169. உப்பிட்டவரை – தமிழ்ப் பண்பாட்டில் உப்பு

அமெரிக்காவில் பிரிட்டிஷ்காரர்கள் தேயிலைக்கு வரி விதித்ததை எதிர்த்த மக்கள் 1773ல் பாஸ்டன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனிக் கப்பலில் இருந்த தேயிலை மூட்டைகளைக் கடலில் கொட்டினர். பாஸ்டன் தேநீர் விருந்து (Boston tea party) என்று வரலாற்றில் சொல்லப்படும் இந்நிகழ்ச்சி அமெரிக்கப் புரட்சிக்கு வித்திட்டு சுதந்திரம் வரை கொண்டு போனது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மிக இரகசியமாக, எந்த வன்முறையும் இல்லாமல், சாதாரண மக்களால் நடத்தப்பட்ட இச்சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அதைப் போல ஒரு சம்பவத்தை, எல்லாருக்கும் வெளிப்படையாகச் சொல்லி, பிரிட்டிஷ் இந்தியாவின் பல இடங்களில் நடத்திக் காட்டினார். அங்கு தேயிலை, இங்கு உப்பு. ஒரே கம்பெனிதான். நூறாண்டுகளுக்கு மேலாக அரசு அனுமதி இல்லாமல் உப்பு உற்பத்தி செய்வதைத் தடைசெய்து வரி வசூலித்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை, குஜராத்தின் தண்டி கடற்கரையில் 1930ல் உப்பு காய்ச்சி ஆட்டம் காண வைத்தது உப்புச் சத்தியாகிரகம் (உப்பு அறப்போர்). அப்போது தமிழ்நாட்டில் உப்புக் காய்ச்சப்பட்ட இடம் திருமறைக்காடு (பெரியவா பாஷை சமஸ்கிருதத்தில் வேதாரண்யம்).

தேயிலை. உப்பு. ஐந்து வருடங்களுக்கு முன் புனே நகரின் ஒரு புத்தகக் கடையில் தேயிலை பற்றி ஒரு புத்தகமும், உப்பு பற்றி ஒரு புத்தகமும் கண்டேன். இரண்டும் ஆங்கிலம். தேயிலையில் உப்பு வேண்டாம்; உப்பு நம்மூர் கதைதானே, பின்னர் படித்துக் கொள்ளலாம், என தேயிலை (Tea – The drink that changed the world) புத்தகத்தை மட்டும் வாங்கி வந்தேன். பெயர் குறிக்க மறந்த அந்த உப்பு புத்தகம், எப்படித் தேடியும் பின்னர் கிடைக்கவில்லை. நம்மூர் உப்பு கதையை நம் மொழியில் நம் சாரத்துடன் படிக்கச் சொல்லி காலம் எனக்கு விதித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி!
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: உப்பிட்டவரை – தமிழ்ப் பண்பாட்டில் உப்பு
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
முதல் ஈடு: டிசம்பர் 2009
பக்கங்கள்: 157
விலை: ரூபாய் 140
வாங்கிய இடம்: சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சி 2016
————————————————————————————————————————————————————————————————————————————
ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன். தமிழகத்தின் முக்கிய சமூக விஞ்ஞானிகளில் ஒருவர். நாட்டார் வழக்கு பற்றியும், அடித்தள மக்கள் வரலாறு பற்றியும் பெரும்பாலும் நூல்கள் எழுதுபவர்.

உப்பிட்டவரை. தமிழ்ப் பண்பாட்டில் உப்பு. புத்தகத்தின் தலைப்பே எல்லாம் சொல்லிவிடுகிறது. உப்பின் வகை இயல்பு தேவை பய‌ன்பாடு பற்றியும், வரலாற்றில் உப்பின் பங்கையும் சொல்லி ஆரம்பிக்கிறது முதல் கட்டுரை. கடவுளின் சொந்த பூமியான கேரளத்தில், அக்காலத்தில் மலபாரில் ‘உப்பு’ என்பது உயர்சாதி இந்துக்களுக்கான சொல்லாக இருந்ததாகவும், மற்ற சாதிக்காரர்களுக்குப் ‘புளிச்சாட்டன்’ என்று இன்னொரு சொல் இருந்ததாகவும், ‘உப்பு’ என்று உச்சரித்ததற்காகத் தாழ்த்தப்பட்ட ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட கதை ஒன்றைச் சொல்கிறது அக்கட்டுரை. வட இந்தியாவில் தாவர உணவை மட்டுமே உண்டு வாழ்ந்த தீவிர தவசிகள் உப்பை மட்டுமே மனிதக் கரங்களில் இருந்து பெற இசைந்தார்களாம்.

தமிழ்ச் சமூகத்தில் உப்பின் வரலாறு பற்றி பேசுகின்றன, அடுத்த இரண்டு கட்டுரைகள். ‘வெண்கல் அமிழ்தம்’ என்றும், ‘கடல்விளை அமிழ்து’ என்றும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் அமிழ்தோடு உப்பை ஓப்பிட்டதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். உப்பு வணிகம் செய்த உமணர், மன்னராட்சியில் ஊதியமில்லாமல் கோவில் மடப்பள்ளிகளுக்குக் கட்டாயமாக்கப்பட்ட உப்பு ஊழியம், உப்புக் குறவர் போன்ற விடயங்களும் இக்கட்டுரைகளில் வருகின்றன. இன்று நகைக்கடை ஊழியனை வாசலில் உடற்சோதனை செய்வது போல, அக்காலத்தில் உப்பளங்களில் ஆங்கில ஆட்சியில் செய்திருக்கிறார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் உப்பு பற்றியது அடுத்த கட்டுரை. உப்பு அறப்போரில் காவலர் ஒருவருக்குப் பாதி முகம் மழித்தபின், மீதி முகம் மழிக்க மறுத்து சிறைத்தண்டனை பெற்ற நாவிதர் வைரப்பன் பற்றிய கதை, புதிய தகவல். அவர் சாதி முதலான பல காரணங்கள் அவரை வரலாற்றில் மறைக்க இருந்தாலும், அவருக்காக நினைவுத்தூண் வைத்து இன்னமும் நாட்டுப்புற பாடல்கள் மூலம் நினைவில் வைத்திருக்கிறார்களாம் வேதாரண்யப் பகுதி மக்கள்!

சுவையூட்டும் பொருளாக, அழிவினின்று காக்கும் பொருளாக, திருமணச் சடங்குகளில், புதுமனைப் புகுதலில், விளையாட்டில், விடுகதைகளில், நாவல்களில், மந்திரப் பொருளாக, காணிக்கைப் பொருளாக, நேர்ச்சைப் பொருளாக, நன்றியின் அடையாளமாக, மருந்துப் பொருளாக, விலக்கப்பட்ட பொருளாக, இப்படிப் பல பரிமாணங்களில் தமிழ்ப் பண்பாட்டில் உப்பின் பங்கை ஆவணப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். நம் காலத்தில் உப்புத் தொழிலில் உள்ள பல முறைகள் பற்றியும், உப்பளத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும், தமிழ்நாட்டு உப்பளங்களில் தற்போது நிலவும் சிக்கல்கள்பற்றியும், அரசு செய்ய வேண்டுவன பற்றியும் சொல்கிறது ஒரு கட்டுரை.

உப்பறியாதவன் துப்புக்கெட்டவன் என்கிறது தமிழ்ப் பழமொழி. சாரமுள்ள புத்தகம். தப்பாமல் ருசித்துப் பாருங்கள்.

அனுபந்தம்:
——————-
1. கிரீடம் என்றொரு தமிழ்ப்படத்தில் வேதாரண்யம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக கோடிக்கரையைச் சொல்வார்கள். வேதாரண்யம் மாவட்டமாக இருந்திருக்கிறதா?
2. ஒருமுறை வேளாங்கண்ணியில் இருந்து திருச்சிக்குத் திருவாரூர் வழியே போகாமல், வேதாரண்யம் வழியே போனேன். உப்பு அறப்போர் நினைவிடத்தில் இருந்து கடலைப் பார்த்துப் போக திட்டம். வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் இறங்கி வழி கேட்டேன். வழக்கம்போல் நிறைய பேருக்கு உப்பு அறப்போர் பற்றி தெரியவில்லை. சிலர் பேருந்தில் போவது கடினம் என ஏதேதோ வழி சொல்லிக் குழப்பினார்கள். ஆட்டோக்காரர்கள் யாரும் வரத் தயாரில்லை. நான் தனியாக வந்திருக்கிறேன் என்று தெரிந்து கொண்டவர்கள், அங்கெல்லாம் தனியாகப் போய் பார்க்கும் அளவிற்கு ஒன்றுமில்லை; வெறும் கடல்தான் என்றார்கள். முதல் ஆளாகப் போய் ஓர் உணவகத்தில் மதியவுணவு முடித்துவிட்டு, மீண்டும் விசாரித்தேன். மீண்டும் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். திருச்சிக்குப் பேருந்து ஏறிவிட்டேன். கேரளாவில் வாஸ்கோடாகாமா அரபிக் கடலில் இறங்கிய கடற்கரையை, வெறும் கடற்கரையைப் பார்த்துவிட்டு வந்தவன் நான். தமிழ்நாட்டில் வெறும் கடற்கரையைப் பார்க்கக் கூடாதா?
3. ஒன்றரைக் காசு மீதியைத் திருப்பித் தராததற்காக வேதாரண்யத்திற்கு அருகே ஓர் ஊரையே காளமேகப் புலவர் எரியச் சொல்லி சாபம் விட்டதாக ஒரு செய்யுள் உண்டு. அதன் பிறகு ஆழிப்பேரலை தவிர வேறேதும் அழிவு அப்பகுதியில் கேள்விப்பட்டிராத‌ நான், பிரதமரே பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இத்தேர்தலில் வேதாரண்யத்தின் மீது பாஜக செலுத்திய அதீத கவனத்தில் கொஞ்சம் பதறித்தான் போனேன். மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளில் மட்டுமே பாஜக வளர்ந்ததென இம்மண்ணின் வரலாறு சொல்கிறது. அக்கடல்கொண்ட நாடு மதங்கொள்ளவில்லை என்று அறிவித்த தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)