் தலையணை தடிமன். ஒரு புத்தகம் பொருளாதாரம் அல்லது மேலாண்மை பற்றியது. இன்னொரு நண்பனிடம் கொடுத்துவிட்டேன். சரி என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம் என இன்னொரு புத்தகத்தை வைத்திருந்தேன். அப்புதினம் இதோ!
——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: In the light of what we know
ஆசிரியர்: Zia Haider Rahman
வெளியீடு: Picador India
முதல் ஈடு: 2014
பக்கங்கள்: 555
——————————————————————————————————————————————————————————————–
இந்தியாவை ஒருவாரம் தனியாளாக இரயிலில் சுற்றிவிட்டு வந்து நான் எழுதிய, ‘எட்டுத் திசையும் பறந்து திரிகுவை‘ என்ற பதிவையும் விளம்பர இடைவேளையில் ஒருமுறை படித்துவிடுங்கள். அப்பயணத்தில் பாரதி வள்ளுவன் தவிர, நான் படிப்பதற்காக இப்புதினத்தைத் தான் எடுத்துப் போனேன். அப்பயணத்தில் பாதி புத்தகத்தையும், அலுவலகம் செல்லும் போது சென்னை மெட்ரோ இரயில்களில் மீதிப் புத்தகத்தையும் என, இரயில்களிலும் இரயில் சார்ந்த இடங்களிலும் மொத்த புதினத்தையும் படித்து முடித்தேன். ப‌ங்களாதேஷைப் பூர்வீகமாகக் கொண்டவர் கதாநாயகன். பொருளாதார மந்த நிலையில் அவனுக்கும் வேலை பறிபோகிறது. அவனுக்கு ஒரு மனைவி, ஒரு நண்பன். 1971 ப‌ங்களாதேஷப் பிரிவினையும், அமெரிக்காவின் போருக்குப் பிந்தைய ஆப்கானிஸ்தானும் முக்கிய கதைக்களங்கள். அமெரிக்கா இலண்டன் பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என பல நாடுகளுக்குக் கதை பயணிக்கிறது. மிகமிக மெதுவாக பயணிக்கும் இப்புதினம் ஏதோ சொல்ல வருகிறது என நினைத்து நினைத்தே முழுவதும் படித்துவிட்டேன். தன் மனைவியின் மாதவிலக்கு நாட்களை வைத்து கணக்கிட்டு அவள் சுமக்கும் கரு தன்னுடையது அல்ல என்று கதாநாயகன் முடிவெடுக்கும் பகுதியும், ஆப்கானிஸ்தானில் ஒரு காவற்காரருடன் ஏற்படும் நட்பும், பங்களாதேஷில் நடக்கும் சில சம்பவங்களும் தவிர மற்றவை ஏதும் நினைவில் அவ்வளவாகப் பதியவில்லை.

கஷ்மீர் பற்றி ஒருசார்பான ஒரு தமிழ்ப் புத்தகத்தை இரயில் இருந்து நான் தூக்கியெறிய முற்பட்டதை நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். வாசகனைக் காம இச்சையின் இரசிகனாக இருக்கச் சொல்லும், 2014 புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய இரண்டு தமிழ்ப் புதினங்களைத் தவறியும் படித்துவிட வேண்டாம் என என் நண்பர்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவைகளைப் போல ஒதுக்கப்பட வேண்டிய புத்தகமல்ல இப்புதினம். புதினத்தின் கதைமாந்தர்களின் வாழ்வு எனக்குப் பரிட்சயம் இல்லாததால் எனக்கு ஒட்டாமல் போய் இருக்கலாம். அப்படி சொல்லும் Our experience of a novel is enriched by our experience of life என்ற ஒருவரி கூட இப்புதினத்தில் உண்டு. ஆனால் ஒரு புதினத்தில் இருந்து நான் இதுவரை எடுத்த அதிகமான குறிப்புகள் இதில் இருந்துதான். அதனால் எனக்கு மறந்து போன கதையைத் தவிர, நான் நெருக்கமாய் உணர்ந்த சில‌ விடயங்களைச் சொல்கிறேன்.

வெள்ளிக் கிரகத்தைத் தொலைநோக்கியில் ஆய்வு செய்த ஒரு விஞ்ஞானி, அக்கிரகம் முழுவதும் சிவப்புநிறக் கோடுகள் தெரிவதை அறிவியல் உலகிற்கு அறிவித்தார். மற்ற விஞ்ஞானிகள் யாருமே அதைக் கண்டுகொள்ளவே இல்லையாம். அவர் இறந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கண் மருத்துவர் அச்சிவப்பு நிறக் கோடுகளின் புதிரை விடுவித்தாராம். அந்த விஞ்ஞானி மிக உன்னிப்பாகக் கவனித்ததில் தன் கண்ணில் உள்ள இரத்தநாளங்களை வெள்ளி மீது சிவப்புக் கோடுகளாக நினைத்துக் கொண்டாராம். இது எப்படி இருக்கிறது?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எதிராக பலர் எழுதிய புத்தகங்களைத் தொகுத்து A Hundred Authors Against Einstein என்ற ஒரே புத்தகமாக வெளியிட்ட போது, If I were wrong, then one would have been enough என்று ஐன்ஸ்டீன் சொன்னாராம். இப்புதினத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம் தனது answering machineல் வைத்திருக்கும் வசனம் இது: Who are you and what do you want? Some people spend a lifetime trying to answer these questions. You, however, have 30 seconds.

ஐநா சபைக்கான பாகிஸ்தானின் தூதர், எண்ணெய் நிறுவன முதலாளியான‌ ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் போன்றவர்கள் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். காபூலில் இருக்கும் ஐநா சபையின் மதுபான விடுதியிலும் புதினம் பயணிக்கிறது. புதினத்தின் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு தலைப்பு. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் என்னைப் போலவே சில மேற்கோள்கள். பல புத்தகங்களும் கவிதைகளும் வசனங்களில் வருகின்றன. சில உதாரணங்கள்:
Our concern with history, is a concern with pre-formed images already imprinted on our brains, images at which we keep staring while the truth lies elsewhere, away from it all, somewhere as yet undiscovered.
– W.G. Sebald

When there is blood on the streets, buy property. (eg: Kabul in 2002)
– Wall Street saying

Life can only be understood backwards; the trouble is, it has to be lived forwards.
– Soren Kierkegaard

Calling things by their names is the beginning of wisdom.
– Chinese proverb

We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern – a class of persons India in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect.
– Macaulay

Macualay, the systematic falsifier of history.
– Marx

Whereas some states possess an army, the Prussian army possess a state என்று வால்டேர் (Voltaire) சொன்னதாகப் படித்தபோது, தனது இந்தோனேசிய நண்பர் சொன்னதாக வரலாற்றாளர் இராமச்சந்திர குஹா சொன்னது நினைவுக்கு வந்தது: At least you have general elections in India. We have elections of generals.

அன்பும் வெறுப்பும் ஒரே சுரப்பியால் தூண்டப்படுவதால் அவற்றால் ஒரே விதமான செயல்களையும் தூண்ட முடியும். உதாரணமாக நமக்கு இயேசுவின் பாடுகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என சொல்லித் தரப்படாமல் இருந்திருந்தால், பேராசை கொண்ட யூதாஸ் காரியோத் மற்றும் கோழையான பீட்டர் (இராயப்பர்) இருவரின் செயல்களை மட்டுமே கொண்டு அவர்களில் யார் அதிகமாக இயேசுவை அன்பு செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? புதினத்தில் வரும் இந்த சாதாரண கேள்வியைப் பல மதங்களின் பல சம்பவங்களுக்கும், இன்றைய நடைமுறைகளுக்கும் விரிவுபடுத்தி யோசித்தால் எப்படி இருக்கும்?

ஒருமுறை நான் சலூனில் முடிவெட்டிக் கொண்டிருந்த போது, கும்பலாக பலர் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல் கிரிக்கெட் அறவே பிடிக்காத சிலரும் இருந்தனர். கிரிக்கெட்டால் தான் நாடு குட்டிச் சுவராகப் போவதாக ஒருவர் சொன்னார். 11 முட்டாள்கள் விளையாடுவதைப் 11 ஆயிரம் முட்டாள்கள் பார்ப்பதாக பெரியார் சொன்னதாக இன்னொருவர் சொன்னார். யாருமே அப்படியா என்று ஆச்சரியப்படவும் இல்லை, அப்படி இல்லை என்று எதிர்க்கவும் இல்லை. நான் மெலிதாக புன்னகை செய்தேன். அப்படி சொன்னவர் பெரியார் அல்ல; பெர்னாட்ஷா. அதேபோல, ‘100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், இப்பூமியின் சுற்றுப்பாதையைக் கூட நான் மாற்றிக் காட்டுகிறேன்’ என விவேகானந்தர் சொன்னதாக ஒரு கோஷ்டி எழுச்சி வசனம் பேசி நம்பவைத்துக் கொண்டு இருக்கிறது. இப்புத்தகத்தில் அப்படி ஒரு வசனம் உண்டு. வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னதாக ஏதோ ஒன்றை ஒருவர் சொல்ல, அதை இன்னொருவர் மறுக்க, Isn’t there a convention that if you don’t know who the author is, you can always attribute it to Churchill? என்றொரு பதில் கிடைக்கிறது.

Kurt Godel’s Incomplete Theorem போன்ற கணிதத் தகவல்கள், Poggendorff’s illussion, Muller Lyer illusion போன்ற சுவாரசியமான தகவல்கள் பல இப்புதினத்தில் உரையாடல்களில் வந்து போகின்றன. பெங்காலி மொழிக்காக இன்றைய பங்களாதேஷ் போராடியதன் நினைவாகத் தான் உலகத் தாய்மொழிகள் தினம் கொண்டாடப் படுகிறது. அப்போது நடந்த சம்பவங்கள் சில இப்புதினத்தில் உண்டு. நான் இப்புதினத்தைத் தொடர்ந்து படிக்க பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் கதைக்களங்கள் முக்கிய காரணம். ‘வங்காளப் பெண்கள் நமது படைவீரர்களால் கற்பழிக்கப்பட்டால் என்ன? குறைந்தபட்சம் அடுத்த தலைமுறை வங்காளர்களாவது அழகாக இருப்பர்’ – இப்படித்தான் 1971ல் (மேற்கு) பாகிஸ்தானின் மனநிலை இருந்ததாம். பிரம்மபுத்திரா நதிக்குப் பங்களாதேஷில் ஜமுனா என்று பெயராம். அதே பெயரில் இந்தியாவில் ஒரு நதி இருப்பதையும், ஆண் பெண் ஆனதையும் கவனிக்கவும். குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள இடங்களில் குழந்தைகளுக்கு இரசித்து பெயரிடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை – இது போன்ற சின்ன சின்ன தகவல்கள் பல உண்டு. அரபு நாடுகளில் உள்ள காப்டிக் கிறித்தவர்களும், மால்டாவில் உள்ள ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் கடவுளை அல்லா என்றுதான் அழைப்பார்களாம். திருக்குரானை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர்கள் அல்லா என்ற வார்த்தையைக் குழப்பிவிட்டதாக இப்புதினத்தில் வரும் தகவல் எனக்கும் புதியதுதான்! If there is any substitute for love, its memory என்ற வசனத்தை மிகவும் ரசித்தேன்.

ஒரு புதிய நாட்டில் சுற்றுலா சென்ற சில நண்பர்கள் சாலையோரம் ஒரு கருப்புநிற ஆட்டை முதன் முதலில் பார்க்கின்றனர். ‘இந்நாட்டில் உள்ள ஆடுகள் எல்லாம் கருப்பு என நினைக்கிறேன்’ என்கிறான் ஒருவன். ‘இந்நாட்டில் சில கருப்பு ஆடுகளும் இருக்கின்றன’ என்கிறான் இன்னொருவன். ‘குறைந்தபட்சம் ஒருபக்கமாவது கருப்பு நிறமுடைய ஓர் ஆடு இந்நாட்டில் இருக்கிறது’ என்கிறான் மற்றொருவன். அப்படித்தான் இப்புதினம்! புத்தகம் எப்படி இருந்தது என்று அத்தெலுங்கு நண்பன் கேட்டான். Not Bad என்றேன்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)