163. Baby Makers – The Story of Indian Surrogacy

பெண் என்பவளை அவளின் கருப்பை மூலமே உலகின் எல்லாச் சமூகங்களும் அடையாளப் படுத்துகின்றன. அவற்றில் கருமுட்டை சுரந்து மாதந்தோறும் குருதி சிந்தாதவளைப் பெரும்பாலான சமூகங்கள் ஒதுக்கி வைக்கின்றன. அப்படி குருதி சிந்தினால் பெரும்பாலான‌ கடவுள்களும் ஒதுக்கி வைக்கின்றன. வம்சவிருத்திக்களமாக பெண்ணை வளர்க்கிறது சமூகம். அவள் குழந்தை தராதபோது மீண்டும் ஒதுக்கி வைக்கிறது. குழந்தை கடவுளின் வரம் என்ற நம்பிக்கையில் இயற்கையான அதன் உருவாக்கத்தைச் செயற்கையாகத் தடுக்கும் எச்செயலையும் பெரும்பாலான மதங்கள் கண்டிக்கின்றன. காசுள்ளவனுக்குக் கடவுளின் சிறப்புத் தரிசனம் போல கடவுளின் வரத்தையும் செயற்கை ஆக்கினால்?

‘காசிக்குப் போனா கருவுண்டாகு மென்பது அந்தக் காலம்
ஊசியப் போட்டா உண்டாகுமென்ப திந்தக் காலம்’ என்று பாடினார் N.S.கிருஷ்ணன். குழந்தைகள் எப்படி உருவாகிப் பிறக்கின்றன என்றறியா என் மாணவப் பருவத்தில், சோதனைக் குழாய்க் குழந்தை (Test tube baby) என்ற சொல்லாடலைக் கடக்கும் போதெல்லாம் சோதனைக் குழாய்க்குள்ளேயே கருவை உண்டாக்கி வளர்த்து பிரசவிப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் உண்டு. இயற்கையாக உடலுறவில் ஆணின் விந்தும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து கருத்தரிக்கும் நிகழ்வைச் செயற்கையாக, உடலுறவு இல்லாமல் ஒரு சோதனைக் குழாய்க்குள் செய்து, ஒரு பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி இயற்கையாக வளரச் செய்து பிரசவிக்க வைக்கும் அறிவியலின் விஸ்வரூப வளர்ச்சி! சோதனைக் குழாய் முறைகளுக்கு எல்லாம் முன்னோடியாக, யாகம் வளர்த்து ஏதேதோ பருகி, தங்கள் மதத்து ரிஷிகள் புராணங்களில் குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக அறிவியல் மாநாடுகளிலேயே வாதாடும் மதவாதிகளும் இருக்கிறார்கள். இயற்கையாக வெளிவருவதைத் தடுக்கும் ஆணுறையையும், செயற்கையாக வெளிக் கொணர்ந்து செய்யும் சோதனைக் குழாய் முறையையும் இன்னும் பெரும்பாலான மதங்களும் நாடுகளும் தடை செய்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதகுலம் காலங்காலமாக நம்பி கடைபிடித்து வரும் சில நெறிமுறைகளுடனும், இரத்தத்திலேயே ஊறிப்போன சில உணர்வுகளுடனும் அறிவியல் நடத்தும் போராட்டம்.

1. தம்பதிகளில் ஆணுக்குக் குறை இருந்தால், இன்னொரு ஆணின் விந்தைக் கடன்வாங்கி பெண் தாயாகிக் கொள்ளலாம். விக்கி டோனர் (Vicky donar) என்றொரு இந்திப்படம் இவ்வகை. ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான ஐஐடி மாணவரின் விந்தணு தான‌ம் தேவையென சில வருடங்களுக்கு முன் விளம்பரம் செய்தனர் ஒரு சென்னை தம்பதியினர். அதுவும் இவ்வகைதான்.
2. தம்பதிகளில் பெண்ணுக்குக் குறை இருந்தால் அல்லது தம்பதிகள் ஓரினச்சேர்க்கை ஆண்களாக இருந்தால், ஆணின் விந்தை எடுத்து இன்னொரு பெண்ணின் கருமுட்டையுடன் சேர்த்து, அந்த இன்னொரு பெண்ணின் அல்லது வேறு இன்னொரு பெண்ணின் கருப்பையில் கருவாக்கிக் கொள்ளலாம். இவ்வகையின் இருண்ட பக்கத்தைத் தாரைதப்பட்டை திரைப்படத்தில் சிறுது பதிவு செய்திருப்பார்கள்.
3. தம்பதிகளில் கருவைச் சுமக்கும் வலிமை பெண்ணின் கருப்பைக்கு இல்லாமல் இருந்தால் – தம்பதிகள் இருவருக்கும் குறையேதுமின்றியும் நீண்ட நாட்களாகக் கருத்தரிக்காமல் இருந்தால் – ஆணின் விந்தையும் பெண்ணின் கருமுட்டையையும் சேர்த்து இன்னொரு பெண்ணின் கருப்பையில் கருவாக்கிக் கொள்ளலாம்.

விந்து கொடுத்த ஆண் மற்றும் கருமுட்டை கொடுத்த பெண்ணுடன் தான் மரபுரீதியான தொடர்பு குழந்தை கொண்டிருக்கும். இன்னொருத்தியின் கருமுட்டையின் கருவைச் சுமந்து, மூன்றாவது அல்லது நான்காவது ஆளாக இருந்து பிரசவித்துக் கொடுக்கும் பெண்ணின் பண்புகளில் குழந்தை எதுவும் கொண்டிராது. அவளுக்கு ஆங்கிலத்தில் Surrogate என்றுபெயர். தமிழில் வாடகைத்தாய். காசு கைமாறுவதால் இரத்தம் சதை எலும்பு போன்ற மனித எல்லைகளைத் தாண்டி, ஆரோக்கியமான கருப்பை மட்டும் ஒரு நுகர்வுப் பொருள். 2010ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 445 அமெரிக்க மில்லியன் டாலர் வருமானம். அதற்கென ஒரு சந்தை உண்டு. விலைப்பேரம் உண்டு. கள்ளச்சந்தையும் உண்டு. பெண்ணின் கருப்பையை ஒரு வம்சவிருத்திக்கலனாக‌ மட்டும் உறிஞ்சி எடுக்கும் அச்சந்தையின் இருண்ட பக்கத்தை The Red Market என்ற புத்தகத்தில் ஏற்கனவே படித்திருப்பீர்கள். ‘தம்பொருள் என்பதம் மக்கள்’ என்று மனிதர்களின் மரபணுவிலேயே ஊறிப்போன வாரிசுவேட்கை – வளரும் நாடுகளில் பெண்ணாகப் பிறந்ததற்காகவே ஒடுக்கப்படுபவர்களின் உடன்பிறந்த வறுமை – இவ்விரண்டும் சந்தித்துக் கொள்ளும் புள்ளியில் இருவருக்கும் ஒளிகாட்டும் இச்சந்தையின் வெளிச்சமான‌ இன்னொரு பக்கத்தைக் காட்டும் புத்தகம் இதோ.

————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: Baby Makers – The Story of Indian Surrogacy
ஆசிரியர்: Gita Aravamudan
வெளியீடு: HarperCollins Publishers India
முதல் ஈடு: 2014
பக்கங்கள்: 197
விலை: ரூபாய் 250
வாங்கிய இடம்: Crossword, ஹைதராபாத்
————————————————————————————————————————————————————————————————————————————
Baby Makers. The story of Indian Surrogacy. குழந்தைக‌ள் செய்யும் இந்திய வாடகைத் தாய்களின் கதை. குஜராத்தின் தலைநகர் அகமதாபாத் என்று அபத்தமான தகவல் சொல்லும் எட்டாம் பக்கத்தை எட்டியபோது, ஏதோ தவறான புத்தகத்தை வாங்கி வந்துவிட்டது போல் தோன்றியது. அப்படி எல்லாம் ஏமாற்றிவிடவில்லை இப்புத்தகம். அமெரிக்காவில் குழந்தை யாசிக்கும் ஒரு தம்பதி. இந்தியாவில் குழந்தை யாசிக்கும் ஒரு தம்பதி. இலண்டனின் குழந்தை யாசிக்கும் ஓர் இந்தியத் தம்பதி. தன்னைப் போல் வாடகைத் தாயாகி வறுமையை ஒரே விரட்டாக விரட்டிவிடலாம் என்று தன் தங்கையை நேபாளத்தில் இருந்து மும்பைக்குக் கூட்டி வரும் ஒரு சகோதரி. குஜராத்தில் ஆனந்த நகரில் வாடகைத் தாய்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஓர் இல்லம். ஒரு நல்ல முடிவை எதிர்நோக்கி ஒன்றாகத் தொடங்கும் இவர்களின் கதைகளை இணையாகப் பயணிக்க வைத்து, ஒரு புதின வடிவில் இந்தியாவின் வாடகைத்தாய்கள் கதை சொல்வதே இப்புத்தகம்.

ஓர் ஆணின் விந்தை வாங்கி, இன்னொரு பெண்ணின் கருமுட்டையுடன் சேர்த்து, வேறொரு பெண்ணின் கருப்பையில் பிரசவித்து, பிறக்கும் குழந்தையை அந்த ஆணின் மனைவியிடம் கொடுத்துவிட்டால் யாருடைய குழந்தை அது, என்பது போன்ற தர்க்கரீதியான கேள்விகள். பிரசவிக்கும் வரை வெளியுலகத் தொடர்பேதும் இல்லாமல், பெரும்பாலும் பிறந்த குழந்தையைப் பார்க்கக் கூட அனுமதிக்கப்படாத அவ்வாடகைத் தாயின் உணர்வுகள். குந்தி தேவிக்கு மதச்சாயங்கள் பூசி கதை சொன்னாலும், கணவனுக்கு இல்லாமல் யாரோ ஒருவருக்குப் பிரசவித்துக் கொடுக்கும் வாடகைத் தாய்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். மேரி மாதாவைப் போல கன்னி கருத்தாங்கி மகவைப் பெற்றெடுக்கும் கதைகள். இன்னொரு பெண்ணின் கருப்பையில் தங்கள் குழந்தை வளர்வதை வெளியுலகிற்குச் சொல்ல விரும்பாத பெண், தன் வயிற்றைக் கர்ப்பம் போலக் காட்டிக் கொள்ள விற்கப்படும் போலிவயிறுகள். எதிர்காலத்தில் பெண்களின் பேறுகால விடுமுறைகளுக்கு மாற்றாக வாடகைக் கருவறைகள். இப்படி பல விடய‌ங்களைப் பேசுகிறது புத்தகம்.

செயற்கை முறை கருத்தரிப்பைத் (IVF = In vitro fertilisation) தடை செய்யும் சில நாடுகள். அப்படி பிறந்த குழந்தைகளுக்குக் குடியுரிமை தராத சில நாடுகள். சரி, அக்குழந்தையைத் தந்தெடுத்து வரலாம் என்றால், விவாகரத்தான ஆண்கள் தந்தெடுப்பதைத் தடை செய்யும் சில நாடுகள். ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் ஒரு குறிப்பிட்ட மருத்துவரால், தம்பதிகள் இருவரும் நேரில் வந்து மருத்துவச் சோதனைகளில் ஒத்துப் போனால் மட்டுமே குழந்தைகளை ஏற்றுக் கொள்ளும் சில நாடுகள். தங்கள் குழந்தைகளையே தத்தெடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட‌ தம்பதிகள். இப்படிப் பல நாடுகளின் சட்டச் சிக்கல்கள். கவனக் குறைவிலும், வியாபாரப் போட்டியிலும் மருத்துவமனையில் நடக்கும் தவறுகளால் பிறந்த பின்னும் மரபணு சோதனையில் பெற்றோருடன் ஒத்துப் போகாத குழந்தைகளை என்ன செய்வதென்ற சிக்கல். கருமுட்டை கொடுத்தவளே கருவைச் சுமக்கவும், மூன்று முறைக்கு மேல் வாடகைத் தாயாக இருக்கவும் இந்தியாவில் சட்டம் அனுமதிப்பதில்லை. பிறந்த குழந்தைக்கும் வாடகைத் தாய்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென இந்தியாவில் சட்டம். சட்டப்படி இந்தியாவில் செயற்கை முறையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அகதியாகத் தான் பிறக்கிறது, என்ற புத்தகத்தின் வரிகளில் மனது கனத்தது.

தன் மகளுக்காக வாடகைத் தாயானாள் ஒரு தாய். ஒரு காலத்தில் தன்னைச் சுமந்த‌ கருப்பையைத் தன் மகவையும் சுமக்க வைத்தது அறிவியலின் அசுர வளர்ச்சி! வளரும் நாடுகளின் பெண்களின் உடலையும் மனதையும் சீரழிக்கும் இனப்பெருக்க விபச்சாரம் என்பவர்கள் ஒருபுறம். விபச்சாரத்தில் கூட‌ தள்ளக் காத்திருக்கும் வறுமையிடம் இருந்து காத்து, கண்ணியமான வருமானம் தருகிறது என்பவர்கள் இன்னொரு புறம். காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தும் இவ்வுலகில் செயற்கை கருத்தரிப்பு விதிவிலக்கல்ல. ஒருத்தியை வாடகைத் தாயாக்கி வறுமைக் கோட்டைத் தாண்ட வைக்கும் இவ்வறிவியல், அவளுக்கோ அல்லது அவளைச் சேர்ந்த வறுமை பீடித்த நெருங்கிய உறவுக்காரி ஒருத்திக்கோ குழந்தை தேவைப்படும் நேரத்தில், கதைவை மூடியே வைக்கிறது. செயற்கை கருத்தரிப்பு என்பது சொத்துடைமைச் சமூகத்தின் ஆடம்பரமாகத் தான் பெரும்பாலும் இருந்து வருகிறது. என் ஏழைச் சகமனிதனுக்கு அது என்றாவது எட்டுமா? மருத்துவ வியாபாரிகளும், கள்ளச்சந்தை தரகர்களும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மூலம் பணமீட்டுபவர்களும், தாழ்ந்தவன் உயர்ந்திடத் தேவையில்லை என்பவர்களும் எட்டவிடுவார்களா?

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements