158. அப்பாவின் துப்பாக்கி

துருக்கியர்கள் அரபுகள் பாரசீகர்கள் குர்துகள் என பல இனங்கள் கொண்ட மத்திய கிழக்கில், முதல் உலகப் போருக்குப் பின் ஒட்டாமன் பேரரசில் இருந்து பல நாடுகள் உதயமானாலும், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் வஞ்சகத்தால் இன்றுவரை தனிநாடு உருவாக்க முடியாமல் போராடிக் கொண்டிருப்பது பாலஸ்தீன அரபுகளும் குர்துகளும் தான். பாலஸ்தீனம் பற்றி ஏற்கனவே இத்தளத்தில் நிலமெல்லாம் ரத்தம், ஜெருசலம் போன்ற புத்தகங்களில் எழுதியாயிற்று. குர்திஸ்தான் என தனிநாடு கோரிக்கை கொண்ட குர்துகள், மத்திய கிழக்கில் கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வாழ்ந்து வருவதாக ஒரு வரலாறு உண்டு. அதற்கும் முன்னர் ரோம் நகரில் இருந்து பெண்களைத் தன்னாட்டிற்குக் கொண்டுவர இஸ்ரேலின் மூன்றாவது மன்னன் சாலமன் கட்டளையிட, அப்படி படைவீரர்கள் கொண்டு வருவதற்குள் மன்னன் இறந்து போனதால் அங்கேயே தங்கிவிட்ட அப்பெண்களின் சந்ததிகளே குர்துகள் என இன்னொரு வரலாறும் உண்டு. கிபி ஏழாம் நூற்றாண்டில் தான் குர்து என்ற பெயரால் அரபுகள் அழைத்திருக்கிறார்கள். கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்துதான் குர்திஸ்தான் என்ற சித்தாந்தமும் உண்டாகி இருக்கிறது.

பெரும்பாலும் மலைவாழ் மக்களான குர்துகள், ஈரானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த குர்திஷ் என்ற மொழி பேசுபவர்கள். கிட்டத்தட்ட இந்திய தேசியக் கொடியைப் போன்ற அமைப்புள்ள கொடியுடன் குர்திஸ்தான் என தனிநாடு கோரப்படும் பகுதிகள், துருக்கி ஈரான் ஈராக் சிரியா என நான்கு நாடுகளில் நான்கு துண்டுகளாகச் சிதறிக் கிடக்கின்றன. சிரியாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தின் குழப்பங்களுக்கு இடையே குர்திஸ்தான் பிறக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட 3 கோடி மக்கட்தொகை கொண்ட குர்துகளின் வரலாற்றில் மிக முக்கியமானவர் சுல்தான் சலாவுதீன் (Salaudin). சிலுவைப் போர்களில் ஐரோப்பியர்களை மிரள வைத்த இவரைப் பற்றி ஜெருசலம் பற்றிய புத்தகங்களில் நான் ஏற்கனவே அதிகம் சொல்லி இருக்கிறேன். முதல் உலகப் போருக்குப் பின் அரபுகளின் எழுச்சியை அடக்க நடந்த போரில், பிரெஞ்சு ஜெனரல் ஹென்றி ஹவ்ராத் (Henri Gouraud), சலாவுதீனின் கல்லறையை எட்டி உதைத்து, ‘எழுந்திரு சலாவுதீன். நாங்கள் திரும்பவும் வந்திருக்கிறோம். எங்கள் புனித சிலுவையைப் பிறை மீது வைப்பதற்காக’ என்று சொன்னதாக ஒரு வரலாறு உண்டு. முஸ்தபா பர்ஸானி என்பவர்தான் நவீன குர்திஸ்தான் போராளிகளின் பிரபலமான தலைவர். அவரது இறப்புக்குப் பின் அவரது மகன் மசூத் பர்ஸானி இருக்கிறார். குர்துகள் மற்றும் குர்திஸ்தான் பற்றிய இந்தச் சின்ன முன்னுரை அறிமுகத்துடன் தொடர்ந்து படித்தால் புத்தகம் புரியும்.
——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: அப்பாவின் துப்பாக்கி
ஆசிரியர்: ஹினெர் சலீம் (Huner Saleem)
ஆங்கிலத்தில்: My Father’s Rifle
தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
முதல் ஈடு: ஆகஸ்ட் 2013
பக்கங்கள்: 111
விலை: ரூபாய் 100
வாங்கிய இடம்: சென்னை புத்தகக் கண்காட்சி 2015
——————————————————————————————————————————————————————————————–
என் பெயர் ஆசாத் ஷெரோ செலீம். செலீம் மலே என்பவரின் பேரன். என் தாத்தாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். சுதந்திர பூமியாக குர்திஸ்தான் இருந்தபோது அவர் ஒரு குர்தியராகப் பிறந்ததாகச் சொல்வாராம். பின்னர் வந்த ஒட்டோமானியர்கள் அவரைப் பார்த்து, “நீ ஒரு ஓட்டோமான்” என்று சொல்ல, அவரும் ஒட்டோமானாக மாறிப் போனாராம். ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு துருக்கியராக மாறினார். துருக்கியர் வெளியேறியதும் குர்திய மன்னர் ஷேக் முகமதுவின் பேரரசில் மீண்டும் குர்தியரானார். அடுத்து ஆங்கிலேயர் வந்தனர். மேன்மை தங்கிய அரசரின் பிரஜையாக மாறிவிட்டார். அதனால் தாத்தா சில ஆங்கிலச் சொற்களையும் கற்றுக் கொண்டார். ஆங்கிலேயர்கள் ஈராக்கை உருவாக்கிய போது, தாத்தா ஈராக்கியராக மாறிப் போனார். ஆனால் ஈராக் எனும் இந்தப் புதிய சொல்லின் உள்ளர்த்தம் கடைசி வரை அவருக்கு விளங்கவே இல்லை. இறுதி மூச்சுவரை, ஈராக்கியர் என்று சொல்லிக் கொள்வதில் அவர் பெருமையடைந்ததும் இல்லை. அவருடைய மகனான என் அப்பா, ஷெரோ செலீம் மலேவுக்கும் அதே உணர்வுதான். ஆனால், ஆசாத் ஆகிய எனக்கு அப்போது விவரம் தெரியாத வயது.

இப்படி தொடங்கும் ‘அப்பாவின் துப்பாக்கி’ புத்தகத்தின் ஆசிரியர் ஹினெர் சலீம். இயற்பெயர் ஆசாத் ஷெரோ செலீம். ஈராக்கிய குர்திஸ்தான் பகுதியில் வாழ்ந்து வந்த அவர், சதாம் உசேன் ஈராக் அதிபரான சமயத்தில், தனது பதினேழாம் வயதில் வெளியேறி பல்லாண்டுகள் இத்தாலியில் வாழ்ந்தபிறகு பிரான்ஸில் குடியேறியவர். திரைப்பட இயக்குனர். குர்திய விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் தனது பால்யப் பருவத்தின் கதை சொல்வதே இப்புத்தகம். மூல மொழியான பிரெஞ்சில் இருந்து ஆங்கிலம் கிரேக்கம் மற்றும் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.  ‘ஆசாத் ஆகிய எனக்கு அப்போது விவரம் தெரியாத வயது’ என தொடங்கும் புத்தகம், ‘ஆசாத் ஆகிய நான் இன்னமும் சின்னப் பையன் இல்லை’ என முடிகிறது.

தளபதி முஸ்தபா பர்ஸானியின் அந்தரங்கத் தகவல் தொடர்பாளர், ஆசாத்தின் தந்தை. இராக்கிய படைகளை எதிர்த்து தலைமறைவாக வாழ்ந்து வரும் குர்தியப் போராளி, ஆசாத்தின் அண்ணன். தனது கண்முன்னே நகர் நடுவில் கொல்லப்படும் மாமா உட்பட, குடும்பத்தில் ஏழு பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டவுடன், ஈராக்கிய குர்திஸ்தானில் உள்ள தனது சொந்த நகரத்தில் இருந்து சவுதி அரேபிய எல்லையை ஒட்டிய ஈராக்கின் தென் பகுதிக்கு ஆசாத்தின் குடும்பம் இடம் பெயர்வதில் ஆரம்பமாகிறது புத்தகம். ஆசாத்தின் இன்னொரு மாமாவின் மரணம் பற்றி புத்தகம் இப்படி சொல்கிறது.

எங்கள் ஊர் வந்து சேர்ந்ததும் ஒரு சவ ஊர்வலம் போவதைப் பார்த்தோம். என் அப்பாவும் மாமாவும் முன்னே செல்ல, மற்ற ஆண்களுக்குப் பின்னால் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அழுதபடியே நடந்து சென்றார்கள். நான், ரமோ அருகில் சென்று, “யார் இறந்துவிட்டார்கள்” என்று கேட்டேன்.
“யாருமில்லை” என்றான்.
“பிறகு ஏன் இந்த சவப்பெட்டி?”
“அது காலியாக இருக்கிறது”
“அப்படியானால் ஏன் பெண்கள் அழ வேண்டும்?”
“நம் மாமா முஷீரைக் கொல்லப் போகிறோம்”
ஏன் என்று கேட்டேன், ஆனால் அவன் பதில் சொல்லவில்லை.

தடை செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது நாட்டுப்பற்றுடைய ஒருவனின் தேசியக் கடமை எனச் சொல்லும் ஆசிரியரின் கதையை எனது கருத்துகள் ஏதும் சொல்லப்போய் கலைத்துவிடாமல், புத்தகத்தில் இருந்து இன்னும் சில வரிகளுடன் முடிக்கிறேன்.

“குர்தியர்களாகிய நாம் எப்பொழுதும் பெரிதாக எதுவும் ஆகிவிட முடியாது. நாம் சபிக்கப்பட்டவர்கள். இதுதான் நம் விதி. நம்முடைய வரலாற்றைக் கவனியுங்கள். நாம்தான் இந்தப் பகுதியின் தொன்மையான மக்கள். இருந்தாலும் நமக்குப் பிறகு வந்த துருக்கியர்களுக்கென ஒரு நாடு இருக்கிறது. ஆனால் நாமோ இன்னுமும் எதுவும் இல்லாமல் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு, தன் விரலை நெற்றிப் பொட்டில் வைத்து, “ஆனால் இதில் விசித்திரமானது என்னவென்றால் பல படுகொலைகள் நடந்த பிறகும் நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்பதுதான்” என்கிறார். கல்தியர்கள் பாபிலோனியர்கள் சுமேரியர்கள் ஆகியோர் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். ஆனால் ஒன்றும் மிஞ்சவில்லை. நாமோ எதுவும் பெரிதாக ஆகாமல் போனால்கூட இன்னும் நம் மொழியைப் பேசிக்கொண்டு உயிருடன் இருக்கிறோம். நாம் அடிபணிய மறுத்து எதிர்த்து நிற்கிறோம். இருந்தாலும் இன்னும் நாம் ஒன்றும் இல்லாதவர்கள்தான் என்று முடித்தார்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements