156. NOBODY CAN LOVE YOU MORE

ராணிகள் கைவசமிருந்தும்
ஆளத் துணியாதவன்.
சகல சௌகரியங்களோடும்
ஒரு தேசத்திற்கு உங்களை
நாடு கடத்துவான் எனினும்
மூடிய கதவுகளுக்கு அப்பால்
இவன் அகதி.
– யுகபாரதி

கையில் கறைபடியாதவரை
பாவத்துக்குச் சம்பளமில்லை
ஆணுறை.
– வே.நெடுஞ்செழியன்

இந்தக் கூலியே உழுதவனுக்குப் போதும் என்கிறது முதலாளித்துவம். உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்கிறது கம்யூனிசம். உழுதவனே கூலி கொடுக்கும் ஒரு பழம்பெரும் சித்தாந்தமும் உண்டு. உலகின் ஆதித் தொழிலான விபச்சாரம் தான் அது! அத்தொழில் பாவமாகக் கருதப்பட்ட ஊரில், அது செய்து பிடிபட்ட ஒருத்தியைக் கல்லால் அடிக்கத் துரத்தி வந்தவர்களை நிறுத்தி, ‘உங்களில் அவளிடம் போகாதவன் முதலில் கல்லை எறிங்கடா’ என்கிறார் இயேசுகிறித்து. அன்று கல்லெறியாமல் போனவர்கள் தான், இன்றும் விபச்சாரத்தைச் சட்டமாக்கக் காலங்காலமாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். மலமள்ளி ஊரைச் சுத்தம் செய்பவர்களைக் கடவுளின் பிள்ளைகள் என்றும், அத்தொழில் கடவுளுக்கே செய்யும் தொண்டு எனவும் சொல்லிச் சொல்லியே அம்மக்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக காலங்காலமாக ஒதுக்கி வைத்திருக்கும் இதே சமூகம்தான், தேவதாசி என்று புனிதப் பிம்பம் சூட்டி விபச்சாரத்தையும் கடவுள் பெயரால் அங்கீகரித்திருக்கிறது. இப்படி அன்றைய பரத்தையர்கள் முதல், இன்றைய கால் கேர்ள்ஸ் வரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கும் இது பற்றி எத்தனையோ படைப்புகள் உள்ளன. கொஞ்சம் வித்தியாசமான ஒரு படைப்பு இதோ!

——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: NOBODY CAN LOVE YOU MORE – life in delhi’s red light district
ஆசிரியர்: Mayank Austen Soofi (http://www.thedelhiwalla.com/)
வெளியீடு: Penguin Books
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 227
விலை: ரூபாய் 299
வாங்கிய இடம்: Landmark
——————————————————————————————————————————————————————————————–
ஆசிரியர் மயங்க் ஆஸ்டின் சூஃபி. ஆங்கில நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் (Jane Austin) நினைவாக ஆஸ்டின் என்பதைத் தன் இயற்பெயருடன் சேர்த்துக் கொண்டவர். பத்திரிக்கையாளர் என நினைக்கிறேன். டெல்லி நகரைப் பற்றி பத்திரிக்கைகளில் பத்திகளும், புத்தகங்களும் எழுதி வருகிறார். டெல்லியின் மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதி பற்றிய இவரின் நூல்தான் இது – Nobody Can Love You More. புதினம் சிறுகதைகள் கட்டுரைகள் என எல்லா வகைகளிலும் அடங்கும் புத்தகம். நாமெல்லாம் மிகச் சாதாரணமானவர்களாகக் கருதி வந்த பிச்சைத் தொழிலின் மிகக் கடுமையான வாழ்க்கையை ‘ஏழாம் உலகம்‘ என்ற புதினமாக எழுதினார் ஜெயமோகன். நாமெல்லாம் மிகக் கடினமானவர்களாகக் கருதும் விபச்சாரத் தொழிலின் மிகச் சாதாரண வாழ்க்கையைச் சொல்வதே இப்புத்தகம் (to capture the ordinaries of their extraordinary lives). பலருக்கும் நன்றி சொல்லும் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் ‘for inspiring to never simplify what is complicated or complicate what is simple’ என்று அருந்ததி ராய்க்குச் சொல்கிறார். அப்படித்தான் மற்ற புத்தகத்தில் இருந்து சற்று வித்தியாசமாகத் தெரிகிறது இப்புத்தகம்.

மும்பைக்குக் காமத்திப்புரா, புனேக்குப் புதுவார்பேட், கொல்கத்தாவிற்குச் சோனாகாச்சி போல் டெல்லிக்கு ஹார்ஸ்டின் பாஸ்டியன் (Garstin Bastion) ரோடு; சுருக்கமாக ஜி.பீ.ரோடு (GB road). சாலையின் இரு பக்கங்களிலும் இரண்டு அல்லது மூன்றடுக்குக் கட்டடங்களைக் கொண்டது. தரைத்தளங்கள் எல்லாம் வியாபாரக் கடைகள். அதற்கு மேலுள்ள அனைத்துத் தளங்களும் விபச்சார விடுதிகள். மொத்தமுள்ள 42 கட்டடங்களில் 80 விபச்சார விடுதிகள் உள்ளன. கிட்டத்தட்ட 1000 பாலியல் தொழில் பெண்கள். அங்கிருக்கும் பெண்கள், அவர்களுடன் வாழும் அவர்களின் குழந்தைகள், அவர்களின் முதலாளிகள், தரகர்கள், தரைத்தளக் கடைக்காரர்கள், அவர்கள் சாமி கும்பிடும் கோவிலின் பூசாரிகள், நுகர்வோர்கள், முன்னொரு காலத்தில் விபச்சார விடுதிகளில் இசையமைத்தவர்கள் என பலருடன் பேச்சுக் கொடுத்து ஆசிரியர் மூன்றாண்டுகளாகச் சேகரித்த தகவல்களைப் பேச்சுநடையில் சொல்வதே இப்புத்தகம். குறிப்பாக விடுதி எண் 300ல் இருப்பவர்களிடம் இருந்து சேகரிக்கப் பட்டவைகளின் தொகுப்பே இப்புத்தகம்.

வேலை இருப்பதாக ஏமாற்றப்பட்டவர்கள், குடும்பத்தால் விற்கப்பட்டவர்கள், காதல் வயப்பட்டு கைவிடப் பட்டவர்கள், இன்னொரு பாலியல் தொழிலாளியால் தெரிந்தே போய்ச் சேர்ந்தவர்கள், கடத்தப் பட்டவர்கள், பணம் சேர்ந்த பின்னும் திரும்பிப் போக முடியாதவர்கள் என ஒவ்வொருத்திக்குப் பின்னும் ஒரு கதை இருக்கிறது. தன்னை இத்தொழிலில் தள்ளிய தன் காதலனைக் கூட இன்னும் அப்படியே காதலிக்கும் பெண்களும் அவ்விடுதிகளில் உண்டு. நுகர்வோர்களைக் கவர்வதில் அவர்களுக்கு இடையே ஏற்படும் போட்டிகளால் அவர்களுக்கு இடையே சண்டைகள் வந்தாலும் ஒரே விடுதிக்குள் உண்டு உறங்கி வாழ்கிறார்கள். வயதானவர்கள் மற்றவர்களுக்கு நுகர்வோர்களைக் கொண்டுவரும் தரகர்களாக அங்கேயே காலம் கழிக்கின்றனர். சிலர் சில விடுதிகளை விலைக்கு வாங்கி முதலாளியாகி தொழில் செய்கின்றனர். அங்கு வந்தும் மனைவியை நினைத்துப் புலம்புபவர்கள், கள்ளப் பணத்தை ஏமாற்றிக் கொடுப்பவர்கள், வேலை முடிந்ததும் பணமே கொடுக்காமல் ஓடுபவர்கள், வாழ்க்கை கொடுப்பதாகக் கூட்டிக் கொண்டுபோய் ஏமாற்றுபவர்கள், ஒருத்தியிடம் மட்டுமே செல்பவர்கள் எனப் பலவகை நுகர்வோர்கள். தரகர்களையும் முதலாளிகளையும் நம்பாத அப்பெண்கள். ஒரு விடுதியில் இருந்து அடுத்த விடுதிக்குத் தாவும் அப்பெண்களை நம்பாத தரகர்களும் முதலாளிகளும்.

சவ்ரி பஜார் (Chawri bazar) என்ற இடத்தில் தான் முன்னர் டெல்லியின் சிவப்பு விளக்குப் பகுதி இருந்திருக்கிறது. அரவான் நாயகன் திரைப்படங்களில் வருவது போல் நுகர்வோர்களை முதலில் நடனத்துடன் கூடிய இசையில் மகிழ்விக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அவ்விடுதிகளில் காலங்காலமாக இசையமைத்து வந்த, முகமது நபிகளின் வம்சவழியில் வந்த ஒரு குடும்பத்தின் நினைவுகளை ஆசிரியர் பதிவு செய்கிறார். பிற்காலத்தில் தான் ஜி.பீ.ரோட்டிற்கு அவ்விடுதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இன்று ஆசியாவிலேயே மிகப் பெரிய திருமண அழைப்பிதழ்கள் சந்தையாக சவ்ரி பஜார் திகழ்கிறது. நெருக்கடி நிலை (Emergency) நடைமுறையில் இருந்த காலத்தில் தான், நடனமும் இசையும் மறைந்து, டிஸ்கோ விளக்குகள் அலங்கரிக்க ஆரம்பித்து இருக்கின்றன. நுகர்வோர்களும் உடனடியாக உடல் சுகம் வேண்டுபவர்களாக மாறிப் போயினர். இசை என்றால் திரைப்படப் பாடல்கள் அல்ல; பாரம்பரிய இசை. அப்பெண்களும் நுகர்வோரை எதிர்பார்த்து பால்கனிகளில் காத்திருக்கவில்லை. எந்தவொரு நுகர்வோரும் உணவு சாப்பிடாமல் வெளியேற அனுமதிக்கப் படவில்லையாம். உடல் சுகத்திற்காக அல்லாமல், பெரியவர்களிடம் எப்படி பேச வேண்டும் மற்றும் அரசு விழாக்களில் அதிகாரிகளுக்கு எப்படி வணக்கம் சொல்ல வேண்டும் என‌ சமூகத்தின் நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொள்வதற்காக நகரின் மேட்டுக்குடி மக்கள் தங்கள் மகன்களை அப்பெண்களிடம் அனுப்பி வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.

நம்மூர் திரைப்படங்கள் ஆபாசத்தில் வெளுத்துக் கட்டும் கதைக்களம் இது. என்னதான் உதட்டு முத்தங்களுக்கு U கொடுத்து தணிக்கை செய்யும் சென்சார் போர்டு என்று ஒன்று இருந்தாலும், முழுவதும் அல்லாமல் கிட்டத்தட்ட திரையில் புணர்ந்தேவிடும் காட்சிகள் மிரள வைக்கும். ஆனால் இப்புத்தகத்தில் ஓரிடத்தில் கூட ஆபாசமோ விரசமோ திணிக்கப்படவில்லை. மிட்டாய்களைத் தன் பிறப்புறுப்பிலும், அவன் பிறப்புறுப்பிலும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுவிட்டு, பியரைத் தன் உடலில் ஊற்றி நக்கவும் செய்து, வேறொன்றும் செய்யாமல் பணம் கொடுத்துப் போன ஒரு குத்துச்சண்டை வீரனைப் பற்றி ஒருத்தி சொல்லும் பத்தி கூட அவர்களின் வாழ்க்கையின் கொடூர பக்கங்களை மட்டும்தான் உரித்துக் காட்டுகிறது.

அவ்விடுதிகளில் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய உண்மைத் தகவல்களைப் பெரும்பாலும் சொல்வதில்லை என்பதை ஆரம்பப் பக்கங்களிலேயே வாசகனுக்குச் சின்ன சின்ன சம்பவங்கள் மூலம் உணர்த்திவிடுகிறார் ஆசிரியர். என்னதான் விடுதி எண் 300 என்று முகவரியைச் சொன்னாலும், அவர்களின் பெயர்களை அப்படியே பயன்படுத்தி இருந்தாலும், அவர்கள் சொன்ன சில அந்தரங்கங்களை எல்லாம் அப்படியே இப்புத்தகத்தில் எழுதிவிடவில்லை எனவும் ஓரிடத்தில் சுட்டிக் காட்டுகிறார்.

அவர்களின் குழந்தைகள் பற்றிய கட்டுரைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவ்விடுதிகளில் இருந்து வெகு தொலைவில் தங்கள் அடையாளங்களை மறைத்துப் பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள். பள்ளிகளில் தங்கள் முகவரியையும் பெற்றொர்களின் தொழிலையும் மாற்றிச் சொல்கிறார்கள். நண்பர்களின் வீடுகளுக்குப் போகிறார்கள். தங்கள் வீடுகளுக்கு நண்பர்களை அழைப்பதில்லை. திருக்குரான் படிக்கிறார்கள். முயல் வளர்க்கிறார்கள். அது இறந்தவுடன் மனதுடைகிறார்கள். உடன்பிறந்தவர்களில் ஒருவன் மட்டும் அங்குள்ளவர்கள் சாயல் இல்லாமல் வெள்ளைக்காரர்கள் போல் இருக்கிறான். அங்கு எது மாதிரி தொழில் நடக்கிறது என்று புரிந்து கொண்ட வயதில், வளர்ந்து பெரிதானவுடன் அவ்விடத்தைவிட்டு போய்விட வேண்டும் என ஏங்கும் அக்குழந்தைகளின் மனநிலையைப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

ஆதித் தொழிலைப் போலவே இப்பதிவையும் எனக்கு முடிக்கத் தெரியவில்லை. நம் சமகாலத்தில் அதுபற்றி கொஞ்சம் நெருங்கிப் பதிவு செய்திருக்கும் இப்புத்தகம் நீங்களும் படித்துப் பாருங்கள்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements