162. எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்?

ஒரு திரைப்படத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரை ஒருவர் உசுப்ப, பதறி எழுந்த நகைச்சுவை நடிகர் தங்கவேல் சொல்வாராம்: ‘இப்பத்தான்டா கனவுல எல போட்டானுக. சோறு போடுறதுக்குள்ள எழுப்பிட்டியேடா பாவி. கனவுல கூட நிம்மதியா சாப்புட விட மாட்டீங்களாடா?’. விவசாயிகளைத் தூக்கில் போட்டு, மாட்டுக்கறிக்குச் சட்டம் போட்டு, மனிதர் உணவை மனிதரே பறிக்கும் இந்நாட்டில் பலரின் நிலைமைதான் தங்கவேலின் அக்கனவு. பெரும்பாலும் ருசித்துச் சாப்பிட வாய்ப்பில்லாமல் பசிக்காக சாப்பிட்டே பழக்கப்பட்டதுதான் பலரின் நாக்கு. உண்ணும் உணவிலும், உண்ணும் போது கைகளால் உணவை எடுக்கும் முறையிலும் சாதி கண்டுபிடிப்பவர்கள் இன்னும் உண்டு. பதினைந்து வயதில் வீட்டை விட்டு வெளியேறிய பின் மற்றவர்களின் உணவு முறைகளைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன். தனி உணவாக அத்தனை காலம் எனக்குத் தெரிந்த இரசம் என்பது சாம்பாருக்கும் மோருக்கும் இடையில் என முறை வகுத்துச் சிலர் சாப்பிட்டனர். நான் போகும் இடங்கள் எல்லாம் மோரும் தயிரும் அன்றாட உணவில் இருக்க, எம்மக்கள் யாருக்கும் அவ்வழக்கம் இல்லாததைக் கண்டு குழ‌ம்பிப் போய் இருக்கிறேன். இப்படி உங்களைப் போலவே எனது அனுபவப் பட்டியல் மிகப் பெரியது. ‘ஃபைவ் ஸ்டார் ஓட்டலுக்கே போனாலும், சோறுதான் தின்பான் சேகர்’ என்று ஒரு நண்பன் என்னைக் கிண்டல் செய்வதும் உண்டு.

இவ்வளவு ஊர்கள் சுற்றி இருக்கிறேன். ஒருவாரம் இந்தியாவைத் தனியாகச் சுற்றியது உட்பட எந்தப் பயணத்திலும் சாப்பாட்டைப் பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை. கல்லினுள் வாழும் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் சோறு போடும் இறைவனைப் பரந்து கெடுக என சாபமிடுவேன் அல்லவா! பாதி பட்டினியாகவும் பல பயணங்கள் போய் இருக்கிறேன். வேளாங்கண்ணி மீன்பொறியல், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, ஆற்காடு ஸ்டார் பிரியாணி, நாக்பூர் ஆரஞ்சு பர்பி, கொல்கத்தா ரசகுலா, பாலக்காடு சிப்ஸ், சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணி, மணப்பாறை முறுக்கு என திட்டமிட்டுச் சாப்பிட்ட எனது பயணங்கள் பட்டியல் மிக‌மிகச் சிறியது. கேபிள்சங்கர் என்ற ஒரு வலைப்பதிவரின் தளத்தில் படித்து, சென்னையில் சார்மினார் பிரியாணியைப் பழக்கமாக்கிக் கொண்டேன். கடல்பயணங்கள் என்ற வலைத்தளத்தில் படித்து, மதுரை பிரேமாவிலாஸ் அல்வாவைத் தேடிப் போனேன். எனது பயணங்களில் கொஞ்சம் உள்ளூர் உணவுகளைக் கவனிக்க இவ்விரு பதிவர்களும் இப்படி தூண்டப்போய், இப்புத்தகத்தை வாங்கிவிட்டேன்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்?
ஆசிரியர்: வெ.நீலகண்டன்
வெளியீடு: பிளாக்ஹோல் மீடியா (http://blackholemedia.in/)
முதல் ஈடு: சனவரி 2012
பக்கங்கள்: 176
விலை: ரூபாய் 140
வாங்கிய இடம்: சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சி 2016
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகத்தின் தலைப்பே எல்லாம் சொல்லி விடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல‌ ஊர்களின் ஸ்பெஷல் உணவு வகைகளைச் சொல்கிறது. எனது விருப்பப் பட்டியலான‌ வேளாங்கண்ணி மீன்பொறியல், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, ஆற்காடு ஸ்டார் பிரியாணி, சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணி, மணப்பாறை முறுக்கு என்ற எதுவுமே இப்புத்தகத்தில் வராததால், எனக்குத் தமிழ்நாட்டின் பல ஊர்களை நெருக்கமாக்கிய புத்தகம் என்று சொல்லுவேன். திருச்சியில் ஆதிகுடி காபி கிளப் இருக்கும் சாலையில் இரண்டு வருடங்கள் வலம் வந்திருக்கிறேன். 16 வருடங்களாக அக்கடையையும் தெரியும். ஆனால் ஒருமுறை கூட உள்ளே போய் பட்டணம்பக்கோடா சாப்பிட்டதில்லை. டிகிரி காபியைக் கும்பகோணத்திலும், ஜிகர்தண்டாவை மதுரையிலும் குடித்ததில்லை. அவ்வளவு கல்கோனா தின்று இருந்தாலும், புதுச்சேரியில் கமர்கட் தின்றதில்லை. மொட்டை வெயிலில் திருவல்லிக்கேணியில் இருந்து வட சென்னையின் ஒரு மூலைக்கு, பர்மா சாப்பாடு சாப்பிட நண்பன் சேரலாதன் வண்டியில் போனால், அது மாலை நேரங்களில் மட்டும் தான் கிடைக்குமாம். கோவில்பட்டியில் நண்பன் ஒருவன் திருமணத்தில் மீண்டும் மீண்டும் வாங்கிச் சாப்பிட்ட போளி தவிர, இப்புத்தகத்தில் வரும் எந்தப் பொருளையும் அதற்கான ஸ்பெஷல் ஊரிலேயே சாப்பிட்டதில்லை!

பேராவூரணி வீச்சுச் பரோட்டா, தூத்துக்குடி மக்ரூன், மயிலாப்பூர் தவலைவடை, கிருஷ்ணகிரி புட்டுப்பணியாரம், கும்பகோணம் பதற்பேணி, புதுக்கோட்டை முட்டைமாஸ், காரமடை கைமுறுக்கு, வேலூர் அக்காகடை என கிட்டத்தட்ட 70 உணவு வகைகளைச் சொல்கிறது இப்புத்தகம். அவற்றின் பூர்வீகம், இன்றைய நிலை, செய்முறை, தொடர்புகொள்ள எண் உட்பட பல விடயங்களைச் சொல்லி இருப்பது அருமை. வறுக்கி காய்கறி போன்ற சொற்களுக்குப் பெயர்க்காரணம் சொல்வது உட்பட பல வரலாற்றுத் தகவல்களும் பரவிக் கிடக்கின்றன. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் காமத்தைப் போல‌, இப்புத்தகம் சொல்லும் உணவுப் பொருட்களுக்கும் இருப்பதால், நாவூறும் எச்சிலையும் எழுதுகோல் சிந்தும் மையையும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

தேடல் உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும். தேடல் பயணங்களில் இது போன்ற புத்தகங்கள் ருசி கொடுக்கும்.

அனுபந்தம்:
——————–
1. ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அனுபந்தம் எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
2. இப்புத்தகத்தைப் பல இடங்களில் பலமுறை பார்த்து இருந்தாலும் இதற்கு முன் வாங்கத் தோன்றவே இல்லை. பிளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தின் புத்தகங்கள் புரட்டிப் பார்க்க முடியாதபடி சுற்றி மூடப்பட்டு இருப்பதால், வாங்கி ஏமாறக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். பதிப்பகத்தார் கவனிக்கவும்.
3. இப்ப‌திவை எழுதி முடித்தபின் தான் கவனித்தேன். பிளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தின் இரண்டு புத்தகங்கள் தான் இத்தளத்தில் எழுதி இருக்கிறேன். அவற்றின் எண்கள் 81, 162! ஆசிரியரின் இரண்டு புத்தகங்கள் தான் இத்தளத்தில் எழுதி இருக்கிறேன். அவற்றின் எண்கள் 62, 162!! தற்செயலாக அமைந்துவிட்ட ஒற்றுமைகள் இவை.
4. இன்று மார்ச் 20. உலகம் முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் இரவும் பகலும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் நாள். இன்றுதான் சூரியனின் வடக்குப் பகுதியின் ஆதிக்கத்தில் இருந்து தெற்குப் பகுதிக்குப் பூமி நகரும் நாள். பூமியின் வடக்குப் பகுதியில் இருக்கும் இந்தியாவிலேயே சுற்றித் திரிந்த‌ நான் முதல்முறை புவிநடுக்கோட்டைத் தாண்டி தெற்குப் பகுதிக்கு இந்த வாரத்தில் தான் சுற்றப் போகிறேன் என்பது இன்னொரு தற்செயலான விடயம்! அப்பயணத்தில் நான் வாசிப்பதற்கு எடுத்துச் செல்லும் ஒரேயொரு புத்தகமும் உணவு சம்மந்தப்பட்டது என்பது இன்னுமொரு தற்செயலான விடயம்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements