160. Madras – Tracing the growth of the city since 1639

One unrepaired window is a signal that no one cares and so breaking more windows costs nothing.
– James Q. Wilson

இன்று பிப்ரவரி 29. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்தும், நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வராமலும் போகும் லீப் தினம். காலக் கணக்கின் பாவங்களைக் கூட்டிக் கழித்துச் சரிசெய்வதாக‌, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட‌ கிறித்தவ போப்பாண்டவர் விஞ்ஞான முறைப்படி அறிமுகப்படுத்தி மதம் என்ற நிழலைப் பரவவிட்ட நாள். லீப் தினம் போல் ஒவ்வொரு நிலத்துக்கும் தனது அதிகப்படியான தவறுகளைக் கொட்டவும், கொட்டியதைப் பெருக்கிச் சுத்தம் செய்வதாகக் காட்டிக் கொள்ளவும், தனது மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் ஏதோவொரு நகரம் அமைந்துவிடுகிறது. தமிழ்நாட்டிற்குச் சென்னை போல்! கிரிக்கெட், சினிமா, உபரி மின்சாரம், வசதிகள் என்று பல நிழல்கள் அதற்குண்டு.

சென்னை. தமிழ்நாட்டின் மற்ற பகுதி மக்களுக்குப் பிரமிப்பாகத் தோன்றும் நகரம். கரட்டான்களைக் கொன்று, குண்டுமணி பொறுக்கி, போக்குவரத்து வசதியே இல்லாத கிராமத்தில், செவக்காட்டுப் புழுதியில் புரண்டு வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்குச் சென்னை நகரம் ஒரு காலத்தில் உயர்சாதி பெண்ணை எட்டி நின்றே காதலிப்பவனின் மனநிலைதான். சென்னை மெட்ராஸ் என்று பெயர் சொல்லி உச்சரிப்பதற்கே கூச்சமாய் இருக்கும். எனது நான்காம் வகுப்பில், ஆசிரியர் சென்னை போய் வந்து, ‘ரோட்டில் சிக்னல் இருக்கும், இந்தப் புதுக்கோட்டை நகரை விட 100 மடங்கு பெரியது’ என்று சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. இதுவரையான என் வாழ்நாளில் 27 மாதங்கள் மட்டும் அந்நகரில் தொடர்ச்சியாக வாழ்ந்திருக்கிறேன்.  பெரியார், காந்தி, பாரதி, தியோடர் ஹெர்சல், புரட்சிக்கு வித்திட்ட பல கம்யூனிசத் தலைவர்களையும் தங்கள் சொந்த மண்ணில் ஆரம்பக் காலங்களில் காலம் இருக்கவிட்டதில்லை என என்னை நானே ஆற்றுப்படுத்திக் கொள்வேன்.

ஒரு பிரபல பாடகியின் கணவர் கோட்டூர்புரத்தில் உள்ள ஆற்றில் தற்கொலை செய்து கொண்டார். பெரும்பாலான ஊடகங்கள் அதைக் கூவம் என எழுதின. அடையாறு என்றொரு ஆறுண்டு, அதை அடையாளம் தெரியாதோரும் அங்குண்டு என்று அன்று தெரிந்தது. வடக்கே போரிட்ட வீரர்கள் பசி தாங்க முடியாமல், இதே அடையாற்றை நீந்திக் கடந்து வயல்களில் நெல்மணிகளைப் பறித்துத் தின்ற வரலாறும் உண்டு. அல்லி மயில் மந்தை என்று இயற்கையோடு ஒட்டிய பெயர்களைக் கொண்ட அந்நகரில் இன்று பெரம்பூரில் மூங்கிலையும், தேனாம்பேட்டையில் தென்னை மரத்தையும் தேட வேண்டும். புரசைவாக்கத்தில் இன்று ஒரேயொரு புரசைமரம் மட்டும் இருக்கிறதாம். நான் சென்னைக்கு வந்த இரண்டாம் மாதத்தில் திடீரென ஒரு நாளில் அனைத்து சேனல்களும், ரேடியோக்களும் சென்னையின் 373வது பிறந்த நாள் என்று ஏதோ கத்திக் கொண்டு இருந்தனர். அந்நகருக்கு அதைவிட வயது அதிகம் எனவும், உண்மையான சென்னை இவர்கள் சொல்வதில்லை எனவும் எனக்கு உரைத்த நாள் அது. செத்துக் கொண்டிருக்கும் வேர் எங்கோ இருக்க இவர்கள் விழுதுகளைக் காசாக்குகிறார்கள் என எனக்குப் புரிய வெகு நாட்கள் ஆகவில்லை.

மெட்ராஸ் என்பது சென்னை என எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் தான் மாற்றப்பட்டது. எக்ஸ்பிரஸ் அவென்யூ, பைகிராப்ட்ஸ் ரோட், ட்ரிப்லிகேன் என்பவர்கள் ஒருபக்கம். இராயப்பேட்டை மணிக்கூண்டு, பாரதி சாலை, திருவல்லிக்கேணி என்பவர்கள் இன்னொரு பக்கம். சென்னை என்பதல்ல, மதராஸ் என்பதே அதன் உண்மையான‌ அடையாளம் என சொல்லும் ஒரு புத்தகத்துடன் வந்திருக்கிறேன்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: Madras – Tracing the growth of the city since 1639
ஆசிரியர்: K R A Narasiah (நரசய்யா)
தமிழில்: மதராசபட்டினம் – ஒரு நகரத்தின் கதை
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், இராயப்பேட்டை, சென்னை
முதல் ஈடு: 2015
பக்கங்கள்: 300
விலை: ரூபாய் 300
வாங்கிய இடம்: Higginbothams, அண்ணா சாலை, சென்னை
————————————————————————————————————————————————————————————————————————————
பக்கிங்காம் கால்வாய். இன்று அதில் ஆந்திராவில் படகுப் போக்குவரத்து உண்டு. ஆனால் சென்னையில் கரை இல்லாமல் முச்சுத் திணறி நின்று கொண்டிருக்கும் ஒரு சாக்கடை அது. மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு காலத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியைப் போக்க, பக்கிங்காம் கால்வாயை ஆங்கிலேயர்கள் வெட்டினர். சென்னைப் பெருவெள்ளம் இன்று அரசியலாக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டாலும், பக்கிங்காம் கால்வாய் இருந்திருந்தால் பாதிப்பு இவ்வளவு இருந்திருக்காது என்றொரு கருத்தும் உண்டு. மக்களாட்சியின் மகத்துவம் இதுதான்! சென்னை வெள்ளத்திற்கு மறுவாரம், எனது புனே பயணத்தைக் கேன்சல் செய்துவிட்டு ஒரு சனிக்கிழமை சென்னை வந்தேன். சென்னையைப் பற்றி ஏதாவதொரு புத்தகம் படிக்க வேண்டும் என புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே விலையில் இருந்தது. தமிழ்ப் புத்தகம் அளவில் பெரியதாக இருந்ததால் ஆங்கிலத்தில் வாங்கினேன். இப்போதாவது ஒரு நகரத்தின் வரலாற்றைக் கொஞ்சம் நின்று கேட்பார்கள் என்ற நம்பிக்கையின் மிச்சம் தான் இப்புத்தகம்.

ஆசிரியர் ஒரிசாவில் பிறந்து தமிழ்நாட்டில் படித்தவர். இந்தியக் கடற்படையில் சில காலமும், உலக வங்கியின் ஒரு திட்டத்திற்காக சில காலம் கம்போடியா நாட்டிலும் பணியாற்றியவர். கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலுக்குச் செல்லும் விருப்பத்தால், அவரின் ‘கம்போடிய நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாங்கி வைத்திருக்கிறேன். மதராசைக் கட்டி உருவாக்கி எங்கும் பெயர் பதிவு செய்யப் படாதவர்களுக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறார் ஆசிரியர். இன்று தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஆங்கிலேயர்கள் அடிக்கல் நாட்டிய‌ 22-8-1639 தான் சென்னையின் பிறந்த நாளாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன‌. ஆங்கிலேயர்கள் செய்ய வேண்டிய வேலையை நமது ஊடகங்கள் பக்குவமாகச் செய்கின்றன. கிட்டத்தட்ட அன்றிலிருந்து இந்நகரின் வரலாற்றைச் சொல்வதுதான் இப்புத்தகம்.

ஆங்கிலேயர்கள் இங்கு வருவதற்கு முன்பே மெட்ராஸ் என்கிற மதராசபட்டினம் இருந்தது எனவும், சென்னப்பட்டினம் தான் ஆங்கிலேயர்கள் உண்டாக்கியது எனவும், காலம் இவ்விரு தனித்தனி நகரங்களைக் குழப்பி ஒன்றாக்கி புரட்டிப் போட்டுவிட்டது எனவும் ஆரம்பப் பக்கங்களிலேயே ஆச்சரியப் படுத்துகிறார் ஆசிரியர். மேற்குக் கடற்கரையில் வாணிகம் செய்துவந்த ஆங்கிலேயர்கள், கிழக்குக் கடற்கரையிலும் காலூன்ற நினைத்து, இன்றைய ஆந்திராவில் இருக்கும் நிசாமபட்டினம் மசூலிப்பட்டினம் துர்கராயபட்டினம் வீரவன்சாரம் என்று கால்வைத்த இடமெல்லாம் சறுக்க, கடைசியில் மதராசபட்டினத்திற்கு அருகில் கொஞ்சம் இடம்வாங்கி, இரண்டாம் ஒப்பந்தப்படி சிறிரங்கராயப்பட்டினம் எனப் பெயரிடாமல், முதல் ஒப்பந்தப்படி சென்னப்பட்டினம் எனப் பெயரிட்டு கோட்டை கட்டுகிறார்கள். வடக்கே பழவேற்காடு ஏரியில் டச்சுக்காரர்கள். தெற்கே மயிலாப்பூரில் போர்த்துக்கீசியர்கள். இருவருக்கும் இடையே பயந்து பயந்து இருந்து கொண்டு, உள்நாட்டு மன்னர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டு, பஞ்சம் கடற்சீற்றம் பணச்சுமை என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஆங்கிலேயர்கள் காலூன்றிய கதையை அருமையாகப் பதிவு செய்கிறது புத்தகம். ஒன்றுமே இல்லாமல் வந்து மாகாணத்தின் எல்லாவற்றையும் பிடித்த ஆங்கிலேயர்களின் மூன்று நூற்றாண்டுகள் சாதனையைப் பின்னாளில் கருணாநிதி குடும்பம் முறியடித்து அரை நூற்றாண்டுகளாகத் தொடர்வது தனிக்கதை.

அமெரிக்காவில் இருந்து வரும் பனிக்கட்டிகளை இங்கு உருகாமல் வைக்க ஐஸ் ஹவுஸ். மெய்யெழுத்துக்கள் மேற்புள்ளி இல்லாமல் அச்சடிக்கப்பட்ட திருக்குறள். டவ்ட்டன் என்ற ஆங்கிலேயரின் பெயரைத் தங்கள் பெயரின் பின்னால் சேர்த்துக் கொண்ட சில இந்துப் பிராமணக் குடும்பங்கள். அடர்ந்த காட்டுக்கு நடுவே இருந்ததால் காட்டுக்கோவில் என அழைக்கப்பட்ட லஸ் தேவாலயம். இட வசதிகள் இருந்தும், பல மரணங்கள் நிகழ்ந்தும், பல்லாண்டுகளாக பயன்படுத்த முடியாமல் கடைசியில் கைவிடப்பட்ட பார்சிகளுக்கான மயானம். இந்தியாவில் அப்போது உயில் எழுதிய வெகுசிலரில் ஒருவரான பச்சையப்பரின் உயில் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் தலையிட்ட பின் நடைமுறைப்படுத்தப்பட்ட கதை. பாதுகாப்பு வீரர்களுக்கென தனியே சீருடைகளை உண்டாக்கி, அவற்றைத் தங்கள் தொழிற்சாலைகளிலேயே வாங்கச் சொல்லி ஆங்கிலேயர்கள் காசு பார்த்த கதை. வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், உள்ளூர் மக்களைத் தங்கள் பாதுகாப்பிற்காகப் போர்வீரர்களாகப் பயன்படுத்தும் அளவிற்கும், உள்ளூர்ப் பிரச்சனைகளுக்கு நீதியும் குற்றங்களுக்குத் தண்டனையும் தரும் அளவிற்கும் உயர்ந்த கதை. உள்ளூர் மக்கள் தங்களை ஆங்கிலேயர்களே அரசாளவும் கட்டளையிடவும் ஊக்குவித்த கதை.

மொத்த புத்தகத்தில் சாந்தோம் கதை மிகமிக அருமையான வரலாறு. பிரெஞ்சு டச்சு போர்ப்படைகளிடம் இருந்து இயற்கை வீரனான ஒரு புயல், சாந்தோமைக் காப்பாற்றி இருக்கிறது. டச்சுக்காரர்களுக்குப் பிரயோசனமாக இல்லாததால், கோல்கொண்டா சுல்தானிடமே திருப்பிக் கொடுக்க, அதை அவர்கள் பிரெஞ்சுக்காரர்களிடம் விற்க முயல, பாண்டிச்சேரியே போதும்டா சாமி என்று அவர்கள் போக, பேசாமல் சாந்தோமை அழித்து விடுங்கள் என பிரிட்டிஷ்காரர்கள் சுல்தானுக்குத் தூதனுப்ப, வருடத்திற்கு 3800 பணம் கொடுப்பதாக பிரிட்டிஷ்காரர்கள் பேசி வாங்குவதற்குள், வெறும் 350 பணம் மட்டும் இலஞ்சமாகக் கொடுத்து போர்த்துக்கீசியர்கள் வாங்கிப் போக….. சாந்தோம் என்ற சின்ன இடத்திற்கு இவ்வளவு பெரிய வரலாறு. ஏதோவொரு காதல், போர்த்துக்கீசிய சாந்தோமிற்கும் ஆங்கிலேய மதராசிற்கும் ஒரு போரையே தவிர்த்ததாக ஒரு கதையும் உண்டு.

புத்தகத்தில் இருந்து சில ஆச்சரியமான தகவல்கள்:
1. இஸ்லாமிய எதிர்ப்பையும் இந்து மன்னர்களின் செல்வச் செழிப்பையும் ஒருசேர சொல்வதால், கஜினி 17 முறை படையெடுத்த கதை எல்லாருக்கும் தெரியும். பிரெஞ்சுக்காரர்கள் இருமுறை மதராசை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றிய கதையை யாராவது நமக்குச் சொல்லி இருக்கிறார்களா?
2. மாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க‌ இங்கிலாந்திற்கு வெளியே மதராஸ் தான் முதல் மாநகராட்சி.
3. இன்று கர்நாடக இசையில் ஓர் அங்கமாக இருக்கும் வயலின், உண்மையில் பீடில் என்ற ஓர் ஆங்கிலேய வாத்தியம். முத்துச்சாமி தீட்சிதர் குடும்பம் தான் அதை முறைப்படி கற்று நம்மூர் இசையில் சேர்த்தது.
4. இன்று வண்டலூரில் இருக்கும் மிருகக் காட்சி சாலை ஒரு காலத்தில் வேப்பேரியில் இருந்ததாம்.
5. ஓராள் ஒரே கட்டிடத்தை இரண்டு பேருக்கு ஏமாற்றி விற்று, கடன்சுமையால் ஏலத்திற்கு வந்த அக்கட்டிடத்தை யாருமே வாங்க முன்வராமல் போக, ஆங்கிலேய அரசே வாங்கிக் கொண்டதாம். அதுதான் இன்றைய ஆளுநர் மாளிகை.
6. நம்நாட்டு அணுவுலைகளுக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் புனித மேரி ஆலயத்தின் மேற்கூரை, குண்டு துளைக்க முடியாதபடி ஐந்தடி தடிமன் கொண்டதாம். சூயஸ் கால்வாய்க்குக் கிழக்கே மிகப் பழமையான ஆங்கிலிகன் கோவிலும், இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான ஆங்கிலேயக் கட்டிடமும் இதுதானாம்.
7. நாமெல்லாம் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடும் போது பாரத மாதாக்கொடி ஏற்றிக் கொண்டாடும் மதவாதிகள் போல், பம்பாய் மாகாணத்தில் பிரிட்டனின் கொடி பறக்க, இங்கே மதராசில் இரண்டு வருடங்களாகப் புனித ஜார்ஜின் கொடியைப் பறக்கவிட்டு இருந்திருக்கிறார்கள். கடுப்பான கிழக்கிந்திய கம்பெனி கடிதம் எழுத, விளைவு இன்று தலைமைச் செயலகத்தில் நாம் பார்க்கும் கொடிக்கம்பம். இந்தியக் கொடி பறக்கும் கம்பங்களில் மிக உயரமானது அது என்று உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். மூழ்கிப் போன ஒரு கப்பலில் இருந்து எடுத்துவரப்பட்ட கம்பமாம் அது.
8. யானைக்கு வடகலையா தென்கலையா என நாமம் போடும் பிரச்சனை இன்னும் நீதிமன்றத்தில் இருப்பது போல், சாதீயப் பாரம்பரியமிக்க அற்புதமான மண் இது. கோவில் திருவிழாக்களில் இன்று போல அன்றும் அவனவன் சாதிக் கொடியை ஏற்றி திருவிழா நின்றுபோக ஆங்கிலேயர்களிடம் பஞ்சாயத்துக்குப் போய் இருக்கிறார்கள். எந்தப் பண்டிகையிலும் கம்பெனி கொடி மட்டும்தான் பறக்க வேண்டும் என்று சட்டமே போட்டானாம் அவன். இன்னும் கொஞ்ச நாளில் நம்மூரில் காவிக்கொடி சட்டம் வந்தாலும் வரும். பாரத் மாதா கி ஜே!

அம்பத்து ஒன்றாவதூர் – அம்பத்தூர், மகப்பேறு – முகப்பேர், வள்ளிச்சேரிபாக்கம் – வேளச்சேரி, மகாவில்வம் – மாம்பலம், பல்லவபுரம் – பல்லாவரம், தொண்டியார்பேட்டை – தண்டயார்பேட்டை. இப்படி தமிழில் திரிந்து போனவை ஒருபுறம். கிரீன்வேஸ் ரோடு (Greenway’s road) என்பதைப் பசுமைவழிப் பாதை என்றது போல் சில அபத்தமான ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் இன்னொரு புறம். இப்புத்தகம் சொல்லும் இன்னும் சில திரிபுகள்:
1. ஹாமில்டன் பாலம் (Hamilton) – அம்பட்டன் பாலம்
2. Graeme’s road – Greams road
3. கமலஹாசன் வீடு இருப்பதால் எல்டாம்ஸ் சாலை பலருக்குத் தெரியும். அது Eldoms அல்ல; Yeldham’s.
அது சரி, எழும்பூர் இரயில் நிலையத்தின் உச்சியில் எழும்பூர் என்பதைக் கொட்டை எழுத்தில் ஏன் இந்தியில் தவறாக எழுதி இருக்கிறார்கள்? நவீன இந்தி எதிர்ப்பா?

இந்திய நிலவியலை வரைபடமாக்க முடிவெடுத்த ஆங்கிலேயர்கள், அப்பணியைப் பரங்கிமலையில் இருந்துதான் தொடங்கினார்கள். அப்பணியின் முடிவில் தான் உயரமான சிகரம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சர்வேயர் ஜெனரலாக இருந்த எவரெஸ்ட் என்பவரின் பெயரே அதற்கும் இடப்பட்டது. அதன் நினைவாக பரங்கிமலையில் உள்ள ஓரு நினைவுப் பலகையையும், பாரிமுனையில் உள்ள ஆர்மேனியர்கள் தேவாலயத்தையும் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தாக்கத்தில் தேடிப்போய்ப் பார்த்திருக்கிறேன். இப்புத்தகமும் அவ்விடங்களைப் பற்றி சொல்கிறது. சைதாப்பேட்டை மர்மலாங் பாலத்தில் ஆர்மேனிய எழுத்துக்களைக் கொண்ட அறிவிப்பு பலகை அழிவின் விளிம்பில் இப்போது இருக்கிறது. மதராஸின் சினிமா, ஊடகங்கள், சாதிகள், கோவில்கள், இலக்கியம், போக்குவரத்து என பல விடயங்களைப் பதிவு செய்கிறது இப்புத்தகம். மதராசிற்குத் தெற்கே ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பையும் கூட கொஞ்சம் பதிவு செய்கிறது. மதராசில் முதல் கார் 1894ல். முதல் பேருந்து 1925ல். முதல் தெரு மின் விளக்கு 1914ல். முதல் ட்ராம் கார் 1895ல். சமூக அக்கறை இருந்திருந்தால், 2014ல் மின் விளக்கிற்காக நூற்றாண்டு விழா கொண்டாடி இருக்கலாம் இந்த ஊடகங்கள்.

‘தூங்காத நகரங்கள்
விடிகிற பொழுதின்
எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை
அதற்குத் தன் செயல்களை
எங்கே நிறுத்தி
எங்கே தொடங்க வேண்டுமென‌
புரிவதேயில்லை’
என்று மனுஷ்யபுத்திரன் சொன்னது போல், அப்பெருவெள்ளத்தை ஒரு சிறு தூக்கம் எனக் கொண்டால், எழுந்து மீண்டும் எங்கு தொடங்க வேண்டும் என்பதை இது போன்ற புத்தகங்கள் தான் சொல்லித் தருகின்றன. புண்ணிய நதி எங்கோ காசியில் இல்லை; இங்குள்ள கூவமும் அடையாறும் தான். புண்ணிய பூமி எங்கோ இருக்கும் குருசேத்திரம் இல்லை; மனைகள் கொல்லக் காத்திருக்கும் ஏரி வயல்கள் தான். தனது கடந்த காலம் அறியாத எந்தவொரு நகரமும் தனது எதிர்காலத்தில் தடுமாறுகிறது என்று வரலாறு சொல்கிறது. இப்புத்தகம் ஒத்த இன்னும் சில சென்னைப் புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறேன். விரைவில் பேசலாம்.

இப்படியோர் ஆழ‌மான புத்தகத்தைத் தந்த ஆசிரியர் போல், நகரங்களை அதிகாரம் ஏதுமில்லாமல் கட்டமைக்கும் பெயர் தெரியாத அனைவருக்கும் இப்பதிவு சமர்ப்பணம்! நன்றிகளும்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements