168. உணவு சரித்திரம்

(இத்தளத்தில் இது எனக்கு 125வது புத்தகம்)

என்ன பழத்தெ சாதாரணமா சொல்லிட்டீங்க? பழந்தாங்க பெரிய விசயம். ஒரு பழத்தால பரமசிவன் குடும்பமே ரெண்டா பிரிஞ்சி ஒன்னு பழனிக்குப் போயிடுச்சு. வாழப்பழத்துக்காக கவுண்டமணி செந்திலத் தொரத்தின மாதிரி, கவுதமாலா நாட்டெ அமெரிக்கா அந்த தொரத்துத் தொரத்தி இருக்கு.

மிளகுக்காக இங்கு வந்த ஐரோப்பியர்களால் அடிமையான நாடு நமது. உச்சநீதி மன்றமே நேரடியாக தலையிட்டு கேள்விக் கேட்கும் அளவிற்கு உணவுக் கிடங்குகள் புழுத்துப் போய்க் கொண்டிருக்கையில், லலித் மோடியையும் விஜய் மல்லையாவையும் இங்கிலாந்திற்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, அங்கிருக்கும் கோகினூர் வைரத்திற்காக வெற்றுக்குரல் கொடுக்கும் நாடும் நமது. கவிஞர் அறிவுமதி சொன்னது போல், காமத்தைக் காசாக்கும் அதே கும்பல் தண்ணீரையும் காசாக்கிவிட்டார்கள். நம் இந்நாட்டில் குளிர் பானங்களில் பூச்சிக்கொல்லிகள் கலந்திருப்பதை ஆராய பாராளுமன்ற கூட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஈழப் போரின் கடைசியில் முதலைக் கண்ணீர் வடித்த மு.கருணாநிதி போல, அக்குழுவிற்குத் தலைவர் வேறு யாருமில்லை; கிரிக்கெட் மூலம் அக்குளிர் பானங்களை இங்கு தாரளமாக்கிய சரத் பவார். நம் உணவு இப்படித்தான் நம்மீது கட்டமைக்கப்படுகிறது. இன்று மாட்டுக்கறியைத் தடை செய்து மனிதர் உணவை மனிதர் பறிக்கும் இந்நாகரீக வல்லரசு நாட்டில், ஓர் உணவைப் பின் தொடர்ந்தால் ஒரு சமூகத்தை அறியலாம் என்பதற்கு அதிக உதாரணங்கள் தேவையில்லை. உணவின் ருசிகளுக்குப் பல புத்தகங்களும் நிகழ்ச்சிகளும் நிரம்பிய இவ்வுலகில், செவிக்குணவாக‌ உணவின் சரித்திரம் சொல்லும் ஒரு புத்தகம் இதோ!

————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: உணவு சரித்திரம்
ஆசிரியர்: முகில்
வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை (http://sixthsensepublications.com/)
முதல் ஈடு: சனவரி 2015
பக்கங்கள்: 304
விலை: ரூபாய் 225
வாங்கிய இடம்: சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சி 2016
————————————————————————————————————————————————————————————————————————————
சமீபத்தில் சிங்கப்பூர் வழியாக இந்தோனேசியா நாட்டின் பாலித்தீவிற்குச் சுற்றுப்பயணம் சென்று வந்தேன் அல்லவா? வழியில் படிக்க நான் எடுத்துச் சென்ற ஒரே புத்தகம் இதுதான். மார்ச் மாதக் கடைசியில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இப்புத்தகத்துடன் அங்குமிங்கும் திரிந்த யாரையேனும் நீங்கள் கண்டிருப்பின், அது அடியேன் தான்!

உப்பு ரொட்டி மாம்பழம் ஹல்வா மிளகு பலா சாக்லேட் கேழ்வரகு கொழுக்கட்டை கரும்பு பெருங்காயம் எள் மரவள்ளி பனை வெற்றிலை பாக்கு என்று நாம் உண்ணும் பொருட்களின் அந்தக்கால வரலாறு முதல் இந்தக்கால நவீனம் வரை சொல்லும் புத்தகம் இது. உணவின் வரலாற்றிலும் ருசி உண்டென சொல்லும் புத்தகம். மொத்த புத்தகத்தில் ஒரே ஓரிடத்தில் ஒரு சமையல் குறிப்பும் உண்டு. அர்த்தசாத்திரம் அகநானூறு புறநானூறு நற்றிணை திருக்குறள் மலைபடுகடாம் சிறுபாணாற்றுப்படை தேவாரம் முக்கூடற்பள்ளு சிலப்பதிகாரம் மதுரைக்காஞ்சி பொருநராற்றுப்படை கருடபுராணம் கம்பராமாயணம் ஐங்குறுநூறு விவிலியம் மகாபாரதம் தொல்காப்பியம் குற்றாலக்குறவஞ்சி காமசூத்திரம் என பல நூல்களில் இருந்து மேற்கோள்கள். பல கல்வெட்டுகளின் குறிப்புகள். கிட்டத்தட்ட 125 படங்கள் இப்புத்தகத்தில் பரவிக் கிடக்கின்றன. வரலாறு என்றாலே தன் பின்னங்கால் அடுத்தவன் பிடறியில் அடிபட ஓடும் இத்தலைமுறைக்கு, அதிக வரலாற்றைச் சலிப்பில்லாமல் இப்படி அழகான‌ சுவையுடன் தமிழில் படைத்ததற்காகவே இப்புத்தகத்தின் ஆசிரியரைப் பாராட்டலாம்.

எதுகை மோனையாகப் ப‌ழமொழி சொல்வதில் நம் முன்னோருக்கு யாரும் நிகரில்லை. இப்புத்தகத்தில் மேற்கோளாக வரும் சில இவை:
உப்பறியாதவன் துப்புக் கெட்டவன்.
நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நார்த்தனாருக்குப் போடுகிற சோறும் வீண் போகாது.
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
பலாவை வெட்டாமலேயே சுளைகளின் எண்ணிக்கைச் சொல்ல நம் மொழியில் செய்யுள் இருக்கிறது தமிழர்களே!
பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.

சில உணவுகளின் வரலாற்றில் சில கறுப்பு, கசப்புப் பக்கங்களும் உண்டு. உணவு தொடர்பான பல வார்த்தைகள் எப்படி தோன்றின என பல இடங்களில் சொல்கிறார் ஆசிரியர். தைலம், எண்ணெய், சம்பளம், கரும்பு, ஜவ்வரிசி, Salary, Oil போன்ற வார்த்தைகளின் மூலங்கள் ‘அட ஆமா!’ சொல்ல வைத்தன. அல்போன்ஸா மாம்பழம், Jack fruit, கப்பக்கிழங்கு போன்ற வார்த்தைகளின் மூலங்கள் ‘ஆஹா!’ என சிரிக்க வைத்தன. எள் (சீசேம்) மாதிரி பட்டென வெடித்துத் திறக்க வேண்டித்தான், அலிபாபா குகையைப் பார்த்து திருடர்கள், ‘திறந்திடு சீசேம்!’ என்பார்களாம்!

மயிலாப்பூருக்கு வந்து மார்க்கோ போலோ வெற்றிலை பாக்கு போட்டிருக்கிறார்! பெரியாரோடு பிள்ளையாரும் ஒத்துப் போகும் ஒரு விசயம் இருக்கிறது! அவசர அவசரமாக நாட்டைவிட்டு மொத்தமாக வெளியேறிய போது, பழக்கூடையைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு, பெத்த மகனை மறந்து விட்டுப்போன ராசா ஒருவர் இருந்திருக்கிறார்! அய்யய்யோ அசலை ஏமாற்றி நகலைத் தயாரித்து சம்பாதிக்கிறார்கள் என்று இந்திய உச்சநீதி மன்றம் வரைக்கும் வழக்கு போயும், இன்று ஓர் உணவில் அசலை விரட்டிவிட்டு நகலே நடைமுறையில் இருக்கிறது, பல மூத்த அரசியல் கட்சிகள் போல‌! கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார் இழுத்த செக்கைப் பார்க்க, நண்பன் சேரலாதனுடன் கோவை மத்திய சிறைக்குச் செல்ல ஒருகாலத்தில் முயன்றேன். அச்செக்கு அங்கு இல்லை என்று இப்புத்தகம் சொல்கிறது.

மொத்த புத்தகமும் அருமை என்றாலும் உப்பும் பனையும் எனது விருப்பங்கள். இந்தியர்களை முதன்முதலில் ஒரு தேசத்தவராக‌ உணர வைத்து, இம்மண்ணின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட, கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு பற்றி இன்னொரு புத்தகத்தில் விரிவாகப் பேசலாம்.

அனுபந்தம்:
——————–
பலாச்சுளை பற்றிய செய்யுளைப் படித்தவுடன் இன்னொரு செய்யுள் எனக்கு நினைவில் வர தேடிக் கண்டுபிடித்து இங்கு கொண்டு வந்திருக்கிறேன். மேகம் கிள்ளை அன்னம் என பல தூது இலக்கியங்கள் படித்திருப்போம். நம் முன்னோர்கள் புகையிலையைக் கூட தூது விட்டிருக்கிறார்கள். புகையிலையைத் தமிழ்மொழியுடன் சிலேடையாக ஒப்பிடும் அச்செய்யுள் இதோ:
ஏடதனை யாய்ந்தே யிலகுபதி கஞ்சேர்த்துப்
பாடமது போற்றிமொழி பன்னியே-கூடுபல
கோவை புனைந்து குறித்து வளமடல்சேர்
பாவுசந்த மேவிப் பதங்கொண்டு-சேவைபெறக்
கட்டமைந்து நற்பரணி கண்டுவிலைக் கானபின்பு
செட்டமைதந்து பின்மதுரஞ் சேரவே-மட்டில்லாத்
தாவில்பல வித்தையுடைத் தாகித் தமிழ்போல
நாவில் விளையாடு நாமகளாய்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)