164. பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும்

Until the lion learns how to write, every story will glorify the hunter.
– African proverb

சிதம்பர ரகசியம்
கடைசியாகச் சொல்லப்பட்டது
விபி சிங், பி ஏ சங்மா
இறந்தது பலருக்குத் தெரியாது
கோட்டைக்குப் போக‌ பலர்
கோடம்பாக்கம் போயினர்
ஜனங்க‌ளிடம் வென்றவர்கள்
ஜனாதிபதிக்குச்
செல்லாத ஓட்டுப் போட்டனர்

108 ஆம்புலன்ஸ் திட்டம்
மத்திய அரசா?
மாநில அரசா?
இராஜீவ் காந்தியைக் கொன்றது யார்?
நாடாளுமன்றத்தைத் தாக்கியது யார்?
எங்களுக்கும் தெரியவில்லை
– ஞானசேகர் (‘எங்கள் காலத்தில்‘ கவிதையில் இருந்து)

1. ‘தைரியம் இருந்தா தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு வாங்க பார்க்கலாம்’ என்று மாநிலங்கவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முந்தைய பிரதமருக்குச் சவால் விட்ட கட்சிதான் இன்று ஆள்கிறது. அதன் இப்போதைய நிதி அமைச்சர் அப்படி தேர்தலில் போட்டியிட்டு தோற்று தைரியமாக மாநிலங்களவை வழியே நாடாளுமன்றம் வந்தவர்தான்.

2. சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் Discipline spotted என்றொரு காணொளி உலவுவதைக் காணலாம். நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேசிக்கொண்டு இருக்கிறார். அவ்வழியே நடந்து வரும் பிரதமர், சிறிது நேரம் நின்றுவிட்டு, அமைச்சர் பேசி அமர்ந்த பின் கடந்து போகிறார். ஒரே கட்சியைச் சேர்ந்த இருவரைக் காட்டும் அக்காணொளியில் அப்படி என்ன விசித்திரம் என எனக்குப் புரியவில்லை. அதே பிரதமர் குஜராத் முதல்வராக இருந்தபோது, கரன் தாப்பரின் ஒரு நேர்காணலில், முதல்வன் திரைப்பட இரகுவரன் போல் பாதியிலேயே எழுந்து போனார். Discipline spotted?

3. தூக்கு மேடையில் மூவர் நிற்கிறார்கள். ஜனாதிபதியை விட்டால் அவர்களைக் காப்பாற்ற முதல்வர் அம்மாவிற்கு மட்டுமே அதிகாரம் உண்டு, என்று யாரோ போஸ்டர் ஒட்டி முன்மொழிந்தார்கள். பத்திரிக்கைகள் பலவும் வழிமொழிந்தன. இரண்டு நாட்கள் கழித்து முதல்வருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று அம்மா சொன்னார். இன்னும் அம்மூவர் தூக்குமேடையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

4. ‘கடவுளே அனுப்பிய பரிசு நம் பிரதமர்’ என்கிறார் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர். ‘நம் பிரதமரைப் பற்றி 16ம் நூற்றாண்டிலேயே நாஸ்டர்டாமஸ் கூட சொல்லி இருக்கிறார்’ என்கிறார், கணக்கில்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் இந்நாட்டின் மத்திய உள்துறை இணையமைச்சர்! வாஜ்பாய் ஆட்சியில் அப்துல் கலாம் ஜனாதிபதி ஆனபோது, ‘இரண்டு பிரம்மச்சாரிகளின் ஆட்சியில் இந்தியா வல்லரசாகும் என்று அன்றே நாஸ்டர்டாமஸ் சொன்னார்’ என்றொரு செய்தி அன்றும் வலம் வந்தது. சவட்டு மேனிக்கு நாடுகளைத் தாக்கி அழித்து உலக அகதிகளை உருவாக்கும் அமெரிக்கா போல் இந்தியா வல்லரசானதா? உலகமே தனது ஆட்சியின் கீழ் வரும் என்று நாஸ்டர்டாமஸ் சொன்னதாக அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை, இரண்டாம் உலகப் போரில் வானூர்திகளில் இருந்து ஹிட்லரின் நாசிப்படை தூவிய கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். அன்று நோட்டீஸ்; இன்று பேஸ்புக் டிவிட்டர். பாவம் நாஸ்டர்டாமஸ்!

5. ஏழு தவிர இந்திய மாநிலங்கள் அனைத்திலும் பேரவை என்ற ஒரேயொரு அவைதான். தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் இருந்த இரு அவைகளில் ஒன்றான மேலவை ஏன் கலைக்கப்பட்டது என்று நம்மில் எத்தனை பேருக்குக் காரணம் தெரியும்?

6. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ. போல், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியில் எம்.பி.யாக‌ ஓருவர் இருக்கிறார் / இருந்தார். இப்போதைய பிரதமரின் உலகப் பயணங்கள் எல்லாம் அவரின் சாதனைகளுக்கு முன் தவிடுபொடி! 200க்கு மேல் அரசுமுறைப் பயணம் போய் இருக்கிறார்!! இந்தியத் தூதரகங்களே இல்லாத நாடுகளும் அதில் அடக்கம்!!!

அரசு எப்படி இயங்குகிறது என்று சொல்லித் தர குடிமையியல் என்ற பாடம் பத்தாம் வகுப்பு வரை இருந்தும், மாநிலங்களவைக்கும் மக்களவைக்கும் வேறுபாடு தெரியாத படித்தவர்கள் தான் அதிகம். அப்படி இருப்பதையே மக்களாட்சியின் ஓட்டுக் கட்சிகள் விரும்புகின்றன. அதனால் தான், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நமக்காக எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை விட்டுவிட்டு காலால் எப்படி நடக்கிறார்கள் போன்ற செய்திகளைப் பரப்பிவிடுகிறார்கள். முதல்வரின் பிரதமரின் ஜனாதிபதியின் ஆளுநரின் அதிகாரங்கள் தெரியாமல் தடுமாறுகிறோம்.

————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும்
ஆசிரியர்: ச.இராசமாணிக்கம்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
முதல் ஈடு: 2014
பக்கங்கள்: 136
விலை: ரூபாய் 100
வாங்கிய இடம்: சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சி 2016
————————————————————————————————————————————————————————————————————————————
‘பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும்’ என்ற புத்தகம், பாராளுமன்றம் பற்றி புரிந்து கொள்ள உதவும். பட்ஜெட் கூட்டம், மழைக்காலக் கூட்டத்தொடர், குளிர்காலக் கூட்டத்தொடர், நம்பிக்கையில்லாத் தீர்மானம், கவனயீர்ப்புத் தீர்மானம், மசோதா என்று பழக்கப்பட்ட பல விடயங்களை அருமையாக விளக்குகிறது இப்புத்தகம். ஒன்றிரண்டு இடங்களில் வரும் சில வரலாற்று உதாரணங்கள் தவிர, மொத்த புத்தகமும் வெறும் தகவல்கள் மட்டுமே அடுக்குவதால் குடிமையியல் புத்தகம் போன்று சலிப்பூட்டுவது மட்டும் ஒரு சின்ன குறை.
மாநிலங்களவையைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை.
மாநிலங்கள் பட்டியலில் உள்ள எந்த அதிகாரத்தையும், தேச நலனைக் கருதி தனது கையில் எடுத்துக் கொண்டு சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களவைக்கு உண்டு.
ஜனாதிபதி உரை ஜனாதிபதியால் தயாரிக்கப்படுவதில்லை.
புத்தகம் சொல்லும் இதுபோன்ற தகவல்கள் எனக்கும் புதிது.

சபாநாயகர் (Speaker) அவையில் பேசுவதில்லை; விவாதங்களில் பங்கு பெறுவதும் இல்லை. பேசாதவரை ஸ்பீக்கர் என்றழைக்கும் விசித்திரக் கதையைச் சொல்கிறது இப்புத்தகம். ஜீரோ நேரம் (Zero hour) என்ற சொல் நாடாளுமன்ற விதிகளில் இல்லையாம். பத்திரிக்கையாளர்களின் கற்பனையில் உருவான சொல்லாம். Federation, பட்ஜெட், கொறடா, பாராளுமன்றக் கமிட்டி போன்ற சொற்கள் அரசியலமைப்புச் சட்டத்திலேயே கிடையாதாம். சட்டத்தில் இல்லாத சொற்கள் எப்படியோ நடைமுறைக்கு வந்துவிட்டன. இந்தியைத் தேசியமொழி என்று பரப்பிவிட்டது போல். மற்றும் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லாதவர்கள் எல்லாம் நாட்டுப்பற்ற தேசத்துரோகிகள் என்று இன்று பரப்பப்படுவது போல். ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் ஆண்டதால், பாராளுமன்றம் என்று அவர்கள் Parliamentஐ அழைத்தனர். அவர்கள் சென்ற பிறகும் நாம் பாராளுமன்றம் என்று அழைப்பது அடிமை வாழ்க்கையின் எச்சம். நாடாளுமன்றம் என்பதே சரி, என்று யாரோவொரு சமூக ஆர்வலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

The power of the government is in proportion to what the people surrender to the government. இப்படி புத்தகத்தின் ஓரிடத்தில் சொல்கிறார் ஆசிரியர். அதாவது அதிகாரத்தை மக்களே கையில் எடுக்க வேண்டும் என்ற பிரெஞ்சுப் புரட்சிக்கால‌ அதே பழைய சித்தாந்தம். இந்தத் தேர்தலுக்கு ஓட்டுப் போட சொந்தக் காசில் வானூர்தி முன்பதிவு செய்து வைத்திருந்தாலும், நானும் மக்கள் அதிகாரம் யாசிக்கும் சித்தாந்தக்காரனே. இமயம் வாழ்வான் இருமினால் குமரி வாழ்வான் மருந்து கொண்டோட வேண்டும், என்பதெல்லாம் பாரதி கனவு மட்டும்தான். குஜராத் அயோத்தி என்று எங்கோ மூலையில் யாரோ ஒருவனுக்கு நடக்கும் கொடுமைகளுக்காக நாம் இங்கு கண்ணீர் சிந்தி நமது எதிர்ப்பைத் தேர்தலில் காட்டினாலும், வாரணாசி என்று இன்னொரு மூலையில் பலர் அதே தேர்தலில் பேராதரவு காட்டி அமோக வெற்றி கொடுப்பதுண்டு. இராமேஸ்வரம் ஈழம் என்று இங்கு கொடுமைகளுக்காக நாம் கண்ணீர் சிந்தி நமது எதிர்ப்பைத் தேர்தலில் காட்டினாலும், அமேதி ரேபரேலி என்று இன்னொரு மூலையில் பலர் அதே தேர்தலில் பேராதரவு காட்டி அமோக வெற்றி கொடுப்பதுண்டு. தேர்தலில் மக்கள் நேர்மையாக ஓட்டுப் போட்டாலும், மாநிலங்களவை மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் மக்கள்விரோத முடிவுகளையே நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் எடுக்கிறார்கள் என்பதைச் சமீபத்திலும் பார்த்திருக்கிறோம். இந்தியா போன்ற மிகப் பரந்த நாட்டில் மக்களாட்சியின் மிகப்பெரிய வரமும் அதுதான்; சாபமும் அதுதான்.

நமது தலையெழுத்தை நிர்ணயிப்பது, நம்மைப் படைத்ததாக சொல்லிக் கொள்ளும் கருவறைக் கோவில்கள் அல்ல! நாமே படைத்த சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் தான்! மக்களாட்சியின் வரங்கள் எல்லாம் சாபங்களாக வெகுவேகமாகச் சரிந்து விழும் நம் காலத்தில், தேர்தல் என்ற ஒற்றைத் தவத்தை நம்புவதைத் தவிர நமக்கு வேறு வழியுமில்லை. அதனால் இதுபோன்ற புத்தகங்கள் படித்து தவத்தைப் புரிந்து சரியாக செய்வோம்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements