161. மக்கள் தெய்வங்கள்

உதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான்
ஒடுக்கி அடைச்சது பாவம்
தஞ்சமா நாங்க எங்கே போவோம்
திக்கத்த ஏழைக்கிங்க உன்னை விட்டால்
கஷ்டத்தில் கை கொடுக்க யாரு இருக்கா
பிள்ளை செஞ்ச குத்தம் எல்லாம்
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா
குறை ஏதும் இல்லாத சாமியே
எங்க தெய்வமுனு எங்களுக்கு காமி
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: மக்கள் தெய்வங்கள்
ஆசிரியர்: கோ. பழனி
வெளியீடு: புலம், திருவல்லிக்கேணி, சென்னை
முதல் ஈடு: ஆகஸ்டு 2015
பக்கங்கள்: 167
விலை: ரூபாய் 140
வாங்கிய இடம்: சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சி 2016
————————————————————————————————————————————————————————————————————————————
தமிழ்நாட்டுக் கிராமங்களில் குறுஞ்சாமிகளாக, குலதெய்வங்களாக இருக்கும் 40 சாமிகளின் கதைகளின் தொகுப்பே இப்புத்தகம். குறிப்பாக வட்டப்புரியம்மன் பொன்னியம்மன் மூர்க்கசந்திரன் ரேணுகாம்பாள் வீரமாகாளியம்மன் போன்ற சாமிகளின் கதைகள் அருமை. சில நல்ல புத்தகங்களுக்கு அறிமுகம் மட்டுமே போதும் என்பதால், நான் அதிகம் எழுதப்போய் சாமிகளின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. என்னை இரயிலில் அனுப்ப வந்த என் நெருங்கிய நண்பன் ஒருவன், இப்புத்தகத்தை என்னிடம் இருந்து வாங்கி பொருளடக்கப் பட்டியலைப் பார்த்துவிட்டு, அவனது குலதெய்வம் இல்லை என்று திருப்பிக் கொடுத்துவிட்டான். வைகை எக்ஸ்பிரஸில் எதிர் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ஒரு பேரிளம் பெண், என்னிடம் இருந்து விழுப்புரத்தில் வாங்கிய புத்தகத்தை, பாதிக்கு மேல் படித்துவிட்டு இறங்கும்போது திருச்சியில் தான் திருப்பிக் கொடுத்தாள். எந்தவொரு புத்தகத்தையும் அவ்வளவு ஈடுபாட்டுடன் இரயில் பயணங்களில் படித்திராத இளைஞனாகிய நான், புத்தகத்தை அவளையே வைத்துக் கொள்ளச் சொன்னேன். புதிதாக அவளே வாங்கப் போவதாகச் சொல்லி இறங்கிப் போனாள். மதம் என்பது குரங்கு கை மாலையாக வலம் வந்து கொண்டிருக்கும் என் தாய்நாட்டில், அவளைப் போன்றவர்களிடம் இதுபோன்ற நல்ல புத்தகங்கள் சென்றடைய வேண்டும் என்று குறுஞ்சாமிகளிடம் வேண்டியபடி,

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements