155. அப்பனின் கைகளால் அடிப்பவன்

முன்பு போல்
அடிக்கடி வரமுடியாமல் போன
பக்கத்து வீட்டுக்காரர்களைப்
பற்றி அறிய
காரணங்கள்
பல இருந்தும்
முதற் காரணம்
இப்படித்தான் தோன்றுகிறது
தெரிந்து இருக்குமோ
என் சாதி.

வீட்டை
அலங்கரித்தலென்பது
மறைத்ததை
இருப்பதோடு சேர்த்தல்
உனக்கு.
இருப்பதை
மறைப்பது
எனக்கு.

சேரிக்கு வெளியே
கோணல்
கோணலாய்
சேரிக்குள் வரமறுத்த
கிராமத்துச் சாலைகள்.

வான்வழி
தரைவழி
நீர்வழி
சண்டையிடும் உலகில்
வழியில்லாமல் தவிக்கிறோம்
சுடுகாட்டிற்கு.

பெயரையும்
ஊரையும்
சொன்ன பிறகும்
நீ
துரைசாமி கவுண்டர்க்கு
என்ன வேண்டும்
வேலு முதலியார்க்கு
பக்கத்து வீடா
தேரடிக்கு எதிர்த் தெருவா
அல்லிக் குளத்திற்கு மேல் தெருவாயெனக்
கேட்ட
அனைத்து கேள்விகளுக்கும்
இல்லையென்றதும்
முகத்தைச் சுருக்கி
நீ
அப்போ… என நீளும்
அவன் ஆய்விற்கு
முற்றுப் புள்ளியாய்
பறச்சேரி யென்றேன்.

திருவிழா முடிந்து
பள்ளிக்கு வந்ததும்
கதை கதையாய்ச் சொல்லுவோம்
பக்கத்து ஊரு பசங்ககிட்ட
எங்க ஊர்ல திருவிழா
எங்க ஊர்ல திருவிழான்னு
இந்தியாவை
எங்க நாடுன்னு
சொல்லிக்கிறதைப் போல.

நான் குறித்து வைத்திருக்கும் இக்கவிதைகளில் கடைசியாக, பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் மேல் ஆசிரியர்கள் காட்டும் சாதி கொடுமைகள் பற்றி ஒரு கவிதை. ‘எல்லா வாத்தியாருமா இப்படியென கேட்பவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்’ என்று முடியும் அக்கடைசிக் கவிதையைப் படித்த பின்னும், இக்கவிதைத் தொகுப்பைப் பற்றி ஒரு வரியேனும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நீங்களும் படித்துப் பாருங்கள்.

————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: அப்பனின் கைகளால் அடிப்பவன்
ஆசிரியர்: அதியன்
வெளியீடு: நறுமுகை, செஞ்சி
முதல் ஈடு: மார்கழி – திருவள்ளுவர் ஆண்டு 2042
பக்கங்கள்: 80
விலை: ரூபாய் 60
வாங்கிய இடம்: நினைவில்லை
————————————————————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements