157. பிள்ளையார் அரசியல்

அரை நூற்றாண்டுகளாகத் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் தனக்குத் தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் அரைநிர்வாணக் கிழவனைப் பிரிட்டிஷ்காரர்கள் பத்திரமாகத் தான் சுதந்திர இந்தியாவிற்குக் கொடுத்துப் போயினர். அரை வருடத்திற்குள் அக்கிழவனைக் கொன்றது சுதந்திர இந்தியா. மதம் என்ற ஆயுதத்தால். ந‌ம் முன்னோர்கள் ஒற்றுமையாகக் காத்து வந்த ஐந்து நூற்றாண்டுகள் பழமையான ஒரு மசூதி மேல் திடீரென ஏறி அதையும் இடித்துப் போட்டது அவ்வாயுதம். ஏற்கனவே நன்றாகப் படித்துக் கொண்டிருப்பவர்களின் புத்தகங்களைப் பிடுங்கி இந்தி என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது. இன்று நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தட்டைப் பிடுங்கி மாட்டுக்கறியா என்று பார்க்கிறது. முகச்சவரம் செய்யாத நமது பயணங்களில் திடீரென நம் ஆடை கலைத்து ஆணுறுப்பின் மேல் தோலைப் பொது வெளியில் பார்க்கிறது. நம் காலத்தில் எல்லோரின் தலை மேலும், முதுகில் முனை வைத்தும், கழுத்தை இறுக்கிக் கொண்டும் எப்போதும் இருக்கிறது அவ்வாயுதம். இன்று தேதி சனவரி 30. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற அக்கிழவன் மதத்தால் கொல்லப்பட்டதும், இப்போதைய இந்திய அரசியலில் கடுமையாக விவாதிக்கப்படும் நிகழ்வான ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் மதத்தாலும் சாதியாலும் தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா என்ற மாணவன் பிறந்ததும் இதே சனவரி 30ல் தான். இந்த மதம் என்னும் ஆயுதத்தால் இன்னும் என்ன செய்யப் போகிறோம் நம் தலைமுறைகளை?
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: பிள்ளையார் அரசியல் (மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள்)
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை
முதல் ஈடு: ஆகஸ்ட் 2010
பக்கங்கள்: 204
விலை: ரூபாய் 140
வாங்கிய இடம்: நினைவில்லை
————————————————————————————————————————————————————————————————————————————
ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன். தமிழில் நான் புரட்டிக் கூட பார்க்காமல் வெகு சொற்ப ஆசிரியர்களின் புத்தகங்களைத் தான் வாங்குவதுண்டு. அவர்களில் ஒருவர் இவர். இவ்வருட சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சியில் கூட அவரின் ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்க்காமலேயே வாங்கி வந்தேன். இவரது கட்டுரைகளின் ஆழமும் சமூகத்தின் மேலான அக்கறையும் சான்றுகளுடன் வரலாற்றுத் தகவல்களும் தான் காரணங்கள். பல்வேறு காலக்கட்டங்களில் அவர் எழுதிய மத அடிப்படைவாதம் பற்றிய சில கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். பிள்ளையார் அரசியல். சமபந்தி, பூசாரிகள், துரோணாச்சாரியார் விருது, அரிச்சந்திரன், மதமாற்றம், பிள்ளையார், சத்ரபதி சிவாஜி, தர்கா போன்ற தலைப்புகளைக் கொண்ட 13 கட்டுரைகள்.

சென்ற வருடம் இலங்கைக்குக் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் தலைவர் போப்பாண்டவர் வந்தார். பக்கத்தில் இருக்கும் இந்தியாவிற்கு வராமல், அடுத்து பிலிப்பைன்ஸ் சென்றார். அவரின் ஆசியச் சுற்றுப் பயணத்தில் இந்த இரண்டு நாடுகள் மட்டுமே. உலகில் அதிகப்படியான மக்களுக்குத் தலைவரான‌ ஒரு போப் கடைசியாக இந்தியாவிற்கு வந்தது 16 ஆண்டுகளுக்கு முன். சாந்தோம் வேளாங்கண்ணி அன்னை தெரசா என்று பல விடயங்கள் இந்தியாவில் இருக்கும் போது போப் இங்கு வராமல் போனது எனக்கு வினோதமாகத் தெரிந்தது. அதன் காரணம் இப்புத்தகம் மூலம்தான் எனக்குத் தெரிந்தது. மதியாதார் தலைவாசல் மிதியாமல் போயிருக்கிறார், பாவம் அந்தப் பெரிய மனுசன்! இன்று சீசன் நேரத்தில் மக்கள் கட்டுக்கடங்காத குற்றால அருவில் ‘இந்தியர்களும் நாய்களும் இங்கே குளிக்கக் கூடாது’ என்று பிரிட்டிஷ் காலத்தில் அறிவிப்புப் பலகை இருந்ததாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ‘பஞ்சமர்களும் நாய்களும் பெருநோய்க்காரர்களும் நுழையக் கூடாது’ என்ற அறிவிப்பு சென்னையின் சில உணவு விடுதிகளில் இருந்ததையும், சில உணவு விடுதிகளில் பிராமணர்களுக்குத் தனி இடம் இருந்தது என்பதையும் இப்புத்தகம் சொல்கிறது. சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசிய பூரி சங்கராச்சாரியார் தமிழ் நாட்டிற்குள் வருவதைத் திமுக அரசு தடை செய்ததாக இப்புத்தகம் சொல்கிறது. அவர்கள்தான் பின்னாளில் சாய்பாபாவிடம் ஆசிர் வாங்கினார்கள்.

சமபந்தி பற்றிய கட்டுரையில் உள்ள சில கருத்துகள் உங்களின் வாசிப்பிற்கும்:
‘உணவு வழங்குவது மன்னராக இருந்தாலும் கூட அவரது மகன் அவ்வுணவைப் பார்த்தால் தீட்டாகக் கருதப்பட்டது’.
‘பட்டுக்குத் தீட்டில்லை என்று பழமொழியே இருப்பது போல், இன்றும் கூட புராணப் பிரசங்கிகளும் கதாகாலட்சேபம் செய்பவர்களும் நிகழ்ச்சியினிடையே பாலைப் பருகும் பொழுது பட்டுத் துணியால் மறைத்துக் கொண்டு பருகின்றனர்’.
‘குன்றக்குடி அடிகளார் தனக்குச் சைவ சித்தாந்தம் சொல்லிக் கொடுத்த முதலியாருடன் சமமாக அமர்ந்து சாப்பிட்டதற்காக, குன்றக்குடி தலைமை மடாதிபதி அதற்குப் பரிகாரம் செய்யச் சொன்னார்’.
‘பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலையில் மீந்துள்ளதை நாயோ, பிச்சைக்காரனோ உண்டால் தீட்டு ஏற்படும் என்று அஞ்சி வேதப் பள்ளிகளிலும், ஆச்சாரியார்கள் எழுந்தருளும்போதும் நிகழும் விருந்துகளில் எச்சில் இலையைக் குழி வெட்டிப் புதைக்கும் பழக்கம் இன்றும் உண்டு’.

அமிர்தசரஸ் பொற்கோவில் பற்றி ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன். கடவுளைக் கண்டு கொள்ளாத நான் அங்கு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வரிசையில் பொறுமையாக நின்றிருக்கிறேன். காசு கொடுத்தால் தான் கடவுளையும் சீக்கிரம் தரிசிக்கும் விஐபி வாய்ப்பு கிடைக்கும் மதக்கூடங்களைக் கொண்ட இந்நாட்டில், எந்தப் பாகுபாடும் இல்லாமல் வருபவர்கள் எல்லாரையும் சம‌மாக அமர வைத்து எந்நேரமும் உணவு தருவார்கள். எச்சில் தட்டுகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் சுத்தமாகக் கழுவும் தன்னார்வத் தொண்டர்கள் ஆச்சரியத்தின் உச்சம்! பார்க்கும் இடமெல்லாம் உண்டியல் வைக்காமல் சுத்தம் வைத்து, மனிதர்களைச் சமமாக‌ மதித்து, காவலாளிகளின் கைத்தடியையும் சோதனைக் கருவிகளையும் காட்டி மிரட்டாமல், மக்கள் அனைவரும் ஓர் ஒழுங்கிற்குள் கட்டுப்பட்டது போல் அவ்வளாகத்திற்குள் வலம்வரும் காட்சியே அற்புதம்! நான் மட்டும் அல்ல, மொகலாய இஸ்லாமிய பேரரசர் அக்பரே ஆச்சரியப்பட்டு 12 கிராமங்களின் வருவாயை அக்கோவிலுக்கு எழுதிய வைத்ததாக இப்புத்தகம் சொல்கிறது. அதையும் வேண்டாம் என்றார்களாம். ஏன் என்று நீங்களே இப்புத்தகத்தில் படித்துப் பாருங்கள். மத நல்லிணக்கம் போதிக்கும் இது போன்ற நல்ல உதாரணங்கள் ஏனோ பல‌ரைச் சென்றடைவதில்லை.

‘அரிச்சந்திரனைப் பொறுத்தவரைச் சத்தியம் என்பது வருணத் தூய்மை’
‘காஞ்சி சங்கராச்சரியராகத் தமிழ்நாட்டுப் பிராமணர்களால் கூட‌ வர முடியாது. தெலுங்கர்களுக்குத் தான் அவ்வுரிமை உண்டு’
‘இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெகஜீவன் ராம் காசியில் சம்பூர்னாத்தின் சிலையைத் திறந்து வைத்துவிட்டுக் காசி எல்லையைத் தாண்டும் முன் கங்கை நீரால் அச்சிலையை நீராட்டித் தீட்டுக் கழித்தார்களாம்’
‘சாதியைச் சட்டமாக்கிய‌ மனுதர்மத்தை எழுதிய மனுவுக்கு இமாச்சலப் பிரதேசத்தில் கோவிலும், இராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலையும் எழுப்பினார்களாம்’
போன்ற கருத்துகள் மதவாதம் நம் கழுத்தை நெறிக்கும் இக்காலத்தில் யோசிக்க வேண்டிய விடயங்கள்.

மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் இந்தியாவில் இருந்ததில்லை எனவும், பொக்கிசக் கோவில்கள் எல்லாம் இஸ்லாமிய மன்னர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இடிக்கப்பட்டன‌ என்றும் வசதியான வரலாற்றுப் பொய்களை மதவாதிகள் இக்காலத்தில் பரப்பி வருகின்றனர். இஸ்லாமிய மன்னர்களுக்கு அடிபணியாதவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆனார்கள் எனவும், அவர்களுக்குப் பயந்தோடி மலைகளில் வாழ்ந்தவர்கள்தான் இன்றைய மலைவாழ் மக்கள் எனவும் சொல்லும் ஒரு புத்தகத்தை ஒரு மத்திய அமைச்சரே வெளியிடும் அளவிற்கு நாடு போய்க்கொண்டு இருக்கிறது. அரிச்சந்திரன் காலத்தில் தாழ்ந்த சாதி இல்லையா? இதிகாசங்களில் நாகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் வேறு யார்? இந்து மன்னர்களால் இங்கு அழித்து அல்லது மாற்றியமைக்கப்பட்ட‌ கோவில்களைப் பதின்மூன்று பக்கங்களுக்குத் தொடர்ந்து பட்டியலிடுகிறார் ஆசிரியர்! 1985ல் இந்தியாவின் இராணுவ இரகசியங்களைப் பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த மேல்சாதிக்காரர்களின் கூட்டம் யார் என்பது போல் பல கேள்விகளைச் சிறுபான்மையினரின் தேசப்பற்றை எப்போதும் சந்தேகப்படும் மதவாதிகளைக் கேட்கிறார் ஆசிரியர்.

புத்தகத்தின் மிகச் சிறந்த கட்டுரையாக, புத்தகத்தின் பெயராக அமைந்த ‘பிள்ளையார் அரசியல்’ என்ற கட்டுரையைச் சொல்லுவேன். சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலையில், காவல்துறையினருக்கு மிகவும் சவாலான இரண்டு நிகழ்வுகளில் ஒன்று முதல்வர் அவ்வழியே போவது, இன்னொன்று விநாயகர் ஊர்வலம். திருவல்லிக்கேணி ரத்னா கபே சந்திப்பில் குவிந்திருக்கும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரையும், அவற்றை விட கனரக ஆயுதமான ஏ கே 47 ஏந்திய பிள்ளையாரையும் முதன்முதலில் பார்த்தபோது மிரண்டு போனேன். ஆகம விதிகளுக்குப் புறம்பாக பிராமணர் அல்லாதவர் அர்ச்சகர் ஆக முடியாத போது, வேதங்களைச் சொன்ன பிள்ளையாரின் கோவில்கள் ஆகம விதிகளின் படி இல்லாமல் குளத்தங்கரையிலும், காம்பவுண்ட் சுவரின் முனைகளிலும் இருப்பது ஏன் என்று யோசித்து இருக்கிறீர்களா? அவ்வளவு பெரிய பிள்ளையார் உருவத்திற்குச் சின்ன எலி எப்படி வாகனமாக முடியும்? பூணூல் இல்லாத ஆரம்பகாலப் பிள்ளையாருக்கு எப்படி பூணூல் வந்தது? சுண்டலுக்குப் பதில் கனரக ஆயுதங்களுடன் அவரை ஊர்வலமாகக் கொண்டு செல்பவர்கள் சொல்லவருவது என்ன? பால் குடித்ததாக ஒரு காலத்தில் நகைச்சுவை பொருளாகவும், இன்று நீர்நிலைகளில் கரைக்கப்படும் போது தண்டிக்கப்படும் பொருளாகவும் ஒரு கடவுளானவர் மாற்றப்படுவது எப்படி? அக்கட்டுரையைப் படித்த பின் பிள்ளையார் என்ற எளிமையான சித்தாந்தத்தை முதன்முதலாக ரசித்தேன்; இன்று சித்தரிக்கப்படும் கடுமையான கடவுளை அல்ல.

கட்டாயம் காலத்திற்கு ஏற்ற கட்டுரைகள் அனைத்தும். படித்துப் பாருங்கள்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)