165. Adventures in human being

ஆதாம் என்ற ஆணை முதலில் படைத்த ஆண்டவர், அவனுக்குத் துணையாக அவனின் விலா எலும்பில் இருந்து ஏவாள் என்ற பெண்ணைப் படைத்ததாக திருவிவிலியம் சொல்கிறது. ஆண்டவர் தின்னக் கூடாதது என ஒதுக்கி வைத்த ஒரு மரத்தின் கனியை (அநேகமாக ஆப்பிள்), சாத்தானின் தூண்டுதலால் ஆதாமை ஏவாள் தின்ன வைத்ததாகவும் சொல்கிறது. அப்படி ஆதாம் தின்று விழுங்கும் போது, ஆண்டவர் அவனின் தொண்டையை அடைத்து தடுக்க முயன்றதாக உலகம் முழுவதும் வாய்+செவிவழிக் கதைகள் உண்டு. அதனால் தான் ஆண்களின் தொண்டையில் சற்றே வெளியில் நீட்டித் தெரியும் பகுதியை Adam’s apple என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். ஆண் தொண்டையின் அந்நீட்சிக்குச் சிவபெருமான் விசத்தைத் தொண்டையில் அடக்கி வைத்து திருநீலகண்டரான கதை இந்து மதத்தில் சொல்லப்படுகிறது. ஆண்களின் மார்பு முடிகளுக்கும் கூட கதைகள் உண்டு. ஆண்களால் படைக்கப்பட்ட எல்லா ஆண்டவர்களும் ஆண்களைக் காப்பாற்ற மட்டும்தான், என்று என் நாத்திகபுத்தி இப்போது சிரிக்கிறது. ஆனால் காதுமடல் உச்சி, வாலின் எச்சம், குடல்வால் உட்பட உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் பரிணாமமும் மருத்துவ உலகமும் நமக்கு நிறைய கதைகள் வைத்திருக்கின்றன.

தனது பணியில் தான் பார்த்து கேட்டு தெரிந்து கொண்ட விடயங்களை, நோயாளியின் நம்பிக்கை கெடும்படி, வேறு யாருக்கும் வெளிப்படுத்த மாட்டேன் என்று, இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் (மேற்கத்திய) மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்ஸ் சொன்ன உறுதிமொழியுடன் தான் ஒவ்வொரு மருத்துவரும் கல்லூரியை விட்டு வெளிவருகிறார். உடல் நலத்திலும் நோவிலும் வாழும்போதும் செத்தபிறகும் மனித உடல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஒரு மருத்துவனுக்குத் தான் கிடைக்கிறது. எழுதப்பட வேண்டிய‌ நிறைய கதைகள் அவர்களிடம் தான் கொட்டிக் கிடக்கின்றன. சென்ற வருடம் இறந்த ஆலிவர் சாக்ஸ் (Oliver Sacks), தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விளையனூர் இராமச்சந்திரன் (Vilayanur S. Ramachandran) போன்ற மூளையியல் மருத்துவர்கள் சாதாரண மக்களாலும் தங்களின் புத்தகங்களால் அறியப்படுகிறார்கள். நோயாளியின் நம்பிக்கைக் கெடாமல் ஒரு மயக்கவியல் மருத்துவர் தமிழில் எழுதிய ஒரு புத்தகத்தை ஏற்கனவே இத்தளத்தில் படித்திருப்பீர்கள். இப்போது ஓர் ஆங்கிலப் புத்தகத்துடன் வந்திருக்கிறேன்.

————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: Adventures in human being
ஆசிரியர்: Gavin Francis
வெளியீடு: Profile Books (https://profilebooks.com/)
முதல் ஈடு: 2015
பக்கங்கள்: 232
விலை: ரூபாய் 399
வாங்கிய இடம்: Landmark
————————————————————————————————————————————————————————————————————————————
யோகா மாதிரி ஏதோவொன்றைச் செய்ய வைத்து எங்கள் கல்லூரியின் ஒரு மாணவனின் தொடை மேல் இன்னொரு மாணவனை ஏறி நிற்க வைத்து ஆச்சரியப்படுத்திப் போனார் ஓருவர். இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி தருபவர் என்பதால் கிரிக்கெட்டால் கெட்டுக் கிடக்கும் சகமாணவர்களும் கைத்தட்டி வைத்தார்கள். இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியங்களின் பேரவையின் இன்றைய தலைவர் நரேந்திர நாயக் (Narendra Nayak) மறுநாள் நிகழ்ச்சிக்கு வந்தார். யோகா மாதிரி எதுவும் செய்யாமல் ஓர் ஒல்லியான மாணவனின் தொடை மேல், ஒரு குண்டான மாணவனை ஏறி நிற்க வைத்தார். மனித தொடை எலும்பு எவ்வளவு வலிமையானது என்று இயற்கையைப் புரிந்து கொள்ளாமல் ஏமாந்து தொலைக்காதீர்கள் என்று சொல்லிப் போனார். சிறுகுடல் என்று பெயர் இருந்தாலும், அது பெருங்குடலை விட நீளமானது; 6 மீட்டருக்கு மேல் நம் வயிற்றுக்குள் மடங்கிக் கிட‌க்கிறது. வாலிப மனித உடம்பொன்றின் நரம்புகளைக் கயிறாய்த் திரித்து பூமியை ஆறு சுற்றுகளுக்கு மேல் சுற்றலாம். நாம் சுமக்கும் நமது உடலில்தான் நமக்கே தெரியாமல் எத்தனை ஆச்சரியங்கள்!

Adventures in human being. மூளை கண் முகம் உட்செவி நுரையீரல் இதயம் முலை தோள் மணிக்கட்டு சிறுநீரகம் கல்லீரல் பெருங்குடல் பாலுறுப்பு கருப்பை இடுப்பு பாதம் என உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மனித உடலைப் பற்றி, மருத்துவத் துறையில் இல்லாத வாசகனுக்காக ஒரு மருத்துவர் எழுதிய புத்தகமே இது. இப்புத்தகம் கொஞ்சம் வித்தியாசமாக உடலைக் கூறு செய்து உள்ளிருக்கும் நரம்பு தசை எலும்பு போன்ற சின்னச்சின்ன விடயங்களை விளக்குகிறது. 6 நிமிடத்தில் முடியும் கண்புரை (cataract) அறுவை சிகிச்சை முதல், 30 மணி நேரங்களுக்கு மேல் நடக்கும் மூளை அறுவை சிகிச்சை வரை தன் பல அனுபவங்களைச் சொல்கிறார் ஆசிரியர். ஆசிரியருக்கு இலக்கிய ஓவிய ஆர்வம் இருப்பதால், ஆங்காங்கே பல ஆங்கிலக் கவிதைகளும் நாவல்களும் ஓவியங்களும் உதாரணங்களாக எட்டிப் பார்க்கின்றன. லியொனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற இராவுணவு ஓவியத்தில் இருப்பவர்களின் முகபாவங்களை ஒவ்வொன்றாக விளக்கி, முகத்தசைகளின் அமைப்பை மிக நுணுக்கமாக டா வின்சி கையாண்டிருப்பதை, முகத்தின் தசைகளை விவரிக்கும் கட்டுரையில் அற்புதமாக விளக்குகிறார் ஆசிரியர். நான் எழாவதிலோ எட்டாவதிலோ படித்த Snow White and Seven Dwarfs கதையை, கோமா நிலையை விளக்கும் கட்டுரையில் மேற்கோள் காட்டுகிறார்.

L0022481 Surgery: cancer of the breast.

(https://blog.wellcomecollection.org/) (மார்பகப் புற்று நோய் அறுவை சிகிச்சை)

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படத்தை இதுவரை ஐந்து முறைகள் பார்த்திருக்கிறேன். குண்டடிபட்டுக் கிடக்கும் ஒருவரின் கழுத்தில் கைவைத்து, ஒரு மருத்துவ மாணவன் அசையாமல் இருக்கும் ஒரு காட்சி உண்டு. புகைப்படங்கள் போல் காட்சிகளை அசையாமல் வைத்துக் காட்டும் இயக்குநர் மிஷ்கினின் வழக்கமான உத்திதான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். Carotid artieryயைத் தொட்டு உணர்ந்து உயிர் இருப்பதைச் சோதிக்கும் ஒருமுறை என இப்புத்தகம் படித்துத் தான் தெரிந்தது. பறவைகளின் இறகை மூக்கருகில் வைத்து முற்காலத்தில் சோதித்த முறைகளையும் இப்புத்தகம் சொன்னது. கண்ணில் ஓளியடித்துப் பார்க்கும் இன்னொரு முறையும் உண்டு. இறந்து போன உடலில் நெஞ்சுக் கூட்டில் இருந்து லப் டப் என்று இல்லாமல், டப் டப் என்று வெடிக்கும் சத்தம் வரும் கதையையும் இப்புத்தகம் தான் சொன்னது. என்றோ கருவுற்று, போதுமான இரத்தம் இல்லாமல் அக்கரு இறந்து, கால்சியம் உப்பு படிந்து கருப்பைக்குள்ளேயே கட்டியாகி, நாற்பது ஐம்பது ஆண்டுகளாகியும் அப்பெண்ணுக்கே தெரியாமல் அவளுடன் இருக்கும் fetoliths (stone babies) போன்று பல மனித உடல் ஆச்சரியங்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் புத்தகம் இது. தொப்புள்கொடிக்கும் (umbilical cord) நஞ்சுக்கொடிக்கும் (placenta) உலகின் பல்வேறு பகுதிகளில் பின்பற்றப்பட்டு வரும் சடங்குகளை விளக்கும் சில பக்கங்கள் மிக அருமை.

தாயின் மாதவிடாய்க் குருதியைப் பருகி கருப்பையில் குழந்தை வளர்வதாக முற்காலத்தில் நம்பி இருக்கிறார்கள். இருபாலரும் பாலுறவில் உச்சம் அடைந்தால் தான் கரு உண்டாகும் என்று நம்பப்பட்ட காலங்கள் இருந்திருக்கின்றன‌. பாலியல் வல்லுறவில் பெண் கருவுற்றால், அவள் உச்சம் அடையாமல் கருவுற வாய்ப்பில்லை என நம்பி, கற்பழிப்பை நிராகரித்த நீதிமன்றங்கள் இருந்திருக்கின்றன. இனப்பெருக்கத் திரவங்கள் உடலுறவு மூலம் வெளிப்படுத்த முடியாத நிலையில், பெண்கள் பல உடல் மற்றும் மன இன்னல்களுக்கு ஆளாவதைத் தடுக்க, அக்காலத்தில் பெண்களுக்கான சுய இன்பக் கருவிகளை மனநிலை மருத்துவர்கள் பரிந்துரைத்து இருக்கிறார்கள். அவற்றில் சில தையல் இயந்திர‌ சக்கரத்துடன் கூட இணைக்கப்பட்டு இருந்திருக்கின்றன! அப்படி ஒரு கருவியை எப்படி பயன்படுத்த வேண்டுமென விளக்கும் அந்தக் காலப் படம் இது.

நமது உடலின் இயக்கத்தில் வலது பக்கத்தை இடது மூளையும், இடது பக்கத்தை வலது மூளையும் கட்டுப்படுத்துவதாகப் படித்திருப்போம். மூளையின் இரண்டு பகுதிகளாலும் கட்டுப்படுத்தப்படும் ஒரே உறுப்பு பற்றி தெரியுமா? கை போனவர்களே உயிர் கொள்ளும் உலகத்தில், மணிக்கட்டில் நாடித்துடிப்பை உணரும் இடத்தை வெட்டி இரத்தம் கொட்டச் செய்து, பெரும்பாலும் இளம்பெண்கள் இறந்து போவது போல் சினிமாவில் காட்டுவது போல், அந்நரம்பைப் பிளேடால் வெட்டி சாகும் அளவிற்குத் தற்கொலை மிக எளிதானதா? படங்களில் இருப்பது போல், மொத்த உடலின் எடையையும் தாங்கும் படி உள்ளங்கைகளில் ஆணியடிக்கப்பட்டு சிலுவை ஏற்றப்பட்டாரா இயேசுநாதர்? தாயின் கருப்பையில் இருக்கும் போது நம் எல்லாருக்கும் இதயத்தில் ஒரு துளை இருக்குமாமே? மூளை அறுவை சிகிச்சையில் கபாலம் மூடப்படும் முன், காற்றுக் குமிழ்கள் மூளைக்குள் தங்கிவிடாதபடி எப்படி அகற்றுகிறார்கள் தெரியுமா? பக்கவாதம் கொண்ட‌ ஒருவர், வேண்டி விரும்பி உடலில் முகத்தை மட்டும் செயற்கையாக வாதம் செய்து கொள்ளும் விநோதம் கூட மருத்துவ உலகில் உண்டு தெரியுமா? பெண்களுக்கும் விருத்தசேதனம் (female circumcission) உண்டென்பதை இப்புத்தகம் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

திருவிவிலியத்துடன் ஆரம்பித்த இப்பதிவை அதனுடனே முடிக்கிறேன். Adam’s apple போல் உடலில் சில உறுப்புகளின் ஆங்கிலப் பெயர்களைப் பற்றி இப்புத்தகம் சிறிது விளக்கம் கொடுத்தது. கண்ணை ஒட்டி முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் பறவைகளின் கால்தடம் போல் இருப்பதால், ஆங்கிலத்தில் crow’s feet என்று பெயராம். ஆண் பெண் இருபாலருக்கும் உடலுறவில் உச்சத்தைக் கடத்தும் நரம்பு, வெட்கம் என்ற மூலப்பொருள் கொண்ட pudendal nerve என்று அழைக்கப்படுகிறது. பெண்களின் பாலுணர்ச்சியை அதிகம் தூண்டும் இடமாக சொல்லப்படும் G-spot என்பது, ஓர் ஆண் மருத்துவரின் முதலெழுத்து! காவல்துறையின் கம்பினால் தாக்கப்படும் போது பெரும்பாலும் உடைவதால், இன்றும் முன்னங்கையின் எலும்புமுறிவுகளை nightstick fracture என்றுதான் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். சத்தியம் செய்வதற்கு ஆங்கிலத்தில் testify என்ற வார்த்தை எப்படி வந்தது என்று நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)