167. நீதியரசர் மா.மாணிக்கம்

ஒரு கூடை நிறைய நாறிய மீன்களில் நல்ல மீனைத் தேடும் முட்டாள் நானல்ல.
– 1961ல் காவல்துறையினர் பற்றிய ஒரு தீர்ப்பில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா சொன்னது
(முரண் பதிப்பக வெளியீட்டில் அ.மார்க்ஸ் அவர்களின் ‘பயங்கரவாதம், இந்திய அரசு, காவல்துறை‘ என்ற புத்தகத்தில் இருந்து) 

நான் மிக அரிதாகவே புதினங்கள் படிப்பதுண்டு என என்னைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும். எதார்த்தமாக‌ விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்பவை என‌ பிரபலமானவர்களின் பரிந்துரைகளில் மீண்டும் வீழ்ந்து, 2014 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய இரண்டு பிரபலமான புதிய புதினங்களை வாங்கிப் படித்து தலைவலிதான் மிச்சம். அவற்றின் தாக்கங்களில் இருந்து மீள முடியாமல், புதினங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்து வந்தேன். இந்த வருட சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சியில், சிகரம் ச.செந்தில்நாதன் என்பவரின் நீதித்துறை பற்றிய சில புதினங்கள் கவனம் ஈர்த்தன. பலத்த பரிசீலனைகளுக்குப் பின், அவரின் இரண்டு புதினங்கள் வாங்கினேன்.

கணவனை விட்டு விலகி வாழும் ஒரு கிராமத்துப் பெண் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தை நாடும், மங்களம் என்ற புதினத்தை இரண்டே நாட்களில் படித்து முடித்தேன். கருப்பு அங்கிக்குள் தன்னை மறைத்துக் கொள்ளும் நீதித்துறையைச் சாதாரண மனிதனுக்கும் கொஞ்சம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் புதினத்தை எழுதியிருந்த ஆசிரியர் கவனம் ஈர்த்தார். அப்புதினம் வெளிவந்த சில நாட்களிலேயே தனது முதுகலைப் பட்டத்திற்கு மாணவர் ஒருவர் ஆய்வு இலக்கியமாக பயன்படுத்தியதாக ஆசிரியர் கூறுகிறார். அப்புதினத்தை அப்போது இத்தளத்தில் எழுத எனக்கு காலம் அமையவில்லை. நான் வாங்கி வந்த அவரின் இன்னொரு புதினம் இதோ.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: நீதியரசர் மா.மாணிக்கம்
ஆசிரியர்: சிகரம் ச.செந்தில்நாதன்
வெளியீடு: சிகரம் அறக்கட்டளை, சென்னை
முதல் ஈடு: 2013
பக்கங்கள்: 192
விலை: ரூபாய் 150
வாங்கிய இடம்: சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சி 2016
————————————————————————————————————————————————————————————————————————————
பாபர் மசூதி இடிப்பு. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு. இவ்வழக்குகளைப் போல, தொடர்புடைய வழக்கறிஞர் நீதிபதிகளின் மொத்த வரலாற்றையும் ஊடகங்கள் அலசி ஆராய்ந்ததை வேறெந்த வழக்குகளிலும் நாம் கண்டதில்லை. நீதிபதிகள் மாறினால் நீதியும் மாறும் புதிர், சாமானியர்கள் நமக்குப் புரியவில்லை. இன்று நீதித்துறையிலும் பணமும் சாதியும் அரசியலும் வெளிப்படையாக நுழைந்துவிட்ட செய்திகள். சீக்கியப் படுகொலைகள், போபர்ஸ், வாச்சாத்தி வன்கொடுமைகள் போல குற்றவாளிகளை மரணம் விடுதலை செய்த பின், மிக மிக மிக தாமதமாக வெளிவரும் தீர்ப்புகள். என்ன நடக்கிறதென்றே புரியாத 2G அலைக்கற்றை போன்ற வழக்குகள். இராஜீவ் காந்தியைக் கொன்றதாகச் சொல்லப்படும் மூவர் தூக்கு போல தீர்ப்பிடப்படாத வழக்குகள். போபால் விசவாயுக்கசிவு போல நீதியே கிடைக்காத வழக்குகள். நீதிமன்றங்கள் மாறி, நீதிபதிகள் மாறி, மாற்றி மாற்றி எழுதப்படும் தீர்ப்புகள். ‘பாரத் மாதா கி ஜே’ சொல்லச் சொல்லும் நாட்டில், லலித் மோடி – விஜய் மல்லையாவிற்குத் தரப்படும் நீதிகளும் எங்கள் தஞ்சை – விதர்பா விவசாயிகளுக்குத் தரப்படும் நீதிகளும் ஒன்றே என்று யாராவது சொல்ல முடியுமா? சிறிது சிறிதாக நீதித்துறை மேல் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் தலைமுறை நமது. நீதித்துறையை மட்டும் குறை சொல்ல வேண்டாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே பொது நிகழ்ச்சியில் அழும் நிலையில் நாடு இருக்கிறது.

நீதித்துறையைச் சுற்றிவரும் புதினம் இது. மாணிக்கம் என்ற வழக்கறிஞர், கீழ் நீதிமன்றத்தில் நீதிபதியாகி, பின் உயர்நீதிமன்ற நீதிபதியாவதைச் சொல்கிறது, புதினத்தின் முதல்பகுதி. ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த 2009ல் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை நம்மில் பலர் மறந்திருப்போம். நீதி மற்றும் காவல் துறைகளின் மீது அழியாத களங்கத்தை ஏற்படுத்திய அச்சம்பவத்தைச் சொல்கிறது, புதினத்தில் இரண்டாம் பகுதி. இந்த சுப்பிரமணியசாமிதான் அக்கலவரங்களுக்குக் காரணம் என்பதே இப்புதினம் படித்துத் தான் எனக்குத் தெரியும். பெரும்பாலான தமிழர்களின் மனச்சாட்சியாக, புதினம் முழுவதும் சுப்பிரமணியசாமியை ஒருமையில் திட்டுவதைப் போல படைத்திருக்கும் ஆசிரியரைப் பாராட்டியாக வேண்டும். ராசபக்சேவின் அம்பாசிடர் என்றே குறிப்பிடுகிறார். மாநிலங்களவை வழியாக மத்திய அரசு அவரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கிவிட்டது. வாழ்க மக்களாட்சி! வளர்க சுப்பிரமணியசாமிகள்!

ஈழத்திற்காக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் இருக்கும்போது, சுப்பிரமணியசாமி வீம்புக்காக சிதம்பரம் கோவில் அர்ச்சகர்களுக்காக உயர்நீதிமன்றம் வந்து, பிரச்சனையை உண்டாக்கிவிட்டு போகும் அத்தியாயத்தில் ஒருபகுதி இது:
திடீரென்று சுப்பிரமணியசாமியின் குரல் கேட்டது. ‘MY LORDS THEY HAVE HURLED ROTTEN EGGS ON ME’.
‘HE IS CALLING US AS PARAIAS’. வழக்கறிஞர்கள் மத்தியிலிருந்து எதிர்க்குரல்கள் கேட்டன.
‘எல்லாம் சரி, அழுகின முட்டை வீசினாங்கன்னு சொல்றானே, அது எப்படி?’
‘அதானே, முட்டை அழுகினதா இல்லியாங்கிறது அசைவர்களுக்குத் தானே தெரியும்’.

23 மற்றும் 24 அத்தியாயங்களில் ஒரே கதைதான் இருமுறை அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. அதுதான் கதையின் முடிவா? அல்லது 24 அத்தியாயத்தின் முடிவு நான் படித்த புத்தகத்தில் இல்லையா? பதிப்பகத்தார் தான் சொல்ல வேண்டும்.

நீதியைக் காக்க வேண்டியவர்களே மீறுவதைச் சொல்கிறது இப்புதினம். யுவர் ஆனர், மை லார்ட் போன்ற சொல்லாடல்களில் உள்ள வேறுபாடு உட்பட பல சின்னச் சின்ன சட்ட உலகத் தகவல்களும் வந்து போகின்றன. நீதி மற்றும் காவல்துறைகளில் காரியம் ஆக காக்கா பிடிக்கும் கதைகளும் உள்ளன. மனச்சாட்சிக்கு விரோதமாக தீர்ப்பிடும் நீதிபதிகளின் கதையும் இப்புதினத்தில் உண்டு. கருணை மனுக்களைத் தள்ளித் தள்ளிப் போட்டு அடுத்த ஜனாதிபதிக்கே அனுப்பிவிடுவது போல, சில வழக்குகளைத் தள்ளித் தள்ளி அடுத்த நீதிபதிக்கு அனுப்பும் கதைகளும் உள்ளன. புதினத்தின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளுடன் ஒட்டாமல் நடுவில் விறுவிறுப்பாக‌ இருக்கும் ஆசிரமக் கதையும் அருமை. காவல்துறையை வெளிப்படையாகவே சாடியிருக்கிறார் ஆசிரியர். நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தகர்ப்பது தனது நோக்கமல்ல எனவும், நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இப்புத்தகம் என்று ஆசிரியரே சொல்கிறார்.

சட்டத்தைக் காக்க வேண்டியவர்கள் சட்டத்தில் ஓட்டையிட்டு சட்டத்தை மீறுவதைச் சாமானியனுக்கும் சொல்லும் புதினம் இது. மக்கள் தங்களுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைக் காவல் மற்றும் நீதித்துறைகள் எப்படி தவறாகப் பயன்படுத்துகின்றன எனச் சிறிது சொல்லும் புதினம் இது. படித்துப் பாருங்கள்.

அனுபந்தம்:
——————–
அரசியல் சட்டத்தை உருவாக்குகிற எம்.எல்.ஏ., நிர்வகிக்கிற மாவட்ட கலெக்டர், பாதுகாக்கிற காவல்துறை டீ.எஸ்.பி. இந்த மூன்று பேரும் சட்டத்தை மதிக்காமல் முறை தவறி நடந்ததற்காக, மக்களே அதிகாரத்தைக் கையில் எடுத்து அவர்களைக் கொல்லும்படி முடிந்து அக்காலத்தில் பேரதிர்வை உண்டாக்கிய திரைப்படம், கேப்டன் பிரபாகரன். இன்று அதுபோல மக்கள் எல்லாரும் கையில் அதிகாரத்தை எடுத்தால் கடைசியில், ஒருபுறம் இஸ்லாமியர்களும், மறுபுறம் தலித்துகளும், இன்னொருபுறம் பெண்களும் சிதைக்கப்பட்டுக் கிடப்பார்கள் என்பதைத் தான் சமீபத்திய வரலாறு சொல்கிறது. அதன்பிறகு அதை வழிநடத்திச் செய்தவர்கள் பிரதமராகவும் வரக்கூடும். அதனால் இன்றைய நிலையில், கொஞ்சம் அடுத்த சந்ததியையும் யோசித்துப் பார்த்தால், மக்கள் அதிகாரம் என்பது தேர்தல் தவிர வேறு வழியில்லை. என்னதான் ஏமாற்றமே நமது பண்பாடாக இருந்தாலும், சினிமாக்காரனும் கிரிக்கெட்காரனும் நம்மை அப்படியே அமுக்கி வைத்திருந்தாலும், என்னதான் மனிதம் பாழ்பட்டுக் கிடந்தாலும், சட்டம் சாமானியனுக்கும் தந்திருக்கும் ஓட்டுரிமை அதிகாரத்தைக் குறுகிய சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்தாமல் வரும் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பீர், இம்மாநிலம் பயனுற வாழ்வதற்கே! நிர்வாணம் பொது எனினும் நமக்கான ஆடையை நாம் ஒழுங்காக அணிவோம்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements