159. பவுத்தம் – ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்

அன்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் என நினைக்கிறேன். அதனால் பகலில் கட்டாயமாகச் சென்னையிலேயே இருக்க வேண்டிய நிலை. திரையரங்குகளில் கயல் மீகாமன் திரைப்படங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில், திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த மேன்சனில் தொலைக்காட்சியில் செய்திகள் கண்டேன். சென்னை ஐஐடியில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் என்ற அமைப்பு தடை செய்யப்பட்டதைக் கத்தி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ‘ஓர் இந்துவாகப் பிறந்த நான் கண்டிப்பாக ஓர் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்று அம்பேத்கர் பவுத்தமதம் மாறியதை யாரோ சொல்ல, ஏதோவோர் இந்து அமைப்பின் பிரதிநிதி, அம்பேத்கர் பவுத்த மதத்திற்கு மாறியதன் விளக்கம் சொன்னார். மதம் மாற முடிவெடுத்த அம்பேத்கர், கிறித்தவம் இஸ்லாம் என்று வெளியில் இருந்து வந்த மதங்களுக்குச் செல்லாமல் உள்நாட்டில் தோன்றியதால் தான் பவுத்த மதத்திற்கு மாறியதாக ஒரு போடு போட்டார். விவாதம் வேறுதிசை திரும்ப, ஓர் அப்பட்டமான பொய்யைக் கேட்ட சாட்சியாக வெறுமனே அமர்ந்திருந்தேன்.

பவுத்தம் நமக்குத் தெரியவில்லை. அதனால் தான் நான்குதலை சிங்கம், அசோகச் சக்கரம் மட்டும் ஞாபகமாக வைத்துக் கொண்டு இங்கிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டி விட்டோம். நம்மிடம் இருந்து பவுத்தம் கற்றவர்கள் எல்லாம் நம் சகோதரர்களையே பவுத்தத்தின் பெயரால் கொன்று குவித்தனர் இலங்கையில்! திடீரென ஒருவன் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் புத்தர் என சேர்த்துவிட்டான். பவுத்தத்தின் அகிம்சைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பசுவைப் புனிதமாக்கிய மோசடி போல், புத்தரின் செல்வாக்கை ஒழிக்க இந்த அவதாரக் கதையும் ஒரு புளுகு என்று பெரியார் கட்சிக்காரர்கள் சொல்வதில் வியப்பில்லை. உண்மையானவற்றை உண்மையானவை எனவும், உண்மையல்லாதன‌வற்றை உண்மையல்லாதன எனவும் அறிந்து கொள் என்று சொன்ன புத்தருக்கே இந்நிலை. பக்கத்தில் இருக்கும் ஜெருசலேம் நகருக்குள்ளேயே பயந்து பயந்து குறுக்குப் பாதையில் நுழைந்த இயேசுநாதரே இமயமலை வந்து பாபாவை வணங்கியதைத் திரையில் பார்த்து விசிலடித்த என்னருந் தமிழ்நாடு, புளுகுகளின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்ற ஆவலில் இதோ பவுத்தம்!
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: பவுத்தம் – ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்
ஆசிரியர்: எழில்.இளங்கோவன்
வெளியீடு: வானவில் புத்தகாலயம்
முதல் ஈடு: மார்ச் 2014
பக்கங்கள்: 142
விலை: ரூபாய் 100
வாங்கிய இடம்: சென்னை புத்தகக் கண்காட்சி 2015
————————————————————————————————————————————————————————————————————————————
‘போதிமரத்தில் பாதிமரம்’ என்ற வைரமுத்துவின் கவிதை. சமூகம் மூளையில் திணிக்கும் சரக்குகளுக்கு எதிர்க்கேள்வி கேட்டு, கவிதை என்ற அற்புதமான வடிவை என் மாணவப் பருவத்தில் உணர்த்திய கவிதைகளில் மிக முக்கியமானது அது. ஒரு முதிர்வயது கிழவன், ஒரு நோயாளி, ஒரு பிணம், ஒரு துறவி என நான்கு துன்பியல் சம்பவங்களைக் கண்ட சித்தார்த்தன் என்ற இளவரசன், எல்லாம் துறந்து கவுதம புத்தர் என்ற ஞானியாக மாறியதாக எல்லாரும் படித்திருப்போம். துறவியான இரவில் சித்தார்த்தன், அவனது மனைவி யசோதரா மற்றும் குழந்தைகளின் நிலைகளை ஒப்பிடும் அக்கவிதை போல் பவுத்தம் பற்றி நமக்குச் சொல்லப்படும் விடயங்களைச் சந்தேகிக்க பல உதாரணங்கள் உள. அந்த நான்கு துன்பியல் சம்பவங்களும், நானும் நீங்களும் நிதமும் பார்க்கும் சாதாரண நிகழ்வுகள் தானே? இவையா ஒருவனை ஞானியாக்கும்? ‘புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? தோழா ஏழை நமக்காக!’ என்று ஒரு ஞானியையும் ஒரு கடவுளையும் ஒரு மாமனிதனையும் ஏன் ஒரே தராசில் வைத்து எழுதினார் கவிஞர் வாலி? சரணம் என்ற வார்த்தையை இரு இடங்களில் கேட்கலாம். ஒன்று ‘புத்தம் சரணம் கச்சாமி’. இன்னொன்று ‘சாமியே சரணம் அய்யப்பா’. கேரளாவில் அப்போது நிலவிய சாதிக் கொடுமைகளைக் கண்டு அந்நிலத்தையே ‘பைத்தியக்காரார்களின் கூடாரம்’ என்றார் விவேகானந்தர். அதே கேரளாவில், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த அய்யப்ப சுவாமி, சாதிமதம் பாராமல் எல்லா ஆண்களையும் சபரிமலையில் அனுமதிப்பது எப்படி? இப்படி பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும் இப்புத்தகம்.

பவுத்தம். ஆரிய திராவிடப் போரின் தொடக்கம். பவுத்தம் என்பது கடவுளே இல்லாத மதம். அது கடவுளை அல்லாமல் தனிமனித ஒழுக்கங்களை முன்னிலைப்படுத்தும் மதம். அதாவது பவுத்தம் என்பது இன்றிருப்பது போல் மதமல்ல. பவுத்தம் என்பது ஒரு வாழ்வியல் நெறி என்ற புரிதல் முதலில் எல்லாருக்கும் வேண்டும். புத்தர் என்றால் அடங்கிப் போகும் அகிம்சையின் பேருருவமாக மனதில் தோன்றுவதைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் புத்தகம் இது. இறைச்சி பவுத்தர்களின் உணவு. பன்றி இறைச்சி உடலுக்கு ஒத்துப் போகாததால் நோய்வாய்ப்பட்டு புத்தர் இறந்ததாக ஒரு கதையும் உண்டு. மாட்டுக்கறியை விரும்பிச் சாப்பிட்ட பவுத்தர்கள்தான் இந்து மன்னர்களால் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டதாக அயோத்திதாசர் சொன்னதை முந்தைய புத்தகங்களின் பதிவுகளில் வாசித்திருப்பீர்கள். புரட்சித் திராவிடர் என்றும் போராளி என்றும் புத்தருக்கு அடைமொழிகள் கொடுத்து அழகு செய்கிறார் ஆசிரியர். புத்தர் சத்திரியரே அல்ல, சூத்திரர் என நிறுவுகிறார் ஆசிரியர்! யயாதியின் சாபப்படி அவனது மகன் யாதுவின் வம்சத்தவர்கள் என்ன திறமை இருந்தாலும் அரசாள முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுதான் ஆட்சி செய்யும். அந்த வம்சத்தில் பிறந்த ஆயர்குலக் கிருஷ்ணனே அரசாண்டதில்லை. அப்படி என்றால் அதே நிலப்பரப்பில் பிறந்த புத்தர் காலத்தில் அரசாட்சியே கிடையாது. அதாவது சித்தார்த்தன் என்பவன் இளவரசனாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறது இப்புத்தகம். நமக்குச் சொல்லப்பட்ட கதைகளில் முதல் வரியே தப்பு! அப்படி என்றால் துறவுக்கான காரணம்? நீங்களே இப்புத்தகம் படித்துப் பாருங்கள்.

பிராமணர்களைக் கடவுளுக்கு மேலாகவும், அவர்கள் ஒட்டுமொத்த மனித இனத்தையே வழிநடத்த பிறந்தவர்கள் எனவும் பவுத்தத்திற்குப் பின் எழுதப்பட்ட மனுதர்மம் சித்தரிக்கிறது. மவுரியர்களின் ஆட்சியில் செழித்திருந்த பவுத்தத்தால் தாழ்வு மனப்பான்மை கொண்ட பிராமணர்களுக்குச் சிறப்புரிமை கேட்கும் மனுதர்மத்தில் ஆச்சரியமில்லை என்கிறது புத்தகம். பவுத்தத்திற்கு எதிரான பிராமணிய சூழ்ச்சியே மனுதர்மம் என்கிறார் ஆசிரியர். பவுத்தம் பற்றி சில தலைவர்கள் சொன்ன சில கருத்துகள் இப்புத்தகத்தில் இருந்து உங்களின் வாசிப்பிற்கும்:
இந்தியாவின் வரலாறு என்பது பவுத்த சமயத்துக்கும் பிராமணியத்திற்கும் இடையே நடந்த கடும் போராட்டமே அன்றி வேறல்ல.
– அண்ணல் அம்பேத்கர்
சாதிக் கொடுமைகளையும் குருமார்களின் ஏமாற்று வித்தைகளையும் சடங்கு முறைகளையும் ஒழிக்க வந்தது பவுத்தம்.
– மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம்

சரி புத்தரின் பல்லைப் பத்திரமாகக் காத்து த‌மிழர்களை ஒழிக்கும் இலங்கையைப் பற்றி புத்தகம் சொல்வதைக் காணலாம். மகத நாட்டை விட்டு வெளியே போகாத புத்தர் மும்முறை இலங்கை வந்து போனதாக இலங்கை வரலாறு சொல்லும் மகாவம்ச என்ற நூலின் முதல் அத்தியாயம் சொல்கிறது. மகேந்திர என்பவன் வானில் பறந்து போயும், சுங்கபுத்திர என்பவன் கடல் வழியே போயும் இலங்கையில் பவுத்தம் பரப்பியதாகக் கதைகள் உண்டு. அதாவது தாங்கள் வெறுக்கும் தமிழர்களின் தமிழ்நாட்டு நிலம் வழியாக இலங்கைக்குப் பவுத்தம் வரவில்லை எனப் பரப்ப, இதுபோன்ற கற்பனைச் சாகசக் கதைகள்! அந்நூலின் கதாநாயகன் துட்டகாமினி கூனிக்குறுகி படுத்திருக்கிறான். ஏன் என்று யாரோ கேட்க வந்த பதில் இது: ‘வடக்கில் தமிழரும் தெற்கில் கடலும் இருக்கும் போது நான் எப்படி நிமிர்ந்து சுதந்திரமாகத் தூங்குவேன்?’. பேரரசர் அசோகர் பவுத்த மதத்திற்கு மாறவில்லை எனச் சொல்லும் ஒரு புத்தகத்தை ஒரு மத்திய அமைச்சரே இங்கு வெளியிடுகிறார். அங்கு சாண்டாள அசோகன் என்கிறது மகாவம்ச நூல். சிங்களவர்கள் புத்தரின் பல்லையாவது பத்திரமாகப் பாதுகாக்கட்டும்.

DSC01129

(மூவருமே புத்தர்தான். புத்தரின் வித்தியாசமான முகபாவனைகளின் பத்தாயிரம் சிலைகளைக் கொண்டிருக்கும் ஒரு கோவில் ஹாங்காங் நகரில் உண்டு)

நான் இருக்கும் ஹைதராபாத் நகர் நடுவில் இருக்கும் உசேன் சாகர் ஏரி நடுவில் புத்தருக்கு ஒரு பெரிய சிலை உண்டு. லும்பினி பூங்கா போன்று புத்தர் தொடர்பான பல்வேறு விடயங்களை இங்கு காணலாம். அருகில் இருக்கும் நாகர்சுனா சாகர் அணைக்கு அப்பெயர் தந்ததே நாகர்சுனாகொண்டா என்ற பவுத்த கிராமம்தான். அதே அணையால் மூழ்கிப் போன அக்கிராமத்தின் சிதிலங்களை இன்றும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு இப்பகுதியில் எப்படி பவுத்தம் செல்வாக்கு பெற்றது என யார்யாரையோ கேட்டுப் பார்த்தேன். பதில் கிடைக்கவில்லை. வழக்கம் போல் இது போன்ற புத்தகங்கள் மட்டும்தான் உண்மைகளைச் சேகரித்துத் தொகுத்துச் சொல்கின்றன. நீங்களும் உண்மையானவற்றை உண்மையானவை எனவும், உண்மையல்லாதன‌வற்றை உண்மையல்லாதன எனவும் படித்து சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements